Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா?

சலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா?

சலீம் அலி என்றொரு சிறுவன் பம்பாயில் இருந்தான்.தனது பொம்மை துப்பாக்கி கொண்டு ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டு வீழ்த்தினான். இறந்து போன அச்சிட்டுக்குருவி, சற்றே வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த சலீம், தனது மாமாவிடம் அக்குருவியைக் காட்டி இது என்ன பறவை என்று கேட்டான்.  மாமா அவரை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்துக்கு (Bombay Natural History Society) அனுப்பிவைத்தார். சிறுவனை சந்தித்த மில்லார்ட் என்கிற ஆங்கிலேயர் அது “மஞ்சள் தொண்டைக் குருவி” என்று அடையாளம் கண்டு சொன்னார். சலீமின் ஆர்வத்தைக் கண்ட‌ மில்லார்ட் , சலீமை அக்கழகத்தில் பாடம் செய்யப்பட்ட‌ எண்ணற்ற பறவையினங்களைச் சுற்றிக் காண்பித்தார். சிறுவன் சலீமுக்கு பறவைகள் மீதான ஆர்வம் தொற்றிக் கொண்ட வரலாற்றுத் தருணம் அது தான்.

அன்றிலிருந்து சிறுவன் சலீமுக்கு எல்லாமே பறவைகள் தான். கையில் ஒரு நோட்டையும் பென்சிலையும் வைத்துக் கொண்டு பறவைகளைப் பார்த்து குறிப்பெடுக்கத் தொடங்கினான் பத்து வயது சிறுவனான சலீம் அலி. மில்லார்ட் கொடுத்த பம்பாயில் வாழும் பறவைகள் பற்றிய நூலையும் தொடர்ந்து படித்துக் கொண்டே வந்தான். பறவைகளை கவனித்து, அவற்றின் உடலமைப்பு, இனப்பெருக்கம், செயல்பாடுகள், உணவு முறை ஆகியவற்றை கூர்ந்து கவனித்து வந்தான். பின்னாளில் இந்தியாவின் தலை சிறந்த பறவையியல் வல்லுனராகவும் இயற்கை அறிஞராகவும் புகழ்பெற்ற சலீம் அலி என்கிற ஆளுமை உருவான கதை இது.

salim_alibook

கல்லூரி முதலாம் ஆண்டுக்கு பிறகு படிப்பைத் தொடர மனமில்லாத சலீம் அலி, தனது குடும்பத் தொழிலான சுரங்கம், மர வேலைகளைப் பார்ப்பதற்காக, பர்மாவுக்குச் சென்றார். அங்குள்ள காட்டுப்பகுதி அவருடைய பறவைகள் மீதான காதலை இன்னும் அதிகமாக வளர்த்தது. அந்தக் காதலே அவரை திரும்பவும் பம்பாய்க்கு வரவழைத்து பட்டப்படிப்போடு, உயிரியல் குறித்தும் படிக்கக் காரணமாக அமைந்தது.

பறவைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தார் சலீம். பறவைகள் குறித்த நுட்பமான ஆய்வு முறைகளை மேற்கொண்ட சலீம் அலி தனது புகழ் பெற்ற “இந்தியப் பறவைகளைப் பற்றிய கையேடு” (The Hand Book on Indian Birds) ஒன்றை எழுதினார். உலகப்புகழ் வாய்ந்த பறவையியல் அறிஞரான எஸ்.தில்லான் ரிப்ளே (S.Dillon Ripley) என்பவருடன் நெருங்கிய நட்புடன் இருந்த சலீம் அலி, அவரோடு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வாழும் பறவைகளைப் பற்றியும் வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளைப் பற்றியும் முழுமையான விவரங்கள் அடங்கிய‌ கையேட்டைத் தயாரித்தார். பறவைகளை ஒளிப்படம் எடுப்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார் சலீம்.

பறவைகளின் அழகையும் வண்ணங்களையும் பார்த்து ரசிப்பது வெறுமனே பொழுதுபோக்கு மட்டுமின்றி, இயற்கை பாதுகாப்பிற்கும் மனிதர்களுக்கும் பறவைகள் எவ்வளவு முக்கியமானவை என்கிற சூழலியல் கருத்தை ஆணித்தரமாக நம்பினார் சலிம். அது உண்மையும் கூட. இன்று இந்திய பறவையியல் ஆர்வலர்களுக்கெல்லாம் ஒரு தந்தையாக சலீம் அலி திகழ்கிறார். புதிதாக வரும் பறவை நோக்கர்களுக்கு களவழிகாட்டியாக சலீம் அலியின் நூல்களே விளங்குகின்றன. சலீம் அலிக்கு மரியாதை செய்யும் வகையில், இந்திய அரசு ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பறவைகள், காட்டுயிர் சரணாலயங்களுக்கு சலீம் அலியின் பெயரையும் சூட்டி கெளரவித்துள்ளது. இயற்கை பேணல், காட்டுயிர், பறவைகள் ஆகியவற்றுக்காக‌ தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சலீம் அலி, “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” என்கிற தனது சுயசரிதையை எழுதினார். அந்தச் சிட்டுக்குருவி, அவர் சிறுவனாக இருந்த போது சுட்டு வீழ்த்திய அதே மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி தான்.

நவம்பர் 12 சலீம் அலியின் பிறந்த நாள்

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*