Home / சமூகம் / சென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்

சென்னை பெரு வெள்ளம் – செம்மஞ்சேரி – சில பகிர்வுகள் – கவின் மலர்

செம்மஞ்சேரியின் மக்களில் பெரும்பாலானவர்கள் தலித் மக்கள். அவர்கள் சென்னையின் செல்வந்தர்கள் வாழ்வதற்காக, தங்களின் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு மாநகரிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் குடி அமர்த்தப்பட்டவர்கள். அவர்கள் சென்னை நகரிலிருந்து துரத்தப்படும்போது, அரசு அவர்களை இதைவிட நல்ல பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படுவதாக நம்பவைக்கப்பட்டனர். இப்போது வெள்ளத்தை ஒட்டி அவர்களை சந்திக்கையில் அரசின் இந்த தவறான நம்பிக்கை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து கடும் கோபம் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. “எங்களுக்கு தவறான நம்பிக்கைகளை அளித்து பாதுகாப்பற்ற இடத்திற்கு குடிபெயரச் செய்திருக்கிறார்கள் என்பதற்கு பல காரணங்களைச் சொல்ல முடியும். என்றாலும் இந்த மழையும் வெள்ளமும் மிக முக்கியமான காரணங்கள்,” என்கிறார்கள் செம்மஞ்சேரி மக்கள். பெரும்பாலும் பெசண்ட் நகர், கோட்டூர்புரம், அடையார் ஆகிய பகுதிகளிலிருந்து குடியமர்த்தப்பட்டவர்கள் இவர்கள். சுனாமிக்குப் பின் கடலோரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு குடி அமர்த்தப்ப்ட்டிருக்கின்றனர்.

செம்மஞ்சேரியில் 7,000-க்கும் அதிகமான வீடுகள் உண்டு. எல்.ஐ.ஜி. ரக வீடுகள் இவை. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஹவுஸிங் போர்ட் வீடுகள் இவை. 250-400 சதுர அடி பரப்பளவில் உள்ள வீடுகளில் ஒரு ஹால், ஒரு சிறிய சமையலறை, உள்ளேயே கழிப்பறை குளியலறை வசதி என்கிற வகையில் கட்டப்பட்டவை. எல்லாமே கீழ்தளத்தில் ஒரு வீடு, மேல்தளத்தில் ஒரு வீடு என்கிற வகையிலானவை. மேல்தளத்திலுள்ள வீட்டிற்குச் செல்ல படிகள் உண்டு. இப்படிகளில்தான் கீழ்வீட்டில் உள்ளவர்கள் வெள்ளம் வீட்டிற்குள் வந்தபோது அமர்ந்திருந்தனர். பின் நிலைமை சீராகாது என்று தெரிந்தவுடன் மேல்வீடுகளிலும் அக்கம்பக்கத்திலுள்ள மாடி வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.

மற்றப் பகுதிகளில் உள்ளது போலில்லாமல் இங்கு மூன்று முறை வெள்ளம் வந்தது. (நவ 16, நவ 23, டிசம்பர் 1) முதல் முறை ஒன்றரை அடி அளவிற்கு வீட்டிற்குள் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது. இரண்டாம் முறை வாசலோடு வந்துபோய் இருக்கிறது. மூன்றாம் முறை எல்லோருடைய வீடுகளிலும் சுமார் 4 நாட்களுக்குத் ஏறத்தாழ இடுப்பளவுக்கும் மேல் தண்ணீர் தேங்கியிருந்தது. சாலைகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீர் கழுத்தளவு நின்றதாக மக்கள் தெரிவித்தனர்.

நவம்பர் 16-ம் தேதியன்று பெய்த மழையின்போது போன மின்சாரம் இடையில் மழை நின்று சில நாட்களுக்கு வந்தது. இரண்டாவது வெள்ளத்தின்போது மீண்டும் சென்று பின் வந்து பின்னர் டிசம்பர் 1 வெள்ளத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது.

செம்மஞ்சேரிக்குச் செல்ல பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள குமரன் நகரிலிருந்து உள்ளே 2 கிலோ மீட்டர் தொலைவு கடக்கவேண்டும். இடையில் இருபுறமும் வயல்கள், பரந்த நிலப்பரப்புகள், சிறுசிறு வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உண்டு. வலதுபுறம் முழுதும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு நீளச்சுவர் உண்டு. அந்த சுவர் காரணமாக வெள்ளம் வடியாமல் பல நாட்களுக்குத் தேங்கி நின்றது. அச்சுவரை ஆங்காங்கே உடைத்துவிட்டவுடன்தான் வெள்ளநீர் வடியத் தொடங்கியதாக பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வெள்ளம் சூழ்ந்திருந்தபோது பலர் தங்கள் வீட்டைவிட்டு அக்கம்பக்கம் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்த சமயம் வீடுகளின் கதவுகளை உடைத்து எஞ்சியிருந்த பொருட்களை திருடிய சம்பவங்களும் இப்பகுதியில் நட்ந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலும் அரசுக்கெதிரான மனநிலையையே மொத்தப் பகுதியிலும் காண நேர்ந்தது. ஆளுங்கட்சி சின்னத்தை வீட்டில் வரைந்து வைத்திருப்பவர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வீடுகளின் கதவுகளில் ஒட்டிவைத்திருப்பவர்களும்கூட “இம்முறை அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. தேர்தல் நேரத்தில் வரட்டும். பார்த்துக் கொள்கிறோம்,” என்று கடுங்கோபத்துடன் கூறுகின்றனர். வெள்ளம் குறித்து அரசு முன்னெச்சரிக்கை செய்யாமல் தங்களை வஞ்சித்துவிட்டதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் எடுத்த கணக்கெடுக்கின்படி ஒலிபெருக்கியிலோ அல்லது வேறு வகைகளிலோ மக்களிடம் வெள்ளம் வரும் என்றோ ஏரியைத் திறக்கப்போவதாகவோ அரசு அறிவிப்பு தரவில்லை என்றனர். ஒன்றிரண்டு பேர், காவல்துறையினர் வந்து சொன்னதாகக் கேள்விப்பட்டதாகச் சொன்னார்கள் என்றாலும் நேரடியாகப் பார்த்ததாகவோ கேட்டதாகவோ ஒருவரும் கூறவில்லை.

மூன்றுமுறை வெள்ளம் வந்தபோதும் இதே நிலைதான். ஆனால் இடையில் வெள்ளம் வராத ஒரு ஞாயிற்றுக் கிழமையில், அன்று வெள்ளம் வரப்போவதாக காவல்துறை அறிவிப்பு செய்து, எல்லோரும் பரபரப்பாக பொருட்களை பாதுகாத்து வைத்துக் காத்திருந்த அன்று வெள்ளம் வரவில்லை என்று ஒரு சிலர் கூறினர். அதன்பின் மீண்டும் பழையபடி பொருட்களை இறக்கி வைத்துவிட்டனர். ஆனால் உண்மையில் ஏரியைத் திறந்த அன்று எந்த அறிவிப்பும் இல்லை. நாவலூர் ஏரி உட்பட செம்மஞ்சேரியைச் சுற்றி நான்கைந்து ஏரிகள் உண்டு.

நாங்கள் பார்த்தவரையில் பெரும்பாலானோருக்கு, கால்களில் சேற்றுப்புண் வந்திருந்தது. பாதம் முழுவதும் தண்ணீரில் நடந்து நடந்து வெளிறிப்போய் கால்கள் முழுதும் புண்களாக இருந்ததைக் காண முடிந்த்து. வெள்ள பாதிப்பின்போது, ஒவ்வோர் வீட்டிலும் யாராவது ஒருவருக்காவது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் அல்லது சளி என்று ஏதாவது ஒரு நோய் தாக்கியிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்திருந்தபடியால் மருத்துவமனைக்குச் செல்ல இயலாமல் பலர் துன்பப்பட்டிருக்கின்றனர். அவரவர் கைகளில் இருந்த மருந்துகள், வீட்டிலேயே செய்துகொள்ளும் வைத்தியம் என்று சமாளித்திருக்கின்றனர். சிலர் வெள்ள நீரைக் கடந்து சென்று மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர்.

கீழ்வீடுகளில் பலரது வீடுகளில் மளிகைப்பொருட்கள், துணிமணிகள், பாத்திரங்கள், புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் என்று வெள்ளத்தில் போய்விட்டன. சில வீடுகளில் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றனர். சிலர் வீடுகளில் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு, பிறப்பு – இறப்பு சான்றிதழ்கள் போன்ற ஆவணங்கள் போய்விட்டன. இவை அல்லாமல் கட்டில், பீரோ, மெத்தை, போர்வை, பாய் என்று அனைத்தும் சேதமாகிவிட்டன. மிக்ஸி, கிரைண்டர், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய் ஸ்டவ், லேப்டாப், செல்போன், வாஷிங் மெஷின், தையல் எந்திரம், டேபிள் ஃபேன், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள் பழுதாகியுள்ளன. சிலர் அங்கேயே பெட்டிக்கடை வைத்துள்ளனர். கடையில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போய்விட்டன. மின்சார வயர்கள் பாதிக்கப்பட்டு பல வீடுகளில் மேற்கூரையில் உள்ள சீலிங் ஃபேன்களும் ஓடவில்லை. எஞ்சிய துணிமணிகளை எடுத்துத் துவைத்து காயவைத்திருந்தாலும் அவற்றில் துர்நாற்றம் வீசுகிறது. பூஞ்சை பிடித்தும் உள்ளது. சுவர்களில் ஓதம் வைத்து, ஆங்காங்கே நீர் கசிகிறது. மேல் வீடுகளில் இது மிகவும் அதிகம். வெள்ளக் காலத்தில், மிகச் சிறிய மாடிவீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் வசிக்கையில், கீழ் வீடுகளிலிருந்தும் குடும்பங்கள் வந்தவுடன், யாருக்கும் படுக்க இடமில்லாமல் பலர் இரவுகளில்கூட உட்கார்ந்தபடி, நின்றபடி இருந்திருக்கின்றனர். திருட்டு பயத்தால் பொருட்களை காவல் காக்க ஒரு மாற்றுத் திறனாளிப் பெண் தன் முடியாத கால்களுடன் கீழ்வீட்டில் 3 அடி வெள்ளத்திலே இரவெல்லாம் நின்றிருந்ததைச் சொன்னபோது கண்கள் கலங்கிவிட்டன.

செம்மஞ்சேரிக்கு அருகில் உள்ள டி.எல்.எஃப். குடியிருப்பையும், செம்மஞ்சேரியையும் ஒரு சிறிய கால்வாய் பிரிக்கிறது. அக்கால்வாயில் நீர் நிரம்பினாலும் டி.எல்.எஃப். குடியிருப்பிற்குள் நீர் செல்லாதபடி சுவர் ஒன்று இருக்கிறது. ஆகவே அத்தனை தண்ணீரும் செம்மஞ்சேரிக்கே பாய்ந்ததாக பகுதிவாசிகள் கூறுகிறார்கள். காப்பாற்றுவதற்கு படகுகளும் டி.எல்.எஃப்.க்கே வந்ததாகவும் தங்கள் பகுதிக்கு வரவில்லை என்றும் கூறினர்.

மீட்புப் பணிகளின்போது அரசு மிகவும் மெத்தனம் காட்டியதாகக் கூறினர். படகோ அல்லது வேறு எதுவுமோ வந்து தங்களை மீட்கவில்லை என்றனர். பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் சிண்டக்ஸ் தொட்டிகளை உடைத்து அதையே மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தியதாகத் தெரிவித்தனர். வெள்ளம் வடிந்த பின் அரசு மருத்துவ முகாம் நடத்தியிருக்கிறது. நாங்கள் சென்றபோது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மருத்துவ முகாம் நடத்திக்கொண்டிருந்தனர்.

வெள்ளம் தேங்கி நின்ற காலத்தில் ஒரு பால் பாக்கெட் விலை 50-லிருந்து 100 ரூபாய் வரை விற்றிருக்கிறது. குடிநீருக்கு அவரவர் வீடுகளில் இருந்த கையிருப்பை வைத்து சமாளித்திருக்கின்றனர். சிலர் மழை நீரைப் பிடித்தும் பயன்படுத்தி இருக்கின்றனர். வெள்ளத்திலும் குடிநீர் கேன்களை விற்பனைக்கு சிலர் எடுத்து வந்ததாகவும் அவற்றை வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்தனர். காய்கறி, அரிசி, பருப்பு தொடங்கி அனைத்தும் பெரும் விலை விற்றதைக் கூறினர். அவர்கள் பகுதியில் கடை வைத்திருந்தவர்களே அவர்கள் பாதுகாத்து வைத்திருந்த மளிகைப் பொருட்களை இரட்டை விலைக்கு விற்றதை மக்கள் குறிப்பிட்டனர். சானிடரி நாப்கின்களை சில தனியார் அமைப்புகள் கொண்டு வந்து தந்ததாகத் தெரிவித்தனர்.

ஒரு சில நேரங்களில் ஹெலிகாப்டரிலிருந்து உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டன என்றும், ஆனால் அவை யாவும் கீழே வருகையில் சிதறிப்போயின என்றும் எஞ்சியவற்றையே உண்ண முடிந்தது என்றனர். பகுதியில் வேலை செய்யும் தேவநேயனின் ‘தோழமை’ அமைப்பு முதல் மாடியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகத்தில் சமைத்து உணவு தயாரித்து வழங்கியதையும் நிவாரணப் பொருட்கள் வழங்கியதையும் மக்கள் தெரிவித்தனர்.

நிவாரணப் பொருட்கள் வழங்க வந்தவர்கள் முதலில் இருக்கும் வீடுகளுக்கே எல்லாவற்றையும் அளித்துவிட்டதாகவும், இடையில், இறுதியில் இருக்கும் வீடுகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறினர். வேலுமணி (தமிழர் எழுச்சி இயக்கம்), திமுகவின் கனிமொழி ஆகியோர் மட்டுமே 7,000-க்கும் மேற்பட்ட அத்தனை வீடுகளுக்கும் முறையாக டோக்கன் விநியோகித்து எல்லோருக்கும் நிவாரணப் பொருட்கள் கிடைக்கும்படி செய்ததாகக் கூறுகின்றனர். டி.சி.எஸ். நிறுவனம், தவ்ஹீத் ஜமாத் மற்றும் சில இசுலாமிய அமைப்புகள் இங்கு தீவிரமாக பணியாற்றியதாக மக்கள் தெரிவித்தனர்.

செம்மஞ்சேரி மக்கள் பெரும்பாலும் தங்கள் தொழிலுக்காக சென்னை நகருக்கு அன்றாடம் வந்து செல்பவர்கள்தான். வெள்ளம் பாதித்த நாட்களில் கிட்ட்த்தட்ட 15 நாட்களுக்கும் மேலாக சராசரியாக யாரும் வேலைக்குச் செல்லவில்லை என்பதால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு அதிகம். அவர்களில் பலர் வீட்டு வேலை செய்பவர்கள். அல்லது நிறுவனங்களில் ஹவுஸ் கீப்பிங் பணியில் உள்ளவர்கள். அல்லது வாகன ஓட்டுநர்கள். அத்தனை நாட்கள் இவர்கள் வரவில்லை என்பதால் இயல்பாகவே வேறு யாரையாவது வேலைக்கு வைத்துவிட, இவர்களின் வேலை பறிபோனது. இப்படி வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றனர். மேலும் சில வீடுகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை இழந்திருக்கின்ற்னர். ஆட்டோ போன்றவையும் சேதமாகி பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

2397,34-வது குறுக்குத் தெருவில் வசிக்கும் பார்ப்பனப் பெண்ணான நளினி, வெள்ளம் பாதித்த நிலையிலும், தான் ஹவுஸ் கீப்பிங் துறையில் பணியாற்றும் மியாட் மருத்துவமனைக்கு டிசம்பர் 1 அன்று வேலைக்குச் சென்றிருக்கிறார். திரும்ப வரும் வழியில் செட்டிநாடு சிமெண்ட் சுவர் முடியும் இடம் அருகில் வேகமாகப் பாய்ந்து சென்ற வெள்ளத்தின் வேகத்தில் இடத்தைக் கடக்க முடியாமல் வீழ்ந்து இழுத்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார். அந்த இடத்தை அனைவரும் ஒருவரை ஒருவர் தோளைப் பற்றியபடியோ அல்லது கைகளைப் பிடித்தபடியோதான் கடக்க முடிந்திருக்கிறது. துப்புரவு தொழிலாளிப் பெண் ஒருவர் அவரை தன் கையைப் பிடித்துக்கொண்டு வெள்ளத்தைக் கடக்கும்படி கேட்டபோதும், இன்னொரு வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி தன்னுடன் வரும்படி அழைத்தபோதும் மறுத்துவிட்ட அவர் யாரையும் தொட விரும்பாமல் தனியாகவே வெள்ளத்தைக் கடக்க முயன்று உயிர்விட்டிருக்கிறார். உயிர்போகும் தறுவாயிலும் சாதியப் பாகுபாடு காண்பிக்கும் மனிதர்கள் உண்டு என்பதை இச்சம்பவம் நிரூபிக்கிறது.

வெள்ளம் வடிந்த பின்னான நிலைமைகள் இன்னும் மோசம். ஊரெங்கும் கொசு. இன்னமும் தேங்கி நிற்கும் சாக்கடை நீர். வீடுகளில் ஆங்காங்கே நீர் கசிதல், பூஞ்சை படிதல் என்று தொல்லைகள் தொடர்கின்றன. நோய்த்தொற்று அபாயம் மிகவும் விபரீதமாகத் தெரிகிறது. 2344, 4-வது நிழற்சாலை, செம்மஞ்சேரி என்கிற முகவரியில் வசிக்கும் பாத்திமாவின் மகள் கே.பிருந்தா என்கிற கர்ப்பிணிப் பெண், டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்ததோடு, வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்துவிட்டது.

வெள்ளம் பாதித்தபோது பாம்புகளும், விஷப்பூச்சிகளும் இவ்விடத்தில் அதிகம் காணப்பட்டன. சிலரை பாம்பு கடித்ததாகவும் மக்கள் கூறினர். பாம்புகளுக்கு பயந்து நீரில் இறங்கவே இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும் வெள்ளத்தில் சாக்கடை நீரும், கழிவு நீரும் கலந்திருந்தன. மலக்காடு போல வீடு இருந்ததாக பலர் தெரிவித்தனர். குடிநீரிலும் சாக்கடை நீர் கலந்துவிட்டபடியால், இப்போதும் குடிநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கிறது.

(நான், பிரசாத், கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் செம்மஞ்சேரி பகுதியில் சென்று இக்கணக்கெடுப்பை நடத்தினோம்)

 கவின் மலர் – பத்திரிகையாளர், எழுத்தாளர்

—-

குறிப்பு : 2015 டிசம்பர் சென்னை பெரு வெள்ளமும், அன்று நடந்த மீட்பு பணிகளை குறித்தும் ஒரு நூலை கொண்டு வர 2016ஆம் ஆண்டு திட்டமிட்டு செய்த பணி சில காரணங்களால் நின்று விட்டது. அந்த பணியை மீண்டும் தொடங்கி நூலை விரைவில் கொண்டு வருவோம். அதன் முதல் பணியாக சில‌ கட்டுரைகளை இங்கே வெளியிடுகின்றோம்.

– விசை ஆசிரியர் குழு
இளந்தமிழகம் இயக்கம்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*