Home / அரசியல் / நான் அனிதா பேசுகிறேன் – வி.விக்ரம்குமார்.,MD(S)

நான் அனிதா பேசுகிறேன் – வி.விக்ரம்குமார்.,MD(S)

1200க்கு 1176 மதிப்பெண் பெற்றதும், நான் கண்ட கனவு நிஜமாகப் போகிறது என்பதில் ஆனந்தம் எனக்கு. பாராட்டுக்கள் குவிந்தன… எங்கோ இருந்து பஞ்சபூதங்கள் வடிவில் என் அன்னை வாழ்த்து தெரிவித்தார். ’அர்ப்பணிப்பு, தியாகம், வெறி ஆகிய குணங்கள் இருந்தாலன்றி முடியாது’ என்று அனைவரும் பெருமை பேசினர். மகிழ்ந்தேன் மருத்துவராக போகிறேன் என்று! நீட் குழப்பம் தலை விரித்தாடியது. உறக்கம் தொலைத்தேன்… கனவுகளும் வரவில்லை. மருத்துவராக வலம் வரும் கனவுகள் மறைந்தன, தூக்கம் இல்லையே.

மாநில அரசும், மத்திய அரசும் உறுதி கொடுப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். நிம்மதியாக உறங்கினேன் அப்போது. கனவுகள் மீண்டும் முளைத்தன. குக்கிராமத்தில் மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்… நடக்க முடியாத தாத்தாவிற்கு தோள் கொடுக்கிறேன். மயங்கி விழும் பாட்டியை அரவணைக்கிறேன். அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவம் பார்த்து நிம்மதி அடைகிறேன். கனவு கலைகிறது. உறக்கம் விழித்து உலகை பார்க்கிறேன் அவ்வளவு அழகாக இருந்தது.

மீண்டும் நீட் குழப்பம்… தீர்ப்பு எனக்கு எதிராக வந்தது. கனவு… தாத்தாவிற்கு தோள் கொடுக்க முடியாமல் சாய்கிறேன். அரவணைப்பைத் தேடிய பாட்டியிடம் அரவணைப்பிற்காக கெஞ்சுகிறேன்…. கீழே சாய்கிறேன். அம்மாவின் பாசத்திற்காக ஏங்குகிறேன்… தந்தைக்கு ஆறுதல் கூறினேன், மனதை திடப்படுத்திக்கொண்டு!…

’முடிந்த வரையில் முயன்றோம், முடியவில்லை’ என்று பேட்டிக்கொடுத்தனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்… அரசியல்வாதிகள்… நிதானமாக எழுத வேண்டும் என்று தான் என் எண்ணம். என்ன செய்ய, 17 வயதிலேயே குருதியழுத்த நோயை உண்டாக்குகிறதே இந்த கல்வி முறை. மாணவர்களா கல்வி முறையை தீர்மானிக்க முடியும். பின் எதற்கு அரசு?…

படிக்காமல் சோம்பித் திரிந்து, வாழ்வில் தோல்வி அடைந்தால் பரவாயில்லை. எனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்தும், பலனில்லை என்றால் நான் என்ன செய்ய. யாரிடம் சென்று முறையிடுவது. தலைமையகத்திலா! அவர்கள் பஞ்சாயத்திற்கே நேரம் இல்லை. கோர்ட்டு, கேசுன்னு அலைஞ்சா, அடுத்த வேளை சாப்பாடிற்கே வழியில்லை எங்கள் போன்ற ஜீவன்களுக்கு. வாய் கிழியப் பேசுவார்களே தவிர எவரும் நிலைமையை எண்ணி உதவ முன்வரவில்லை.

12 வருடங்களுக்கு முன்பு, கோச்சிங் கிளாஸ் போனால், டாக்டராகவோ, பொறியாளராகவோ வாய்ப்பு. பணம் கொடுத்து கோச்சிங் போகாத போது வாய்ப்பில்லை. எனவே கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் தமிழகம் அளவிலிருந்த நுழைவுத் தேர்வே ரத்து செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதிரடியாக இன்று நான் படிக்காத பாடத்திட்டத்தில் நுணுக்கமாக கேள்விகளை கேட்டு, அதனை மருத்துவப் படிப்புக்கு அளவுகோளாக வைப்பது எந்த வகையில் நியாயம். தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டு, அவர்களோடு இணைந்து போராடச் சொல்லியிருந்தால், போர்க்களத்தில் வாகை சூடியிருப்பேன். என்னோடு சேர்ந்து வாய்ப்பிருக்கும் கிராமத்து மாணவர்களும் ஒருகை பார்த்திருப்போம். மற்ற போட்டியளர்களின் சிறகினை தடவிக் கொடுத்துவிட்டு, எனது சிறகை முறித்து பறக்கும் போட்டியில் பங்கேற்கச் சொன்னால் எப்படி ஆளுமைகளே!

தீர்ப்பை எதிர்த்து போராடலாம் என்று முடிவுசெய்தேன். மெரினா கடற்கரையில் அமர்ந்து போராட்டத்தை துவக்கலாம் என்றால், போலீஸ்காரர்களின் லத்தி அடி நினைவிற்கு வந்தது. வலிக்குமே… தாங்கக்கூடிய உடம்பா இது. என்னோடு சேர்ந்து போராடும் உங்களுக்கும் அடிஉதை கிடைக்கும். ‘Anti-Indian’ என்று குற்றம் சுமத்தி உங்களை உடனடியாக கைது செய்வார்கள்… பின் உங்கள் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்… அரசிடம் சென்று பிச்சை கேட்க மனம் வரவில்லை. போராடி வென்றவள் நான்… எதற்காக காத்துக்கிடக்க வேண்டும் அவர்களிடம். மீண்டும் அரசியல் விளையாட்டில் ஏமாறவா… தந்தையிடம் மனக்குமுறல்களை கொட்டினேன். என்ன செய்வார் அந்த ஏழை. ‘மகள் மருத்துவராகப் போகிறாள்’ என்று என்னை விட அதிகம் ஆசையாக இருந்தவர் என் தந்தை. என்ன செய்வதென்று தெரியவில்லை. உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். துணிந்துவிட்டேன்…

தற்கொலை எதற்கும் தீர்வில்லை தான். என்ன செய்ய… உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள். இனிமேல் தற்கொலைகள் நடக்கக்கூடாது. என் மரணத்தை முன்னிறுத்தி ஏழை மக்களுக்கு உதவும் மருத்துவர்கள் உருவாக வாய்ப்பளியுங்கள். கிராமத்து மாணவர்கள் எப்படி இந்த கல்விமுறையில் வெற்றிப்பெறுவார்கள்… பாடத்திட்டம் மாற்றும் வரை அவகாசம் கேளுங்கள். மதிக்கமாட்டர்கள்… ஏழைகள் நாம்!… ஆனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம். இல்லையெனில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, ஊருக்கு இருபது தனியார் மல்டி-ஸ்பெஷலிட்டி மருத்துவமனைகள் முளைத்திருக்கும். கிராம மக்கள் வசதியின்றி, மருத்துவரின்றி அவதிப்படுவார்கள்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற சகநண்பர்களுக்கு… வாழ்த்துக்கள்… கிராமத்து ஏழைகளை எதிர்காலத்தில் மறக்காதீர்கள்…

அரசியல்வாதிகளுக்கு… அரசியல் செய்யுங்கள், உங்களுக்குள்… நீட் இல்லையென்றால் மருத்துவராகவிருந்த மாணவர்களுக்கு… துவளாதீர்கள்… இயற்கை அற்புதமான வாழ்க்கையை அளிக்க காத்திருக்கிறது. உங்களால் பெற்றோர்கள் மகிழப்போகிறார்கள்… உங்களை ஏமாற்றிய அரசர்கள் தலைகுனியப் போகிறார்கள்… பொறுமையோடு இருங்கள் நண்பர்களே!…

சூழ்ச்சி நிறைந்த சமூகம் இது… ’சில நாட்களுக்கு கொந்தளிப்பார்கள்… பின் அடங்கிவிடுவார்கள்…’ என்று அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்… யார் அவர்கள்?… எனது ஆன்ம சாந்தியில் கிராமங்கள் மகிழப் போகின்றன… மீண்டும் சொல்கிறேன் தற்கொலை தீர்வல்ல!… செய்யாத குற்றத்திற்கு தூக்குதண்டனை நிறைவேற்றி, மரண தண்டனை கொடுத்துவிட்டது சமூகம்.

இப்படிக்கு
மருத்துவர்.அனிதா

அனிதா இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதியிருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என்ற என் கற்பனையே இந்த கடிதம் -வி.விக்ரம்குமார்.,MD(S)

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*