Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / ஆந்தைகள் என்றால் அபசகுனமா?

ஆந்தைகள் என்றால் அபசகுனமா?

அரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உள்ளூர நெடுநாட்கள் இருந்து வந்தது. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படும் ‘புள்ளி ஆந்தை (Spotted Owlet)’ கூட கண்ணில் படாமல் இழுத்தடித்தது.

கடந்த அக்டோபர் மாதம் ஏலகிரியில் நடைபெற்ற தமிழ் பறவையாளர்கள் சந்திப்பு நடந்த அன்று.இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், ஒரு நாய்க்குட்டி சீரான இடைவெளியில் குரைப்பதைப் போல ஒரு ஓசை தொடர்ந்து கேட்டது. அது ஒரு ‘சிறு ஆந்தையின்’ குரல் (Oriental Scops Owl) என நண்பர்கள் கூறினார்கள். சிலர் அதை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து, கையில் டார்ச் லைட்டும் கேமிராவுமாக கிளம்பிச் சென்றார்கள். அன்றைய நாளின் சோர்வு காரணமாக, மறுநாள் அதிகாலை எழுந்து தேடிக் கொள்ளலாம் என்று எங்களுக்குள் சமாதானம் சொல்லி விட்டு அறைக்கு சென்று தூங்கினோம்.

இதமான குளிரையும் பொருட்படுத்தாமல் மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பினோம். அடர்த்தியான, உயரமான மரங்களைக் கொண்டிருந்த ஏலகிரி YMCA வளாகத்தின் வைகறை பறவைகளின் இசையால் நிரம்பியிருந்தது.  முந்தைய நாள் இரவு, சிறு ஆந்தையைப் பார்க்கச் சென்ற நண்பர்கள் அதைப் பார்த்து ஒரு சிறு காணொளிப் பதிவும் எடுத்திருந்தார்கள். இருள் இன்னும் விலகாமல் இருந்ததால், ஆந்தையைப் பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி, திருச்சியில் வாழும் ஆய்வு மாணவரான சிவா, (தமிழகத்தின் ஆந்தைகள் குறித்த ஆய்வினை மேற்கொண்டு வருபவர்) உடன் அச்சிறு ஆந்தையை தேடி நடந்தோம். அரை மணி நேரம் காத்திருந்தும் குறிப்பிட்ட அந்த மரத்தை விட்டு ஆந்தையார் வெளிவரவே இல்லை. கிடைத்த வாய்ப்பும் பறிபோனதே என நொந்து கொண்டாலும், அச்சிறிய உயிரின் அழைப்பைக் கேட்டதே சற்று ஆறுதலாக இருந்தது.

சந்திப்பு முடிந்து சென்னை திரும்பினேன்.எங்கு சென்றாலும் மரங்களையும் கிளைகளையும் நோக்கி, ஏதேனும் பறவைகள் தென்படுகின்றனவா என்று தேடியவாறேசெல்வது எனக்கும் இணையருக்கும் வழக்கமாகி விட்டது. அப்படி ஒரு நாள், இரு சக்கர வாகனத்தில் அஸ்தினாபுரம் ஏரிப் பக்கமாக  சென்று கொண்டிருந்த போது, ஒரு உடைந்த பனைமரத்தில் ஏதோ அசைகிறது என்று கை காட்டினார்.  கண்டிப்பாக அது ஒரு புள்ளி ஆந்தை (Spotted Owlet) தான் என்று உறுதியாகச் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை.உடனே வீட்டுக்குத் திரும்பி இரு கண் நோக்கியையும்(Binocular), ஒளிபடக் கருவியையும் எடுத்துக் கொண்டு வந்து பார்த்தோம். அவர் சொன்னதுசரி தான். இரண்டு “புள்ளி ஆந்தைகள்” !

பனைமரத்தின் இரு பொந்துகளிலிருந்து, வட்டமான தட்டை முகத்தில், கூரிய விழிகளை நிலை குத்தி எங்களையே பார்த்துக் கொண்டிருந்தன. ஆர்வம்தாளாமல்,சற்று நெருங்க முயல விருட்டென்று வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல பறந்து சென்று அருகில் இருக்கும் முட்புதரில் போய் ஒரு ஆந்தை அமர்ந்தது. மீண்டும்எங்களை நோக்கியே பார்வை. பறக்கும் போது ஒரு சிறு சத்தம் கூட எழவில்லை. வியப்பு மேலிட, இரு கண் நோக்கியை மாறிமாறி வாங்கிப் பார்த்தோம். ஆசை தீரபடங்கள் எடுத்துக் கொண்டோம். இந்த புள்ளி ஆந்தை சோடிகளின் வீடு இந்த பனைமரப் பொந்து தான் என்பதில் ஒரு நிரந்தர மகிழ்ச்சி எங்களுக்கு இருந்தது.

Hindu02

வீட்டிலிருந்து நூறடி தொலைவில் ஒரு புள்ளி ஆந்தை சோடிகளோடு வாழ்கிறோம் என்பதில் இணையருக்கும் சொல்லி மாளாத பெருமை. அடிக்கடி அங்கு வரஆரம்பித்தோம். வீட்டில் வளர்க்கும் ஒரு செல்லப்பிராணியைப் போல, அனுதினமும் வந்து  வாஞ்சையோடு, அப்புள்ளி ஆந்தைகள் இருக்கின்றனவா என்று பார்ப்பது எங்களின் அன்றாட பணியாக மாறிவிட்டது.  கருமேகம் சூழ்ந்த நாளொன்றில், ஆறு பச்சைக் கிளிகளோடு சண்டையிட்டுப் போராடி, இந்த ஆந்தை சோடி தனதுமரப்பொந்து வீட்டை காப்பாற்றிய போது அதிர்ந்து போய் நின்றோம். இப்பனைமரம் அமைந்திருக்கும் அஸ்தினாபுரம் ஏரியில் தொடர்ந்து சில நாட்களாகபறவைகளை பார்த்து வருவதும், இபேர்டு(Ebird) இணையதளத்தில் பதிவு செய்து வருவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதுவரை 40‍ க்கும் மேற்பட்ட பறவையினங்களைப் பார்த்து பதிவு செய்திருக்கிறோம். கிடைக்கும் நேரங்களில் 15 அல்லது 20 நிமிடங்கள் ஒவ்வொரு நாளும் அதற்காக செலவு செய்கிறோம். அன்றில், பழுப்புக் கீச்சான், தையல் சிட்டு, கதிர்க்குருவி என இயற்கை எங்களுக்கு புதுப்புது ஆச்சரியங்களை அள்ளித் தந்தபடியே இருக்கிறது.

ஆந்தைகள் என்றாலே அபசகுனம் என்கிற மூடநம்பிக்கை தொன்று தொட்டு இருந்து வருகிறது. நிஜத்தில் ஆந்தைகள் மனிதர்களுக்கு நன்மைகளைத் தான் செய்கின்றன. உணவு உற்பத்திக்கு கேடு விளைவிக்கும் எலிகளை அதிகமாக உண்டு எலிகளின் பெருக்கத்தை ஆந்தைகளே கட்டுப்படுத்துகின்றன. பிறந்து பத்து வாரங்களே ஆன ஆந்தை குஞ்சுகள் கூட அத்தனை எலிகளைத் தின்கின்றன. இரவு நேரத்தில் மட்டுமே வேட்டையாடும் இரவாடிப் பறவையான ஆந்தைகள், நாம் கேட்ட‌ கட்டுக்கதைகளைப் போலன்றி பகலில் உறங்குவதில்லை. தம்மை நெருங்குவது யாரென‌ வழி மேல் விழி வைத்து பார்த்துக்  கொண்டிருக்கின்றன. 360 டிகிரி கோணத்தில் தலையைச் சுழற்றி, நூறடிக்கு அப்பால் ஓடும் இரையைக் குறி வைக்கின்றன.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்.

About அ.மு.செய்யது

One comment

  1. அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*