Home / அரசியல் / காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி

காட்டு யானையா? பெரு முதலாளியா? யார் பயங்கர‌வாதி

சனவரி 23 அன்று தமிழ் இந்து நாளிதழில் வெளியான இரு செய்திகளை ஒப்பிட்டு சனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என பார்ப்போம்.

முதல் செய்தி :

“கிராமத்தை சுற்றி வளைத்தது காட்டு யானைகள் கூட்டம்” என்ற தலைப்பிட்டு ஓர் செய்தியை இன்றைய தமிழ் இந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது (1).  அந்த கட்டுரையில் இருந்து சில வரிகள்.

///நேற்று அதிகாலை 5 மணி, கடும் பனிமூட்டம். அப்போது வனத்தில் இருந்து 15 யானைகள் கிராமத்தை நோக்கி படையெடுத்தன. கிராம எல்லையில் உள்ள பிளைவுட்  தொழிற்சாலையின் பின்புறம் அவை முகாமிட்டிருந்தன. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டது. அதில் 6-க்கும் மேற்பட்ட யானை கள் நீண்ட தந்தங்களுடனும், பெண் யானைகள் குட்டியுடனும் இருந்தன.///

கட்டுரையின் வார்த்தை பிரயோகங்களை பாருங்கள், தீவிரவாத தாக்குதல் நடப்பது போல… “சுற்றி வளைத்தது… படையெடுத்தன…. முகாமிட்டிருந்தன…. எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் நுழையலாம், நீண்ட தந்தங்களுடன் ……”

எல்லோரும் படிக்கும் நாளிதழில் இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் யானைகள் மிகக் கொடூரமானவை , அவைகள் கொல்லப்பட வேண்டும் என்ற பொது புத்தியை திட்டமிட்டு உருவாக்குகின்றன ஊடகங்கள். இதில் கேலி கூத்து என்ன வென்றால் இதே தமிழ்  இந்து நாளிதழ் “உயிர் மூச்சு” என்ற துணையிதழை வாரம் ஒருமுறை வெளியிட்டு வன உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறுகின்றது.   நாங்களே கொலையும் செய்வோம், கொலைக்கு எதிராக போராடவும் செய்வோம் என்ற இரட்டை நிலையில் தான் தமிழ் இந்து உள்ளிட்ட எல்லா ஊடகங்களும் செயல்பட்டுவருகின்றன.

இரண்டாம் செய்தி :

“இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: 73% சொத்து 1% பணக்காரர்களிடம் உள்ளது- ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் ” என்ற செய்தி வணிகச் செய்திகள் என்ற பிரிவின் கீழ் வெளியாகியுள்ளது(2).  அந்த கட்டுரையிலிருந்து சில வரிகள்.

//2016-ம் ஆண்டில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 % சொத்துகள் குவிந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் 2017-ல் இந்த நிலை மேலும்  மோசமடைந்து 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சேர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பணக்காரர்களிடம் குவிந்த அளவானது 50% என்ற நிலையில் இந்தியாவில் 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. 2017-ம் ஆண்டில் இந்தியா வில் 1% பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.20.9 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இத் தொகையானது இந்திய அரசு வெளியிடும் பொது பட் ஜெட் தொகைக்கு நிகரானது.

2017-ம் ஆண்டில் முன்னெப்போதைக் காட்டிலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது இரண்டு நாளில் ஒரு கோடீஸ்வரர் உருவாகின்றனர். இந்தியாவின் முன் னணி ஜவுளி நிறுவனத்தில் உயர் அதிகாரி பெறும் சம்பளத்தை சாதாரண தொழிலாளி எட்டுவதற்கு 941 ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஒரு நாளில் ஈட்டும் ஊதியத்தை அங்குள்ள சாதாரண தொழிலாளி ஒரு ஆண்டில் ஈட்டிவிட முடிகிறது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.//

இந்த கட்டுரையின் வார்த்தை பிரயோகங்களைப் பாருங்கள் “ஆய்வறிக்கை சொன்னது, தெரிய வந்தது” என்ற எந்த வித உணர்வும் அற்று இருக்கின்றது.

இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனையான வருமான ஏற்றத் தாழ்வு பற்றிய அறிக்கையை முதல் பக்கத்தில் வெளியிட்டு அரசின் செயல்பாடு பெரு முதலாளிகள்/ பெரும் பணக்காரர்கள் சார்ந்து உள்ளது. மோடி முழங்கிய “வளர்ச்சியும்” , அவரது அரசின் கடந்த மூன்றறை ஆண்டு செயல்பாடு எல்லாம் பெரு முதலாளிகளுக்கானது என மக்களிடம் சொல்ல வேண்டியதை வணிக செய்தி பிரிவில் ஏதோ ஓர் செய்தியாக வெளியிட்டுவிட்டு, மனிதனை போல பகுத்தறியும் அறிவற்ற விலங்கை தீவிரவாதி போல  சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் இந்து நாளிதழ்.

Modi'sGrowth

பெரும்பான்மையான நாளிதழ்கள்/ஊடகங்கள் இப்படி தான் செயல்படுகின்றன. மக்கள் எதை மிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை ஒரு பத்தி செய்தியாக வெளியிட்டும், அரசு கொடுக்கும் செய்திகளை முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றன.

மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஊடகங்களில் இருந்த அந்த ஊடகங்களின் முதலாளிகளால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று உள்ள ஊடகங்கள் அனைத்தும் மோடியின் ஊதுகுழல்களாக முற்றிலும் மாறிவிட்டன.  நாம் எதை பேச வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பதை பெரு முதலாளிகளும் / மோடியின் பா.ஜ.க-வும் முடிவு செய்கின்றன.

இன்றும் கூட தமிழக அரசின் பொருளாதார நிலை, அரசு செயல்படும் நிலை, பேருந்து கட்டண உயர்வு,  75 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள பெட்ரோல் விலை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் செயல்பாடு அரசின் சார்பாக உள்ளது என குறை கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பற்றி விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய நாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளைப் பற்றியும், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதைப் பற்றியும் விவாதித்துக் கொண்டு உள்ளோம்.  அவர்கள் ஆட்டுவிக்கின்றார்கள், நாம் ஆடுகின்றோம்.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

மீம் – ஆதி அருணாச்சலம் – இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் :

1) http://tamil.thehindu.com/tamilnadu/article22495385.ece

2) http://tamil.thehindu.com/business/article22495307.ece

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*