Home / அரசியல் / என்ன நடக்கிறது சிரியாவில் ?

என்ன நடக்கிறது சிரியாவில் ?

ரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் நிறுத்தத்தைக் கோரியும், ரஷ்யாவும் சிரிய அரசும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே போர் நிறுத்தம் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்திருக்கிறார். கொல்லப்பட்ட 500 பொது மக்களில் 190 பேர் குழந்தைகள் என்கிற தகவல்கள் கிளர்ச்சியாளர்களின் பிரச்சார மையத்திலிருந்து வெளிவரும் ( உறுதிப்படுத்தப் படாத) தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகளோடு பதுங்கு சுரங்கங்களில் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனிடையே குளோரோஃபார்ம் ரசாயன தாக்குதல்களும் நடக்கின்றன என்கிற தகவலும் கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

Middle-East-map1-e1428932175251
கடந்த ஏழு ஆண்டுகளாக சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், சிரியாவின் சுருக்கமான வரலாறு, புவியியல் அமைப்பு, மக்களின் சமூகப் பிரிவினைகள் போன்றவற்றை அறிந்து கொள்வது அவசியம். சிரியா, ஈரானைப் போல மதச் சுதந்திரம் கொண்ட ஒரு நாடு. 65 விழுக்காடு சன்னி பிரிவினர், 15% ஷியாக்கள் மற்றும் மீதமுள்ள மக்கள் கிறித்தவர்கள், குர்து, பாலஸ்தீனத்தினர். துருக்கி, ஈராக், லெபனான், ஜோர்டான் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு நாடாக சிரியா இருக்கிறது. சிரியாவின் இந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு தான் அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் சிரியா ஆக்கிரமிப்பு பேராசையை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. எண்ணெய் வளங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

சிறுபான்மையினராக இருக்கும் ஷியா பிரிவினரின் பாத் கட்சி,இராணுவப் புரட்சி மூலம் 1963 ஆட்சிக்கு வருகிறது. பெரும்பான்மை சன்னி முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு சிறுபான்மை குழு தனது ஆட்சி இருப்பை தக்க வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பாத் கட்சியின் சர்வாதிகார அரசு செய்து கொண்டிருக்கிறது. 1971 ஆம் ஆண்டு முதல் பாத் கட்சியின் தலைவரான ஹபேஸ் அல் அசாத் அதிபராக 2000 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 2000 முதல் தற்போது வரை ஹபேசின் மகன், பஷர் அல் அசாத்தும் ஆட்சி செய்து வருகிறார். 1963 ஆண்டிலிருந்து 2011 வரை “அவசர சட்டம்” அமலில் இருந்து வருகிறது. இவர்களிருவரின் ஆட்சியின் கீழ் நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.

2010ம் ஆண்டு துனிஷியாவில் துவங்கிய மக்கள் புரட்சி எகிப்து பஹ்ரைன் உள்ளிட்ட இராணுவ/மன்னராட்சி அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாக உருவெடுத்தது. பல்லாண்டு காலம் மக்களின் வறுமை, வேலை வாய்ப்பின்மை, நிர்வாகச் சீர்கேடுகள், மனித உரிமை மீறல்கள், எதேச்சதிகாரம் இவைகளின் மீதான இயல்பான மக்களின் கோவமாக , ஜனநாயகக் கனவை முன்னிறுத்திய போராட்டங்களாக அவை இருந்தன. துனிஷியாவில் பென் அலி பதவியை விட்டு சவுதிக்கு அடைக்கலம் தேடி ஓடினார். எகிப்தின் ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கம் செய்யப்பட்டார். இயல்பான இந்த மக்கள் கிளர்ச்சி சிரியாவிலும் பற்றி எரிந்தது. வழக்கம் போல இந்த போராட்டங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த அமெரிக்கா, கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது மட்டுமில்லாமல், ஐ.எஸ், அல்காயிதா உள்ளிட்ட பல பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கி பயிற்சியும் அளித்தது. 2011 மார்ச் மாதம் அசாத்தின் ஆட்சிக்கெதிராக சில வாசகங்களை சுவற்றில் எழுதிய 14 சிறுவர்கள் அரசப் படைகளால் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.இதனை எதிர்த்து டமாஸ்கஸ்  நகரின் வீதிகளில் போராடத் திரண்ட மக்களில் ஆறு பேரை அரசு சுட்டுக் கொல்கிறது. போராட்டம் பல்வேறு நகரங்களுக்கும் பரவவே, அரசு 14 சிறுவர்களையும் விடுதலை செய்கிறது. போராட்டம் அதோடு நில்லாமல் அசாத்தின் ஆட்சியை வெளியேற்றும் கிளர்ச்சியாக மாறுகிறது. நிர்வாகச் சீர்திருத்தம், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய, அவசரச் சட்டத்தை திரும்பப் பெற என மக்களின் கோரிக்கைகள் வலுப்பெறத் தொடங்கின.

2011 ஏப்ரலில் 47 வருட அவசர நிலை விலக்கப்பட்டு, அரசியல் கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டம் மேலும் பல நகரங்களுக்கு பரவ, நிலைமையைச் சமாளிக்க இராணுவம் வரவழைக்கப்பட்டு மக்கள் மீது அடக்குமுறையை அசாதின் அரசு கட்டவிழ்த்து விட்டது. கிளர்ச்சியாளர்கள் ஆயுதச்சண்டைக்கு தயாராகினர். அதே மாத இறுதியில் சிரிய அகதிகளின் முதல் குழு எல்லை தாண்டி துருக்கியில் தஞ்சமடைந்தன. சிலர் லெபனான் சென்றனர். அஸாத்தை எதிர்க்க கிளர்ச்சியாளர்கள் சேர்ந்து ஆரம்பித்த “சிரிய விடுதலை இராணுவம்”(FSA- Free Syrian Army) என்ற அமைப்பை அங்கீகரித்து அமெரிக்காவின் பங்காளிகளான – மேற்கத்திய மற்றும் சவூதி, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அரபு நாடுகள் பயிற்சியளித்தன. நகரங்களுக்குள் இராணுவ டாங்கிகள் புகுந்த நிலையில், மேற்குலக நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்கனவே சிரியா மீது விதித்திருந்த பொருளாதாரத்தடைகளை மேலும் தீவிரமாக்கின. நவம்பரில் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இருந்து சிரியா நீக்கப்பட்டது. அசாத் பதவி விலகக் கோரி, பன்னாட்டு நெருக்குதல் அதிகமானது.

28379390_421201268335296_1292926772374542018_n

இந்தப் போரில் அதிபர் அல் அசாத் தாக்குப் பிடிப்பதற்கு காரணம் ஈரானின் ஷியா ஆதரவும், ரஷ்யாவின் இடைவிடாத ஆயுத வழங்கலும் தான். அதிபர் அல் அசாத்தை பதவியிலிருந்து கீழிறக்க, உருவான சிரிய விடுதலை ராணுவத்திற்கு வந்து கொண்டிருந்த நிதியும், ஆயுதங்களும் ஐ.எஸ் அமைப்பிற்கும், அல் நுஸ்ரா ( அல்காயிதாவின் சிரிய கிளை) வுக்கும் மடை மாற்றப்பட்டு, ஐ.எஸ் அமைப்பு வலுப்பெற்றது என்கிற கருத்தும் உண்டு. ஐ.எஸ், அல் நுஸ்ரா அமைப்பின் வளர்ச்சியில் அமெரிக்க சவுதி அரசுகளுக்கு பெரும்பங்கு உண்டு. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மெக்கெயின் நேரடியாக இவர்களை சந்தித்த படங்கள் இணையத்திலேயே காணக் கிடைக்கிறது. பின்னாளில் ஐ.எஸ் அமைப்பை அழிக்க இதே அமெரிக்க அரசு, களத்தில் குதித்தது தனிக்கதை.

ரஷ்யாவின் இடைவிடாத ஆயுதங்கள் வழங்கல், அசாத்தை காப்பாற்ற இரான் தன் பங்குக்கு ஷியா கூலிப்படையினரையும், லேபனானின் ஹிஸ்புல்லா(ஷியா) போன்ற தீவிரவாதக்குழுக்களையும், ரகசியமாக இராக் வழியாக தன் படைகளையும்  களத்தில் இறக்கி விட்டுள்ளது.ரஷ்யாவுக்கு உள்ள இரு முக்கிய நோக்கங்கள், முடிந்தவரை அஸாத்தைக் காப்பாற்றுவது மற்றும் இராணுவ பலத்தை பறைசாற்றி இந்தத் தாக்குதலில் பயன்படுத்தும் போர் விமானம் உட்பட பல்வேறு விதமான ஆயுதங்களுக்கான உலகளாவிய சந்தைவாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்வதுமே.

அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் அரபு தேசத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிரியாவைக் கைப்பற்றி, இஸ்ரேலைப் போல தனக்கான ஒரு இயங்குதளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கிய நோக்கமாக இருக்கிறது. அமெரிக்காவின் சவூதி, கத்தார்,அமீரக கூட்டணி ஒரு புறம், சிரிய அதிபர் அசாதின் அரசு, ஈரான், ரஷ்யாவின் கூட்டணி ஒரு புறம் என வல்லாதிக்க அரசுகளின் இருமுனை தாக்குதல்களில் கொல்லப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகவும், 92 லட்சம் மக்கள் ஏதிலிகளாக இடம் பெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா தான் தாக்குகிறது, ரஷ்யா தான் தாக்குகிறது என்றில்லை. சிரிய இனக்கொலையில் இவர்களனைரும் சமமே. சிரியா, இரான் உள்ளிட்ட அனைத்து அரசுகளும் சிரிய மக்களைக் கொன்று குவித்து கொண்டிருப்பவர்கள் தான்.

இவ்வளவு நடந்தும் பன்னாட்டு சமூகம் எந்த கேள்வியும் கேட்கவில்லையா? 2011 அக்டோபரில் ஐநா பாதுகாப்பு சபை (6 members security council) சிரிய அதிபருக்கு எதிராக கொண்டு வந்த கண்டன தீர்மானத்தை, விட்டோ  என்கிற மறுப்பாணை அதிகாரத்தைப்பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விடவில்லை. 2012 பிப்ரவரியில் ஐநா பாதுகாப்பு சபை அசாத் பதவி விலக கோரி கொண்டு வந்த தீர்மானத்தை,மீண்டும் விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவும், சீனாவும் தடுக்கின்றன.  இது மாதிரியான 4 பாதுகாப்புச்சபை தீர்மானங்களை ரஷ்யாவும், சீனாவும் நிறைவேற்ற விட வில்லை. இதனால் பொது சபையில் (All Members General Assembly) ஆஸாத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தாண்டியும் 2014 ஆம் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என கொடுங்கோலன் அசாத் அறிவிக்கிறான். பேச்சுவார்த்தைகள் தோல்வி என தனக்கு கொடுக்கப்பட்ட ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு பிரதிநிதி கோஃபி அனான் பொறுப்புகளைத் துறந்ததும் நடந்தேறியது.

சிரிய அதிபர் பஷர் அல் அசாத்துக்கெதிராக நின்ற சிரிய விடுதலை இராணுவத்தை வளர்த்தெடுத்ததும் அமெரிக்காவே. சவுதி, கத்தார், அமீரக நாடுகள் மூலம் FSA வுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. எதிர்முனையில் ஈரான் லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கத்தை, FSA வுக்கு எதிராக ஊக்குவித்தது. அமெரிக்க கூட்டுக் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அடக்கி வாசித்த‌ அமெரிக்க மேற்குலக ஊடகங்கள், ரஷ்யா ஈரான் கூட்டுத் தாக்குதல்கள் செய்திகளை மட்டும் வரலாற்று அவலமாக காட்டுகின்றன‌. அப்படித்தான் கடந்த மாதம் சவுதி அமெரிக்க படைகளால் கட்டவிழ்க்கப்பட்ட அப்ரின் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அது பெரும் செய்தியாகவில்லை. தற்போது சிரிய அரச படைகள் டமாஸ்கஸைக் கைப்பற்றி முன்னேறும் நேரம், போரில் தோற்றாலும் ஊடகப்பரப்புரையில் வெல்ல, சிரிய மக்கள் மீது நீலிக்கண்ணீர் வடிக்கத் துவங்கி விட்டன.

மத்திய கிழக்குப் பகுதிகளில் குருதி ஆறு தொடர்ந்து ஓடுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஏதிலிகளாக ஆக்கப்படுவதற்கும் ஒரே காரணம் – அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். அமெரிக்க, சவுதி ஆளும் குடும்பங்களையும் ஆயுதங்களையும் மத்திய கிழக்கிலிருந்து அகற்றி விட்டால் 90% சிக்கல்களுக்கு தீர்வு கிடைத்து விடும்.

சனநாயகம், மனித நாகரிகம் வளர்ந்த சமகாலத்திலும் இப்படியான போர்கள் நடக்குமா, கொத்துக் குண்டுகள் எறிகணைகள் தாக்குதல்களில் குழந்தைகள் நிர்க்கதியாக்கப்படுவர்களா போன்ற கேள்விகளுக்கான பதில் 2009 ஈழப் போரிலேயே நமக்கு கிடைத்து விட்டது. மனித நேயம், மனித உயிர்களுக்கான மதிப்பு என்பது பின்னுக்கு தள்ளப்பட்டு, வல்லாதிக்க அரசுகளின் பொருளாதாரப் போட்டியும் ஏகாதிபத்திய சிந்தனையுமே முன்னுக்கு நிற்கிறது.இச்சிக்கலை வெறும் மதப்பிரச்சனையாக மட்டுமே எடுத்துக் கொள்ளும் பார்வை தட்டையானது. அதைத் தாண்டிய வல்லாதிக்க அரசுகளின் பொருளாதார, இராணுவ‌த் தேடல்களை முற்றிலுமாக மறந்து விடுகிறார்கள்.

பன்னாட்டு சமூகம் என்பதே சுயநலமிக்க சந்தர்ப்பவாத அரசுகளின் கூட்டணி தான். இந்த கூட்டுக் கொலையாளர்களுக்கு மத்தியில் மனித உயிர்களுக்கான மதிப்பைத் தேடுவது நடக்கிற காரியமல்ல. ஏகாதிபத்திய வல்லாதிக்கங்களை எதிர்ப்பதும், முதலாளித்துவ மன்னராட்சி சுரண்டல் முறைகளை எதிர்த்து நிற்குமளவு, சனநாயக கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்வதுமே நம்முன் இருக்கும் வரலாற்றுக் கடமை.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*