Home / அரசியல் / அண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்

அண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்

பாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர்.  பொருளாதார நிபுணர்,  சட்ட நிபுணர்,  அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட தலைவர்,  பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர்,  தொழிலாளர் உரிமைகளுக்காக போராடியவர்,  இசை கலைஞர் என எண்ணிலடங்காத‌ பல பரிமாணங்களை கொண்டவர் அவர். இந்திய சாதிய சமூகம் அவரை “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக” மட்டுமே பிரதிநிதித்துவப் படுத்தி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் மிக முக்கியமான முதல் ஆளுமை அண்ணல். அம்பேத்கர். அன்றைய இந்தியாவில் அவர் அளவுக்கு பொருளாதாரம், சமூக அறிவியல், சட்டம் படித்தவர்கள் யாரும் இல்லை. தான் கற்றதை எல்லாம் இந்த மண்ணின் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பயன்படுத்தியவர் அவர்.  அண்ணல் அம்பேத்கரின் 126-ஆவது பிறந்தநாளான இன்று அம்பேத்கர் ஒரு பொருளாதார நிபுணர் என்ற கட்டுரையை இங்கே வெளியிடுகின்றோம். அண்ணலின் வழியில் தொடர்ந்து பயணித்து, அவர் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம் என இளந்தமிழகம் இயக்கம் உறுதி கூறுகின்றது.

–விசை ஆசிரியர் குழு.

————

இந்தியப் பொருளாதார பங்கெடுப்புக்களில் அண்ண‌ல் அம்பேத்கர் ஆற்றிய பெரும்பங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகின்றதா எனும் கேள்வி எழுகின்றது. இந்திய அரசியல‌மைப்பு சட்டக்குழுவின் தலைவர், இந்திய சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் தன்னிகரில்லா தலைவர் எனும் புகழ் வெளிச்சத்திற்கு நடுவில் அண்ணலின் பொருளாதார நிபுண‌த்துவம் ஒரு வேளை மறந்திருக்கலாம் என்பது இந்திய சாமானிய‌ மக்களுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலம், ஆனால் பொருளாதார துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்  அறிஞர்களின் (கள்ள‌)மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இருப்பினும் மே 2017’ல்  நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர். அமர்த்திய சென் அவர்கள் அண்ண‌ல் அம்பேத்கரை தனது பொருளாதார சிந்தனைகளின் தந்தை என அங்கீகரித்தார்.  இந்த அங்கீகாரம் ஒரு வேளை பொருளாதார வரலாற்றியலாளர்களை எவ்வித பாகுபாடுமின்றி அம்பேத்கர் இந்திய பொருளாதாரத்திற்கு அளித்த பங்களிப்பை மீண்டும் புதிதாக பார்க்கத் தூண்டக்கூடும். இருந்தாலும் இந்த கட்டுரையில் நாம் அம்பேத்கரின் பொருளாதார சிந்தனையின் பல்வேறு பரிமாணங்களை  சுருக்கமாக பார்க்கலாம்.

அம்பேத்கரின் வாழ்க்கை காலம் (14 ஏப்ரல் 1891-  6 டிசம்பர் 1956) 19 ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் இருந்து தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சிறிது காலம் வரை இருந்த‌து. அவர் மத்திய பிரதேசத்தில் மாவ் எனும் கிராமத்தில் ஒரு தீண்டப்படாத மஹர் குடும்பத்தில் பிறந்தார். அவரது இளமைக் காலம் தீண்டத்தகாதவராகவும், ஏழ்மை நிலையோடும் போராட்டமாக இருந்தது.

அமெரிக்க,இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில்  பொருளாதாரம், சட்டம், பல்வேறு சமூக அறிவியல் கல்வி பயில்வதற்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அன்றைய இந்திய சமூகத்தின் “சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு” காரணமான‌ இந்தியாவில் இருந்த படிநிலை சமூக கட்டமைப்பும், அதை பயன்படுத்தி கொண்டு சுரண்டிய அன்னிய ஆட்சியும் தான் என அவர் அறிவுபூர்வமாக கண்டுணர்ந்தார்.  இங்கு சமூக அமைப்பு முறையின் மூலம் காலம் காலமாக நிலவி வந்த பாரம்பரிய சமூக ஒழுங்கையும், அதன் மூலம் நடக்கும் சுரண்டலை மட்டும் கண்டறிவதோடு நில்லாமல், அந்த சுரண்டல் முறையை நடைமுறையில் மாற்றுவதற்கான மாற்றுத் தீர்வுகளையும் முன்வைத்தார். ஆனால் அந்த தீர்வுகள் இந்திய சமூகத்தால் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததால் அவர் எதிர்பார்த்த பலன்கள் அவர் வாழும் பொழுதும், இன்று மறைந்த பின்னரும் முழுமையாக கிடைக்காமலே போய்விட்டது.

கொலம்பியா பல்கலைகழகத்தில் அம்பேத்கர் அவர்கள் பொருளாதாரத்தில் முதுகலை பட்டத்திற்காக 1915ஆம் ஆண்டு  எழுதிய “கிழக்கிந்திய கம்பெனியின் நிதியும் – நிர்வாகமும்” எனும் 42 பக்க ஆய்வுக் கட்டுரையில் தான் அம்பேத்கரின் பகுத்தாயும் திறன், நடைமுறைக்கேற்ற மாதிரி அணுகும் திறன் எல்லாம் முதன் முதலாக வெளிப்படுகின்றது. இந்த ஆய்வுக் கட்டுரை “கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம், நிதி” தொடர்பான வரலாற்று பார்வையுடன்,  இந்தியர்களுக்கு எதிராக எவ்வாறான பொருளாதார, சட்ட நடைமுறைகள் இருந்தன என்பதையும் வெளிக்கொண்டு வந்த‌து.

இந்த ஆய்வின் ஒரு முக்கிய கண்டுபிடிப்பானது, ஆர்.சி.தாத்தாவின் பகுப்பாய்வுக்கு மேல் அம்பேத்கரின் திறனை மதிப்பீடு செய்ய வைத்தது.  பிரிட்டன் தேவையில்லாத போர்களை உருவாக்கிய காரணத்தால் ஏற்பட்ட நிதித் தேவையை “உள்நாட்டு செலவுகள்” என்ற பெயரில் அன்று இந்தியா கொடுத்து வந்தது. 1858 ல் இயற்றப்பட்ட  “இந்தியாவின் சிறந்த அரசாங்கத்திற்கான சட்டம்” என்ன சொல்கின்றதெனில் “இந்திய அரசின் வருவாயை பாராளுமன்றத்தின் இரு அவைகளின்  முன் அனுமதி இல்லாமல் போர் செலவுகளுக்காக மன்னர் எடுத்துக் கொள்வார்” என்கிறது. இது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும் என அம்பேத்கர் தன் ஆய்வறிக்கையில் கூறுகின்றார்.

ஆர்.சி.தத்தா உள்ளிட்ட பெரும்பாலான இந்திய பொருளாதார நிபுணர்கள்  இந்தியாவின் நிதியில் பெரிய பங்களிப்பை கோரும் சட்டத்தின் இந்த பிரிவை இந்தியாவிற்கு லாபகரமான ஒன்றாக நியாயப்படுத்தி வந்தார்கள். அம்பேத்கரைப் பொருத்தவரை இந்த நியாயப்படுத்தலில் இருக்கும் அடிப்படையான பிரச்சனைகள் இரண்டு  (1)  இச்சட்டம் இயற்றிய பின்பும் இந்தியாவின் வருவாய்கள் இந்திய நலன்களுக்காக அல்லாமல் வெளிநாட்டினருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, மேலும்  (2) பாராளுமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் இந்தியாவின் வருவாய் இந்தியாவிற்கு வெளியே செலவிடுவதற்காக இச்சட்டத்தில் “முன் அனுமதி” எனும் வார்த்தை இடம் பெறவில்லை என்பது மிக முக்கியமான தவறாகும். இந்த முக்கிய தவறை அன்றைய பொருளாதார நிபுணர்கள் கவனிக்கவில்லை. அம்பேத்கரின் இந்த கண்டுபிடிப்பு அவரின் வரலாற்றுப் பொருளாதார மேதமையை மட்டும் காட்டவில்லை, அவர் ஒரு தைரியமான தேச பக்த இந்தியர் என்பதையும் காட்டியது.

1917ல் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கையான “பிரிட்டன் இந்தியாவில் மாகாண(மாநில) நிதி” பொருளாதாரம் தொடர்பாக அம்பேத்கரின் அடுத்த பங்களிப்பாக அமைந்தது. இந்த ஆய்வறிக்கை 1925ல் புத்தகமாக வெளியானது.  அம்பேத்கரின் இந்த ஆய்வறிக்கை பொது நிதியியல் தத்துவத்திற்கு அடிப்படை பங்களிப்பாக கருதப்பட்டது. 1833 முதல் 1921 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டன் இந்தியாவில் மத்திய-மாநில நிதி உறவைக் குறித்து அது தெளிவாக குறிப்பிட்டது. இந்த ஆய்வு உலகம் முழுவதிலும் மிகவும் பாராட்டப்பட்டது.

கொலம்பியா பல்கலைகழகத்தின் அன்றைய அரசியல் பொருளாதாரப் பேராசிரியரும், என்சைகிளோபீடியாவில் சமூக அறிவியல் பிரிவின் பதிப்பாசிரியரும் , அமெரிக்க பொருளாதார சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான டாக்டர் எட்வின் ராபர்ட் ஆண்டர்சன் செலிக்மன் அவர்கள், இந்த ஆய்வறிக்கையின் மேல் பின்வரும் கருத்தை தெரிவித்தார்.  “அம்பேத்கர் தரவுகளின் அடிப்படையில், எந்தவித பாரபட்சமின்றி “மத்திய-மாநில பொருளாதார உறவை” தான் பிறந்த நாட்டில் ஆராய்ந்தார். இந்த ஆய்வின் படிப்பினைகள் எல்லா நாட்டிற்கும் பொருந்தும். இது போன்ற பெரிய அளவிலான “அடிப்படையான கோட்பாட்டு ஆய்வை” எனக்கு தெரிந்த வரை இதுவரை யாரும் செய்யவில்லை”.

பிரிட்டீஷ் இந்தியாவின் நிதி மோசடிக்கான காரணங்கள் பற்றிய விசாரணை, மத்திய – மாகாணங்களின் நிதி பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான பரிந்துரை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அண்ணல். அம்பேத்கரின் இந்த  ஆய்வறிக்கை சர்வதேச அங்கீகாரத்தைத் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவருடைய கருத்துக்கள் இன்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டாட்சி அமைப்பைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கும் வகித்தது. அம்பேத்கர் ஆய்வின் விளைவாக அரசியலமைப்புச் சட்டத்தின்படி நிதி ஆணையம் மூலம் உருவாக்கப்படும் ஐந்து ஆண்டு திட்டம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.  இத்திட்டம் ஒருவகையில் மத்திய- மாநிலங்களுக்கிடையிலான நிதிசார் பிரச்சனைகளுக்கு ஓர் நிரந்தர  தீர்வாக அமைந்தது. ஐயத்திற்கிடமில்லா வகையில் பொது நிதியியல், இன்னும் குறிப்பாக கூட்டாச்சி நிதியியல் கோட்பாட்டிற்கு மிக முக்கியான பங்களிப்பாக அம்பேத்கரின் இந்த ஆய்வறிக்கை விளங்குகின்றது.

“ரூபாயின் பிரச்சனை – தோற்றமும், தீர்வும்” என்ற அம்பேத்கரின் ஆய்வு புத்தகம் 1923ல் வெளியானது. இதற்கு முன்பே (1921ல்) லண்டன் பொருளாதார கல்லூரி அவருக்கு பொருளாதார அறிவியலில் பட்டய படிப்புக்கான பட்டத்தை வழங்கியது. 1947 ஆம் ஆண்டில் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது. பொருளாதார கொள்கைகளிலும், ரூபாயின் பிரச்சனைகள் தொடர்பாக அவருக்கு இருந்த மேதமையும் இந்த புத்தகத்தில் வெளிப்பட்டது. 1800 முதல் 1920 வரை இந்திய நாணயத்தின் சிக்கலை அவர் மிகவும் கவனத்துடன் பகுப்பாய்வு செய்து, இந்தியாவிற்கான நாணய முறைமையை பரிந்துரைத்தார். அவரது இந்த தெளிவான பரிந்துரையில் ஜான் மேனார்டு கீன்ஸின் சிந்தனை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டார்.

1909ல்  வெளியான “இந்திய  ரூபாயும் – பொருளாதாரமும்” எனும் கட்டுரையில் கீன்ஸ் “தங்க பரிமாற்றத்தின் மூலம் தர நிர்ணயம் செய்யப்படுவதை பரிந்துரைத்தார் ஆனால் அம்பேத்கர் தங்கத்தை நேரடியாகவே தர நிர்ணயம் செய்ய சொன்னார். அம்பேத்கர் தங்க தர நிர்ணயத்திற்கு ஆதரவாக வாதாடினார். ஏனெனின் இந்த முறையில் ரூபாயை எளிதாக அச்சடித்து, வினியோகிக்க முடியாது, இதன் மூலம் கட்டப்படுத்தப்படும் விலை வாசி உயர்வினால் ஏழை மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றார். ஏகாதிபத்திய அரசால் அம்பேத்கர் முன்வைத்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், ஏழைகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான அவரது நோக்கம் இதன் மூலம் தெளிவானது.

IMG-20180401-WA0005

1925 டிசம்பர் 5 அன்று ராயல் ஆணையத்தின் முன் “இந்திய ரூபாய் – பொருளாதாரம்” தொடர்பாக பல முக்கியமான ஆதாரங்களை அவர் அளித்தார். இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. அம்பேத்கரால் இந்த ஆய்வறிக்கையின் இரண்டாவது பதிப்பை வெளியில் கொண்டு வர முடியவில்லை என்றாலும், இந்த பொருளாதாரச் சிந்தனைகள், உண்மையில் அரசியல் துறையில் அவரது செயல்திட்டங்களின் மூலம் வெளிப்பட்டது. அவர்  தன் வாழ்நாளில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வந்தாலும் அவர் ஒரு பொருளாதார வல்லுநர் என்பது நீர்த்து போகவில்லை. இந்திய பொருளாதாரம் பெரும்பான்மையாக விவசாயப் பொருளாதாரமாகவே இருந்ததை அம்பேத்கர் அறிந்திருந்தார். 80 விழுக்காடு மக்கள் விவசாயத்தை முதன்மை பணியாகக் கொண்டு கிராமத்தில் வாழ்ந்து வந்தாலும் அவர்களது பொருளாதார நிலைமை ஏழ்மை நிலையிலேயே இருந்தது. அவர் இந்த ஏழ்மை நிலையை ஒழிக்கப் போராடினார். இதற்காக அவர் பெருந்திரள் மக்கள் இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

“கோதி” அமைப்பு (1949) ‘மஹர் வத்தன்’ அமைப்பு (1959) ஆகியவற்றை அகற்றுவது,  பம்பாய் கடனளிப்போர் சட்ட உருவாக்கம் (1938) ஆகியவை அவரது இயக்கத்தின் சில முக்கியமான வெற்றிகளாகும். மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தின் சில பகுதிகளில், ‘கோத்’களிடம் (ஜமீந்தார் போன்றவர்கள்) நிலத்திற்கான உரிமைகள் இருந்தன, அந்த நிலங்கள் விவசாயிகளால் உழப்பட்டன. அந்த விவசாயிகளிடம் இருந்து வருமானத்தை “கோத்”கள் பெற்று அதில் ஒரு பங்கை அரசுக்கு கொடுத்து வந்தனர். இதுவே “கோதி” முறை ஆகும். இது கிராமப்புற விவசாயிகளை ஒட்ட சுரண்டி ஒடுக்கியது.

இந்த “கோதி” அமைப்பு முறைக்கு எதிரான இயக்கத்தை ஏப்ரல் 14, 1929 இரத்னகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாய மாநாட்டில் தொடங்கினார். 1936 அவர் தொடங்கிய “தொழிலாளர் கட்சி” யின் கொள்கை திட்டத்தில் “கோதி” அமைப்பு முறையை ஒழிப்பதற்கு முக்கிய இடமளித்தார். “கோதி” அமைப்பை ஒழிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  சட்டத்தை 1937 செப்டம்பர் 17 அன்று பம்பாய் சட்ட மன்றத்தில் அம்பேத்கர் அறிமுகப்படுத்தினார். பின்னர் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1949 ஆண்டு “கோதி அமைப்பு முறை அழிக்கப்பட்டதன் மூலம் அம்பேத்கர் வெற்றி கண்டார்.

“பம்பாய் நகர பரம்பரை அதிகாரிகள் சட்டம் 1874” ன் மூலம் உருவானதே “மஹர் வதன்” முறை. இதன் மூலம் கிராமப்புறத்தில் ஏழ்மை நிலையில் இருந்த மஹர்  மக்கள் சுரண்டப்பட்டனர். மஹர் இன மக்களுக்கு  அரசின் கடை நிலை பணிகளே தரப்பட்டது. 24 மணி நேரமும் மேலதிகாரியின் ஏவல்களை  நிறைவேற்றவதற்காக அவர்கள் காக்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு இது தான் பணி என்பது கிடையாது. மேலதிகாரி சொல்லும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும், அவை  இறந்த விலங்குகளின் உடல்களை அகற்றவது,  மேலதிகரிகளின் பயணங்களில் அவர்களின் சுமைகளை சுமப்பது. இதற்கு கூலியாக மஹர் இன மக்களுக்கு சிறு அளவிலான விளை நிலம் வழங்கப்பட்டது. இதனை “வதன்” என்று அழைத்தனர் . இந்நிலத்தில் உழுது வரும் விளைச்சலின் ஒரு பகுதியினை மக்கள் அரசாங்கத்திற்கு தரவேண்டும் அதற்கு “பலூத்த” என்று பெயர். இதுமட்டுமின்றி அரசு மக்களுக்கு ஓர் சிறிய தொகையினை கூலியாக தரும் . நிலத்தின் அளவும், கூலியின் அளவும் அதிகாரிகளின் மன விருப்பத்தை பொறுத்து வேறு பட்டது. மிருகத்தனமான சுரண்டலுக்கு பதிலாக “மஹர்களின்” மனதை திருப்தி படுத்துவதற்காக “வதன்தார்க்ள்” (நில உரிமையாளர்கள்) என அழைக்கப்பட்டார்கள்.  இந்த பெயரை வைத்தே அவர்களை மிகவும் கடுமையான பணிகளை செய்ய வைத்தது அரசு.

தொழிலாளர் கட்சியின் பிரதிநிதியாக 1942 முதல் 1946 வரை வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த டாக்டர். அம்பேத்கர்  இந்திய தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.  அதில் முக்கியமானவை “வேலைவாய்ப்பு அலுவலகங்கள்” அமைத்தல், குறைந்த பட்ச ஊதியத்தை ஏற்படுத்தும் பொறிமுறையை உருவாக்குதல், எட்டு மணி வேலை நேரம், பணியிடப் பாதுகாப்பு விதி முறைகள், பேறுகால விடுப்பு ,ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற திட்டங்கள்……… இந்த திட்டங்கள் இன்றளவும் தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பை கொடுக்கின்றன. இத்திட்டங்கள் யாவும் வெறும் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த மட்டும் உருவாக்கப்பட வில்லை. உற்பத்தியில் தொழிலாளிக்கு உரிய பங்கை பெறுவதற்கான ச‌ட்ட பூர்வ உரிமையையும், வருமானம் சமமாக எல்லாருக்கும் சென்று சேருவதற்காகவும், அதன் மூலம் சமமான வளர்ச்சியை உருவாக்கவுமே ஏற்படுத்தப்பட்டன.

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் படித்த அம்பேத்கர் வெறுமனே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கருத்து சொல்லும் பொருளாதார நிபுணர் அல்ல. அரிய பார்வையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திறனும் கொண்ட பொருளாதார நிபுணர் அவர்.

திலிப் ஹால்தர்.

கட்டுரையாளர் – ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் பொருளாதார துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

மொழியாக்கம் – பாரத் டோனி / நற்றமிழன் – இளந்தமிழகம்

மூலப்பதிவு-

Ambedkar the economist

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*