Home / அரசியல் / வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் ?

வைரமுத்து தலையை வெட்டுங்கள், நாக்கை அறுங்கள் ?

 “தமிழை ஆண்டாள்” என ஆண்டாள் குறித்து ஒர் ஆய்வு கட்டுரையை கவிஞர்.வைரமுத்து தினமணி இதழில் எழுதினார் (1).  இக்கட்டுரையில் ஆண்டாளை வைரமுத்து இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி அவரின் தலையை வெட்டுபவர்களுக்கும், நாக்கை அறுப்பவர்களுக்கும் பரிசு அறிவிக்கின்றனர் பா.ஜ.க கட்சியினரும், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள். அதற்குள் செல்வதற்கு முன்பு வைரமுத்து எழுதிய கட்டுரையைப் பற்றி பார்த்துவிடுவோம்.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பே கட்டுரை ஆண்டாளின் தமிழ் புலமையைப் பற்றிய பெருமையைப் பேசும் ஒன்று என முன்னறிவிக்கின்றனது. தலைப்பில் சுட்டியது போலவே கட்டுரையின் பெரும்பான்மை ஆண்டாளின் தமிழ் புலமையைப் பேசுகின்றது. இக்கட்டுரையின் இறுதியில் ஆண்டாள் யார் என்ற கேள்விக்கு அவர் சில  நூல்/கட்டுரைகளிலிருந்து சில ஆதாரங்களை எடுத்து எழுதுகின்றார். கட்டுரையின் அப்பகுதி கீழே.

///ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய்  அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.

அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட Indian Movement: some aspects of dissent, protest and reform  என்ற நூலில் ஆண்டாள் குறித்து இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது :
Andal was herself a devadasi who lived and died in the Srirangam Temple.  – பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள்.

சமண – பௌத்த சமயங்களின் கடுநெறிகளுக்கு மாறாய்த் துய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட அக்கால மத நெறிகளின் குறியீடாகத்தான் ஆண்டாளைப் பார்க்கலாம். ஆண்டாளின் பிறப்பு மறைவு இரண்டின் மீதும் விடை அவிழாத வினாக்கள் இருந்தாலும் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது. “எண்ணம் திண்ணியதாயின் எண்ணியதெய்துவாய்’ என்ற நிபந்தனையற்ற நம்பிக்கையின் நிதர்சனமாக ஆண்டாளைப் புரிந்துகொள்ளலாம்.///

இதில் ஆண்டாள் ஒரு தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மறைந்தார் என்ற ஒரு வரியை மட்டும் பற்றிக் கொண்டு, வைரமுத்து ஆண்டாளை தேவதாசி என சொல்லிவிட்டார் எனக் கூறுகின்றார்கள். இது  பொய்யான ஒன்று, கட்டுரையைப் படித்தால் அவர் யார் அதைச் சொன்னார், எந்த நூலில் அதைச் சொன்னார் எனத் தெளிவாக எழுதியுள்ளார்.  வைரமுத்து அதைச் சொன்னார் எனத் திரும்ப, திரும்பச் சொல்வதன் வாயிலாக‌ பொய்யை உண்மையாக மாற்றுகின்றனர். அவர் அந்த வரியோடு நிறுத்தி விடவில்லை. பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாடார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், சமய சமூக மறுப்பாளர்களும் இதை எண்ணிப் பார்ப்பார்கள் என்றும் கூறுகின்றார். இறுதியில் ஆண்டாளின் தமிழ் நூற்றாண்டுகளின் தாகத்திற்கு அமிர்தமாகின்றது என அவர் கட்டுரையை முடிக்கின்றார்.

தேவதாசி முறையை அன்று ஆதரித்த பிராமண‌ர்கள் தான் இன்று ஆண்டாளை தேவதாசி என்கிறார்கள் எனப் பொங்குகின்றார்கள். அப்படியென்றால் தனது முன்னோர்கள் செய்தது தவறு என ஒப்புக்கொள்கின்றார்களா எனக் கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பது தான். அவர்களுக்குக் கோபம் எல்லாம் பிராமணர் ஒருவர் வளர்த்த  பெண்ணைத் தேவதாசி எனக் கூறிவிட்டாயே என்பது தானே அன்றி தேவதாசி முறையைப் பற்றி எல்லாம் இல்லை. அதனால் தான் வைரமுத்துவை எச்.ராஜா உள்ளிட்டோரும், சில பிராமணர்களும் திட்டும் பொழுது கூட தேவடியா மகனே (தேவ தாசி எனும் சொல், தேவரடியார் என்றும் வழங்கப்பட்டது, அதுவே பின்னாட்களில் தேவடியா என்னும் வசைச் சொல்லாக மாறியது) எனத் திட்டுகின்றனர்.

இதுமட்டுமின்றி வைரமுத்துவின் தலையை வெட்டுபவர்களுக்கு பரிசு, நாக்கை வெட்டுபவர்களுக்கு பரிசு எனவும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள். ஏன் இன்னொருவரை வெட்டச்  சொல்கின்றார்கள், இவர்களே சென்று வெட்ட வேண்டியது தானே, அங்கு தான் இவர்களது கயமைத் தனம் உள்ளது. வெட்டினால் சட்டபடி தண்டிக்கப்பட்டு சிறைக்குச் செல்ல வேண்டும், ஆனால் இப்படி பேசினால் சிறைக்குச் செல்லத் தேவையில்லை ஏனென்றால் இன்று தமிழகத்தையும், இந்தியாவையும் ஆளும் வர்க்கமே இவர்கள் தான்.  இந்திய குற்றவியல் சட்டப்படி ஒரு குற்றத்தை செய்பவரை விட குற்றம் செய்யத் தூண்டுபவருக்கே அதிக தண்டனை உண்டு , ஆனால் அப்படி யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை என்பது தான் இவர்களை இவ்வாறு பேசத் தூண்டுகின்றது.

அதுமட்டுமின்றி இவர்கள் தலையை வெட்டுவேன், நாக்கை வெட்டுவேன் என பேசுவதன் மூலம் மக்கள் மத்தியில் அச்ச உளவியலை விதைக்கின்றார்கள்.  ஒரு சாதாரண குடிமகனுக்கு இருக்கும் கருத்து சொல்லும் உரிமையை இந்த அச்ச உளவியலின் மூலம் அவர்கள் தடுக்கின்றார்கள். இந்து மதத்தின் மீது அதன் கடவுளர்கள் மீது மாற்று கருத்து இருக்கும் சாதாரண குடிமகன் அதை பொது வெளியில் முகநூலிலோ, இணையதளத்திலோ..) வெளியிடும் பொழுது, வைரமுத்து போன்ற பிரபலத்தை வெட்டுவேன், குத்துவேன் என பேசுபவர்கள் தன்னை உயிருடன் விட்டுவைப்பார்களா என்ற அச்சத்தை தான் அவர்களின் இந்த அறிவிப்புகளுக்கு பின்னாலுள்ள அரசியல். இதன் மூலம் தனது மறுப்பு கருத்தை பேசமுடியாமல் பொதுமக்கள் தடுக்கப்படுகின்றார்கள்.

இந்த சர்ச்சை தொடர்பான ஒரு கலந்துரையாடல் எனது அலுவலக வாட்சப் குழுவில் நடந்த பொழுது திராவிடர் கழகத் தலைவர்.வீரமணி பல ஆண்டுகளுக்கு முன் இந்து மத கடவுள்களை எதிர்த்து பேசியதற்காக பிராமணர்கள் சென்று தாமரைக்கனியிடம் முறையிட, தாமரைக்கனி அடியாட்களுடன் சென்று வீரமணியை தாக்கியதை குறிப்பிட்டு, அதைப் போலவே இன்றும் நடைபெற வேண்டும், இந்து கடவுள்கள் மீது விமர்சனம் வைக்கும் யாராக இருந்தாலும் இதுபோல தாக்கப்பட வேண்டும் என கூறினார்.

அப்படியானால் நீங்கள் வன்முறையை ஆதரிக்கின்றீர்களா?  இந்தியாவும் பாகிஸ்தான் போல மத அடிப்படைவாத நாடாக மாற வேண்டுமா எனக் கேட்டேன். உடனே அவர் எதற்கு பேச்சை மாற்றுகின்றீர்கள், என்றார். இல்லை நீங்கள் கூறுவது போல விமர்சனம் வைப்பவர்கள் தாக்கப்படவேண்டும், கொல்லப்பட வேண்டும் என்றால் இந்தியாவும், பாகிஸ்தான் போல மத அடிப்படைவாத நாடாகத் தான் மாறும் என்றேன் நான், இன்று சங் பரிவாரங்கள் எதிர்பார்ப்பதும் அதுவே தான்.

அச்ச உளவியலின் மூலம் இந்து மதத்தின் மீதான விமர்சனங்களை மட்டுமல்ல, அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளின் மீதான விமர்சனங்களையும், எதிர்ப்பு குரல்களை ஒடுக்க முயல்கின்றார்கள் சங் பரிவாரங்கள். சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்களோ மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே  காவிமயமாக்கப் பட்டுவிட்டன (இந்து நாளிதழின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், சன் தொலைகாட்சியிலிருந்து வீரபாண்டியன் என நீக்கப்பட்டோர் பட்டியல் பெரிது.

பா.ஜ.க ஆதரவுள்ள இந்த ஊடகங்கள் தான் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க ஏதுவாக பல செய்திகளைத் திரித்து தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார்கள். இதன் மூலம் அவர்கள் இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்தி வருகின்றார்கள்.
அதிமுக முழுதும் பா.ஜ.கவால் கைப்பற்றப் பட்டுள்ள நிலையில், திமுகவை வீழ்த்தும் செயல்பாடுகளில் இறங்கி உள்ளார்கள். அதனால் தான் மோடியை ஆதரிக்கும் வைரமுத்து மீண்டும், மீண்டும் திமுகவின் நபராக காட்டப்படுகின்றார்.

பெரு முதலாளிகளின் இலாபத்திற்காக மட்டுமே செயல்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து ஒன்றுதிரண்டு மக்கள் போராடி விடக்கூடாது என்பதற்காகவும், அவர்களில் ஒருதிரளை தனது வாக்கு வங்கியாக மாற்றும் செயல்பாடுகள் தான் இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று தோழர்.திருமாவின் தலையை வெட்டுவேன் என்றதும், இன்று கவிஞர்.வைரமுத்துவின் தலையை வெட்டுவேன் என்பதும் அந்த நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சி தான். சனநாயகத்தில் அக்கறை உள்ள மக்களின் பணி என்பது மாற்று கருத்தை சொல்ல இருக்கும் உரிமையை காக்க வேண்டிய பணி தான்.

உனது கருத்திற்கு நான் எதிர் கருத்து கொண்டிருப்பினும், உனது கருத்தை வெளிப்படுத்தும் உரிமைக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று எவ்லின் பிட்ரிஷ் ஹால் என்ற ஆங்கில எழுத்தாளரின் கூற்றை நாம் மெய்பிக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என்பதையே நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்டவர்களின் படுகொலையும், தோழர்.திருமா, கவிஞர்.வைரமுத்து உள்ளிட்டவர்களின் தலைக்கு விலைவைக்கப்படும்  நிகழ்வுகளும் நமக்கு நினைவூட்டுகின்றன.

இந்தியா/தமிழ்நாடு சனநாயக நாடாக இருப்பதும் மதவாத நாடாக மாறுவதும் மக்களாகிய நம் கையில் தான் இருக்கின்றது.

இறுதியாக, நாம் இந்த பிரச்சனையில் புரிந்து கொள்ள வேண்டியது இதுபோன்ற‌ கட்டுரைகள் தான் ஆண்டாளின் தமிழ் புலமையை வெளிக்காட்டி, அதனை மக்கள் மையப்படுத்துகின்றன‌. ஆனால் வைரமுத்துவை எதிர்ப்பவர்கள் ஆண்டாளை புனிதப்படுத்துவதன் மூலம் அவரை இந்துமயப் படுத்தி தங்களுக்குள்ளே வைத்து கொள்ளத் திட்டமிடுகின்றார்கள். எப்படி கர்ப்பகிரகத்துக்குள் அவர்கள் மட்டும் தான் செல்ல வேண்டும், இந்து என சொல்லப்படும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைந்து விட்டால் தீட்டு என சொல்கின்றார்களோ, அதைத் தான் அவர்கள் இந்த பிரச்சனையிலும் செய்கின்றார்கள்.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்.

1)  https://www.facebook.com/NMGoundamani/posts/1845992288746515

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*