Home / அரசியல் / ரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா?

ரஜினி மக்கள் விரும்புகிற மாற்றத்தைக் கொண்டு வருவாரா?

ரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரஜினி தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார். சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியலாக தனது அரசியல் இருக்கும் எனவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமது படைகள்  தயார் எனவும் அறிவித்த‌ ரஜினி, அடுத்தடுத்த நாட்களில் “அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின்” டிவிட்டர் பக்கங்களையும் இணையதளத்தையும் துவக்கியிருக்கிறார். ரஜினி ரசிகர்கள் இப்பக்கங்களுக்கு சென்று ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

ரஜினியின் அரசியல் வருகை குறித்தான சமிக்ஞைகளும் எதிர்பார்ப்புகளும் இருபது ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், 1996 இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு படுதோல்வி அடைந்ததற்கு ரஜினியின் திமுக ஆதரவும் பங்கு வகித்தது. சன்டிவி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஜெயலலிதாவின்  ஆடம்பர வாழ்க்கை, 100 கோடியில் வளர்ப்பு மகன் திருமணம், ஜி.கே.மூப்பனாரின் ஆதரவு என பல்வேறு காரணிகள் திமுக வெற்றிக்கு வலு சேர்த்தாலும், ரஜினியின் ஆதரவுக் குரலுக்கும் மதிப்பிருக்கிறது என்பது உறுதியானது. “அரசியலுக்கு வா தலைவா” போன்ற குரல்கள், சாமான்ய ரஜினி ரசிகர்களின் மத்தியிலும் வெகுசன தளத்திலும் இடம் பிடிக்கத் தொடங்கின. அடுத்தடுத்து வெளியான ரஜினியின் படங்கள் ரஜினியின் ‘அரசியல் வருகை’ எதிர்பார்ப்பை உள்வாங்கி திட்டமிட்டு தயாரிக்கப்பட்டன. அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம்,படையப்பா என ரஜினியை அரசியல் பிம்பமாக்கிய தயாரிப்பாளர்களின் வியாபாரம் சிறப்பாக நடந்தது.  “கட்சியெல்லாம் இப்ப நமக்கெதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு” போன்ற வரிகள், ரஜினியின் காதல் பாடல்களில் கூட வலிந்து திணிக்கப்பட்டதை மறக்க முடியுமா? காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் நடிகர் சங்கம் தலையிட்ட போது, நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என ரஜினி அறிவித்தார். ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கையும், கோடிகளில் புரளும் சம்பளமும், திரை வியாபாரத்தில் ரஜினியின் சந்தை மதிப்பும் அவரது செல்வாக்கை மென்மேலும் அதிகரித்தன.

ரஜினியின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் ரஜினியின் அரசியல் வருகை குறித்தான பேச்சுகள் சூடு பிடிப்பதும், படங்கள் நன்றாக ஓடி தொடர்புடையவர்கள் கல்லா கட்டியதும் ரஜினி இமயமலைக்குச் சென்று தவமிருப்பதுமாக இருபது ஆண்டுகள் கடந்து விட்டன. இவ்விரு தசாப்தங்களில் இந்திய அரசியல் சூழல் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கிறது. அதை விட, தமிழக அரசியல் சூழல் பல்வேறு மட்டங்களில்  அனல் மேல் புழுவாய் கொதித்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைத் தளங்களின் பெருக்கமும், காட்சி ஊடகங்களின் வீச்சும் மக்களின் அரசியல் நிலைப்பாடுகளை விரிவடையச் செய்திருக்கின்றன.  2013ல் ஈழத்திற்காக எழுச்சி பெற்ற மாணவர் போராட்டமும், இவ்வாண்டு துவக்கத்தின் ஜல்லிக்கட்டு போராட்டமும் பெருந்திரளான மக்களின் பங்கேற்போடு நடந்தன.  கூடங்குளம் அணு உலை, மீத்தேன், கெயில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், முல்லை பெரியாறு என தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் நாசகார திட்டங்களுக்கு எதிரான வாழ்வாதாரப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2014 ஆம் ஆண்டு பதவியேற்ற மோடி அரசின் மோசமான பொருளாதார அறிவிப்புகளால்  மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நீட், இந்தி திணிப்பு, ஒற்றை வரி என ஒவ்வொரு இழையாக மாநில அரசின் உரிமைகளை மத்திய பா.ஜ.க அரசு உருவிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிகழ்வுகளுக்கெல்லாம் ரஜினி என்கிற அரசியல் பிம்பம் உருவாக்கிய எதிர்வினைகள் என்ன என்ற கேள்விக்கு எந்த விடையுமில்லை. மாறாக, மக்களுக்கு நேர் எதிரான திசையிலேயே அவர் பயணித்திருக்கிறார் என்கிற கசப்பான உண்மையே எஞ்சி நிற்கிறது.

காவிரி நதிநீர் சிக்கலின் போது, தமிழக விவசாயிகளுக்காக பேசிய‌வர் கடந்த ஆண்டு கர்நாடகாவில் காவிரி பிரச்சனையின் போது தமிழர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட போது கள்ள மெளனம் சாதித்தார். கோடிக்கணக்கில் தமிழர் உடைமைகள் சேதப்படுத்தப்பட்ட போது கூட, கன்னடர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று ஒரு சொல் உதிர்க்காத ரஜினி, உப்பு சப்பில்லாத விஷயம் ஒன்றிற்கு, தமிழர்கள் பொறுமையற்றவர்கள் என பொதுவாகச் சாடினார். 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற பிறகு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை மக்கள் சந்திக்கிறார்கள். எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், ஜி.எஸ்.டி என எந்த பொருளாதாரச் சுரண்டல் குறித்தும் ரஜினி தனது கருத்துகளை வெளியிடவில்லை. மாறாக மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான மறுநாள், “புது இந்தியா பிறந்து விட்டது” என்று குதூகலித்தார். இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தி அடுத்த சில மாதங்களில் எப்போதுமில்லாத அளவுக்கு 5.6% ஆகக்  குறைந்தது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் மட்டுமின்றி, மத்திய ரிசர்வ் வங்கியே “பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப்பெரிய முட்டாள் தனம்” என்று அறிவித்த போது தனது புது இந்தியா குறித்த கருத்தை ரஜினி மாற்றிக்  கொள்ளவே இல்லை. தமிழகத்தின் எந்த பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்காத ரஜினி, ஊழல் என்கிற மேம்போக்கான வெகுசன கருத்துக்காக மட்டும் சில துரும்புகளைக் கிள்ளிப் போட்டார். அதில் ஒன்று தான், அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு, சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாக தருகிறேன் என்கிற ரஜினியின் அறிவிப்பு. பொது வெளியில் கணக்கு காட்டாத பெரும் பணத்தை வைத்துக் கொண்டு, கோடி ரூபாய் தருகிறேன், மண்டபம் வாடகைக்குத் தருகிறேன், இலவச திருமணம் செய்து வைக்கிறேன், நோட்டு புக், மாற்றுத் திறனாளிகளுக்கு வண்டிகள் என்று ஒரு தொண்டு நிறுவனம் போல மட்டுமே செயல்படும் ரஜினி, முழுமையான சமூகப் போராட்டத்துக்கு ஒருநாளும் தயாராக இருந்ததில்லை.

சரி போனது போகட்டும், இனியாவது கட்சியைத் தொடங்கி சமூக சிக்கல்களை கையிலெடுப்பார் என்கிற‌ கடை கோடி ரசிகரின் நம்பிக்கையிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார் ரஜினி. “போராடுவதற்கு வேறொரு கூட்டம் இருக்கிறது, அறிக்கை விடுவதற்கு வேறொரு கூட்டம் இருக்கிறது” என போராட்டங்களை அலட்சியமாக ஏளனம் செய்ததன் மூலம், அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரையிலும் கூட ரஜினி, மக்களுக்கான எந்த போராட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை, கண்டனங்களை தெரிவிக்கப் போவதில்லை என்பதை உறுதி செய்திருக்கிறார்.  அடுத்து ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருப்பது ரஜினியின் “ஆன்மிக அரசியல்” என்கிற சொல்லாடல். ஆன்மிகம் என்பது என்பது ஆன்மாவைக் கண்டறியும் தேடல் என்கிற பொருளில் நாம் புரிந்து கொண்டாலும் கூட, ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது இந்துத்துவ பின்புலத்தில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பகவத் கீதையிலிருந்து மேற்கோள், குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க.காரர்களின் உடனடி ஆதரவு வாழ்த்துகள், துக்ளக் சோ இழப்பின் மீதான கவலை என இந்துத்துவ வலைப்பின்னலுக்குள் தான் ரஜினி சிக்கிக் கொண்டிருக்கிறார். நேரடியாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ரஜினி ஆள் பிடித்துக் கொடுக்கவில்லையென்றாலும் கூட விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, சிறீராம் சேனா போன்ற சங்க பரிவாரக் கும்பல்களில் இன்னொரு கட்சியாகவே ரஜினிகாந்தின் கட்சி இருக்கும். இதை உறுதி செய்யும் வண்ணம், ராம கிருஷ்ண மடங்களின் தலைவர்களோடு சென்று உரையாடி ஆலோசனைகளைப் பெறுகிறார் ரஜினி.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் டெபாசிட் வாங்க முடியவில்லை என்றால் அது திராவிட இயக்கங்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் முற்போக்கு மற்றும் பகுத்தறிவு கருத்தியல் கோட்டைகள். ஆன்மிகத்தை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதுவே ஆன்மிகம் அரசியலோடு கலக்கும் போது ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்கிற உண்மை பா.ஜ.க.வுக்கு தெரியாதது அல்ல. அக்கோட்டையைத் தகர்க்க வேண்டுமாயின் ஒரு மிதவாத இந்துத்துவ ஊசியொன்றை தமிழக மக்கள் மீது மெலிதாக ஏற்றியாக வேண்டும். அது எளிமை, புனிதம், ஆன்மிகம், யோகா இவைகளை உள்ளடக்கிய ஒரு சர்க்கரை கரைசல். இக்கரைசலை  யார் உருவாக்கித் தருகிறார்களோ அவர்களை பா.ஜ.க ஆதரிப்பார்கள். இக்கரைசல் இந்துத்துவத்தை மெதுவாக வளர்க்கத் துணை செய்யும். பாசிசத்தை அறுவடை செய்யும்.

ரஜினி கன்னடர், தமிழ்நாட்டை ஆளக் கன்னடர் தேவையில்லை என்கிற ஜனநாயக மறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ரஜினி என்கிற கன்னடர், கன்னட நாட்டையே ஆளத் தகுதியற்றவர் என்கிற உண்மையை புரிந்து கொண்டால் போதும்.

அ,மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்.

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*