Home / சமூகம் / சித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்

சித்ராவின் பெண் குழந்தையின் பெயர் யூணுஸ்

சென்னை  பெரு வெள்ளத்தின்  பொழுது  நிறைமாத  கர்ப்பிணியான  தன்னை  மீட்டு    மருத்துவமனையில்  சேர்த்த  முகம்மது   யூணுசிற்கு   நன்றி  செலுத்தும்  விதமாக  தன்  பெண் குழந்தைக்கு  யூணுஸ்  என்று  பெயர்  சூட்டியிருக்கின்றார் சித்ரா.

இப்படி  எத்தனையோ  சித்ராக்களையும்,  யூணுஸ்களையும்  கூடுதல்  நினைவாக  வடியவிட்டிருக்கின்றது   சென்னை   வெள்ளம்.

மனித குலத்தின் மீதும்,   மாந்த நேயத்தின்  மீதும்  இந்த  மாபெரும்  துயரம் மாபெரும்  நம்பிக்கையை  விதைத்து விட்டுச்  சென்றிருக்கின்றது.

முதல் கட்ட மழையின் போது  பாதிப்புகள்  ஏற்பட்ட  இடங்களுக்கு  உணவு விநியோகிப்பதில்  தொடங்கியது  மக்கள் விடுதலை  மற்றும்  இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் பணி.  எங்களைப் போலவே  பல்வேறு  அமைப்புகள்,  சிறிய குழுக்கள்   உணவுப்  பொட்டலங்களை  விநியோகித்துக்  கொண்டிருந்தனர். நம்பிக்கை  மின்னல்களுடன்  மக்கள்  எங்களை  எதிர்கொண்டனர்.

இரண்டாம்  கட்டமாக  செம்பரம்பாக்கம், புழல்  போன்ற  ஏரிகளில்  இருந்து  அறிவிக்கப்படாமல்  திறந்து விடப்பட்ட  தண்ணீர், மிகப்பெரிய  இழப்பை  ஏற்படுத்தியது.

உணவு  சமைத்து  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  கொடுக்கும்  விதமாக  முதலில்  வேலையை  தொடங்கினோம்.  அத்தியாவசியத்  தேவையான  உடைகள், மெழுகுவர்த்தி,  கொசுவர்த்தி,  ரொட்டி  என  விநியோகப் பட்டியல்  நீண்டது. கோடம்பாக்கம்  புலியூர்  அரசு  மேல்நிலைப்பள்ளி  நிவாரண  முகாமாக  மாறியது. மக்கள்  விடுதலை  தோழர்களும்,  இளந்தமிழகத்  தோழர்களும், தன்னார்வலர்களும்  இணைந்து  எங்களுக்குள்  வேலைகளை  பிரித்து  பல்வேறு குழுக்களை  அமைத்துக்  கொண்டோம்.  முகநூல், வாட்சப்  மூலமாக  தெரிந்த  நண்பர்கள்  மூலமாக  பொருட்களாக, பணமாக  நிவாரண  உதவிகள்  வரத் தொடங்கின.

எங்களைப்  போலவே  சென்னையில்  பல  இடங்களில்  பலகுழுக்கள், இயக்கங்கள்,  அரசியல் கட்சிகள்  நிவாரண  உதவிகளை  செயல்படுத்திவந்தனர்.

எந்தப்பகுதி  மக்களுக்கு  எந்தப்பொருட்கள்  அத்தியாவசியமாக  தேவையாக  இருக்கின்றது  என்பதை  முதல்நாள்  நேரடியாக  சென்று  ஆய்வு மேற்கொண்டதன்  அடிப்படையில்  அம்மக்களுக்கு  தேவையான  பொருட்கள்  கொண்டு  சேர்க்கப்பட்டன. சென்னைக்குள்  நிவாரணப்  பொருட்கள்  கிடைக்காத  பகுதிகள்  உள்ளனவா  என்று  இருகுழுக்கள்  வெள்ளம்  சூழ்ந்த  பகுதிகளில்  ஆய்வுகளை  மேற்கொண்டனர். தண்ணீர்  அதிகமாக  தேங்கி  மீட்பதற்கு  உதவிகள்  வராத  நிலையில்  மக்கள்  இருப்பதை  கண்டுணர்ந்து  படகுகளை  ஏற்பாடு  செய்தோம்.

சில  பகுதிகளில்  உணவும்  தண்ணீரும்  தற்காலிகமாக  கிடைத்தன. வேறுசில  அடிப்படைத்  தேவையான  பொருட்களின்  தேவை  இருந்தது. மிக  முதன்மையாக  இளவயது  பெண்களுக்கு  அவர்களின்  உடனடித்  தேவையான ”நாப்கின்”  இன்றி  சிரமப்பட்டனர்.   இதற்காக   “நாப்கின்”கள்  சேகரிக்கப்பட்டு  அங்கு  விநியோகிக்கப்பட்டது. சில  இடங்களில்  பாதிக்கப்பட்ட  மக்கள்  உணவும்  தண்ணீரும்  கிடைக்கின்றது  ஆனால்  சாப்பிடபயமாக  உள்ளது  எனக்  கூறினர். பெண்கள் தண்ணீர் குடிக்க பயமாக உள்ளது என்றனர். ஏனென்றால்  கழிப்பறை  இல்லாத  காரணத்தினால்  உணவு  உண்ண  தயங்கி  நின்றதை  கண்ட  தோழர்கள்  கண்கலங்கினர்.

மக்களின்  இந்தநிலையை  கண்டபொழுது  அரசின்  மீது  எங்களுக்கு  கடுமையான  கோபம்  வந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தேவையான  பொருட்களை  கண்டறிந்து  வலைத்தளத்தில்,  முகநூல்,  குறுஞ்செய்திகளில் பதிவிட்டவுடன் பார்த்தவர்கள்  உடனடியாக  பொருட்களை  தேவையானவர்களுக்கு  நேரில்  சென்று  சேர்த்தனர். பால்  தொடங்கி  மருத்துவ பொருட்கள்  வரை ஏராளமான பொருட்கள்  எங்கள்  முகாமுக்கு  வரத் தொடங்கியது. சென்னையில்  இருந்து  கடலூரில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கும்  உதவிப் பொருட்களை  அனுப்பி வைத்தோம்.  திருச்சி,  மதுரையில்  இருந்தும்  தோழர்கள்  சென்னை, கடலூருக்கு  தொடர்ந்து  நிவாரணப் பொருட்களை  அனுப்பி வைத்தனர்.

புலம்பெயர்  தமிழர்களும்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உதவ முன்வந்தனர்.  கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய  தமிழர்பேரவை, யாழ்ப்பாண  உதவிகள் என ஈழத்தமிழர்களின்  உதவிகள்  நம்மை  நெகிழவைத்தது.

கல்யாண  மண்டபங்கள்  நிவாரணமுகாம்கள்  ஆகின. தமிழ்,  தெலுங்கு, மலையாள,  இந்தி  திரைப்படத்துறையினர்  பலரும்  மக்களுக்கு  உதவ  வந்தனர். மலையாளத்  திரைப்பட  நடிகர்  மம்மூட்டி  தனது  வீட்டினையும், தனது  உறவினர்கள்  வீட்டினையும்  பாதிக்கப்பட்ட  மக்கள்  தங்குமிடமாக  பயன்படுத்திக் கொள்ள  உதவினார்.

ஏராளமானவர்களின்  உயிர் இழப்பு, ஒட்டுமொத்தமாக  உடமை  இழப்பு, கிண்டி  போன்ற  தொழிற்பேட்டைகளில்  சிறு தொழில்  பட்டறைகளில்  தங்கள்  உபகரணங்களை  இழந்து  வாழ்வாதாரத்தை  தொலைத்தவர்கள், பல  ஆண்டுகளாக  சேமித்து  தொடங்கிய  தங்கள்  சிறு தொழிலை  இழந்தவர்கள்  என பலகோடி  பெறுமான  இழப்புகள்  என்று  இன்றளவும் முழுமையாக மீளமுடியாத மக்கள் சென்னையிலும் , கடலூரிலும் இருக்கின்றனர். எந்த விதமான தற்காப்பு நடவடிக்கையோ, வெள்ளம் வந்த பின்பு பாதுகாப்பு நடவடிக்கையோ, சரியான நிவாரண‌ங்கள் வழங்காத அரசு புள்ளிவிபரக் கணக்குகளை காட்டி தப்பித்துக் கொண்டுவிட்டது.

நாங்கள் இருந்த கோடம்பாக்கம் புளியூர் பள்ளிக்கூடத்தில் திருச்சி ஈரோடு போண்ற இடங்களில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்கள் தங்கி இருந்தனர். 500க்கும் மேற்பட்ட இப்பணியாளர்களுக்கு முறையாக உணவு தரப்படவில்லை, குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை. இரண்டு மூன்று நாட்கள் தங்கிச் செல்ல வேண்டியது இருக்கும் என்பதாக நினைத்து கொண்டு வந்த அந்த பணியாளர்களிடம் இரண்டுக்கும் மேல் மாற்று உடைகள் இல்லை. ஊறிப்போன கழிவுப்பொருட்களை தேங்கியிருந்த மண் குவியல்களை குப்பைகளை வெற்று கைகளால் அம்மக்கள் சுத்தம் செய்துவிட்டு இரவு வரும்போது கை/கால்கள் கழுவுவதற்கு தண்ணீர் கிடையாது. இதைபோன்ற 5000க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் சென்னை முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறினர்.

”வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது” என்ற பெருமொழிக்கேற்ப. மழை வெள்ளத்தின் போது உதவி செய்தவர் எவர் ,உதவி பெற்றவர் எவர் என்பது தெரியாத நிலை.  தேவைப்படுகிற இடத்தில் இன்று நீங்கள் இருக்கிறீர்கள். கொடுக்க கூடிய இடத்தில் இன்று நாங்கள் இருக்கிறோம் என்பதாக உதவிகள் இருந்தன. ஆளும் கட்சியினர் தன்னார்வலர்கள் குழுக்களின் நிவாரண‌ப் பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் திருப்பணியை மேற்க்கொண்டனர்.  பல்லாயிரக்கணக்கான பொருட்களை பதுக்கவும் செய்தனர்.  மழை  வெள்ளத்திற்கு  காரணமான  அரசு  எந்திரம்  வெள்ளத்தில்  மூழ்கி விட்டது  போலும்.  பொதுமக்களின்  செயல்பாடே  பாதிக்கப்பட்ட  மக்களின்  துயர்  மீட்க  உதவியது.  மழை  வெள்ளம்  அதன்  துயரம்  அனைவரையும்  அசைத்தது.  ஆனால் ஆளும் கட்சி  ஆடாமல்  அசையாமல்  வேடிக்கை  பார்த்தது.

எத்தனையோ  துயர்மிகுந்த  நிகழ்வுகளுக்கு  இடையில்  குவிந்த உதவிப் பொருட்களும்,   பணஉதவிகளும்,  தன்னார்வலர்களாக மீனாட்சி பொறியியல்  கல்லூரி மாணவர்கள், திராவிட இயக்க உணர்வாளார்கள்,  இடதுசாரி உணர்வாளர்கள், 24 மணி நேர சேவையாளாராக மாறிய ”நந்தா”,  தன் வீட்டில் இருந்த  அத்தனை  பொருட்களையும்  வெள்ளம்  அடித்துச் சென்றபிறகும்  நிவாரணப்பணிகளில்  முழுமையாக  பங்காற்றிய  “காயத்ரி”,  துப்புரவு  பணியிலும்  தங்களை ஆர்வமாக  இணைத்துக்  கொண்ட  மாணவர்கள்,  இளைஞர்கள்,  உணவு  சமைப்பதற்கு  அலைந்து  உதவிகளை   செய்த  கோடம்பாக்கம்   பள்ளிக்கூட  பகுதியினை   சேர்ந்த  மக்கள்   என்று  நினைத்துப் பார்க்கையில்  மழைவெள்ளம்  சாதியை/ இனத்தை/ மதத்தை  மூழ்கடித்தது.

வெந்தனைய  மக்களின்  துயரம்  தாண்டி  பாய்ந்த்து  மக்களின்  கருனை  உள்ளம்..

தோழர் செல்வி – மனிதி  இயக்கம்

—-

குறிப்பு : 2015 டிசம்பர் சென்னை பெரு வெள்ளமும், அன்று நடந்த மீட்பு பணிகளை குறித்தும் ஒரு நூலை கொண்டு வர 2016ஆம் ஆண்டு திட்டமிட்டு செய்த பணி சில காரணங்களால் நின்று விட்டது. அந்த பணியை மீண்டும் தொடங்கி நூலை விரைவில் கொண்டு வருவோம். அதன் முதல் பணியாக சில‌ கட்டுரைகளை இங்கே வெளியிடுகின்றோம்.

– விசை ஆசிரியர் குழு
இளந்தமிழகம் இயக்கம்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*