Home / அரசியல் / நீட் (NEET) – கேள்வி – பதில்
AequnZyflMYmAfm-800x450-noPad

நீட் (NEET) – கேள்வி – பதில்

1. நீட் (NEET) என்றால் என்ன ?

National Eligibility cum Entrance Test – மூன்று வகையான நீட் தேர்வுகள் இருக்கின்றன.

நீட் இளங்கலை ( எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கானது )
நீட் முதுகலை ( எம்.டி,  எம்.எஸ் சேர்க்கைகளுக்கானது )
நீட் எஸ்.எஸ் ( எம்.சி.ஹெச் மற்றும் டி.எம் போன்ற மருத்துவ உயர் படிப்புகளுக்கானது )
நம்முடைய கவலை தற்போது நீட் இளங்கலை குறித்து தான்.

2. நீட் குறித்து தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்ன?

தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும்உள்ள  மருத்துவப் படிப்புக்கான இடங்களை, நீட் தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கும் முறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறது.

3. இந்தியாவின் அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு வைக்கப்படுகிறதே ? தமிழகத்துக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும் ?

இல்லை. எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ போன்ற மருத்துவ பல்கலைக் கழகங்களுக்கு நீட் தேர்வுகிடையாது. அப்படியான ஒரு முறையைத் தான் தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கும் கேட்கிறோம்.

4. நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்பதால், தமிழக அரசு தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கு உதவுகிறதா ?

இல்லை. தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக இடங்களையும் நீட்தேர்விலிருந்து விலக்கக் கோரி நாம் கேட்கவில்லை. நிர்வாக இடங்களை மத்திய அரசின் நீட் தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும் என்பதும் தான் நம் கோரிக்கை.

5. தமிழ்நாட்டிற்கு ஏன் நீட் தேவையில்லை?

ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமாயின், சமூகநீதி !

நகர்ப்புற,  கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள  ஏற்றத்தாழ்வை நீக்கி சமத்துவத்தை நிலை நாட்டும் நோக்கோடு தான் இப்படியான போட்டித் தேர்வுகளை தமிழக அரசு நீக்கியது.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் வசூலிக்கும்  கட்டணங்கள் எப்போதும் அதிகம் தான். பயிற்சி மையங்களின் துணையின்றி நீட் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள முடியாது. சமூகம், பொருளாதாரம், வாழ்நிலை என பல்வேறு ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில், நீட் போன்ற போட்டித் தேர்வுகளின் மூலம் மாணவச் சமூகத்தின் வாய்ப்புகளை மழுங்கடித்து விடக்கூடாது என்கிற அக்கறையில் தான் தமிழகம் நீட் தேர்வை எதிர்க்கிறது.

ஒரு மாநிலத்தின் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அம்மாநிலத்தின் மருத்துவத் துறைக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தைக் காட்டிலும், தமிழகத்தின் கிராமப்புற மருத்துவ சுகாதார வசதிகள் மேம்பட்டவை. இப்படியான மருத்துவ சுகாதாரத்துறையின் அடிப்படையே தமிழக அரசின் மருத்துவ சேர்க்கைக்கான கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகள். மேலும் இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகம் இருப்பதும் தமிழ்நாட்டில் தான். நீட் தேர்வில் மூலம் அவ்விடங்களை இம்மண்ணின் ஏழை மாணவர்கள் இழக்க நேரிடும். அதை காக்கும்  பொருட்டே நீட்டை தமிழகம் எதிர்க்கிறது.

6. போட்டி பொதுத்தேர்வுகளை நடத்தாமல், தகுதியற்றவர்களுக்கு தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பளிக்கப் படுகிறதா ?

மிகப் பெரிய பொய்ப் பரப்புரை இது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நீட் முதுகலை தேர்வுக்கான முடிவுகளை பாருங்கள். மொத்த முதுகலை இடங்களுக்கான நீட் தேர்வில் 20% இடங்களை தமிழக மாணவர்களே வென்றிருக்கிறார்கள். முதல் 50 ரேங்க் வரிசையில் , 12 பேர் தமிழர்கள். ஒட்டு மொத்தமாக  8500+ பேர், மருத்துவ முதுகலை படிப்புக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் யார் ? நீட் என்கிற போட்டித் தேர்வு இன்றி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் மருத்துவ இளங்கலை படிப்புக்கு தேர்வானவர்கள் தான். அப்படியிருக்கும் போது, தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கையில் எங்கேயும் குறை கண்டு பிடிக்கமுடியாது.

7. தரத்தை உயர்த்தக் கூடிய தகுதித் தேர்வை நடத்துவதில் என்ன தவறு?

“நீட்” என்பது மற்ற நுழைவுத் தேர்வு போல அல்ல. இத்தேர்வு மதிப்பெண் விழுக்காடு அடிப்படையில் வெற்றியாளர்களை தேர்வு செய்வதல்ல. இது போட்டியாளர்களை தகுதி நீக்கம் செய்யும் ஒரு தேர்வு முறை (Percentile), இத்தேர்வு உண்மையில் தகுதித் தேர்வு அல்ல மாறாக திட்டமிட்ட வகையில் திறமை மிக்க ஒரு பகுதியினரை தகுதி நீக்கம் செய்யும் தேர்வு. இதன் மூலம் ஒன்றிய அரசு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளின் இடங்களை அபகரிக்க முடியும்.  எனவே தான் கூறுகின்றோம் இந்தத்தேர்வு தரத்தை உயர்த்த பயன்படாது மாறாக மாணவர்களை தகுதி நீக்கம் செய்யவே பயன்படும்.

8. நுழைவுத் தேர்வுகள் நல்லது தானே? நுழைவுத் தேர்வுகள் தரத்தை உயர்த்தும் அல்லவா? தமிழ்நாடு ஏன் அதை ஏற்கக் கூடாது?

தேர்வுகள் முழுமையான தீர்வாக ஒரு போதும் இருக்க முடியாது. தேர்வுகளுக்கான சீர்திருத்தம், கல்விக்கான சீர்திருத்தமாக ஆக முடியாது. சமச்சீரான பொதுவான கல்வியை நடைமுறைப் படுத்தாமல், பொதுவான நுழைவுத்தேர்வு மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதே மிகப்பெரிய பொய் பரப்புரை. நீட் தேர்வு யாருக்கு பயனுள்ளதாக அமையுமென்றால், நீட் பயிற்சி  கொடுக்கும் பயிற்சி மையங்களுக்குத் தான். சி.பி.எஸ்.சிபாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் கூட பயிற்சி மையங்களின்றி, நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்பதே எதார்த்தம்.

9. குறைந்த பட்சம், நுழைவுத் தேர்வுகள் நாமக்கல் பள்ளிகள் போன்ற கூடங்களை குறைக்கலாம் அல்லவா ?

நீட் போன்ற தேர்வுமுறைகள், நாமக்கல் பள்ளிக்கூடங்களை குறைக்கலாம். ஆனால் அதை விட மோசமான “கோட்டா பயிற்சி மையங்களான பள்ளிக்கூடங்களை” உருவாக்கும் அபாயமிருக்கிறது. எட்டாம் வகுப்பிலிருந்தே, இந்த போட்டித் தேர்வுகளுக்காக மாணவர்களை தயார் படுத்தும் கோட்டா பயிற்சி நிலையங்கள் உருவாகும். லட்சக்கணக்கில் இவர்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்குவார்கள். இப்படி ஒரு சுரண்டல் முறையைத் தான் நீட் உருவாக்கும். இதற்குப் பேர் தான் எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரிகிற கொள்ளியில் குதிப்பது.

10. நீட் தரமான மருத்துவர்களை உருவாக்குமா?

இல்லை. நீட் தேர்வுக்கும் மருத்துவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை. தரமான மருத்துவர்களை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் மருத்துவத் தேர்வுமுறைகளாலுமே உருவாக்க முடியும்.

11. நீட் உச்சநீதிமன்றத் தீர்ப்பாக இருக்கிறதே ? தமிழகத்துக்கு மட்டும் அதிலிருந்து விலக்களிக்க முடியும்?

ஜல்லிக்கட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தான். அதை எதிர்த்து, தமிழகம் போராடி அந்த உரிமையை வெல்லவில்லையா? மனமிருந்தால் மார்க்கமுண்டு. பெருந்திரளான மக்கள் போராட்டங்களின் மூலம் சட்டத்திருத்தங்களைக் கொண்டு வர முடியும்.

12. நமது கோரிக்கைகள் என்ன?

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்விலிருந்து விலக்களிப்பது கல்வியை பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்று இவ்விரண்டு கோரிக்கைகளை நாம் ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். அதற்காக போராட வேண்டும்.

ஆங்கில மூலப்பதிவு – மருத்துவர். எழிலன்.

தமிழ் மொழியாக்கம் – அ.மு.செய்யது, இளந்தமிழகம் இயக்கம்.

About அ.மு.செய்யது

2 comments

  1. ‘நீட்’ குறித்து முழுமையாக அறிய உதவும் மிகச் சிறந்த பதிவு.

    பாராட்டுகள்.

  2. நன்று விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>