Home / அரசியல் / மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்
health-759

மோடி அரசின் பட்ஜெட் பொய்கள்

மோடி அரசின் 2018-19 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவற்றில் எது சாத்தியம் என ஆராய்கின்றது இந்த கட்டுரைத் தொடர். முதல் கட்டுரை மருத்துவ காப்பீடு தொடர்பாக.

இந்த ஆண்டு (2018-2019) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவு செலவு அறிக்கையில் (Budget)  மோடி அரசின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 5 இலட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

பிப்ரவரி 3,2018 அன்று எல்லா நாளிதழ்களிலும் இது குறித்து விரிவான செய்தி முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக வந்துள்ளது. தமிழ் இந்து நாளிதழில் வந்த செய்தியில் இருந்து சில வரிகள் கீழே.

//நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி பேர்  பயனடைவார்கள். இந்த திட்டத்தில் ஓராண்டுக்கு ரூ 5 இலட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதியைப் பெற முடியும் என‌ நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு எடுக்க ரூ 1,100 செலவாகும் என  கணக்கிடப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்கு ரூ 11,000 கோடி. இதில் ரூ 7,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள தொகையை அந்தந்த மாநில அரசுகள் வழங்கும்.//

அரசு சொல்லும் ரூ 1,100 ரூபாய் செலவில் ஒரு குடும்பத்திற்கு 5 இலட்சம்  மருத்துவ காப்பீடு சாத்தியமா எனப் பார்ப்போம்.

United India Insurence Company இணையதளத்தில் 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ஒரு குடும்பத்திற்கு (இருவர் – கணவன், மனைவி) ரூ 9620 செலவாகும் என காட்டுகின்றது.  2 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு ரூ 4500 செலவாகும் என காட்டுகின்றது.

அப்படி என்றால் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 1,100 ரூபாய் செலவு செய்தால் எவ்வளவு மருத்துவ  காப்பீடு கிடைக்கும் என வாசகர்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இணையத்தில் சில நிமிடத் தேடலிலேயே இதை நாம் கண்டுபிடிக்க முடியும் எனும் பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் கள செய்தியாளர்களை கொண்டு இயங்கும் பெரிய ஊடகங்களால் ரூ 1100 க்கு 5 இலட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு சாத்தியமா? என்ற கேள்வியை இன்னும் தெளிவாகவும், துல்லியமாகவும்  எழுப்ப முடியும். ஆனால் இன்று வெளியான அக்கட்டுரையில் எந்த ஒரு கேள்வியும் இல்லை.

கிளியை பழக்கப்படுத்தினால் நாம் சொல்வதை திரும்ப சொல்லும், இன்றைய ஊடகங்கள் மோடி அரசால் பழக்கப்படுத்தப்பட்ட கிளியின் நிலையிலேயே உள்ளன. அவர்களுக்கு பகுத்தறிவு தேவையில்லை.

மத்திய அரசு அறிவிக்கும் அறிவிப்புகளுக்கு அவர்கள் தான் முழுமையாக நிதி அளிக்க வேண்டும். அப்படி அவர்களால் முழுமையாக நிதி  அளிக்கமுடியாத பொழுது மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றது என்றாவது அறிவிக்க வேண்டும். தாங்களே முழு நிதியையும் கொடுப்பது போல டாம்பீகமாக அறிவித்துள்ள மோடி அரசு  இந்த திட்டத்திற்கு 64% நிதியைத் தான் (7000 கோடி) வழங்குகின்றார்கள்.  மீதமுள்ள 36% நிதி (நான்கில் ஒரு பங்குக்கும் மேல்) மாநிலங்கள் கொடுக்க வேண்டும் என இன்று சொல்கின்றது.

மாநில அரசின் நிதி ஆதாரத்தை GST வரி மூலம் பகுதியளவிற்கு ஒழித்து கட்டியுள்ளது மோடி தலைமையிலான மத்திய அரசு. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி மாநில அரசுகளால் இந்த திட்டத்திற்கு நிதி அளிக்க முடியும்?

அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவமனைகள் குத்தகைக்கு எடுத்து கொள்ளலாம் என க‌டந்த‌ நிதி ஆயோக் கூட்டத்தில் சொல்லப்பட்டது. அதாவது அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. இனி மக்கள் அரசு மருத்துமனைகளுக்கு சென்றாலும் காசு கொடுத்து தான் மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். அதற்காகத் தான் இந்த‌ மருத்துவ காப்பீடு திட்டத்தை மோடி அரசு கொண்டு வருகின்றது. மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு கூட மக்கள் தனியாரிடம் தான் செல்ல வேண்டும் என்றால் எதற்காக மக்கள் அரசுக்கு வருமான வரி, வாங்கும் பொருட்கள் அனைத்திற்கும் வரி செலுத்த வேண்டும் ?

அரசின் வேலை மருத்துவ காப்பீடு எடுத்து தருவதல்ல. அரசு மருத்துவமனைகளை தனியார் மருத்துவ மனைகளாக மாற்றுவதை நிறுத்தி, அரசு மருத்துவ மனைகளை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பராமரிக்க வேண்டும்.

ஆனால் பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் மோடி அரசு தனியாருக்கு ஆதரவாகத் தான் செயல்படும். அப்படி செயல்படும் பொழுது கூட 10 கோடி குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு என பொய்யைத் தான் சொல்கின்றது, அதில் பாதி உண்மை கூட இல்லை.

மோடி அரசால் இன்று கொண்டுவரப்படும் இந்த மருத்துவ காப்பீடு திட்டம் 2009ல் கலைஞர் ஆட்சியிலேயே தமிழகத்தில் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஜெயலலிதா ஆட்சியில் “அம்மா திட்டம்” எனப் பெயர் மாற்றப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு செலவு செய்த தொகை ரூ 3620 கோடி ரூபாய்(1). இதில் ரூ 1200 கோடி மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கும். ரூ2400 கோடி தனியார் மருத்துவமனைகளுக்கும் செலவாகியுள்ளது. அதாவது மூன்றில் இரண்டு பங்கு பணம் தனியாருக்கு.

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பதிலாக இந்த 2400 கோடி ரூபாயை தமிழக அரசு அரசு மருத்துவமனை கட்டுவதற்கு செலவு செய்திருந்தால் எல்லா பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல், மாவட்ட தலைநகரங்களில் எல்லா அறுவை சிகிச்சையும் கொடுக்கும் பல்நோக்கு மருத்துவமனைகளை உருவாக்கி இருக்க முடியும்.  ஆனால் அரசை பின்னால் இருந்து இயக்கி வரும் தனியாரும், உலக வங்கியும் அதற்கு ஒப்புக்கொள்ளாது.

அண்மைய செய்தியாக இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக மத்திய அரசு செலவு செய்வதாக அறிவித்துள்ள 7000 கோடி பணத்தையும் ஒதுக்கவில்லை, இனிமேல் தான் வரி வசூல் செய்து திட்டம் தொடங்குவார்களாம்!

வெறும் அறிவிப்புகளின் மூலமே ஆட்சியை நடத்தி வருகின்றது மோடி அரசு. ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என வரிசையாக அறிவிப்புகள் வெளியாகின. அறிவித்ததோடு சரி, இதன் மூலம் என்ன பலன் கிடைத்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றும் இல்லை.  அது போலத் தான் இந்த மருத்துவ காப்பீடு திட்ட அறிவிப்பும் நிதி ஒதுக்காததால் யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்

1) https://www.cmchistn.com/circular/performance_details.pdf

Print Friendly, PDF & Email

About நற்றமிழன்

துணி தொழில்நுட்பவியல் பணி புரிகின்றார். தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>