Home / அரசியல் / தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2
தோழர்.ஞானையாவுடன் மதியவன்

தோழர் ஞானையாவின் ஓட்டத்தைத் தொடர்வோம் – 2

தோழர் ஞானையாவின் குறிப்பான சில கருத்துக்கள்

சாதியொழிப்பு

“அகமண முறையை சட்ட வழியில் தடை செய்ய வேண்டும்” என்ற தனது கருத்தை முதன் முதலாக கட்சியின் தேசியக் கவுன்சிலில் முன்வைத்துள்ளார். புரட்சிகர கட்சியான இந்திய கம்யுனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும், இயக்கமாகவே எடுத்து நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பலரும் மதியீனம் என்று நகைத்த போதிலும், தனது கருத்தில் உறுதியாகவே இருந்தார் தோழர் ஞானையா. சாதிக்குள் காதல் என்றால் என்ன செய்வீர்கள் என்று குரல் எழுந்த போது, விதிவிலக்குகளைப் பரிசீலனை செய்யலாம் என்று கூறியுள்ளார். எதிர்ப்பு அதிகமானதால் ஓட்டெடுப்பிற்கு விடப்பட்டது. 110 உறுப்பினர்களில் அவரது கருத்திற்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இருந்த போதிலும் மன நிறைவுற்றார். சுயசாதித் திருமணங்களை தடை செய்ய வேண்டுமென்ற தனது கருத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இருக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது.

இக் கருத்து ஆர்வமூட்டக் கூடியதாக இருந்த போதிலும், நமது விருப்பத்திற்கும் சமூக வளர்சிக் கட்டத்திற்கும் இருக்கும் இடைவெளியைச் சுட்டிக்காட்டி, இக் கருத்தை மறுத்து தோழர் ஞானையாவுடன் நானும் பல முறை வாதிட்டுள்ளேன். இக் கோரிக்கைக்குள் இருக்கும் சனநாயக மறுப்பையும் சுட்டிக்காட்டியுள்ளேன். சுய சாதிக்குள் திருமணம் செய்வதை இழிவாகக் கருதும் ஒரு சமூகத்தை, அரசியல் பண்பாட்டுப் போராட்டங்களின் வழி உருவாக்க இயலும். அதற்காக உழைக்கலாம், போராடலாம். ஆனால் தற்பொழுது இக் கோரிக்கை சனநாயக வழியில் ஏற்புடையதாக இருக்காது என்ற கருத்தை முன் வைத்தேன். நான் அவரது கருத்தை நெருங்கிவிட்டதாகக் கூறி, விழிப்பூட்டினார்.

இது போன்ற கோரிக்கைகள் எழுப்பப்படுவதையும் விவாதங்கள் நடை பெறுவதையும் புதிய கருத்தாக்கங்களுக்கான ஊற்றுக்கண்களாகப் பார்க்க வேண்டும் என்கிறார் தோழர் ஞானையா. சுயசாதித் திருமணத்தை, பாலிய விவாகம் போல கருதும் ஒரு சமூகம் உருவாகும் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள “தீண்டாமை ஒழிக்கபடுகிறது” என்னும் பதத்தை “சாதி ஒழிக்கப்படுகிறது” எனத் திருத்த வேண்டுமெனக் கோரிய பெரியாரின் கருத்தையே “சுயசாதி திருமணத்திற்குத் தடை” என்ற கோரிக்கையிலிருந்து பிரதிபலிக்கிறேன் என்கிறார் தோழர் ஞானையா. நமது நாட்டில், இக் கோரிக்கையானது கலாசாரப் புரட்சியில் ஒரு அங்கம் என்கிறார். கம்யுனிஸ்ட் கட்சிகள் ‘சாதியொழிப்பு’ (Anihilation of Caste) என்ற அம்பேத்கரின் அறைகூவலை, இந்திய சனநாயகப் புரட்சியின் அங்கமாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சாதியொழிப்பை தங்களது செயல் திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து, இயக்கங்கள் நடத்துவதில்லை என்று கம்யுனிஸ்ட் கட்சிகள் மீது குறைபட்டுக்கொள்கிறார். இவ் விடயத்தில், “சாதியை உடைப்போம், சமுதாயத்தை இணைப்போம்” (ஜாத் தோடா, சமாஜ் ஜோடா) என்ற கன்சிராமின் முழக்கம் தன்னைக் கவர்ந்ததாகக் கூறுகிறார். கம்யுனிஸ்ட்கள் ஆரம்பகாலத்திலேயே முன் வைத்திருக்க வேண்டிய முழக்கங்கள் இவை என்கிறார் தோழர் ஞானையா.

அம்பேத்கரையும் பெரியாரையும் கம்யுனிஸ்ட்கள் நெருக்கமான உறவுகொண்டு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார். பெரியவர் சிங்காரவேலர் தான் சாதியொழிப்புக் கருத்துக்களை நேரடியாக உணர்திருந்த ஒரே கம்யுனிஸ்ட் என்கிறார். தோழர் சிங்காரவேலர் மீனவ குளத்தில் பிறந்ததும், கம்யுனிஸ்ட் கருத்துக்களை உள்வாங்கிய போது அவர் 60 வயதினை எட்டியிருந்ததும், அவரது இந்த சீரிய பார்வைக்கு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என்கிறார். மேலும் பூனா ஒப்பந்தத்தை அம்பேத்கர் ஏற்றிருக்கக் கூடாது என்ற கருத்தை சிங்காரவேலர் வெளியிட்டதாகவும் சொல்கிறார். இதனால் தீண்டப்படாத மக்கள் அரசியல் ரீதியில் சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்குள் தொடரும் அவலம் இருக்கிறது. உண்ணா நோம்பினால் காந்திக்கு ஆபத்து நேர்த்திருக்க வாய்ப்பில்லை. அவரது ஆதரவாளர்களான முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் உயர்சாதி இந்துக்களும் காந்தியை எப்படியும் காப்பாற்றியிருப்பார்கள் என்று சிங்காரவேலர் கருத்து வெளியிட்டதாகக் கூறுகிறார் தோழர் ஞானையா.

சமூக நீதி

மண்டல் குழு அறிக்கையை முழுமையாக ஆதரித்து, கட்சியின் தேசிய கவுன்சிலில் வலியுறுத்தியவர்களில் முன்னணியில் இருந்தவர் தோழர் ஞானையா. இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை சாதி மட்டும் தான். வாழையடி வாழையாக இருந்துவந்த அநியாய, அடாவடியான ஒதுக்கீட்டை ஒழிப்பதே இன்றைய ஒதுக்கீட்டின் அடிப்படை. வரலாற்றில் ஒதுக்கீடு தெய்வீகமாக்கப்பட்ட மோசடியை ஒழிக்கவே இந்த எதிர்வகை ஒதுக்கீடு (Counter reservation against divinized reservation in history) போன்ற கருத்துக்களை சமரசமின்றி ஆணித்தரமாக எடுத்துவைத்துள்ளார். மண்டல் குழு அறிக்கையைப் பற்றி தோழர் ஞானையா எழுதிய குறு நூலினை கலைஞர், அன்பழகன், கி.வீரமணி ஆகியோர் தன்னிடம் கேட்டுவாங்கிப் படித்ததாகக் கூறுகிறார். தோழர் ஞானையா இந்திய கலாசாரப் புரட்சிக்கான திட்டங்களாக தோராயமான 11 அம்சத் திட்டங்களை முன்வைக்கிறார். அத் திட்டங்களில் “அகமண முறைத் தடை” போலவே தனியார் நிறுவங்களில் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையும் மிக முக்கியமான ஒன்றாகும்.

தோழர் ஞானையாவின் தமிழ்த் தேசிய உணர்வு

சைப்ரசில் உள்ள கம்யுனிஸ்ட் கட்சி அகேல் (AKEL). இன்றளவும் இந்த அகேல் கட்சிதான் சைப்ரசில் தனிப் பெரும் கட்சி. அகேல் கட்சித் தோழர்கள் வழியாக, அங்குள்ள ஆர்மீனிய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார் தோழர் ஞானையா. சைப்ரஸ் ஒரு தீவு நாடு. இங்கிலாந்தின் காலனி. 1920-22 துருக்கியில் 2000 ஆர்மீனியர்கள் இனக்கொலை செய்யப்பட்டனர். இங்கிலாந்தியர்களால் காப்பாற்றப்பட்ட ஆர்மீனியர்கள் சைப்ரசில் குடியேற்றப்பட்டு குடியுரிமையும் கொடுக்கப்பட்டனர். இதனால் ஆர்மீனியர்களுக்கு இங்கிலாந்தின் மீது அபார நன்றியுணர்வு இருந்தது. இங்கிலாந்தின் சோவியத் எதிர்ப்பு ஆர்மீனியர்களின் சோவியத் எதிர்ப்பாகவும் வெளிப்பட்டது. இதை உணர்ந்த தோழர் ஞானையா, அந்த ஆர்மீனிய நண்பர்களுக்கு சோவியத் யூனியனில் உள்ள ஆர்மீனியாவை நேரில் சென்று பார்த்துவர வழிகாட்டினார். சைப்ரசில் உள்ள சோவியத் தூதரகமும் மகிழ்ச்சியுடன் அவர்களை அழைத்துச் சென்றது. ஆர்மீனியா சோவியத் யூனியனில் இணைக்கப்பட்ட ஒரு குடியரசு, ஆர்மீனியாவிற்கென தனி தேசியக் கொடி, தனித் தேசிய கீதம் என்பதையெல்லாம் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்ட சைப்ரஸ் வாழ் ஆர்மீனியர்கள் புளங்காகிதம் அடைந்தனர். அவர்களுக்கு சோவியத் மீதிருந்த எதிர்ப்புணர்வு நீங்கி, தோழமை உணர்வு மேலோங்கியது. ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். தோழர் ஞானையா அந்த ஆர்மீனியர்களின் உள்ளங்களில் அசைக்க முடியாத நாயகனாக உருவெடுத்தார். இந்த ஆர்மீனியர்கள் தான் தோழரை ‘கருப்புக் கம்யுனிஸ்ட்’ என்று செல்லமாக அழைத்தவர்கள். இந்த நிகழ்வினை மகிழ்ச்சி பொங்கப் பதிவு செய்யும் தோழர் ஞானையா, அம் மக்களிடம் வெளிப்பட்ட தேசிய இன உணர்வின் ஆழ்ந்த தாக்கம் தனக்கு வியப்பளித்ததாகச் செல்கிறார். மேலும் தனக்கு “தமிழர் தேசிய இன உணர்வு, இன்று போல் அன்று (1944) ஏற்பட்டிருக்கவில்லை!” என்றும் குறிபிடுகிறார்.

1992 ல் ஹைதராபாத் கட்சி மாநாட்டில் “மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலும், வெவ்வேறு மாநில அரசுகளுக்கிடையிலும் இந்தி இணைப்பு மொழியாக இருக்கும்” என்ற வாக்கியம், தேசியக் கவுன்சிலில் ஒப்புதல் பெற்ற வரைவுத் திட்ட அறிக்கையில், இடைச் செருகலாகச் சேர்க்கப்பட்டிருந்ததை தோழர் ஞானையா கடுமையாக எதிர்த்தார். இது ஒரு ஹிந்தியனுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். தமிழனான எனக்கு ஏற்புடையதல்ல என்கிறார். (இங்கே இந்தியன் என்றில்லாமல் “ஹிந்தியன்” என்று அவரே பயன்படுத்துகிறார்). இணைப்பு மொழியாக எந்த மொழியை வலியுறுத்துகிறீர்கள் என்று, ஒரு வட இந்திய உறுப்பினர் கேட்ட போது “இப்போது நீங்களும் நானும் எந்த மொழியில் உரையாடிக் கொண்டிருகிறோமோ அந்த மொழியில்” என்று ஆங்கிலத்தில் பதிலளித்திருக்கின்றார். ஆங்கிலம் இல்லை என்றால் இந்தியா ஒற்றை நாடாக உருவாகியிருக்க முடியாது என்றும் வாதிட்டுள்ளார். அந்நிய மொழிக்கு ஆதரவளிக்கிறீர்களா என்ற பழி அவரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியும் எனக்கு அந்நிய மொழிதான் என்று தோழர் ஞானையா பதிலளித்திருக்கிறார். “இன்றும் நான் டெல்லிக்கு வந்திறங்கியதும், வெளிநாட்டிற்குள் நுழைந்ததாகவே உணர்கிறேன்” என்கிறார். மொழி மட்டுமல்ல, நடை, உடை, உணவு, நிறம், கலாசாரம், மனிதத் தோற்றம் எல்லாமே மாறுபட்டது தான் என்கிறார். இடைச் செருகலாக சேர்க்கப்பட்ட வாக்கியத்தை நீக்கவில்லை என்றால் “ தேசிய இனங்களின் உரிமை மறுக்கப்படுவதால் வெளிநடப்புச் செய்வேன் என்று ஆணித்தரமாக வாதிட்டுள்ளார்”. திட்ட அறிக்கையிலிருந்து அந்த வாக்கியம் நீக்கப்பட்டது. தோழர் ஞானையா வென்றார். மொழிச் சிக்கல் தனி விவாதமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் நடைபெறவில்லை. இதில் தோழர் ஞானைவின் ஏக்கம் என்னவென்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசியக் குழு உறுப்பினர்களிடம், இந்த இடைச் செருகலைச் சுட்டிக்காட்டிய பிறகும், ஒருவர் கூட அவருக்கு ஆதரவாக குரலெழுப்பவில்லையாம். 1942 ல் டாக்டர் ஜி.அதிகாரி முன்வைத்து நிறைவேற்றப்பட்ட, தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமைத் தீர்மானம் மிகச் சரியானது என்று, டெல்லியில் வாழ்ந்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றியுள்ள தனக்கு உணர்த்திவிட்டதாக கூறுகிறார்.

பிரிந்துபோகும் உரிமையுடன் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது மார்க்சிய லெனினிய வழி. கம்யுனிஸ்ட்களுக்கு குழப்பம் ஏன் என்று வினவுகிறார் தோழர் ஞானையா. கம்யுனிஸ்ட்கள் (இந்திய) தேசபக்த மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்கிறார். இந்திய தேசியம் செயற்கையானது. தமிழ்த் தேசியமே இயற்கையாக அமைத்த ஒன்று. எனவே இந்திய தேசியம் தேய்ந்துகொண்டும் தமிழ்த் தேசியம் வளர்ந்துகொண்டும் செல்லும் தன்மையுடையது என்கிறார்.

இறையாண்மையுள்ள தேசிய இனங்களின் ஒன்றியமாக இருந்தால் தவிர, இந்தியாவிற்கு எதிர்காலம் இல்லை என்பது தோழர் ஞானையாவின் கருத்து. மாநிலங்களவை ஒரு மோசடியான அவை. அது தேசிய இனங்களின் அவையாக இருப்பதே சரியானது என்கிறார். ஒரு தேசிய இனத்தின் மக்கட்தொகை என்னவாக இருப்பினும், ஒவ்வொரு தேசிய இனமும் அவையில் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.

WhatsApp Image 2017-10-04 at 11.50.34 AM(1)

தமிழர்களின் தனித்த வரலாறு, நாகரிகம், பண்பாடு, இலக்கியம், தனித் தத்துவ இயல் ஆகியவற்றை இந்தியத்துவமாகவும் இந்திய வரலாறாகவும் பொதுமைப்படுத்த முடியாது என்கிறார். தோழர் ஞானையா  தனது இறுதிக் காலங்களில் தமிழர் தத்துவ மரபில் பேரவா கொண்டிருந்தார். “தக்கானதிற்குள் நுழைந்த இந்துக்கள், நாகரிகமடைந்திருந்த பல தேசங்களைக் கண்டார்கள்” …“அவற்றில் மிகவும் தொன்மையானது தமிழ் பேசுகின்ற தமிழர்களின் ராஜ்யங்கள்” என்ற மார்க்சின் வரிகளை சிலாகித்துக்கொண்டே இருப்பார்.

தற்போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு சமஸ்கிருத மற்றும் இந்தித் திணிப்பு,  இந்துமயமாக்கல் எனும் பாசிசக் கொள்கை, வளங்களை கட்டற்ற முறையில் தாரைவார்க்கும் போக்கு, அப்பட்டமான முதலாளியச் சார்புக் கொள்கைகள், சனநாயக அமைப்பு முறையைச் சீர்குலைப்பதாக உள்ளது என்கிறார். இந்த அதீத அடக்குமுறைப் போக்கு இந்தியாவில் வெவ்வேறு விதாமான பொருளாதாரத் தேவைகளும், கலாச்சாரங்களும், மனப்போக்குகளும் இருப்பதை அனிச்சையாக நினைவூட்டி, அதன் இடைவெளிகளைக் கிளறிவிடுவதாகக் கூறுகிறார். பல மட்டங்களிலும் தாக்குண்டுள்ள மக்களின் வெறுப்பு, இடதுசாரிகள் அடித்து முன்னேறும் வாய்ப்பையும் தேவையையும் உருவாக்கி இருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் சர்வாதிகாரி போல் மோடி அறிவிக்கும், அடாவடி அறிவிக்கைகளை யாரும் திடமாக எதிர்த்து சவாலாக நிற்கவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்.

இறுதிவரை வாசித்துக்கொண்டும், வளர்ந்துகொண்டும், கருத்துக்களை வளர்தெடுத்துக்கொண்டும் இருந்த தோழர் டி.ஞானையா எனும் அந்த மாபெரும் அரசியல் ஆளுமை இன்று நம்மோடு இல்லை. மாமனிதர்கள் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டாலும், சிந்தித்தவை நிற்பதில்லை. தோழரின் கருத்துக்கள், அதன் தேவையை நிறைவு செய்யும் வரை நம்மோடும் நமக்கு அடுத்த தலைமுறைகளோடும் பற்றிப் பயணிக்கவே போகிறது. அவரது கருத்துக்களால் நிரம்பிவழியும் நினைவுகளோடு, முடிக்க மனமில்லாமல் முடிக்கிறேன். தோழர் ஞானையா கடைசியாக எழுதிக்கொண்டிருந்த “கம்யுனிஸ்ட் இயக்கங்கள் – ஓர் விமர்சன மதிப்பீடு” என்ற ஆய்வு நூல் முற்றுப்பெறாமல் நிற்கிறது. அந்நூலை, அதே நிலையில் வெளியிடுவதற்குத் தோழர்கள் முயற்சி எடுப்போம்.

இறுதிவரை தோழரை குழந்தை போல் பார்த்துக்கொண்ட மூர்த்தி அண்ணனையும், மாலை நேரங்களில் பேச்சுத் துணையாக இருந்து, விகடகவி என்று தோழரால் பகடியாக அழைக்கப்பட்ட அண்ணன் சுவாமிநாதனையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

மதியவன் இரும்பொறை

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*