Home / அரசியல் / பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு!
2017_10$largeimg29_Sunday_2017_154832036

பணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு!

இந்திய துணைக்கண்டத்தில் பயன்பாட்டில் இருந்த 500 , 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு அறிவித்து இன்றோடு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த நிகழ்வு குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். பாரதீய சனதா கட்சியின் மூத்த தலைவர்களான யஸ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆகியோர் கூட, மோடி அரசின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிரான தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய நடுத்தர மக்கள்தான். பயணம் செய்ய, மருத்துவம் பார்க்க, விவசாயிகள் உரம் வாங்க, சிறுதொழில் செய்வோர் சம்பளம் கொடுக்க, வீட்டு நிகழ்வுகளுக்கு செலவழிக்க என தாங்கள் கையில் வைத்திருந்த  சேமிப்பு ஒரே நாளில் செல்லாக்காசாகப் போகும் எந்தவொரு குடிமகனும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.

ஒவ்வொரு முறையும் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு, “புதிய இந்தியா” பிறந்துள்ளது என்று சூளுரைக்கிறார் மோடி. ஆனால், புயல், வெள்ளம், நோய் தொற்று இல்லாமல், அரசின் ஒரு பொருளாதாரத் திட்டம் மக்களின் உயிரை காவு வாங்கியதென்றால் அது பணமதிப்பிழப்பு அறிவிப்பாகத்தான் இருக்கும். வங்கிகளில் வரிசையில் நின்று, மருத்துவமனையில் கட்ட பணம் இல்லாமல், வேலை இழந்து என எத்தனையோ அவலங்களை இந்திய மக்கள் மீது சுமத்திய பெருமை நரேந்திர மோடியையும், அவரது அரசையுமே சாரும்.

இரண்டு மாதங்களுக்கு முன், இந்திய ரிசர்வ் வாங்கி கொடுத்த அறிக்கையில் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட ரூபாய் தாள்கள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. அப்படியானால், மோடி அரசு ஒழிப்பதாக சொன்ன கறுப்புப் பணத்தின் அளவு வெறும் 5 விழுக்காடுதானா?

கையில் காசில்லாமல் எளிய மக்கள்தான் அவதிப்பட்டார்களே ஒழிய, புதிய 2000 தாள்களில் மாலை போட்ட பெங்களூரூவைச் சேர்ந்த தொழிலதிபருக்கோ, முன்னாள் தமிழகச் செயலர் ராம்மோகன் ராவுக்கோ, ஜெய் அமித் ஷாவுக்கோ பணமதிப்பிழப்பு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

பணமதிப்பிழப்பு ஒரு தோல்வி என்று எதிர்க்கட்சிகளும், நிபுணர்களும் கூறி வரும் நிலையில் பாரதீய சனதா கட்சியின் அமைச்சர்கள் இந்த நொடி வரை தங்களுடைய பழைய பல்லவியையே பாடி வருகின்றனர்.

இன்று பேசிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. நிர்மலா சீதாராமன், ” பயங்கரவாதிகளின் கைகளுக்கு பணம் செல்வது தடைபட்டுள்ளது” என்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, ” இந்த நடவடிக்கையின் மூலம்தான், வரிகட்டாமல் ஏய்த்தவர்கள், வரி கட்டத் தொடங்கியுள்ளனர்” என்கிறார்.

இந்த நடவடிக்கை மூலம், ” புதிய இந்தியா” பிறந்துவிட்டதாக அறிவித்த பிரதமர் மோடி, 2025 – ல் இந்தியா புதியதாகிவிடும் என்கிறார். வெறும் கவர்ச்சி வார்த்தை மாயங்களை வைத்து மட்டும் மக்களை ஏமாற்றிவிட முடியும் என்று மோடி தலைமையிலான அரசு முழுவதும் நம்புகிறது.

அதானிக்கும், அம்பானிக்கும், ஜெய் அமித் ஷாவுக்கும் தடையின்றி லாபத்தில் கொழிக்கும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிய இந்தியா எனும் வெற்று வார்த்தையை மக்களிடம் செல்லுபடியாக்க நினைக்கிறது!

தமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது மாறும் என்று கடைக்கோடி தமிழ் மக்களும் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், மோடி தலைமையிலான இந்திய அரசு எப்போது மாறும் என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நினைக்கக் கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.

கதிரவன் – இளந்தமிழகம் இயக்கம்

Print Friendly, PDF & Email

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>