Home / சமூகம் / உலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு

உலகப் பெண்கள் நாள் – 2018 இளந்தமிழகம் இயக்க உறுப்பினர்கள் உறுதியேற்பு

“கொழந்தைக்கு ஒடம்பு சரியில்லங்க..”

“எம் பையனுக்கு இன்னிக்கு எக்ஸாம்ங்க”

“மாமியாருக்கும் ஒடம்பு சரியில்ல…”

விடுப்பு எடுக்கும் திருமணமான பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை.

“வேலையே செய்யாம மாசக்கணக்கில சம்பளம் மட்டும் வாங்கப் போறல்ல?”

உடன் பணி புரியும் கர்ப்பிணி பெண்களைப் பார்த்து, ஆண் ஊழியர்கள் கேட்கும் வழக்கமான எள்ளல் கேள்வி.

“பொறந்தா பொண்ணா பொறக்கணும்பா…பொண்ணுங்களுக்கு மட்டும் ஈஸியா வேல கெடச்சிருது”..!

வேலை கிடைக்காத வழக்கமான ஆண்களின் பொது புத்தியில் உறைந்திருக்கும் கருத்து.

“உன் ஆடையும் பழக்க வழக்கங்களும் தான் அச்சம்பவத்திற்கு காரணமாக இருந்திருக்கும்”

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் இலவச அறிவுரை.

“அந்த பெண்ணுக்கு குழந்தை இருக்கிறது. என் ப்ரொஜெக்ட்டுக்கு தேர்வு செய்ய முடியாது”

பாலின இடைவெளி

இந்தியாவில் 37 லட்சம் பேர் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிகின்றனர். அதில் மூன்றில் ஒரு பங்கு, பெண்களாக இருக்கின்றனர் என நாஸ்காம் (Nasscom) தெரிவிக்கின்றது.

எண்ணிக்கையில் இவ்வளவு அதிகமாக‌ இருக்கும் பெண்கள், ஆண்களை விட 29% குறைவாக ஊதியம் பெறுவதாக மான்ஸ்டர் (Monster.com) இணையதளம் எடுத்த கணக்கெடுப்பு அறிவிக்கின்றது. அதிக பெண்கள் வேலையை விட்டு விடுதல், குழந்தை பேறுக்காக விடுப்பு எடுத்தல் மற்றும் 36% பெண்களே உயர் பதவிக்கு செல்லுதல் ஆகிய காரணங்களே இந்த ஊதிய இடைவெளிக்கு காரணங்களாக அமைகின்றன.

உகந்த‌ பணிச்சூழலும், பெண்களின் சமூக நிலை முன்னேற்றமும்

மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில், மேற்கத்திய நாடுகளில் பெண்களின் சமூக வாழ்நிலை சற்றே மேம்பட்டு விளங்குவதை காண முடியும். இதன் காரணம் என்னவெறால், முதலாளித்துவ ஆணாதிக்க சமூகத்தின் விளை பொருட்களான பாலினப் பாகுபாடு, பாலியல் வன்முறை, சுரண்டல் ஒடுக்குமுறை ஆகியனவற்றை எதிர்த்து, மேற்குலகில் உழைக்கும் பெண்கள் நடத்திய பல நூறாண்டு கால இடையறாத போராட்டங்களே.

இத்தகைய மேம்பட்ட சமூக அமைப்பான மேற்குலகிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது தான் தகவல் தொழில் நுட்பத்துறையும் அதன் பணிச்சூழலும். எனவே, மற்ற தொழில் துறைகளைக் காட்டிலும் தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் பெண்களின் பணிச்சூழல் சற்றே மேம்பட்டிருக்கிறது.

இந்த புதிய வர்க்கப்பிரிவால், பெண்களை சமமாக பாவிக்கும் ஆண்களின் மனப்பாங்கு சற்று வளர ஆரம்பித்திருக்கிறது. பெண்கள் மட்டுமே உரியது என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குடும்ப‌ வேலைப் பிரிவினைகளான குழந்தை வளர்ப்பு, சமையல், முதியவர்களை கவனித்தல் ஆகிய வேலைகளை தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்யும் ஆண்களும் செய்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இருவரும் வேலைக்குச் செல்வதால், பெண்களை சமூகத்திலும் பிழைப்பிலும் சமபங்கு கொண்டவர்களாக மதிக்கும் போக்கும் வளர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

சமத்துவத்தை நோக்கிய நெடும்பயணம்

தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரியும் பெண்களும் விதி விலக்கல்ல. ஒட்டு மொத்த உலக ஆணாதிக்க சமூகத்தின் ஒரு அங்கமாகத் தான் நம் இந்தியப் பெண்களும் இருக்கிறார்கள். கூடுதலாக இந்தியாவின் சாதியக் கட்டமைப்பு, இன்னும் அதிகமாக பெண்களை ஒடுக்கிக் கொண்டு தான் இருக்கிறது.

நம் ஆணாதிக்க சமூகத்தில், ஆண்களுக்கு இணையான சம வாய்ப்புகள் பெண்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வழங்கப்படுவதில்லை. மறு உற்பத்தி மட்டுமே பெண்களுக்கு உரிய பணியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.சுருங்கச் சொன்னால், பெண் என்பவள் ஒரு குழந்தை பெறும் கருவி என்று மட்டுமே வரையறுக்கப்படுகிறது. மனித விழுமியங்களை ஆணாதிக்க சமூகமே தீர்மானிக்கிறது என்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்குமென்று தனித் தனி வேலைப் பிரிவினைகளையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

ஆரோக்கியமான சமூகம்

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பும், தரமான கல்வியும் ஒரு நல்ல ஆரோக்கியமான சமூகம் அமைவதற்கு அடிப்படையானது. இதில் பெண் குழந்தைகளுக்கும் சரி நிகர் வாய்ப்பு அளிப்பதன் மூலமே நீடித்த சமூக வளர்ச்சிக்கு தேவையான திறன்மிக்க உழைப்பு சக்தியினையும் , அறிவு சீவிகளையும் பெற்றெடுக்க முடியும். மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்று பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் உட்பட அனைத்தும் மனிதர்களுக்கும் சரி நிகரான வாய்ப்புகள் வழங்குவதே நாகரீகமான சமூகத்தின் அடிப்படை அம்சமாக அமைந்திட வேண்டும்.

எனவே, குழந்தை வளர்ப்பு , முதியோர் நலம் பேணுதல், மாற்றுத்திறனாளிகள் நலம் பேணுதல் என்பது சமூகத்தின் கடமையே அன்றி தனியே பெண்களின் கடமையன்று. இதனை உறுதி செய்வதற்கு நம்முடைய சமூகமும் அரசும் கடமைப்பட்டுள்ளது. இந்த ஆணாதிக்க சமூகத்தில் வாழும் ஆண் – பெண், குறிப்பாக ஆண்களுக்கு இது குறித்து உணரச் செய்தலும் குழந்தை வளர்ப்பு, முதியோர் நலம் பேணுதல், வீட்டு வேலைகளில் சரிசமமான பங்கெடுப்பதற்கு ஊக்குவிப்பதும் மிக அவசியமானது. இதற்கு உகந்த கொள்கைத் திட்டங்களை கொண்டுவருதலும் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு சரிநிகரான வாய்ப்புகளை உறுதிசெய்தலும் நம்முடைய அரசின் கடமையாகும்.

அதிக வேலை நேரம் கோருவதால் தகவல் தொழில்நுட்பத் (ஐடி) துறை பணியினைத் தேர்ந்தெடுப்பதற்கு பொதுவாக பெண்கள் தயங்குகின்றனர். மனித வாழ்க்கை என்பது சமூக உற்பத்திக்கும் மட்டும் அல்ல; தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள், வாழ்க்கை இணை, குழந்தைகள், பெற்றோர், உற்றோர், உறவினர், நண்பர்கள் ஆகியோரிடமும் சற்று நேரம் செலவிட வேண்டியுள்ளது. மேலும், அடுத்த நாளுக்காக தம்மைத் தாமே புதுப்பித்து கொள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அதிக வேலை நேரம் என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்குமே கண்டிப்பாக உழைப்புச் சுரண்டல் திட்டமே ஆகும். இந்த பொருளாதார பணிச்சுமை கூட சேர்த்து ஒரு பெண்ணின் மீது இந்த ஆணாதிக்க சமூகம் குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்பு ஆகிய பணிகளைத் திணிக்கும் போது, பணியிடங்களில் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை சற்று கற்பனை செய்து பாருங்கள்.

சுரண்டல் ஒழிந்த சமூகம் படைத்திட ஒன்றுபடுவோம், போராடுவோம்!

அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் சம்பளத்துடன் கூடிய மகப்பேறுகால விடுமுறையை மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களாக நீட்டித்து அறிவித்துள்ளது. இத்துடன், சம்பளமில்லாமல் மேலும் மூன்று மாதங்கள் விடுமுறை, இரு ஆண்டுகள் வரை நெகிழ்வான பணி முறையினை ஏற்பாடு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ஒவ்வொரு குழந்தையின் முதல் ஆயிரம் நாட்கள் , அதாவது, கருவுற்றதில் இருந்து இரண்டாவது பிறந்த நாள் வரையிலான நாட்கள், அக்குழந்தையின் அறிவுத்திறன் வளர்ச்சி, வாழ்நாள் உடல் நலம் ஆகியனவற்றை உருப்பெறச் செய்யும் முக்கிய காலகட்டம் என்று ஆய்வு அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். ஒவ்வொரு குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியனவற்றை இக்காலக்கட்டத்தில் கிடைக்கப்பெறும் சத்துணவு தான் உறுதி செய்யும். எனவே, இக்காலகட்டத்தில் பெற்றோரின்பால் குழந்தை வளர்ப்பு என்பது மிக அவசியம்.

நமது சமூகத்தை அனைத்து வித பாகுபாடுகள், சுரண்டல்களிலிருந்து விடுபடுத்துவதற்கு தேவையான கொள்கை முடிவுகளை அமல்படுத்துவது நமது அரசின் கடமையாகும்.அதே நேரம், மக்கள் விரோத கொள்கைத் திட்டங்களை கூட்டு எதிர்ப்பின் மூலமாக நம்முடைய அரசிற்கு நினைவுபடுத்துவது தொழிலாளர்களாகிய நம் கடமை. அனைத்துலக உழைக்கும் பெண்கள் தினம் என்பது பல நூறாண்டுகளாக நடைபெற்ற பெண்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் நினைவு கூறி போற்றுவதற்கே. அனைத்துவித ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள், பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான போராட்டங்களை தொடர்வோம் என நமக்கு நாமே உறுதிமொழி ஏற்று கொள்ளும் நாள் தான் இன்று.

இளந்தமிழகம் இயக்கம் சார்பாக பின்வரும் உறுதிமொழிகளை ஏற்போம்.

* அரசியல், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, உயர் கல்வி, தொழில்களில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்க போராடுவோம்

* பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக அணி திரள்வோம்

* ஆணும், பெண்ணும் சரி நிகரெனக் கொள்ளும் சமூக மாற்றத்தை உருவாக்குவோம்

குறிப்பு – பெண்கள் அனைவருமே உழைப்பவர்கள் தான் அதனால் உழைக்கும் பெண்கள் என்பதை பெண்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம்.

About விசை

One comment

  1. கபிலன்

    மிக அருமையான கருத்துக்களை உள்ளக்கி எழுதப்பட்டுள்ளன. பெண்கள் மீது நடக்கும் உரிமை மீறல்களையும், ஆணாதிக்க சிந்தனைகளையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் பிற நவீன நிறுவனங்களிலும் பணி புரியும் ஆண்களிடையே பெண்களைப் பற்றியும் அவர்களுடைய சூழ்நிலைகள் குறித்தும் ஊடகங்கள் விதைத்துள்ள உண்மைக்குப் புறம்பான, நியாயமற்ற, பிற்போக்கான சிந்தனைகளை அனைவரும் புரிந்து கொள்ளுமாறு விளக்கியிருக்கிறீர்கள். பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு உரிமை மீறல்கள் மற்றும் பெண்ணடிமைத்தனத்திற்கு பெரும் தொழில் நிறுவனங்களே முக்கிய காரணம் என்பது விளக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு பெண்களுடைய சம உரிமைக்காகவும், அவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்காகவும், சரிநிகர் சமூகம் படைப்பதற்காகவும் முன்வர வேண்டுமென அறைகூவல் விடுத்திருப்பது மிகவும் அருமை. இதை நான் வரவேற்கிறேன். அதை நாம் அனைவரும் முன் கொண்டு செல்ல வேண்டும். இளந்தமிழக இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply to கபிலன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*