Home / அரசியல் / நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரதிய சனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக இருந்த திரு. நரேந்திர மோடி அவர்கள் பின்வரும் முழக்கங்களை முன்வைத்தே நாடு முழுவதும் பரப்புரை செய்தார்.

குசராத்தில் எப்படி வளர்ச்சியை நான் கொண்டு வந்தேனோ, அதே போலவே இந்தியாவிற்கும் நான் வளர்ச்சியைக் கொண்டு வருவேன். அதனை முன்வைத்து மோடி வளர்ச்சியின் நாயகனாக (விகாஸ் புருஷ்) அவரது கட்சியினராலும், அன்று ஊடகங்களாலும் அழைக்கப்பட்டார்.

நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு ” நல்ல காலம் வந்துவிட்டது ” (அச்சே தீன் ஆகயா) என்றும் கூறினார்  மோடி. மே 2014-ல் மோடி பதவியேற்று சரியாக 3 ஆண்டுகள் 10 மாதங்கள் கடந்துவிட்டன. மோடி வாக்குறுதி அளித்த வளர்ச்சியும், நல்ல காலமும் பெரும்பான்மை இந்தியர்களுக்கு வந்து விட்டதா, மோடியின் ஆட்சியில் இந்தியா உலக நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது எந்த இடத்தில் உள்ளது என்பதை உலக அளவில் வெளியாகும் மூன்று ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் பார்ப்போம்.

மனிதவள மேம்பாடு:

ஓர் நாடு நீண்ட காலமாக தொடர்ச்சியாக வளர்வதற்கு அடிப்படைத் தேவை மனிதவள மேம்பாடு. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) ஒவ்வொரு ஆண்டும் திறன், வளர்ச்சி, வேலை, நுண்ணறிவு ஆகிய நான்கு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றது. 2013ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்ற 122 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78ஆவது இடத்தில் இருந்தது. சீனா  43ஆவது இடத்தில் இருந்தது (1). 2017 ஆம் ஆண்டு ஆய்வில் பங்கேற்ற 130 நாடுகளின் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் இருக்கின்றது. சீனா 34ஆவது இடத்தில் உள்ளது (2)(3). நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இந்தியா பின் தங்கி உள்ளது, அதே நேரம் சீனா முன்னேறி உள்ளது.

மோடி அரசு கல்வி திறனை மேம்படுத்துவதற்கோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கோ முதலீடு செய்யவில்லை,  நேர்மாறாக மோடி பதவியேற்ற பின்னர் கல்வி நிலையங்கள் முழுக்க காவிமயமாகி, மாற்று கருத்து கொண்டவர்கள் ஒடுக்கப்பட்டனர்.  ஒரு கருத்து செழுமை பெற வேண்டுமென்றால் மாற்று கருத்துகளுடன் ஓர் விவாதம் நடைபெற வேண்டும். ஆனால் மோடி அரசு மாற்று கருத்துகளே கூடாது என்றே செயல்பட்டு வருகின்றது.

Indias-score-card

மாற்று கருத்துகளை முன் வைப்பவர்கள் “இந்தியாவிற்கே எதிரானவர்கள்” (Anti Indian) என இந்த அரசும், அரசின் ஆதரவாளர்களும் முத்திரை குத்துகின்றனர். இதன் உச்சமாக முற்போக்கு கருத்து கொண்ட கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கௌரி இலங்கேஷ், இந்துந்துவ அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காங்கிரசு அரசின் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகவில்லை, நான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 1 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்ன மோடி ஆட்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒர் ஆண்டில் கூட 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்பு கூட உருவாகவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் விகிதம் குறைந்தே வந்துள்ளது(4,5,6). இது மேலும் குறையும் என்றே ஐ.நா, பன்னாட்டு தொழிலாளர் ஆணையத்தின் அறிக்கைகள் சுட்டுகின்றன(6). மோடியின் “மேக் இன் இந்தியா” (Make In India) போன்ற திட்டங்கள் எதுவும் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை உருவாக்காமல் தோல்வியடைந்துள்ளன.

இன்றைக்கும் இந்தியாவில் அதிகமான நபர்களுக்கு வேலை அளிக்கும் விவசாயத்திற்காக அரசு ஒதுக்கும் தொகை ஒரே அளவிலேயே உள்ளது. அதிக தொகை ஒதுக்கினால் தான் புதிய வேலைவாய்ப்புகளை விவசாயத்துறை உருவாக்க முடியும், இதை செய்யாமல் நிதிநிலை அறிக்கைக்கு(Budget) மட்டும் இது “விவசாயிகளுக்கான அறிக்கை” என சொல்வது எந்த வகையிலும் உதவாது. விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் உற்பத்தி துறை சார் திட்டங்களைத் தீட்டாமல் காங்கிரசு கட்சி செய்த சேவைத் துறை சார்ந்தே மோடி அரசு செயல்பட்டு வருவதும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணமாகும்.

மேலும் கட்டுமானத் துறை, சிறு, குறு தொழிலகங்கள் உருவாக்கிய வேலைவாய்ப்பை மோடி அரசு 2016 நவம்பர் 8 அன்று 500,1000 ரூபாயை செல்லா காசாக்கியதன் (Demonetization) மூலம் சீர்குலைத்துவிட்டது. புதிய  வேலைவாய்ப்புகளை இந்த சிறு, குறு தொழிலகங்களும், கட்டுமானத்துறையுமே குறிப்பிட்ட அளவில் உருவாக்கின, இந்த விகிதம் “செல்லாக்காசு” நிகழ்வின் பின்னர் குறைந்துவிட்டது (17,18,19,20). இந்த நிலையில்  GST வரி விதிப்பு  சிறு, குறு தொழிலகங்களை மேலும் பாதித்தது. மோடி அரசின் செயல்பாடுகள் சிறு, குறு தொழிலகங்களை குறைத்து எல்லாவற்றையும் பெரு தொழிலகங்களின் கீழ் கொண்டு வருகின்றது. பெரு தொழிலகங்களோ புதிய வேலை வாய்ப்பை உற்பத்தியை குறைத்து கொண்டே செல்கின்றன.

பட்டினியில்லா நாடுகள்:

மனிதவள மேம்பாட்டிற்கு மிக முக்கியமான உடல் நலம் தொடர்பான பட்டினியில்லா நாடுகள் அறிக்கையை எடுத்து கொண்டால் 2014ல் ஆய்வில் பங்கேற்ற 120 நாடுகளில் இந்தியா 99ஆவது இடத்தில் இருந்தது. 2017ல் ஆய்வில் பங்கேற்ற 119 நாடுகளில் இந்தியா 100ஆவது இடத்தில் இருக்கின்றது(7). இது வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை, ஏன்? வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகள்(Ration shop) மூலம் கிடைத்து வந்த உணவுப் பொருட்கள் இப்பொழுது ஆதார் அட்டை இணைப்பின் மூலம் கிடைக்க முடியாத நிலையில் இருக்கின்றன. சார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டையை இணைக்காததால் உணவு பொருட்கள் மறுக்கப்பட்டதினால் 11 வயது குழந்தை இறந்துள்ளது (கொல்லப்பட்டுள்ளது). ஆதார் அட்டையை இணைத்தாலும் உணவு பொருட்கள் பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல தடுக்கப்படலாம்.

Aaadhar  Food Game

உலக வங்கியுடன் மோடி தலைமையிலான இந்திய அரசு செய்துள்ள ஒப்பந்தத்தின் படிபொது வினியோக திட்டத்தை  முற்றிலுமாக நிறுத்தும் காலம் இன்னும் வெகுதொலைவில் இல்லை. மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக பண பரிமாற்றம் செய்து, மக்கள் சந்தை விலையில் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்கிறது அரசு. சந்தையில் விற்கும் விலைக்கு அரசு இன்று கொடுக்கும் மானியத்தை வைத்து வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களால் உணவு பொருட்களை வாங்க முடியாது என்பதே எதார்த்தம்.

இன்று ஒரு லிட்டர் பாலின் விலை 40 ரூபாய். ஆனால் மத்திய அரசு கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்ய முடியாதவர்கள் தான் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என்கிறது(8). அதாவது ஒரு லிட்டர் பால் வாங்குபவர்கள் அரசைப் பொருத்தவரை ஏழைகளல்ல.  சார்க்கண்ட்  மாநிலத்தில் நேரடி பணபரிமாற்றம் சில இடங்களில் சோதனை முறையில் கடந்த(2017) அக்டோபர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இன்று நேரடிப் பண பரிமாற்றம் வேண்டாம், பொது வினியோக திட்டத்தின் கீழ் உள்ள நியாய விலை கடைகளே (Ration shop) வேண்டும் என மக்கள் போராடத் தொடங்கி விட்டார்கள் (9, 10). இந்த நிலையில் ஏழை மக்களுக்கு எட்டும் விலையில் உள்ள புரத உணவான “மாட்டிறைச்சியை” மோடி தலைமையிலான அரசு தடை செய்தது. இனி இந்தியாவில் பட்டினி சாவுகள் அதிகரிக்கும் என்பதையே அரசின் செயல்பாடுகள் நமக்குக் காட்டுகின்றன.

அதே நேரம், சீனா 2007ல் 47ஆவது இடத்தில் இருந்து 2017-ல் 29ஆவது இடத்திற்கு முன்னேறி தன் நாட்டில் பட்டினியைக் குறைத்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை தொடர்ந்து அதிகரித்தது, தொழிலாளர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தியது போன்ற காரணங்களால் சீனா இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. (11)

பெரும் பணக்காரர்களை உற்பத்தி செய்வதில் முன்னேற்றம்!

மனிதவள மேம்பாடு, பட்டினி போன்றவற்றில் பின்தங்கிவரும் மோடி அரசு ஒன்றில் மட்டும் தொடர்ந்து இந்தியாவை முன்னேற்றிக் கொண்டே வருகின்றது. ஆம், பெரும் பணக்காரர்களை உருவாக்குவதில் மோடி அரசு முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றது. ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் (FORBES) ஆய்வறிக்கையின் படி 2014ல் 56 பெரும் பணக்காரர்கள் ( பில்லினியர்கள் , ஒரு பில்லியன் டாலர் = ஆறாயிரம் கோடி ரூபாய்)  இருந்தனர்.

2017ல் 101 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை, 2018ல் 18 பேர் அதிகரித்து 119 ஆக உள்ளது. அதாவது 100% வளர்ச்சிக்கும் மேல். மோடி ஆட்சியின் திட்டங்களால் இன்று பெரும் பணக்காரர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது (12, 13).  132 கோடி மக்களின் வாழ்வாதராத்தை முன்னேற்றுவேன் என வாக்குறுதியினால் ஆட்சியைப் பிடித்த மோடி தலைமையிலான மத்திய‌ அரசு பெரும் பணக்காரர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றி உள்ளது.  சீனா 2014-ல் இருந்த அதே இரண்டாம் இடத்திலேயே இன்றும் உள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது சீனா பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றி உள்ளது.

idi

2017 – ல் 1 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் 33 – வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து 73 % அதிகரித்து 2 இலட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் 19 இடத்திற்கு முன்னேறியுள்ளார் முகேஷ் அம்பானி. (12). மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2013 செப்டம்பரில் 1230 கோடி ரூபாயாக இருந்தது இந்த நான்கு ஆண்டுகளில் 510% வளர்ச்சி அடைந்து 2018ல் 63,000 கோடி ரூபாயாக உள்ளது(12, 14).

மோடியின் ஆசிகளைப் பெற்ற சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் சொத்து 2014ல் 1200 கோடி ரூபாயாக இருந்தது,  2018ல்  350% வளர்ந்து 42,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது (15, 16). மோடியின் பணமதிப்பு நீக்கத்திற்கும், டிஜிட்டல் இந்தியாவிற்கும் நன்றி தெரிவித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் இந்த முறை இளம் இந்திய பெரும் பணக்காரராக ஃபோர்ப்ஸ் பட்டியலில் உள்ளே நுழைந்துள்ளார். (12)

நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்குறுதிகளாக அளித்த நல்ல காலமும், வளர்ச்சியும் இந்திய மக்கள் தொகையில் 0.00001% உள்ள பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. அதே நேரம் 99.99% உள்ள பெரும்பான்மையான இந்திய மக்களின் நிலை வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பதைத் தான் மனித வள மேலாண்மை, பட்டினியில்லா நாடுகள் தொடர்பான ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. பெரும் பணக்கார நாடுகளுக்கான பட்டியலில் 3-ஆவது இடத்தில் இருக்கும் அதே இந்தியா தான் பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் 100ஆவது இடத்திலும், மனிதவள மேலாண்மை நாடுகளின் பட்டியலில் 103ஆவது இடத்திலும் இருக்கின்றது.

13442394_277940452555647_1270411324520275562_n

மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்காத மோடி அரசு பன்னாட்டு சந்தையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை பகுதியளவு குறைந்த பொழுதும் வரிகளை அதிகரித்து நுகர்பொருள் விலையை குறைக்காமல் “விலை வாசி உயர்வுக்கு” வழிவகுத்து மக்களை வாட்டி வதைத்தது.

எங்கே இந்த மைய பிரச்சனையை பேசுவிடுவார்களோ என அஞ்சி பெரும்பான்மை மக்களை திசை திருப்புவதற்காகத் தான், ஊடகங்களின் மூலம் தொடர்ந்து மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து சிறுபான்மையின மக்களையும், பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக பேசுபவர்களையும் “தேசத்திற்கு எதிரானவர்களாக” ( Anti National) கட்டமைத்து வருகின்றது பா.ச.க அரசு.

maxresdefault

https://www.youtube.com/watch?v=IjBjc8f4dQU

மேலே உள்ள விளம்பரத்தில் வருபவர் உங்க தாத்தா பேரில் மருத்துவமனை கட்டுகின்றோம் அங்கே, உங்க தாத்தா பேரில் கல்லூரி கட்டுகின்றோம் இங்கே என போலி அறிவிப்புகளைச் சொல்லி அங்குள்ளவர்களை ஏமாற்றி மிட்டாயை பிடுங்கி தின்று சிலையை கீழே தள்ளிவிடுவார். இங்கு Digital India, Swachh Bharath, Make In India…  என திருவாளர்.மோடி அவர்கள் போலி அறிவிப்புகளை வெளியிட பெரு முதலாளிகள் இந்தியாவை, இந்தியர்களை ஒட்டச் சுரண்டுகின்றார்கள்.

ஒட்டுமொத்த இந்திய வளத்தை பெரு முதலாளிகளின் சுரண்டி கொழுக்கின்றார்களென்பது பெரும்பான்மை இந்தியர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அவர்களை எப்பொழுதும் பீதியிலும், வெவ்வேறு பிரச்சனைகளுக்கு நடுவிலும் வாழவைத்திருக்கும் இந்த அரசின் செயல்பாடுகள், எனக்கு அமைதிப்படை படத்தில் சத்யராஜ் சொல்லும் பின்வரும் வசனத்தைத் தான் நினைவூட்டுகின்றது “மக்களுக்கு இடையில் பிரச்சனையை மூட்டிவிட்டால் அவர்கள் நாம் செய்ததை எல்லாம் மறந்து நமக்கே வாக்களிப்பார்கள்”.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்

குறிப்பு: இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதற்கு இணையான மக்கள் தொகை கொண்ட ஒரே நாடு என்பதால் சீனா இங்கு ஒப்புமைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

தரவுகள் (அ) மேலும் படிக்க

1) http://reports.weforum.org/human-capital-index-2013/#section=country-profiles-india

2) http://reports.weforum.org/global-human-capital-report-2017/dataexplorer/?doing_wp_cron=1520569019.6115710735321044921875#economy=IND

3) http://puthiyaagarathi.com/human-capital-index-indias-position-is-worse-world-economic-forum/

4) https://www.hindustantimes.com/india-news/three-years-of-modi-govt-job-creation-promise-falls-short-as-unemployment-rate-up/story-NiJ519kWe56MjNCfMtgEeO.html

5) https://www.bloomberg.com/news/articles/2017-09-19/modi-s-jobs-problem-threatens-quest-to-lower-inequality-in-india

6) https://timesofindia.indiatimes.com/india/unemployment-in-india-to-increase-marginally-in-2017-18-un-report/articleshow/56512962.cms

7) https://scroll.in/article/854242/fact-check-did-india-fall-45-places-in-global-hunger-index-rank-from-2014-to-2017

8) https://timesofindia.indiatimes.com/india/New-poverty-line-Rs-32-in-villages-Rs-47-in-cities/articleshow/37920441.cms

9) https://www.telegraphindia.com/states/jharkhand/nagri-can-t-stomach-dbt-211558

10) https://aamjanata.com/democracy/human-rights/jharkhand-pilot-dbt-food-subsidy-dismal-failure/

11) http://www.newindianexpress.com/opinions/columns/shankkar-aiyar/2017/oct/15/hunger-index-china-moves-from-47-to-29-india-slides-94-to-100-1674369.html

12) http://tamil.thehindu.com/india/article22964128.ece

13) https://www.forbes.com/sites/abrambrown/2014/03/03/forbes-billionaires-full-list-of-the-worlds-500-richest-people/#383d308e2499

14) http://www.livemint.com/Companies/Fj9IqkDa213FIO0jLKbmeN/Adanis-41-billion-wealth-surge-in-8-months-fuels-Narendra.html

15) https://en.wikipedia.org/wiki/Patanjali_Ayurved

16) http://tamil.thehindu.com/india/article22965401.ece

17) https://thewire.in/195278/unprecedented-job-losses-wage-decline-unorganised-sector-post-demonetisation/

18) https://thewire.in/158750/demonetisation-jobs-manufacturing-no-hires/

19) http://www.dnaindia.com/money/report-unorganised-sector-witnessing-job-losses-post-demonetisation-2281794

20) http://www.firstpost.com/business/unorganised-sector-jobs-not-growing-for-5-years-note-ban-may-have-just-deepened-the-crisis-3850209.html

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.