Home / அரசியல் / “எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது”

“எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது”

தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதெனத் தமிழக அரசு முடிவெடுத்தது. மு. அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவையும் போட்டது. அதில்  பல்துறை அறிஞர் பெருமக்களும் இடம்பெற்றிருந்தனர். இதனால் இந்தப் பெரும் அறிஞர் குழுவின் கல்வித் திட்டம் தமிழர்க் கல்விக்கு விடியலாய் அமையும் என்பது பல கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. இப்போது கல்வி வரைவுத் திட்டம் ஒன்றை மக்களின் பார்வைக்கு அக்குழு முன்வைத்துள்ளது. ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலும் பாடங்கள் அனைத்துக்கும் தனித் தனியாக வரைவுக் கலைத்திட்டம், பாடத்திட்டம் இரண்டையும் முன்வைத்துள்ளனர்.

அவர்கள் திட்டங்கள் எதையும் தமிழில் தரவில்லை, ஆங்கிலத்தில் மட்டுமே தந்துள்ளனர். தமிழகக் கல்வியே ஆங்கிலத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலையில், பாடத்திட்ட வரைவுக்குத் தமிழ் எதற்கு எனக் குழுவினர் நினைத்து விட்டார்கள் போலும். தமிழ்நாட்டின் சமச்சீர்ப் பாடங்கள் உருவான கதை நமக்குத் தெரியுந்தானே! முதலில் ஆங்கிலத்திலேயே சிந்தித்து பாடங்கள் படைத்து, பின்னர் அதனைத் தமிழாக்கி நம் தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கொடுத்தார்கள். ஆங்கிலம் அசல்! தமிழ் அதன் நகல்! தமிழ் நாட்டில் சிறந்த ஆங்கிலக் கல்விச் சமுதாயத்தை உருவாக்காமல் பன்னாட்டுக் குழுமங்களில் எப்படி வேலைக்கு அமர்வது என்பதே இன்றைய கவலை.

தமிழ் நாட்டில் இப்படி ஆங்கிலக் கல்விப் பட்டாளத்தை உருவாக்கத்தான் திமுக, அதிமுக ஆட்சிகள் செயல்பட்டு வருகின்றன. சென்ற திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் அன்றைய மேயர் மா. சுப்பிரமணியன் ஆங்கிலவழி வகுப்புகளை அறிமுகப்படுத்தினார். அதனை இன்னும் தமிழ்நாடெங்கும் பேரளவில் கொண்டு சேர்த்தார் ஜெயலலிதா. தொலைநோக்குத் திட்டம் 2023 அறிவிப்பிலேயே தமிழ்நாட்டில் ஆங்கிலம் பேசும் இளைஞர்கள் பெருமளவில் இருப்பதால், பன்னாட்டுக் குழுமங்கள் தாராளமாக இங்கு கால் பதிக்கலாம் எனக் கூவி அழைத்தார்.

இன்று தலைநகர் சென்னையில் தமிழ்வழிக் கல்வி கொடுத்துக் கொண்டிருந்த அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் இல்லை, ஆங்கிலவழிக் கல்வி மட்டுமே. இன்று அரசுப் பள்ளிகளின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்! சென்னை அசோக் நகரில் சுமார் 4000 பேர் படிக்கும் புகழ்பெற்ற பெண்கள் மேனிலைப் பள்ளியை எடுத்துக் கொள்வோம். எந்த வகுப்பை எடுத்துக் கொண்டாலும் பத்துக்கு மேற்பட்ட பிரிவுகள் ஆங்கிலத்தில், போனால் போகிறதென்று ஒரே ஒரு பிரிவு தமிழில்! இதுவுங்கூட எத்தனை நாளைக்கு? தமிழர் தலைநகரில் தமிழுக்குச் சவப்பெட்டி மூடப்பட்டு கடைசி ஆணிகள் அறையப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

தமிழ்க் கொடி இறங்கி ஆங்கிலக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை தழைத்தோங்கி இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் அறிவியல், கணிதவியல் கருத்துக்களை முழு ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கலாம்! தமிழில் உரையாடுவது வேண்டுமானால் அவர்களுக்குக் கடினமாக இருக்குமோ என்னவோ?

இந்த வலுவான ஆங்கிலக் கல்விச் சூழலில்தான் கல்விக்குழுவும் பாடத்திட்ட வரைவுகளை ஆங்கிலத்தில் மட்டுமே கொடுத்துள்ளதோ என்றே வெளிப் பார்வையாளருக்குத் தோன்றும். இது மட்டுமல்ல, பாடத் திட்ட வரைவுக்குழுவில் வரைவுகளை முன்வைத்தோர் முழுக்க ஆங்கிலத்திலேயே உரையாடியுள்ளனர், அங்கு பங்கெடுக்கச் சென்ற ஆசிரியர்களும் பாடத்திட்டம் குறித்து அவர்களுக்குள்ள கருத்துகளை ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும், எழுதித் தர வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை வேறு.

தமிழர்க் கல்வியில் எங்கும் எதிலும் ஆங்கிலமே நீக்கமற நிறைந்திருக்கும் சூழலில், ஆங்கில மொழிப் பாடத் திட்ட வரைவு என்னவாயிருக்கும் என்ற ஆர்வம் மேலோங்காமல் இல்லை.

ஆங்கில மொழிக் கற்பித்தல் குறித்து குழு முன்வைத்துள்ள வரைவு சொல்வதென்ன? பார்ப்போம்.
தமிழகப் பள்ளி ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கில அறிவு முன்னே பின்னே உள்ளதாகக் கவலைப்படுகிறது வரைவு. அப்படியானால் அவர்களின் ஆங்கில அறிவு மோசம் என்றுதான் நாம் புரிந்து கொள்ள முடியும். இப்போது நமக்குச் சில வினாக்கள் எழுகின்றன.

ஒரு பக்கம் ஒரே நாளில் அரசுப் பள்ளி தமிழ்வழி வகுப்பறைகளை ஆங்கிலவழிக்கு மாற்றுகிறீர்கள். அன்றிலிருந்தே ஆசிரியர்கள் மாணவரிடம் ஆங்கிலத்தில் உரையாட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். மறுபக்கம் நீங்களே ஆசிரியர்களின், மாணவர்களின் ஆங்கில அறிவு மோசமாக உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த ஆசிரியர்கள் அவர்களின் பாடத்திட்டக் கருத்துகளை ஆங்கிலத்திலேயே எழுதவும் பேசவும் வேண்டும் என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு?
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆங்கில அறிவு அவ்வளவு போதாது என நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள், மகிழ்ச்சி.  ஆனால் இந்தத் தாழ்வுக்கு என்ன காரணம்? கடந்த பத்தாண்டாக மிக வேகமாக அரசுப் பள்ளிகளை ஆங்கிலக் கூடங்களாக மாற்றி வருகிறீர்களே? இதனால் மாணவர்களின் ஆங்கில அறிவில் பெரும் வளர்ச்சி ஏற்படும் என ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே அறிவித்தாரே? பின்னர் ஏன் இந்த நிலை? ஒருவேளை ஒரு பத்தாண்டு முன்பு தமிழ்நாடு ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கில அறிவு படு மோசமாக இருந்து, இப்போது ஆங்கிலப் பெருமுயற்சியின் விளைவாகக் கொஞ்சம் தேறி இந்த மோசமான நிலையை நோக்கி முன்னேறியுள்ளார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

இது குறித்து அசர் கல்வி அறிக்கை வெளிச்சம் தருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இந்திய மாணவர்களின் தாய்மொழி அறிவை, கணித அறிவை, ஆங்கில அறிவை ஒவ்வோர் ஆண்டும் சோதித்துப் பார்க்கும் அறிக்கை இது. இந்த அறிக்கையின்படி, 2008, 2016 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மாணவர்களின் ஆங்கில அறிவு ஏதும் ஏற்றம் கண்டுள்ளதா எனப் பார்ப்போம். 8ஆம் வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களில் ஆங்கிலச் சிற்றெழுத்துக்களை (small letters) படிக்கத் தெரிந்தோர் 2008இல் 14.2%, 2016இல் 11.8%. எளிய ஆங்கிலச் சொற்களைப் படிக்கத் தெரிந்தோர் 2008இல் 34.3%. 2016இல் 26%. இச்சொற்களைப் படிக்கத் தெரிந்தாலும் அதற்கு அர்த்தம் கூறத் தெரிந்தோர் 2008இல் 69.2%, 2016இல் 61.4%.  இந்த ஆங்கிலத் தரத் தாழ்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பெரிய வேறுபாடில்லை என்கிறது அசர்.

கடந்த ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட ஆங்கிலப் பெருமுயற்சியினால் மாணவர்களின் ஆங்கில அறிவு கடந்த 8 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளது. ஆங்கில எழுத்துகளையும் சொற்களையும் படிக்கவே தத்தளிக்கும் மாணவர்களுக்கு அறிவியலையும் வரலாற்றையும் ஆங்கிலத்திலேயே சொல்லித் தருகிறேன் என்பது எவ்வளவு பெரிய கேலிக் கூத்து. வரைவே சொல்கிறது, மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கும் ஆங்கிலத் திறன் மோசமாக உள்ளது. அப்படியானால் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பாடங்கள் நடத்தினால் ஆங்கிலக் கல்வி வளரும் என்று தமிழகக் கல்வித் துறை நம்புகிறது. நம் அமைப்பில் மாணவர்கள் குரல்கொடுக்க முடியாது, ஆனால் சம்பள உயர்வுக்காகச் சாலையில் கூட உட்கார்ந்து போராடும் ஆசிரியர்கள், “எங்களில் எவருக்கும், ஏன், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குங்கூட ஆங்கிலம் தெரியாது, எங்களால் எப்படி ஆங்கிலத்தில் பாடம் எடுக்க முடியும்” என  வெளிப்படையாக அறிவிக்கலாம் அல்லவா?

இருக்கட்டும். தமிழகக் கல்விச் சூழலில் ஆங்கிலத் தரம் குன்றியிருப்பதாகக் கவலைப்படும் வரைவுக் குழு  இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம் எனத்தானே முதலில் ஆய்ந்திருக்க வேண்டும்? சொல்லப் போனால், ஆங்கில அறிவு 2008இல் மோசமாக இருந்தது, இன்றோ படுமோசமான நிலைக்குச் சரிந்துள்ளது. தமிழர் ஆங்கிலம் பாதாளத்திலிருந்து அதல பாதாளத்துக்குப் போனது ஏன் என்றல்லவா கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் குழு ஏற்கெனவே ஆங்கில வீழ்ச்சிக்குக் காரணமான இந்த ஆங்கிலமயத் திணிப்புக்  கொள்கையையே இன்னும் தீவிரமாகக் கொண்டு செல்ல முடிவு செய்கிறது.

இந்த ஆங்கிலப் பாடத் திட்ட வரைவிலேயே இருக்கும் ஆங்கில இலக்கணப் பிழைகளைச் சற்றே கண்டுகொள்ளாது, ஆங்கில அறிவு கொளுத்த வரைவு தரும் யோசனைகளைச் சற்று பார்ப்போம். தரங்கெட்டுக் கிடக்கும் ஆங்கில அறிவை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து அவ்வரைவு சில கற்பித்தல் முறைகளை முன்வைக்கிறது.

வரைவு கூறுகிறது: “ஒரு மொழியின் இலக்கண விதிகள் தெரிவதாலேயே அம்மொழியை நன்கு பயன்படுத்தும் திறன் கிடைத்து விடுவதில்லை. ஒரு மொழியைக் கேட்டும் வாசித்தும் தெரிந்து கொள்வதற்கு அல்லது அதனை நாமே எழுதியும் பேசியும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் போது நாம் அம்மொழியை உணர்கிறோம். இவ்வழியில் பேசும் மொழியின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலமே நாம் அம்மொழியின் சொல்வளத்தைப் பெருக்கிக் கொள்கிறோம், அம்மொழியை அகவயப்படுத்துகிறோம்.”

அந்த வரைவு internalize எனச் சொல்வதன் தமிழாக்கமே அகவயப்படுத்துதல் ஆகும். internalize என்ற சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தரும் பொருள் என்னவென்றால், ஒருவர் இன்னொருவரின் அல்லது இன்னொரு சமூகக் குழுவின் பண்புகளை அல்லது பண்பாடுகளைத் தனதாக்கிக் கொள்வதாகும். நமது வரைவின் கூற்றுப்படி, ஒருவர் இன்னொரு சமூகம் பேசும் மொழியைத் தனதாக்கிக் கொள்ளுதல் அல்லது தன் உறுப்பாக்கிக் கொள்ளுதல் என்பதாகப் புரிந்து கொள்ளலாம். இவ்வகையில் ஆங்கிலத்தைத் தமிழ் மாணவர் தனதாக்கிக் கொள்வதற்கு இலக்கண விதிகளைக் கற்க வேண்டியதில்லை என்கின்றனர் வரைவுக் குழுவினர். மாறாக அந்த மொழியைக் கேட்க வேண்டும், வாசிக்க வேண்டும், எழுதவும் பேசவும் வேண்டும் என்கின்றனர்.

மொழியைக் கேட்பது என்றால் என்ன? அம்மொழி பயிலும் மாணவரைச் சுற்றிலும் அம்மொழி பேசுவோர் இருக்க வேண்டும்.  அப்போதுதான் அம்மொழியை அன்றாடம் அந்த மாணவர் “கேட்டு” அம்மொழியில் தேர்ச்சி பெற முடியும்.  தமிழ்நாட்டில் 1 விழுக்காட்டுப் பெற்றோரின் குழந்தைகள் வேண்டுமானால் அன்றாடம் வீட்டிலும் பள்ளியிலும் ஓரளவு நல்ல ஆங்கிலம் “கேட்டு” வளரும் சூழல் உள்ளது எனலாம். ஆனால் தமிழகத்தில் 99 விழுக்காட்டுக் குழந்தைகள் வீட்டிலும் வெளியிலும் பள்ளியிலும் தமிழ் ஒன்றை மட்டுமே “கேட்டு” வளர்கின்றனர். இந்த வரைவே கூறுவதன்படி, மாணவர்களுக்குப் பள்ளி வெளியே ஆங்கிலச் சூழல் இல்லை, பள்ளி ஆசிரியர்கள் இடையிலும் ஆங்கிலப் பேச்சில் தேர்ச்சியோ நம்பிக்கையோ  நல்லபடியாக இல்லை. மாணவர்களுக்கு ஆங்கிலம் கேட்கும் சூழல் இல்லை என்பதை ஏற்கும் வரைவு அப்படி ஒரு நிலையை பள்ளியில் மட்டுமேனும் ஏற்படுத்த நினைக்கிறது. உள்ளபடியே, அந்த மாணவர்களுக்கு ஆங்கிலம் கேட்கும் சூழல் உருவாக வேண்டுமானால் அவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா என ஏதேனும் ஆங்கிலம் பேசும் நாட்டுக்குப் போயாக வேண்டும். இது புரியாமல் இங்கிலாந்துப் பள்ளிச் சூழலை அப்படியே தமிழ்ப் பள்ளிகளுக்குள் இறக்குமதி செய்ய நினைக்கிறது வரைவுக் குழு. இது மொழிக் கல்வி அறிவியலுக்கே புறம்பானது. மொழிக் கல்விப் பயில்வில் தலைகீழ் முயற்சி இது.

தாய்மொழிப் பயில்வைப் பொறுத்த வரை, குழந்தைகளின் முதல் கல்விக்கூடமே அவர்கள் வாழும் சமுதாயந்தான். அவர்கள் வாழும் சமுதாயத்திடம் இலக்கணம் தெரியாமலே மொழி கற்கின்றனர். கற்ற மொழித் தேர்ச்சியுடன் பள்ளிக்குள் நுழைகிறார்கள். அந்த மொழிக் கல்வியை அப்படியே பள்ளியிலும் தொடர்கிறார்கள். இப்படித்தான் நம் தமிழ்நாட்டில் முதலில் பெற்றோரிடம் சமுதாயத்திடம் “பேசும் தமிழ்” கற்றுக் கொண்ட குழந்தைகள் பள்ளியில் “எழுதும் தமிழ்” கற்கத் தொடங்குகிறார்கள். தமிழ் இலக்கணம் கற்கிறார்கள். இதுவே இயற்கைவழி மொழிக் கற்றல். இது தாய்மொழிப் பயில்வில் மட்டுமே சாத்தியம்.

அயல்மொழிப் பயில்வைப் பொறுத்த வரை, நிலைமை தலைகீழானது. முதலில் பள்ளிக்கூடத்தில் முதல் ஐந்து வகுப்புகளுக்கேனும் எழுத்திலும் பேச்சிலும் இலக்கணத்திலும் தாய்மொழியில் நல்ல தேர்ச்சி பெறும் குழந்தைகள், அந்த மொழி இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் அயல் மொழியை எழுதக் கற்கிறார்கள், பிறகு தொடர்ச்சியாகப் பேசக் கற்கிறார்கள். இப்படித்தான் பிரான்சு, ஜெர்மனி நாடுகளில் முதல் ஐந்து வகுப்பு வரை தாய்மொழியில் நல்ல தேர்ச்சி பெற்று விட்டு, ஆறிலிருந்து ஆங்கிலம் உள்ளிட்ட ஏதேனும் ஓர் அயல்மொழியைக் கற்கத் தொடங்குகின்றனர். இப்படி இலக்கண அடிப்படையிலான மொழிபெயர்ப்பு வழி மட்டுமே அயல்மொழிப் பயில்வில் சாத்தியம். தாய்மொழி போன்று இலக்கண உதவியின்றி இயற்கையாகப் பேசக் கற்கும் முறை அயல்மொழிப் பயில்வில் சாத்தியமே இல்லை.

இது தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு ஒன்றும் புதிதன்று. இதுதான் ஒரு காலத்தில் அயல்மொழிப் பயில்வில் கடைப்பிடிக்கப்பட்டது. 1960களில் தமிழ்நாட்டு மாணவர்கள் வகுப்பு 5 வரை தமிழில் நல்ல தேர்ச்சி பெற்று, பின்னர் தமிழ் இலக்கணத்தின் துணையுடன் ஆங்கிலத்தை முதலில் எழுதவும், பிறகு பேசவும் கற்றனர். ஆகவே தாய்மொழி தமிழ் எனும் போது முதலில் பேச வரும், பிறகுதான் எழுத வரும். அயல்மொழி ஆங்கிலம் எனும் போது முதலில் எழுத வரும், பிறகுதான் பேச வரும். இந்த வழியில் ஆங்கிலம் பயின்றவர்கள்தான் அப்துல்கலாம் உள்ளிட்ட நம் தமிழர்கள். சர்ச்சில் எழுத்திலேயே இலக்கணப் பிழை கண்டுபிடித்த ‘சில்வர் டங்’ சீனிவாச சாஸ்திரியும் இப்படி ஆங்கிலம் கற்றவர்தான். அந்தக் காலத்திலிருந்து இன்றைய தமிழர்களின் ஆங்கில அறிவு பெரும் சரிவைச் சந்தித்திருப்பதாக ஆங்கில இதழ்களே பல முறை எழுதியுள்ளன. ஒவ்வொரு பத்தாண்டிலும் தமிழ் மாணவர்களின் ஆங்கில அறிவு சரிந்து வருவதைப் பல கல்வி ஆய்வறிக்கைகளும் உறுதி செய்கின்றன. அதைத்தான் நடைமுறையும் நமக்கு உணர்த்துகிறது.

ஆனால் நம் வரைவுக் குழுவோ இன்னும் ஒரு படி மேலே போய் கம்யூனிகேடிவ் ஸ்கில்லை உயர்த்தப் போவதாகக் கூறுகிறது. இதற்குக் “கருத்தை நன்கு வெளிப்படுத்தும் திறன்” எனத்தான் உலகில் எவரும் புரிந்து கொள்வர். ஆனால் தமிழ்ச் சூழலில் நிலைமைவே வேறு. ஒருவருக்கு அவரது தாய்மொழியில் அவர் நினைக்கும் கருத்துக்களை நன்கு வெளிப்படுத்தும் திறன் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரி, அதனால் ஒரு பயனுமில்லை. தமிழர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், ஆங்கிலம் பேசுவதே கம்யூனிகேஷன் ஸ்கில். மக்களிடம் உள்ள இந்த மூடநம்பிக்கையை மூலதனமாக்கி தமிழகம் எங்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் வணிகம் களைகட்டுகிறது. இந்த ஆங்கில மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டிய இடத்தில் உள்ள கல்விக் குழு பள்ளிக் கூடங்களையே ஸ்போக்கன் இங்கிலீஷ் நிறுவனங்களாக்கப் பார்க்கிறது. ஆயிரமாயிரம் ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிட்யூட் கற்றுத் தராத ஆங்கிலத்தையா நம் கல்விக்கூடங்கள் கற்றுக் கொடுத்து விட முடியும்? குழுவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்னும் ஒன்றும் குறைந்து விடவில்லை. தமிழ்நாட்டுக் கல்வியில் ஆங்கிலப் பின்னடைவுக்கான காரணம் தலைகீழ் மொழிப் பயில்வே என்பதைக் குழு உணர வேண்டும். இந்தத் தலைகீழ் மொழிப் பயில்வை நேராக்கவே குழு முயல வேண்டும். அதை விடுத்து ஏற்கெனவே தலைகீழாக உள்ள மொழிப் பயில்வு முறையை இன்னும் நேர்ச் செங்குத்தாக்கக் குழு முயலுமானால், அது தமிழ் மாணவச் சமுதாயத்தின் ஆங்கில அறிவை மட்டுமல்ல, தமிழ் அறிவையும் சேர்த்து ஒழிக்கும் அவல நிலைக்கே வழிவகுக்கும்.

தமிழ்நாட்டு ஆசிரியர்களே இனியாவது துணிச்சலுடன் கூறுங்கள்: “எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது, தமிழ் மட்டுமே தெரியும். எனவே எங்களுக்கு நன்கு தெரிந்த தமிழின் துணையுடன் அயல்மொழி பயிற்றுவிக்கும் பணிக்கு எங்களைத் தயாராக்குங்கள்.”

“எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது” என்ற முழக்கமே தமிழ்ப் பெற்றோர்களுக்கு ஆங்கிலக் கல்வியின் எதார்த்த நிலையை உணர்த்தும். இது 1950, 60கள் போன்று ஒரு சரியான அயல்மொழிப் பயில்வு முறை நோக்கி தமிழகக் கல்வித் துறையையும் நகர்த்தும்.

–    கட்டுரையாளர் நலங்கிள்ளி –  “ஆங்கில ஆசான்” என்னும் ஆங்கில மொழிப் பயிற்சி நூல், “ஆங்கில மாயை” உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*