Home / அரசியல் / பச்சையிலிருந்து காவிக்கு!

பச்சையிலிருந்து காவிக்கு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர்களும் இன்றைய சூழலில் பயப்படக் கூடிய பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. மோடி, பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, ஸ்டாலின் என்றிருந்த அந்த பட்டியலில் அண்மையில் சேர்ந்திருப்பது ” டெங்கு கொசுக்கள்”!

” அஞ்சி அஞ்சிச் சாவார் அவர் அஞ்சாத பொருளில்லை அவனியில்!”

ஊழல், சிபிஐ, பதவிப் பறிப்பு என்று மோடி அரசு மிரட்ட தொடங்கிய முதல் நாளில் இருந்து அஞ்சத் தொடங்கிய அதிமுக அமைச்சர்கள், இன்று வரை தங்களுக்குப் பின்னால் ஒரு நிழல் இருப்பது போலத்தான் நடந்து வருகிறார்கள்; பேசுகிறார்கள். அஞ்சுவதால் பிழைத்திருக்கும் இந்த அமைச்சரவை தினமும் மக்களை காவு கொடுத்து கொண்டிருக்கிறது டெங்கு காய்ச்சலுக்கு!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் உள்ளாட்சியில் நடைபெறும் வேலைகள் முடங்கி கிடக்கின்றன என்று அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், டெங்கு பற்றியோ, அதற்கு தேவையான முன்தயாரிப்புகள் பற்றியோ சிறிதும் சிந்தையற்று கிடக்கிறது எடப்பாடி அரசு. உண்மையிலேயே, மக்களின் மீது அக்கறை கொண்டு செயல்படும் அரசாக இருந்திருந்தால், டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கிய நாள் முதலே விழிப்போடு இருந்து செயல்பட்டு இருக்கும்.

உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாத இடத்தில் சுயஉதவிக் குழுக்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் ஆகியவற்றைக் கொண்ட குழுவை உருவாக்கியிருக்க முடியும். திட்டமிட்ட நோய்த்தடுப்பு பரப்புரைகளை பரந்துபட்ட அளவில் நடத்தியிருக்க முடியும். ஆனால், முதல்வர் இருக்கையை விட்டு எழுந்தால் பன்னீர் அமர்ந்துவிடுவாரோ, இருவரும் செயல்பட்டால் மோடி ஆட்சியைக் கலைத்துவிடுவாரோ, அமைச்சர்களை தினகரன் வளைத்துவிடுவாரோ என்று சிறு துரும்பையும் நகர்த்தவில்லை; நகர்த்தவும் போவதில்லை இவர்கள்!

 அரசு டெங்குவை ஒழிக்கவேண்டிய பணிகளை செய்ய வேண்டும், வெறும் உறுதிமொழி ஒன்றுக்கும் பயன்படாது.


அரசு டெங்குவை ஒழிக்கவேண்டிய பணிகளை செய்ய வேண்டும், வெறும் உறுதிமொழி ஒன்றுக்கும் பயன்படாது.

சுகாதாரச் செயலாளர் என்ன செய்கிறார்?!

டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் அதிகரிக்கத் தொடங்கிய நாளிலிருந்து, அனைத்து தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து அறிக்கை அளிக்கிறார் தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன். ஆனால், தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.

ஊழல் புரையோடிக் கிடைக்கும் அமைப்பில், அரசியல்வாதிகளின் மெத்தனத்தால் பாதிக்கப்படும் மக்களை காப்பது அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள்தான். அப்படி ஒரு நிலை தமிழகத்தில் இப்போது இல்லை.

ஏனென்றால், முன்னாள் முதல்வர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் இறந்த போதும்,  அவரின் உடல்நிலை குறித்து அரசு சார்பில் பத்திரிக்கைச் சந்திப்பு நடத்தி மருத்துவ சிகிசிச்சைகள் பற்றி அறிக்கை கொடுத்த போதும், சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி விசாரணை ஆணையம் அமைக்கும் போதும் என அப்போதும், இப்போதும் இவர்தான் சுகாதாரச் செயலாளர். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வுக்கு வில‌க்கு வழங்கவில்லையா, உடனே கலந்தாய்வை நடத்துவது, பத்திரிக்கையாளர்களை சந்திப்பது என எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் அதிகாரிகளால் மக்களை காக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி எடுக்க முடியும்?. அரசியல்வாதிகளைவிட பொதுமக்களாகிய நாம் அச்சப்பட வேண்டியது இவர்களை போன்ற அதிகாரிகளைப் பார்த்துதான்.

200 -க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவுக்கு பலியாகியிருக்கும் இந்த நேரத்தில் கூட, யாரும் டெங்குவுக்கு பலியாகவில்லை எனும் கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறது அரசு, அதற்கு ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் பேருதவி செய்கிறார்கள்.

ஒருபுறம், முதல்வரும், அவருடைய அமைச்சர்களும் செய்திருக்கும் ஊழல்கள், சொத்துக்களை காரணமாக்கி மோடி அரசு மிரட்டுகிறதென்றால், மறுபுறம் அரசு அதிகாரிகள் அனைவரும் இந்திய அரசுக்கு கீழ்ப்படிப்படிப்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அரசுகள் ராதாகிருஷ்ணன்களுக்கும், கிரிஜா வைத்யநாதன் போன்றோரை அரவணைத்துச் செல்லும் அரசாகவும், உதயசந்திரன், சகாயம் போன்றோரை தூக்கிஅடிக்கும் அரசாகவும் இருக்கின்றது.

மக்களின் எண்ணத்தை புரிந்துகொள்ளாத அரசு!

நீட் தேர்வு வேண்டாம் என்று நாம் சொல்கிறோம்; பயிற்சி தருகிறோம் என்று இவர்கள் சொல்கிறார்கள்!, GST வேண்டாம் என்று நாம் சொல்கிறோம்; இந்திய அரசோடு ஒத்துழைக்க வேண்டும் இவர்கள் சொல்கிறார்கள்!, டெங்குவுக்கு மருந்து கொடுங்கள் என்று நாம் சொல்கிறோம்; கோமியம் குடியுங்கள் என்று இவர்கள் சொல்கிறார்கள்! இந்த ஆட்சி கலையட்டும் என்று நாம் சொல்கிறோம்; அம்மா சாவில் மர்மம் என்று இவர்கள் சொல்கிறார்கள்.

தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்களின் முகமூடி கிழிந்தது தொங்கி கொண்டிருக்கிறது, ஆனால், இவர்களை மாற்றும் அதிகாரத்தை மக்களிடம் கொடுக்காத தேர்தல் சனநாயகத்தைப் பார்த்து, அனிதா தொடங்கி டெங்கு காய்ச்சலுக்கு பலியான அனைவரும் கைகொட்டி சிரிக்கிறார்கள்! முதல்வர் பழனிச்சாமியின் அருகிலிருப்பவர்கள் யாரேனும் சொல்லுங்கள், பச்சை வெளுத்து காவியாகிப் போனதை தமிழக மக்கள் காறி உமிழ்கிறார்கள் என்று!

கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*