Home / சமூகம் / இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்!

இளந்தமிழகம் இயக்கம் & விசை இணையதளத்தின் தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்நாட்டு உரிமைகள் வெல்லட்டும் எனப் பொங்கட்டும் பொங்கல் – இளந்தமிழகம் இயக்கம்  & விசை இணையதளத்தின்  தமிழர் திருநாள் , புத்தாண்டு வாழ்த்துகள்!

ஏர் புரட்சியால் இயற்கை வளம் காக்க! தமிழர் உரிமை வெல்ல! பொங்கலோ பொங்கல்!

பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று; பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள் என்றார் புரட்சிக்கவி

உழவர் வாழ்வில் பொங்கல் பொங்கிட செந்தமிழர் வாழ்வின் புத்தாண்டுக் கொண்டாட்டமான தமிழர் திருநாள் இந்தத் தை முதல் நாள், திருவள்ளுவர் ஆண்டு 2049.

குழப்பத்துடன் தொடங்கிய கடந்த ஆண்டு ஒரு மக்கள் புரட்சியின் பெரும்பயனாய் ‘ஏறுதழுவுதல்’ எனும் பண்பாட்டை ஆதிக்கத்தின் கொடூர விலங்கில் இருந்து மீட்டுறுவாக்கம் செய்தது. மக்கள் எழுச்சியால் மெரினா கடற்கரை தமிழர் கடலாக நிமிர்ந்து நின்றது.  அரசுகளோ திட்டமிட்டு தை எழுச்சி எனும் பண்பாட்டு புரட்சியின் மீது எந்தமிழர் செங்குறுதியை தெளித்தன. ஒரு புறம் ஏறுதழுவுதல் விளையாட்டு தேசமெங்கும் ஆர்ப்பரிப்புடன் கொண்டாடப்பட்ட பொழுதும், மக்கள் தங்கள் மீதான  ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பைக் காட்ட இந்திய விடுதலை வரலாற்றில் ஆள் அரவமற்று வெறிச்சோடிக் கிடந்த சாலைகளுடன் மெரினாவில் சனவரி 26 குடியரசு நாளை மக்கள் புறக்கணித்தனர். தொடர்ந்து கொள்ளை வரி வதிப்பு, மாநில அரசின் வருவாயை பறித்தது, நீட் எனும் கொடிய சட்டம் மூலம் மருத்துவர் அனிதா மட்டும் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை படுகொலை செய்தது என நடுவண் அரசின் தொடர் தமிழர் உரிமை பறிப்பு நிகழ்வுகளே கடந்த ஆண்டின் போக்கை நிரப்புகின்றன.

மேலும் கடந்த ஆண்டில் தான் தமிழ்நாடு மிக அதிகப்படியான உழவர் தற்கொலைகளை கண்டுள்ளது. வறட்சி, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, அரசின் முறையான திட்டமிடலின்மை எல்லாம் ஒன்று சேர்ந்து 400 க்கும் மேற்பட்ட உழவர்களை பலி வாங்கியது ஒருபுறம் இருக்க நெடுவாசல், கதிராமங்கலம் என காவிரி பாசனப் பகுதியை இந்திய அரசின் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து காத்திட மக்கள் உறுதிமிக்க போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல சிற்றூர்களை எரிபொருள் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்ததன் மூலம் நீண்ட கால நோக்கில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தை சீரழிக்கும் திட்டத்தை அரசு முன்னெடுத்திருப்பதையும் அதனை எதிர்க்கும் வலுவான மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆக காவிரி பாசனப்பகுதியை எரிபொருள் மண்டலம் என்பதும், மேற்கு மண்டலத்தில் விளை நிலங்களில் இந்திய அரசின் அனுமதியுடன் கெயில் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பும், தொடரும் ஆற்று மணல் கொள்ளையும், மழை நீரை முறையாக சேமிக்கத் திட்டமில்லாததும் உழவுத் தொழிலை பாழ்படுத்தி அழித்திடுவதே அரசின் நீண்ட கால திட்டமாக நமக்குத் தெரிகின்றது.

’சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார் ஐயன் வள்ளுவர். ‘தைப் புரட்சி’ எனும் மக்கள் எழுச்சி மூலம் ஒரு பண்பாட்டு புரட்சியை வென்றெடுத்து 21 ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகம். தற்பொழுது பன்னாட்டு பெரு நிறுவனங்கள், உள்ளூர் முதலாளிகளின் சுரண்டலில் இருந்து தாய்த் தமிழ்நாடின் இயற்கை வளங்களையும், உழவர் நலனையும் பாதுகாக்க ஓர் ‘ஏர் புரட்சி’க்கு இப்பொன்னாளில் உறுதியேற்போம். பிறக்கும் புத்தாண்டு தமிழர் உரிமைகளை வெல்லும் ஆண்டாகட்டும்.

உழவு செழிக்கவே பொங்கலோ பொங்கல்!

இயற்கை வளம் காக்கவே பொங்கலோ பொங்கல்!

பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்!

புதிய தமிழ் நாடு வாகைசூடவே பொங்கலோ பொங்கல்!

தமிழ்ப் புத்தாண்டில் ஏர் புரட்சிக்கு பொங்கலோ பொங்கல்!

 

இளந்தமிழகம் இயக்கம் & விசை ஆசிரியர் குழு 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*