Home / கலை / உங்கள் கழிவுகளைத் தொடுகிறவர்கள்

உங்கள் கழிவுகளைத் தொடுகிறவர்கள்

கையில் ஒரு ஒளிபடக் கருவி கிடைத்ததும், மலை சுற்றுலாவுக்கோ, கடற்கரைக்கோ சென்று படமெடுக்கும் இளைஞர்களைத் தான் பார்த்திருக்கிறேன். தொழிற்முறை கலைஞர்களின் புகைப்பட கண்காட்சிகள் பெரும்பாலும் பின்நவீனத்துவ பாணியில் அமைந்திருக்கும். படங்களைப் பார்த்து புரிந்து கொள்வதற்கே நிபுணத்துவம் தேவைப்படுமோ என்கிற அளவில் படைப்புகள் இருக்கும். ஒளி , வண்ணங்கள் இவைகளின் கூட்டுக்கலவையில் மாய்மாலங்களை நிகழ்த்தும் ஒளிபடக் கலைஞர்களைப் பார்த்திருக்கிறேன். இறுதியில் அப்படங்கள் உங்களுக்கு சொல்லும் செய்தி என்ன? பார்த்தோம், ரசித்தோம், வியந்தோம். அவ்வளவே!

இன்று நான் சென்னையில் பார்த்த ஒரு புகைப்படக் கண்காட்சி சற்றே வித்தியாசமானது. ஒரு சமூக அவலத்தை, இந்தியச் சமூகத்தின் சாதியச் சுரண்டலை எந்த‌ போலிப் பூச்சுகளுமின்றி, மறைத்தல்களுமின்றி நேரடியாக பொட்டில் அடித்தாற் போல, உறைய வைத்திருக்கிறார் இளைஞர் பழனிக்குமார். ஒரு கட்டுரையோ, புத்தகமோ,சினிமாவோ புரிய வைக்கக் கூடிய வாழ்வியலை, தனது ஒளிபடங்களின் மூலம் எளிமையாக புரிய வைக்க முயன்றிருக்கிறார்.

மலக்குழியில் இறங்கும் மனிதர்களின் வாழ்வும் மரணமும் தான் பழனிக்குமாரின் ஒளிபடக்கருவியில் சேமிக்கும் பதிவுகளாக இருக்கின்றன. தோழர் திவ்யபாரதியின் “கக்கூஸ்” ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளரான தோழர் பழனிக்குமார், ஆவணப்படக் குழுவோடு தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மலக்குழியில் புதையுண்டு போயிருக்கும் சாதிய அவலங்களையும், துப்புரவுத் தொழில் செய்யும் மக்களையும் குழந்தைகளையும் இரத்தமும் சதையுமாக ஒளி படங்களாக எடுத்திருக்கிறார். ஓரிரு இடங்களைத் தவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பயணம் செய்து இப்படங்களை எடுத்திருப்பதாக கூறும் பழனிக்குமாரின் முதல் கனவு இப்புகைப்பட கண்காட்சி.

kids02

பிணவறையில் கிடத்தப்பட்ட உடலின் மலம் அப்பிய பாதங்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் கையுறை, அவர்களைச் சார்ந்து வாழும் குழந்தைகளின் முகங்கள் என புறக்கணிப்பும் வலியும் கண்காட்சி சுவரெங்கும் நிரம்பியிருந்தன. மலக்குழி மரணம் நடந்த வீட்டில் அழும் ஓலங்கள் சட்டகங்களிலிருந்து மேலெழுகின்றன. மன அதிர்வுகளின்றி, விம்மல்களின்றி இப்படங்களை பார்த்து முடிக்க முடியாது. “நானும் குழந்தை தான்” என்பது கண்காட்சியின் தலைப்பு. துப்புரவுத் தொழிலாளர்களின் வீட்டுக் குழந்தைகள் நிராகரிப்பின் உச்சத்தில் புன்னகைப்பவர்களாக இருக்கிறார்கள். பழனிக்குமாரின் ஒளிபடக்கருவியின் மூலம் அவர்கள் மின்மினிகளாக ஒளிர்கிறார்கள். கருப்பு வெள்ளையைத் தவிர மற்ற வண்ணங்களை முற்றாக நிராகரிக்கிறார் பழனிக்குமார். இவ்விரு வண்ணங்களுக்கு அப்பாற்பட்ட‌ மலத்தின் நிறம், வருணாசிரமத்தின் நிறமாக வீச்சமெடுக்கிறது. இப்படியான அவலங்களைச் சுமந்து கொண்டு, இந்த மண்ணில் வாழ்வதில் எந்த பெருமையும் கொள்ளாதீர்கள் என்பதைச் சொல்லும் படங்கள் தான் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

“ஸ்வச் பாரத்” என்கிற தூய்மை இந்தியா திட்டம், இந்தியாவின் மலக்குழி அவலங்களை ஒழிக்கவில்லை என ஐ.நா. இந்திய அரசின் முகத்தில் காறி உமிழ்கிறது.தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிவறைகள், மனித மலத்தை மனிதனே அள்ளும் சமூக அவலத்தை மென்மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது என ஐ.நா. மேலும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ஒருபுறம் நவீன அக்ரஹாரங்கள் அதிகரிக்க, மறுபுறம் மலக்குழி மரணங்கள் தொடர்கின்றன. இப்படியான சமூகச் சூழலில், சாதிய இருப்பை கேள்விக்குள்ளாக்கும் கலைப்படைப்புகள் எவ்வடிவில் வெளி வந்தாலும் அவை போற்றுதலுக்குரியவை.

இயக்குனர் ரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருக்கும் இந்த புகைப்படக் கண்காட்சி, சென்னையில் உள்ள லலித் கலா அகாதெமியில் நவம்பர் 9 முதல் 14 வரை நடந்து முடிந்திருக்கிறது.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*