Home / கலை / நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் – புத்தகம் ஒரு பார்வை

அண்மையில் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், கவிஞர் சாம்ராஜ் அவர்கள் எழுதிய ” நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்” எனும் புத்தகத்தை வாங்கி வந்தேன். வாங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தது முன் அட்டையில் இருந்த “அயோபிண்ட புஸ்தகம்” படக்காட்சிதான். நான் பார்த்து ரசித்த மிகச்சில மலையாளத் திரைப்படங்களில் அயோபிண்ட புஸ்தகமும் ஒன்று. வாங்கிய அன்றே புத்தகத்தைப் படித்தும் முடித்துவிட்டேன்.

பெரும்பான்மையாக மலையாளத் திரைப்படங்கள் பற்றியும், அவற்றின் படைப்பாக்கம் பற்றியும் ஆழமான பார்வையை வைக்கிறார் எழுத்தாளர் சாம்ராஜ். அது தவிர, “கோர்ட்” எனும் மராத்திய திரைப்படம் பற்றியும், தமிழில் “மெட்ராஸ்”, “ஏழாவது மனிதன்” பற்றியும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வெறும் கலைப் படைப்பாக திரைப்படங்களை அணுகாமல், அதன் பின்னிருக்கும் அரசியல், சமகாலத்தில் நிலவும் சமூக சூழல் என்று கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆழமான பார்வையை வழங்குகின்றன.  ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ள கவிதைகள், அந்தக் குறிப்பிட்ட திரைப்படத்தின் பின்னிருக்கும் அரசியல் பற்றிய ஒரு முன்னுரையை வழங்கிவிடுகிறது.

பத்மஸ்ரீ விருது வாங்க முயற்சிக்கும் பிராஞ்சியேட்டன் ஆகட்டும், செய்யாத குற்றத்திற்கு தண்டனை சுமக்கும் சிவன்குட்டியும், நிலைக்கண்ணாடியுடன் பேசும் கே.டி.என் கோட்டூர் ஆகட்டும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள். அதைவிட முக்கியமாக, செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெற்றுத் தரும் வல்லமை பெற்ற 8 வோல்ட் பேட்டரி, பத்மஸ்ரீ விருது பெற எந்த பெரிய சாதனைகளும் தேவையின்றி “அப்துல்கலாம் ஐயா, அப்துல் கலாம் ஐயா” என்று தொடர்ந்து பேசி விருது வாங்கிய சமகால மனிதர்களும் நம் கண்முன்னே வந்து செல்கிறார்கள்.

கேரளாவில் நடைபெறும் இடதுசாரி கட்சி அரசியலின் மீதான விமர்சனமாக வெளிவந்த “லெஃப்ட், ரைட், லெஃப்ட் ” படத்தின் மீது வழங்கப்பட்டுள்ள பார்வை மிகக் கூர்மையானது. அப்படியொரு வெளிப்படையான சினிமாவை தமிழகத்தில் எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

“பாலேறி மாணிக்கம்” படம் குறித்த கட்டுரையின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள லிபி ஆரண்யாவின் கவிதை மிகவும் பொருத்தமான ஒன்றாக உள்ளது. அக்கவிதை பின்வருமாறு,

காலனி கிளைத் தோழன்

காலனி

மறு காலனி குறித்து

நீண்ட வகுப்பெடுத்த தலைமைத் தோழர்

நடந்ததெல்லாம்

எசமான மாறுதல் மட்டுமே

என முடித்தார்.

விவாத நேரம்

நம் விசயத்தில்

அதுவுமில்லையே என்றொரு குரல்

கனத்த அமைதி

காலனி

மறு காலனி என்பவை

எமது குடியிருப்புகளை

குறுக்கிட்ட தலைமைத்தோழர்

இன்றைய வகுப்பு

வரலாறு தொடர்பானது

நமது தோழரின் கேள்வியோ

புவியியல் தொடர்பானது என

முடித்து வைத்தார்

—– லிபி ஆரண்யா (தப்புகிறவன் குறித்த பாடல் தொகுப்பிலிருந்து)

சமகாலத்திய அரசியல் சூழலில் நம்மால் பொருத்திப் பார்த்துக் கொள்ளக் கூடிய கவிதையாக மேற்கூறிய ஒன்று உள்ளது.

அயோபின்டே புஸ்தகம் குறித்த காட்சி வர்ணனைகளும், பெரும்பாலும் மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்ட காரணமும் நம்மை வியக்க வைக்கின்றன.

பாலேறி மாணிக்கம், ஞான், ஹௌ ஓல்ட் ஆர் யு?, பிரம்மரம், த்ரிஷ்யம், 24  நோர்த் கதம் என மலையாளத் திரைப்படங்களில் நிகழ்ந்த அண்மைக்கால மாற்றங்கள், நாடக பாணியிலான கதை சொல்லும் யுக்திகள் மாறி திரை மொழி மூலம் கதை கூறும் இன்றைய நிலை வரை விரிந்து செல்கின்றன தோழர் சாம்ராஜின் கட்டுரைகள்.

மலையாள இலக்கிய உலகமும், திரை உலகமும் கைகோர்த்து நிற்பதை ரஞ்சித்தின் ஞான், பாலேறி மாணிக்கம் பற்றிய கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.

nilaikkannadiyudan-pesubavan-10002367-800x800

மலையாளத் திரைப்படங்கள் குறித்து விரிந்த பார்வையைக் கொடுக்கும் கட்டுரைகள், தமிழ்த் தேசியச் சூழலில் இருந்து விமர்சனத்தையும் முன்வைக்கத் தவறவில்லை. குறிப்பாக, தமிழ் திரைப்படங்கள் மலையாள பெண்களை சித்தரிக்கும் விதம் குறித்து சுயவிமர்சனத்தை முன்வைத்து, தமிழர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் மலையாள சினிமாக்களை பட்டியல் இட்டுள்ளது, இந்த புத்தகத்தை ஆவணம் எனும் அளவுக்கு உயர்த்துகிறது.

இந்த கட்டுரைத் தொகுப்பின் முக்கிய கட்டுரையாக இருப்பது “சக்ரவர்த்திகள் இல்லாத பொழுதில்” எனும் கடைசிக் கட்டுரைதான். தமிழ் சினிமாவின் பொற்காலம் குறித்தும், அது ஏன் நிகழ்ந்தது என்றும் பேசுகிறது இந்தக் கட்டுரை. தமிழில் வந்த அரசியல் திரைப்படங்கள் இந்தக் காலத்தில் முகிழ்த்தன, அதற்கான அரசியல் சூழல் உருவாகக் காரணம் என்ன என்று பேசும் கட்டுரை இனி அப்படியொரு சூழல் நிகழுமா? எனும் கேள்விக்கு “நாமறியோம்” என்கிற பதிலுடன் நிறைவடைகிறது.

விசாரணை, மெட்ராஸ், அட்டகத்தி, ஈ, ஜீவா, உறியடி, மாவீரன் கிட்டு  போன்ற சமகால அரசியல் பேசும் திரைப்படங்கள், இன்றைய அரசியல் சூழல் குறித்தும், அது நகரும் பாதை குறித்தும் சேர்த்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு சமூக, அரசியல் மாற்றம் நிகழ்வதற்கான அனைத்து புறச்சூழலும் தமிழகத்தில் இருக்கின்றன, அதையொட்டி படைப்புகள் வெளிவருமா என்ற கேள்விக்கு “நாமறியோம்” எனும் பதிலைவிட ” நம்புவோம்” எனும் பதிலே தோழர் சாம்ராஜ் அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இறுதியாக, நம் போராட்ட எண்ணம் எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்தான ஒரு கவிதையும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சலிப்படையவே மாட்டேன்

மீண்டும் மீண்டும்

நான் நானாகவே இருப்பேன்

எல்லா மதிப்புகளும் பூமியில்

இறந்துவிட்டன என்னும்

நவீனவாதம் பொய்யாக்குவேன்

தத்துவங்கள் வீழட்டும்

கோஷங்கள் சிதறட்டும்

உலகம் எதையும் பிதற்றட்டும்

பசித்தவர்கள் பக்கமே என்றும்

நான் இருப்பேன்.

—– சமயவேல் –“அகாலம்” தொகுப்பிலிருந்து

அநீதிக்கு எதிராக நிற்க வேண்டிய அரசியல் பார்வையை முன்வைக்கும்  திரைப்படங்களின் தேவையை உணர்த்தும் கட்டுரைகளுக்காகவே கவிஞர் சாம்ராஜைப் பாராட்டலாம்.

மலையாள திரைப்படங்களின் ரசிகனாக, தொடர்ச்சியான இலக்கிய வாசகனாக, ஒரு தமிழ்த்தேசிய ஆர்வலராக என தோழர் சாம்ராஜ் அவர்களின் பன்முகத்தை இந்த கட்டுரைகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

ஆகவே, நீங்களும் ஒருமுறை நிலைக்கண்ணாடியுடன் பேசிப் பாருங்கள்!

புத்தகத்தின் பெயர் – நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

எழுதியவர் – கவிஞர் சாம்ராஜ்

பதிப்பகம் – நற்றிணை

விலை – 70 ரூபாய்

— கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*