Home / கலை / அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது!

அறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது!

கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா, ராமசந்திரன், சுனுலட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் நடித்து வெளியாகியிருக்கும் படம்தான் அறம். பல கைகளை காப்பாற்ற மேலிருந்து வரும் கையோடு, “அறம்” எனும் தலைப்பு திரையில் விரிய தொடங்குகிறது திரைப்படம்.

இந்திய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும், காட்டூர் எனும் ஊரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது கதை.  “தண்ணி தாகம் எடுக்காத சொட்டு மருந்தா போட சொல்லு”,  ” என்ன கபடி விளையாட விடாதவங்க, இவன நீச்சல் அடிக்க விட்ருவாங்களா” என்பதில் இருந்து படம் முழுக்க சமூக அவலத்தை பேசும் அரசியல் வசனங்கள்.

ஒருபுறம், இந்தியாவின் நவீனத்தை பறைசாற்றும் ராக்கெட் ஏவுதளம், மறுபுறமோ குடிக்க ஒருவாய் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள். ஒரு கலைப்படைப்பிற்கு முக்கியத் தேவையான முரண், திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்தே தொடங்கிவிடுகிறது. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சி அமைப்பும், உரையாடலும் நமக்கு இந்த முரண்பாட்டை கடத்திக் கொன்டே இருக்கின்றன. ” ஆழ் துளை கிணற்றில் இருந்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட தண்ணீர் லாரிகளை முடக்கினீர்கள் சரி; அதை கிராமங்களுக்கு அனுப்பும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது” என்று விசாரணை அதிகாரி கேட்குமிடத்தில் அதிகார வரம்புகளுக்குள் சிக்கியிருப்பது மாவட்ட ஆட்சியர் மட்டும் அல்ல; தமிழ்நாடு அரசே அந்த நிலையில்தான் இருக்கிறது என்கிற உண்மை உரைக்கும்.

மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உவரி நீர் உட்புகும் என பல்வேறு நிபுணர்கள் கூறி வரும் இன்றைய நிலையில், பக்கவாட்டில் துளை போட்டு குழந்தையை மீட்கும் காட்சியில் நிலம் வெடித்து பிளப்பது, நாளை நம்முடைய விவசாய நிலங்கள் என்ன ஆகும் என்பதை உணர்த்துகின்றன.

சிறுமி தன்ஷிகா ஆழ் துளை கிணற்றில் சிக்கி இருக்கும் போது, திரையில் வெளிப்படும் உணர்வு துளிகூட குறையாமல் பாரவையாளர்களுக்கு கடத்தப்படுவது படத்தின் மிகப்பெரிய பலம். ஆழ் துளை கிணற்றில் விழுந்த ஒரு குழந்தையை காப்பாற்ற எந்த வசதியும் இல்லாத நாட்டின் மக்களாகிய நாம்தான், ராக்கெட் விடுவதையும், வல்லரசு கனவையும் பெருமையாகப் பேசித் திரிகிறோம்.

அறிவியல் வளர்ச்சி என்பது நாம் அன்றாடம் சந்திக்கும் தேவைகளின் பொருட்டு இருக்க வேண்டும் என்பதற்கு ஆழ் துளைக் கிணற்றில் விழும் குழந்தைகள் ஒரு உதாரணம். இது போல், நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படும் அறிவியல் கண்டுபிடுப்புகளை உருவாக்கும் கல்வியோ, அறிவியல் துறையோ, அதை அங்கீகரிக்கும் அரசோ இங்கு இல்லை எனும் உண்மையை காட்சியாக பதிவு செய்துள்ளனர்.

கொஞ்சம் தவறியிருந்தாலும், ஆவணப்படம் ஆகியிருக்கும் கதைக்களத்தை கையாண்ட இயக்குனர் கோபி நயினார், முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளது மிகவும் பாராட்டத்துக்குரியது. அதோடு, மதிவதனி எனும் மாவட்ட ஆட்சியராக வரும் நயன்தாரா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராமசந்திரன், சுனுலட்சுமி, காக்கா முட்டை சிறுவர்கள் என ஒவ்வொருவரும் சிறப்பான பங்களிப்பை செய்துள்ளனர். தரையில் தெரியும் பறவை கூட்டத்தின் நிழல், நீருக்குள் தெரியும் கதாபாத்திரங்களின் நிழல் என சிறப்பான ஒளிப்பதிவும், பின்னணி இசையும் காட்சிகளில் வலிமையைக் கூட்டுகின்றன.

நான் சிறுவயதில், மலையாளத்தில் வெளியான ஒரு படத்தைப் பார்த்த நினைவு, ஜெயராம் நடித்திருப்பார். அதிலும் குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிடும், அந்த குழந்தையை காப்பாற்றுவதை ஒட்டியே கதை நகரும். ஆனால், “அறம்” திரைப்படம் ஆழ் துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையைக் கொண்டு இந்திய அரசியலின் நிலையை, தமிழகத்தின் சிக்கல்களை, இந்திய அறிவியலின் தோல்வியை தோலுரித்துக் காட்டுகிறது.

அதிகாரிகள் என்கிற நிலையில் இருந்து மக்களாக உணரும் போதுதான், மாற்றங்கள் நிகழும் என்று படத்தில் சொல்லியிருப்பது அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல; நம் அனைவருக்கும் பொருந்தும். என்னைப் பொறுத்தவரையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்திருப்பது அந்த குழந்தை மட்டுமல்ல; நாமும் நாம் வாழும் இந்த சமூகமும் கூடத்தான்.
நாம் விழுந்து கிடக்கும் இடத்தில் இருந்து மேலெழுந்து சமூக அவலங்களை பேச அறைகூவல் விடுப்பதோடு முடிகிறது படம்.

அறம் – நம் அனைவரும் பார்க்க வேண்டியது மட்டுமல்ல; பேண வேண்டியதும் கூட!

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*