Home / அரசியல் / நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்)  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (1). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி.

“இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதுக்கு குறைவான வயதுடையவர்கள் 65%. இந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து இவர்களின் திறன்களை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தேசிய சனநாயக கூட்டணி (பா.ச.க) ஆட்சிக்கு வந்தால் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” – இது 2013-ம் ஆண்டு இறுதியில் ஆக்ராவில் (இன்றைய)பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியது.(2)

வேலைவாய்ப்பில்லாத‌ வளர்ச்சி! (Jobless Growth)

ஆண்டுக்கு 1 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என சூளுரைத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு மூன்று ஆண்டுகளில் 15.1 இலட்சம் வேலைவாய்ப்புகளை மட்டுமே உருவாக்கி உள்ளது. அதே நேரம் “வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சி” என முத்திரை குத்தப்பட்ட மன்மோகனின் இரண்டாவது ஆட்சியின் இறுதி மூன்று ஆண்டுகளில் (2011, 2012, 2013) 24.7 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது. (3,4,5,6)

காங்கிரசு சென்ற அதே “வேலைவாய்ப்பில்லாத வளர்ச்சி” பாதையில்  அவர்களை விட வேகமாக செல்கின்றது மோடி அரசு.

ஏன் உருவாகவில்லை வேலைவாய்ப்பு?

இந்தியாவில் இன்றைக்கும் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வரும் விவசாயத்துறையில் இருக்கும் பிரச்சனைகளை களைந்தால் இருக்கும் வேலைவாய்ப்பை தக்கவைத்திருக்க முடியும். ஆனால் இதற்காக எந்த ஒரு வேலையையும் மோடி அரசு செய்யவில்லை. அதே நேரம் இன்னும் ஆறுமாதத்தில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகமாகும் என வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகின்றார் மோடியும், நிதி அமைச்சரும். 2014 தேர்தல் அறிக்கையில் கூறிய விவசாய விளை பொருட்களுக்கு பேராசிரியர்.சுவாமிநாதன் அறிக்கையின் படி விலை நிர்ணயிக்கப்படும் என்பதை மோடி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டு ஆகியும் இன்னும் நிறைவேற்றவில்லை .

kisan-long-march-tweet-759

தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும், கடன்களாலும் 2013ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும்  இந்தியாவில் 12,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள‌னர் என நீதிமன்றத்தில் கூறி உள்ள‌து மோடி அரசு. (7).  இதில் பா.ஜ.க 2014 இறுதியில் ஆட்சியைப் பிடித்த மகாராஷ்டிரா 4238 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது(8). இந்த நிலை இன்றும் மாறவில்லை.  தொடர்ந்து நாடெங்கும் நடந்து வரும் விவசாயிகளின் போரட்டமும், சிலநாட்களுக்கு முன்னர் 50,000ற்கும் அதிகமான விவசாயிகள் காலணி கூட அணியாமல் மும்பை நோக்கி பேரணியிலும் எழுப்பிய‌ கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கை விவசாய விளை பொருட்களுக்கு சுவாமிநாதன் அறிக்கையின் படி உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். (9,15)

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்

* இந்தியாவில் வெறும் 2.8 கோடி பேர் மட்டுமே அமைப்பு சார் (Organized Sector) துறைகளில் வேலை செய்கின்றனர். இதில் 1.75 கோடி பேர் அரசு துறையிலும், 1.14 கோடி பேர் தனியார் துறையிலும் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் தான் தொழிலாளர் நலச்சட்டங்களின் கீழ் ஓரளவு பணி பாதுகாப்பு உண்டு

* 43.7 கோடி பேர்(96%) அமைப்பு சாரா துறைகளில் (Unorganized Sector) வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை, அடுத்த நாள் வேலை என்பதும் நிரந்தரம் இல்லை.

இந்த நிலையில் இன்று நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களையும் நிறுவனங்களுக்கு ஏற்றது போல‌ மாற்றி,  நிறுவனங்கள் தொழிலாளிகளை ஒட்டச் சுரண்ட வகை செய்ய இருக்கின்றது மோடி அரசு.(10)

இதுமட்டுமன்றி இந்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மாற்ற ஒரு அமைச்சரை நியமித்து பணிகளை மேற்கொண்டு வருகின்றது, மேலும் இந்த நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக நிறுத்தியும் உள்ளது. அதே நேரம் தனியார்துறையும் புதிய வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கவில்லை.  இந்தியாவின் வளர்ச்சி கொள்கை என்பது முதலீடு அதிகம் சார்ந்து உள்ள தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் உள்ளதே தவிர, தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் இல்லை. அதிக முதலீடு சார்ந்து வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.

IndianElephant_0

ஒரு கோடி முதலீட்டிற்கு ஒரு நேரடி வேலை என்ற விகிதத்திலேயே இங்கு வேலைவாய்ப்பு உருவாக்கப் படுகின்றது (11) .  மறைமுக வேலைவாய்ப்பு 10 பேருக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட ஒரு கோடி முதலீட்டிற்க்கு 11 புதிய வேலை வாய்ப்புகளே இங்கு உருவாக்கப்படுகின்றன. தானியங்கி இயந்திரங்களின் வருகையும், நிறுவனங்கள் தங்களுக்கு கிடைத்துவரும் அதிகபட்ச‌ இலாபத்தை குறைத்து கொள்ள மனமில்லாமையுமே காரணம். இதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு இலட்சம் கோடி முதலீடு ஒரு மாநிலத்திற்கு வந்தாலும் அங்கு உருவாகும் புதிய‌ வேலை வாய்ப்புகள் பதினொரு இலட்சம் தான்.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது குறைந்து வரும் இந்த நேரத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் காப்பற்றப்பட வேண்டும். இதை தான் இங்கிலாந்து , அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே செய்கின்றன. டாட்டா ஸ்டீல் தனது பிரிட்டன் நிறுவனத்தை மூடும் முடிவிற்கு செல்ல இருப்பதால்  ஆயிரக்கணக்கானோரின் வேலை இழப்பைத் தடுக்க அரசு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த ஆலையை மீண்டும் இயக்கும் முடிவுகளை எல்லாம் பரிசீலித்து வருகின்றது (12).  அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிய கொடுக்கப்படும்  H1B Visa வை ஒபாமாவின் இந்த ஆட்சியில் குறைப்பதற்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதையும்,  வெளிநாட்டு மக்கள் உங்களது வேலைவாய்ப்பை பறிக்கின்றார்கள், நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன் என டொனால்ட் ட்ரம்ப்பின் வாக்குறுதிகள் அமெரிக்க மக்களிடையே பெரிய ஆதரவைப் பெற்று அவர் ஆட்சியிலும் அமர்ந்து விட்டார்.

அதே நேரம் மோடி தலைமையிலான இந்திய அரசோ “பத்தாயிரத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்பையும், மேலும் சில ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்பையும்” கொடுத்து வந்த நோக்கியா நிறுவனம் சென்னை ஆலையை மூடும் பொழுது அதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்தது. அலைபேசி உருவாக்கப் பணிகளில் மட்டுமே திறமையான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். வேலையிழப்பு மட்டுமின்றி, நோக்கியா மத்திய, மாநில அரசுகளுக்கு கட்ட வேண்டிய பல நூறு கோடி வரியையும் ஏமாற்றிவிட்டு சென்றுள்ளது. மிகவும் வலிமையான பிரதமர் என‌  சொல்லப்படும் மோடி இதை தடுக்க சிறு துரும்பையும் அசைக்கவில்லை.

நிலைமை ஏற்கனவே இவ்வளவு மோசமாக இருக்கும் பொழுது மோடி கொண்டு வந்த பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்றவை பெரும்பான்மை வேலைவாய்ப்பை வழங்கி வந்த அமைப்பு சாரா துறைகளை சீரழித்து அங்கு வேலைபார்த்து வந்தவர்களையும் வேலையற்றவர்களாக மாற்றியுள்ள‌து.

மோடியின் வளர்ச்சி யாருக்கானது ?

“மொத்த தேசிய உற்பத்தியின் (GDP)” வளர்ச்சியையும், தனி நபர் வருமானத்தின் வளர்ச்சியையும் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ந்ததாக பொருளாதார நிபுணர்களும், மோடி அரசும், அவர்களின் பக்தர்களும் தொடர்ந்து கூறி வருகின்றார்கள்.

g-pg1(GDP)web1-U10141039229AAH--621x414@LiveMintமேலே உள்ள  புள்ளிவிரவம் காட்டுவது போல‌ 2014ல் இருந்து 2016 வரை “மொத்த தேசிய உற்பத்தி” வளர்ந்து வந்தது. இந்த வளர்ச்சி  மோடியின் பண மதிப்பு நீக்கத்தால் சரிந்தது. இதன் தாக்கம் 2016 இறுதி, 2017 முதல் காலாண்டில் தனி நபர் நுகர்வு, முதலீடு, விவசாய, தொழிற்சாலை உற்பத்தி என எல்லாவற்றையும் பாதித்தது(பின்வரும் படத்தை பார்க்க). (18)

g-pg1(GDP)web2-U10141039229AAH--621x414@LiveMint

2013-2014ஆம் ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம் (தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை) 80,388 ரூபாய், இது 2016-2017ஆம் ஆண்டு 1,03,219 ரூபாய் (13).  மூன்றாண்டுகளில் 28.40% வளர்ச்சி, அதாவது ஆண்டுக்கு 9.46% வளர்ச்சி அடைந்துள்ள தனி நபர் வருமானம்.  இந்த வளர்ச்சி எல்லா இந்தியர்களுக்கும் சென்றடைந்துள்ளதா?

“மொத்த தேசிய உற்பத்தி(GDP) என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்” – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலிலிருந்து (Confessions of a economic hit man – Book)

 

அதானி , அம்பானி, பதஞ்சலி உள்ளிட்ட பெரு முதலாளிகள் சேர்ந்த இலட்சம் கோடி ரூபாய்கள் இங்கு 100 கோடி மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு வரும் தொகை எல்லோரது கணக்கிலும் சேர்த்து (காகிதத்தில்) எல்லோரும் வளர்ந்ததாக, இந்தியா வளர்ந்ததாக ஒரு பொய் தோற்றத்தை காட்டுகின்றது பொருளாதார புள்ளி விவரங்கள்.

முந்தைய (14) கட்டுரையில் கூறியது போல 110 கோடி மக்களில் .001% உள்ள அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் மட்டுமே  மோடி ஆட்சியில் வளர்ந்துள்ளார்கள். ஐந்து விரல்களும் வளர்ந்தால் தான் அது வளர்ச்சி, அப்படி இல்லாமல் ஒரு விரல் மட்டும் வளர்கின்றது என்றால் அது வீக்கம்.  மோடி ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைய வில்லை, முதலாளிகளின் சொத்து மட்டும் வீங்கியுள்ளது.

விலைவாசி உயர்வும் – வரி சலுகைகளும் :

பெட்ரோல் விலை:

மாதம்/ஆண்டுகச்சா எண்ணெய் விலை($/பீப்பாய்)இந்திய விலை பெட்ரோல்(ரூ/லிட்டர்)
திசம்பர் – 2013107.6774.71
மார்ச் – 201861.0575.55

சர்வதேச சந்தையில் 2013 ஆம் ஆண்டை விட கச்சா எண்ணெய் விலை இன்று 43.29% குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை 2013 ஆண்டின் விலையில் தான் விற்கப்படுகின்றன. சர்வதேச சந்தையின் விலைப்படி 43.29% குறைந்து இன்று பெட்ரோல் ரூ 42.39 ற்கு விற்கப்பட வேண்டும்.  மோடி அரசு தொடர்ந்து கலால் வரியை உயர்த்தியதால் விலை குறையாமல் உள்ளது. எரிபொருட்களின் விலையில் பெரும்பகுதி மத்திய அரசுக்கு வரியாக செல்கின்றது.

இந்த எரிபொருள் விலை ஏற்றம், உணவு பொருட்கள் விலையை உயர்த்துகின்றது. இந்த விலை உயர்வு இந்திய மக்களை நேரடியாக பாதிக்கின்றது. மோடி ஆட்சிக்கு வந்த பொழுது 12.36% ஆக இருந்த சேவை வரி இன்று 15% ஆக உயர்ந்துள்ளது. நடுத்தர, ஏழை மக்களை பெருமளவில் பாதிக்கும் வகையில் சேவை வரி, ஜி.எஸ்.டி வரியை எல்லாம் ஒருபுறம் ஏற்றியுள்ள மோடி அரசு மறுபுறம் கார்ப்பரேட் எனும் பெரு நிறுவனங்களுக்கான வரியை 30% லிருந்து 25% ஆக 2015-16 , 2016-17, 2017-2018 நிதிநிலை(Budget) அறிக்கைகளில் தொடர்ந்து குறைத்துள்ளது(15).

பெரு முதலாளிகளுக்கு சலுகைகளும் –  கடன் தள்ளுபடியும்:

Revenue Foregone (திட்டமிட்டிருந்த வருவாயில் வாரா வருவாய்)

நிதிநிலை அறிக்கை ஆண்டுRevenue Foregone
2014-2015ரூ 5,00,000 கோடி
2015-2016ரூ 5,00,823 கோடி
2016-2017ரூ 5,51,000 கோடி

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒராண்டிற்கு கட்ட வேண்டிய வருமான வரி,  சுங்க, கலால் வரியின் மூலம் வரும் என திட்டமிடப்பட்ட தொகையில் இருந்து தான் ஆண்டுக்கு 5 இலட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வரமால் இருந்துள்ளது. (16)

பெரு நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் இந்த சலுகை Revenue Foregone என்ற தனிப் பிரிவின் கீழ் வெளிப்படையாக தெரிவதால் மத்திய அரசு 2017-2018 நிதி நிலை அறிக்கையில் இருந்து தனியாக அறிவிக்கப்படாது என கூறினார்கள். இது இனி “மத்திய வரித்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட சலுகைகளால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பு அறிக்கை ” (The Statement of Revenue Impact of Tax Incentives under the Central Tax System) என்ற பெயரில் கொடுக்கப்படும் என மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது (16).  இதே நிதிநிலை அறிக்கையில் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வெறும் 35,000 கோடி ஒதுக்கப்பட்ட உடனே ஊடகங்கள் எல்லாம் இது விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கை என உண்மைக்கு மாறாக தம்பட்டம் அடிக்கின்றன. இந்த 35,000 கோடி ரூபாய் என்பது 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பார்த்த வேலைக்கான ஊதியமே அன்றி இலவசமல்ல.

வங்கிகளில் வாரா கடன் 11 இலட்சம் கோடியை தாண்டி விட்டது. இதில் 80%ற்கும் அதிகமான கடனை பெரு நிறுவனங்களே வாங்கி உள்ளனர். டிராக்டருக்கு ஒரு மாத தவணை கட்டாத விவசாயியை அடித்து இழுத்து செல்லும் வங்கியும், அரசும் இந்த பெரு முதலாளிகளை நோக்கி சுண்டு விரலை கூட நீட்டுவதில்லை. அதே நேரம் இந்த வாரா கடனில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகையை நீக்கியும் வருகின்றார்கள்.

loam

முந்தைய காங்கிரசு ஆட்சியுடன் ஒப்பிடும் பொழுது மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாரா கடனில் இருந்து அரசும், வங்கிகளும் நீக்கும் தொகை அதிகரித்து வருகின்ற‌து.  2014ல் மோடி அரசு பதவியேற்றது முதல் 2017 செப்டம்பர் வரை மட்டும் 2,39,082  கோடி ரூபாயை வாரா கடனில் இருந்து நீக்கி உள்ளது. பெட்ரோல் விலை உயர்வு, வரி உயர்வு உள்ளிட்டவற்றின் மூலம் பெறப்படும் வருவாயில் பெரும்பகுதியை இது போன்ற பெரு முதலாளிகளுக்காக மட்டுமே செலவு செய்கின்றது மோடி அரசு. இது போதாது என்று 2 இலட்சம் கோடியை பொது துறை வங்கிகளில் மறு முதலீடு செய்யத் தொடங்கி உள்ளது. இதில் பெரும்பகுதியும்  பெரு முதலாளிகளுக்கு தான் கடனாகச் செல்லும். (17)

தொடரும்…

அடுத்த பாகம் – மோடி, பா.ச.க கட்சியினர் செய்த ஊழல்கள்.

முந்தைய‌ கட்டுரை :

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 1


நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் / மேலும் படிக்க‌

1)https://www.quora.com/How-many-people-graduate-in-India-every-year-with-at-least-a-bachelors-degree

2) http://tamil.thehindu.com/business/business-supplement/5-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE/article9571334.ece

3) https://www.hindustantimes.com/india-news/three-years-of-modi-govt-job-creation-promise-falls-short-as-unemployment-rate-up/story-NiJ519kWe56MjNCfMtgEeO.html

4) http://scroll.in/article/806223/with-hardly-any-new-jobs-created-for-whom-is-indias-economy-growing

5) http://thewire.in/2016/04/18/indias-high-growth-rate-isnt-translating-to-job-creation-30081/

6) http://www.livemint.com/Money/1UZDnb9QcCz5s5dKnJ8maO/The-growing-disconnect-between-economic-growth-and-jobs.html

7) https://timesofindia.indiatimes.com/india/over-12000-farmer-suicides-per-year-centre-tells-supreme-court/articleshow/58486441.cms

8) http://infochangeindia.org/agriculture/news/index.php?option=com_content&view=article&id=7038

9) http://tamil.thehindu.com/general/environment/article23273639.ece

10) https://www.indiainfoline.com/article/news-sector-others/modi-govt-approves-amendments-of-3-labour-laws-114073116224_1.html

11) http://www.business-standard.com/article/news-ians/rs-1-crore-investment-for-one-job-in-tamil-nadu-114022101004_1.html

12) http://www.ft.com/cms/s/0/37e6eefe-00cf-11e6-ac98-3c15a1aa2e62.html#axzz4AZymhTL2

13) https://economictimes.indiatimes.com/news/economy/indicators/per-capita-income-growth-may-fall-8-3-to-rs-111782-in-fy18/articleshow/62383494.cms

14) http://www.visai.in/2018/03/12/why-we-oppose-modi-1/

15) http://www.firstpost.com/business/budget-2015-why-cut-corporate-tax-but-not-personal-tax-mr-jaitley-2128125.html

16) http://psainath.org/if-this-is-pro-farmer/

17) http://indianexpress.com/article/business/banking-and-finance/psu-banks-write-off-rs-55356-crore-in-six-months-bad-debt-4966594/

18) http://www.livemint.com/Politics/Ig7hWnKkVbhVGXxovJOYGO/GDP-grows-at-61-in-fourth-quarter-below-estimate-of-71.html

 

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

3 comments

  1. Thanks for the article, is there any way I can receive an email whenever you publish a new update? kdbafcgdeceecekc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*