Home / அரசியல் / பாபர் மசூதியும் இந்திய நீதியும்

பாபர் மசூதியும் இந்திய நீதியும்

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் பெருமிதம் கொள்ளும் இந்தியாவுக்கு உலக அளவில் தலை குனிவை ஏற்படுத்திய நிகழ்வு ‘பாபர் மசூதி இடிப்பு’. இந்தியர் என்னும் உணர்வை பின்னுக்கு தள்ளி, நாட்டில் மதவாத அரசியலுக்கு அச்சாரமிட்ட அந்த சம்பவம், இந்தியாவின் கறுப்பு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.

1528-ம் ஆண்டு, மாமன்னர் பாபரின் தளபதி மீர் பாகியால் அயோத்தியில் கட்டப்பட்டது பாபர் மசூதி. இஸ்லாமியர்களின் தொழுகை ஸ்தலமாகவும், இந்தியாவின் வரலாற்றுப் பொக்கிஷமாகவும் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு, திசம்பர் 6-ம் நாள், இடிக்கப்பட்டது.

விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளால் நாடு முழுவதும் இருந்து திரட்டப்பட்ட உணர்ச்சியூட்டப்பட்ட இளைஞர்களால் அந்த மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

நாட்டில் எத்தனையோ வழிபாட்டுத் தளங்கள் இருக்கும்போது, முஸ்லிம்களின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஏன்?

அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும், அங்கிருந்த பிரபலமான ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துத்துவ அமைப்பினர் கூறுகின்றனர்.

1574-ம் ஆண்டு ராமர் புராணத்தை எழுதிய துளசிதாசரின் ‘ராம சரித்த மனாஸிலும்’, விஷ்ணு ஸ்மிருதி என்னும் புராண நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ள புனித தலங்கள் வரிசையில் அயோத்தி இல்லை. எனவே, அங்கு பிரசித்திபெற்ற ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என வரலாற்று ஆசிரியர் ராம் சரண் ஷர்மா எடுத்துக்காட்டுகிறார். மேலும், ராமர் கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறுவது பொய் என்றும் அவர் கூறுகிறார்.

1949-ம் ஆண்டு, பாபர் மசூதியில் அதிசயத்தக்க வகையில் ராமர் சிலை தோன்றியதாகவும், மசூதி இடிப்பு ஆதரவாளர்களால் கூறப்படுகிறது.

ஆனால், 1949-ம் ஆண்டு திசம்பர் 22-ம் நாள், பாபர் மசூதிக்குள் அத்துமீறி ராமர் சிலையை வைத்ததாக, இந்துத்துவ அமைப்பை சேர்ந்த ஆபிராம் தாசு உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீது உத்தர பிரதேச காவல்துறை வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாபர் மசூதி பகுதியில் அகழ்வாய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, அங்கு கோவில் இருந்ததற்கான சான்று உள்ளதாக சொன்னபோது, அவை சமண கோவில் என்றும், பெளத்த கோவில் என்றும் அந்தந்த மத அமைப்புகளால் சொந்தம் கொண்டாடப்படுகிறது.

தாங்கள் வெற்றிக்கொண்ட நாட்டின் வரலாற்றுச் சின்னங்களை உடைத்து, புதிய கட்டுமானங்களை உருவாக்குவது உலகளவில் மன்னர்களின் பாரம்பரிய வழக்கம். அப்படி கட்டப்பட்டவற்றை மீண்டும் இடிப்பது என்று கிளம்பினால், உலகில் பாதிக்கும் மேற்பட்ட வரலாற்று தளங்களை இடிக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில், ராமர் கோவில் இருந்ததற்கான சான்றுகள் கூட இல்லாத நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும், அந்த இடிப்பு ராமர் கோவிலின் பெயரால் நியாயப்படுத்தப்படுவதும் அப்பட்டமான மதவெறியின் வெளிப்பாடு என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1947-ல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காயிதே மில்லத்தை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், இந்திய முஸ்லிம்களுக்கு எப்போதும் உதவ காத்திருப்பதாக,  தெரிவித்தார். அதை  ஏற்க மறுத்த காயிதே மில்லத், நீங்கள் வேறு நாடு நாங்கள் வேறு நாடு என்று கூறினாராம்.

இந்திய முஸ்லிம்களிடம் இருந்து இந்தியாவை அந்நியப்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்புகள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. அதை பாபர் மசூதி இடிப்பின் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறப்பாக செய்துவிட்டதாக இந்திய உளவு அதிகாரி ராமன் கூறுகிறார்.

ஆனால், இந்தியாவின் மீதும், இந்திய நீதித் துறையின் மீதும் நம்பிக்கை வைத்து, நீதிமன்றக் கதவுகளை இந்திய முஸ்லிம்கள் இன்னமும் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ் – இளந்தமிழகம் இயக்கம்.

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*