Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன? – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன? – முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)

ஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியச் சபை (Council of European Union) விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்திருக்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 2011 ஆம் ஆண்டே ஐரோப்பா வாழ் தமிழர்களால் புலிகளின் தரப்பில் லக்ஸம்பர்க் நகரில் இருக்கும் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2014 லேயே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து மேல் முறையீடுக்கு ஐரோப்பிய கவுன்சில் சென்றதால் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு புலிகளை தடையை நீக்கும் உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம். (ஐரோப்பிய ஆணையத்தின் (European Commission) கீழ் இயங்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசியல் அமைப்பில், ஐரோப்பிய ஒன்றிய சபை (Council of European Union) மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றம் (European Parliament) முறையே, மேல் சபை மற்றும் கீழ்சபை என கொள்ளலாம்).

இது குறித்து மேலும் விரிவாக,

2001ற்கு பிறகு எல்லா நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டபொழுது, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் (28 நாடுகள்) ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் தடை செய்யப்படும் அமைப்பின் பிரதிநிதிகளோ அதன் நிறுவன அங்கங்களோ நுழையத் தடை மற்றும் அந்த அமைப்பின் சொத்துக்களை முடக்கும் சட்டத்தை இயற்றுகிறது. இதனை அடிப்படையாக வைத்து 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளையும் தடை செய்யப்பட்ட இயக்கப் பட்டியலில் ஐரோப்பிய நாடாளுமன்றம் இணைக்கிறது.

தடை உத்தரவு பிறபிக்கப்பட்டக் காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு, அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு பேச்சுவார்த்தைகளில் (இடை நிறுத்தப்பட்டிருந்தாலும், ஒப்பந்தம் நிலுவையில் இருந்தது) ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

இதனை வரலாற்றுத் தவறு என தமிழ்நெட் இணையச்செய்திக்கு அளித்த பேட்டியில் (பிப் 2014), இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ப்ஃ என்றிக்சன் (சுவீடன்) தெரிவித்து இருந்தார். “இத்தடை விடுதலைப்புலிகளை பலம் இழக்கவும் செய்து, இலங்கை அரசை பலப்படுத்தி, போருக்கு இட்டுச் செல்லவும் கொடூரமான போருக்கு வழிவகுத்தது. புலிகளின் மீதான தடை மிக அவசர அவசரமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது எனவும் இத்தடைக்கான முடிவு நாடாளுமன்றத்தில் எடுக்காமல், பெல்ஜியம் தலைநகர் ஃபுருஷல்ஸ் தேநீர் கடையில் எடுக்கப்பட்டது” என்றும் கூறியிருந்தார். புலிகளின் பேச்சுவார்த்தை குழுத் தலைவரும் அரசியல் ஆலோசகராகவும் இருந்த ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் “இத்தடையால் தமிழர்கள் தரப்பு படை பலம் இழந்து, மிகப்பெரிய அவலத்தை சந்திக்க வழிவகுக்கும்” என தனது கண்டனத்தை 2006லேயே பதிவு செய்திருந்தார்.

அதன்பிறகு நடந்தேறிய கொடூரமான போரும், பல்லாயிரம் தமிழர்கள் இறந்து, பல்லாயிரம் பேர் உடல் உறுப்பு இழந்தது, பல்லாயிரக்கணக்கான தமிழ்ப்பெண்கள் விதவையாக இன்றும் பரிதவித்து வாழ்வதுவும், அனைவருக்கும் தெரிந்த வரலாறு.

2011இல் ஐரோப்பிய வாழ் தமிழர்கள், குறிப்பாக சுவசர்லாந்து நாட்டு இடதுசாரி அரசியல்வாதி லதன் சுந்தரலிங்கம் முதன் முயற்சியில் அமெரிக்காவில் இருக்கும் சட்ட வல்லுநரான தமிழ் இளைஞர் ராஜீவ் உள்ளிட்டவர்களோடு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் சிற்சில பிரதிநிதிகள், என எண்ணற்றோரின் முயற்சியில் ஐரோப்பிய நீதிமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றியச் சபை 2011 இல் நீடித்த புலிகளின் தடையை எதிர்த்து நெதெர்லாந்து நாட்டைச் சார்ந்த விக்டர் கோப் என்ற வழக்கறிஞரின் உதவியில் வழக்கை பதிவு செய்தனர்.

2006இல் ஐரோப்பிய நாடாளுமன்றம் இயற்றிய புலிகளின் தடை மீதான சட்டத்தை கேள்வி கேட்டும், அத்தடையே 2009இல் தமிழின அழிப்பிற்கு இட்டுச் சென்றது என்பதனையும் சுட்டிக்காட்டி, அதற்கான நீதியை வழங்குமாறு பதிந்த வழக்கில், மிகக்குறிப்பாக, 2011இல் ஐரோப்பிய ஒன்றியச் சபையின் தடை நீடிப்பை இல்லாது செய்வதே இவ்வழக்கின் முக்கிய நோக்கமாக இருந்தது. புலிகளின் இவ்வழக்கிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியச் சபை, ஐக்கிய அரசாட்சி (UK) மற்றும் நெதர்லாந்து வாதாடியது.

hqdefault

மூன்று ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், ஐரோப்பிய நீதிமன்றத்தின் 2014 அக்டோபரில் 1) 2011 ஆம் ஆண்டும் அதற்கு பின்பும் விடுதலைப்புலிகளை தடை செய்யும் உத்தரவை இரத்து செய்தது 2) மூன்று ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் பொருளாதார செலவை புலிகளுக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கவேண்டும் 3) மூன்று மாத கால அவகாசத்தில் மறுப்பு தெரிவிக்காவிடின் இத்தீர்ப்பு மூன்று மாதத்தின் பின் நடைமுறை ஆகும், என தீர்ப்பை வழங்கியது.

மேற்கூறிய நாடுகள், இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் வழக்கு 2015 இல் இருந்து நடந்து வந்தது. இதன் இறுதி தீர்ப்பே, ஜூலை 2017 இல் வழங்கப்பட்டது.  வேறு ஒரு வழக்கில், ஏற்கனவே ஹமாஸ் அமைப்பின் மீதான தடையை நீக்கம் செய்த பரிந்துரையை ரத்து செய்து, அந்த அமைப்பின் மீதான தடையை உறுதி செய்தது. அதேவேளை, புலிகளின் மீதான தடையை ரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் கூறப்பட்டவைகளில்:

1) 2011-2015 காலப்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட புலிகளின் சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்;

2) ஐரோப்பிய யூனியன் தரப்பில் கூறப்பட்ட புலிகளுக்கு எதிரான எவ்வித ஆதரமும் போதுமானதாக இல்லை, அவைகள் பெரும்பாலும் ஊடகச் செய்தி/சமூக ஊடக செய்திகளாகவுமே இருக்கிறது;

3) கனடா, இந்தியா புலிகளை தடை செய்த ஆவணங்களை வைத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் தடை செய்தது தவறு;

4) புலிகள் 2009 போரில் தோற்கடிக்கப்பட்ட பின்பு, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது முக்கியமானவை. ஆனால் அதேவேளை,  2006 இல் இடபட்ட புலிகள் மீதான தடைக்கு எதிராகவும் அத்தடையே புலிகளின் சமநிலையை உடைத்து தமிழின அழிப்புக்கு இட்டுச்சென்றது என்ற வழக்கு வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

ஐக்கிய அரசாட்சி (United Kingdom) தனது நாட்டில் தடை செய்யப்போட்டோர் பட்டியலில் 2001இல் புலிகளை இணைத்தது. அத்தடை அங்கு இன்னும் நீடிக்கும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் புலிகளை தடை செய்யப்பட்டோரின் பட்டியலில் சேர்த்தபொழுது, ஐரோப்பிய ஒன்றியச் சபையில் தலைமை பொறுப்பில் இருந்ததும் 2011இலிருந்து ஐரோப்பிய நீதிமன்றத்தில் நடந்த புலிகள் தடை தொடர்பான வழக்கில் ஐரோப்பிய ஒன்றிய சபையோடு சேர்ந்து புலிகள் தரப்பிற்கு எதிரான வாதத்தில் தீவிரமாக ஈடுபட்டதும் அதே ஐக்கிய அரசாட்சி நாடுதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரசாட்சி முன்னின்று செய்த தடை உத்தரவு பிறப்பிற்கு பின்னால் இந்தியா மற்றும் அமெரிக்காவின் தீவிர அழுத்தம் இருந்தது என்பது அரசியல் ஆய்வாளர்கள், இலங்கை கண்காப்பு குழுப்பொறுப்பில் இருந்த உல்ப்ஃ என்றிக்சன் (சுவீடன்), சமாதானக் குழுவில் இயங்கிய எரிக் சொல்ஹைம் (நோர்வே) மற்றும் சமாதான ஒப்பந்தம் மற்றும் நோர்வேயின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்து வெளியான “Pawn of Peace” மற்றும் பல்வேறு ஊடகச் செய்திகள் வழியாகவும் தெரிந்துகொள்ளலாம்.

2011 முதல் நடந்த ஐரோப்பிய நீதிமன்ற விவாதத்திலும் இந்தியாவின் அழுத்தம் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டதை ஐக்கிய அரசாட்சி ஆதரமாக வைத்ததும் விவாதிக்கப்பட்டு, நீதிமன்றம் அந்த ஆதாரங்களை ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள்ளான நீதி எல்லையில் பொறுத்திப்பார்க்க முடியாது என்றும் 2002-2004 வரை இந்தியாவில் நிலுவையில் இருந்த பொடா சட்டம் குறித்தும் அக்காலக்கட்டத்தில் நடந்த அரசியல் பழிவாங்கல் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், போரின் பொழுது இந்தியாவின் இலங்கை ஆதரவான பக்கச்சார்பான நடவடிக்கை போன்ற காரணங்களும் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, இந்தியா குறித்த ஆதாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தமிழர்களின் அடுத்த இலக்காக, 2006 இல் வழங்கப்பட்ட ஐரோப்பியத் தடை தவறான அரசியல் முடிவு, அதனாலேயே தமிழின அழிப்பு நடந்தது என்று நிறுவ மீண்டும் சட்டத்தின் கதவு தட்டப்படலாம் என நம்பலாம். அதேபோன்று, ஐக்கிய அரசாட்சி நிறைவேற்றிய தடையை எதிர்க்க வேண்டிய அவசியம் தமிழர்கள் தரப்பிற்கு இருக்கிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவதால், அவர்களின் ஆயுத வழி செயல்பாட்டிற்கு மீண்டும் வழிவகுக்கும் என்ற வாதம் அரசியல் மற்றும் போரியல் ஆய்வின் முன் முட்டாள்தனமான வாதம். ஆயுதவழி இயக்கம் முளையில் இருந்து வளர்ந்து தன் முதன்மை பலத்தை அடைந்து வெற்றியின் உயரத்தை தொட்டுவிட்டு உச்சக்கட்டப் போரை சந்தித்துவிட்டு ஆயுதங்களை மெளனத்திவிட்டப் பிறகு, அதே ஆயுத வழியை உருவாக்குவது நீண்ட காலத்திற்கு சாத்தியமில்லாத செயல்பாடு.

ஆனால், 2009 போரின் பொழுது நடந்த கொடூரமான இன அழிப்பும் அதன் பின் தமிழீழ மக்கள் பட்டத் துயரம், இன்றும் சொந்த நாட்டில் அகதியாய் வாழும் அவலம், இதற்கெல்லாம் நீதியும் தீர்வும் கிடைக்க தடையாய் இருப்பது, விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கப் பட்டியலில் வைத்திருக்கும் நிலை. அதனாலேயே பல நாடுகள், நடுநிலையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மெளனமாய் 2009இல் நடந்தது தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற அளவுகோலில் நிற்கிறது. தீவிரவாத இயக்கப்பட்டியலில் சேர்க்கப்பட்டதே நீதிக்கு எதிரான செயல் என்பது நீதிமன்றங்களில் நிறுவப்பட்டால்தான் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான எவ்வித சர்வதேச அரசியல் நடவடிக்கைகளுக்கும் பலமாக இருக்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் எல்லா தலைவர்களும், புலிகளின் தடையை இந்தியா நீக்க வேண்டும் என தெருமுனை கோசங்களிலும் அறிக்கைகளிலுமே வழக்கம் போல தேங்கி நிற்கின்றனர். இது எதற்கும் உதவாது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?

– முனைவர் விஜய் அசோகன் (தமிழ்ச்செல்வன்)

—–

குறிப்பு :

இக்கட்டுரையின் சுருக்கமான பதிவு ஜீனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ளது. முழுப்பதிவும் இங்கே  வெளியிடப்படுகின்றது. – விசை ஆசிரியர் குழு

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*