Home / அரசியல் / ஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு

ஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு

குழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான இந்திய அரசு பாதுகாக்கும் “இந்துத்துவம்” கட்டமைக்கும், வெறுப்பு அரசியலுக்கு பலியானார் குழந்தை.ஆசிஃபா.

– விசை ஆசிரியர் குழு

—–

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட குழந்தை ஆசிஃபாவின் இறுதி 5 நாட்களை விவரிக்கும் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தகவல்களில் இருந்து.

ஜம்முவில் உள்ள கத்துவா மாவட்டத்தில் உள்ள ரசானா கிராமத்தில் தனது குடும்பம் எப்போது குடியேறியது என முகமது யூசுப்புக்கு தெளிவாக நியாபகம் இல்லை. ஏறத்தாழ‌ 10 அல்லது 12 குளிர்காலங்களுக்கு முன் குடியேறியிருக்கலாம் என நினைக்கின்றார். ஜம்மு காஷ்மீரின் நாடோடி இனக் குழுக்களில் ஒன்றான பகர்வால் சமூகத்தை சேர்ந்தவர் யூசுப். கோடைக் காலத்தில் மலையின் உச்சியிலும், குளிர் காலத்தில் சமவெளியிலும் தங்கள் கால்நடைகளோடு அந்த சமூகம் வாழ்கின்றது. ஒரு விபத்தில் தனது இரு குழந்தைகளையும் இழந்த யூசுப், 2010-ம் ஆண்டு தனது தங்கையின் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். அதற்கு ஆசிஃபா என பெயரிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, பகர்வால் சமூகம் அந்தப் பகுதியைச் சேர்ந்த டோக்ரா இந்துக்களிடம் இருந்து எதிர்ப்புகளை சந்தித்துள்ளனர். இந்துக்கள் அதிகமாக வாழும் ஜம்முவின் நிலப்பரப்பில் முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி,  காஷ்மீர் பள்ளத்தாக்கைப் போன்று அங்கும் முஸ்லீம்கள் பெரும்பான்மை ஆகிவிடுவார்களோ எனும் அச்சம் அங்கு விதைக்கப்பட்டுள்ளது. மியான்மரில் நடக்கும் இனப்படுகொலையில் இருந்து தப்பி வந்த சில நூறு ரோஹிங்கியா முஸ்லீம் குடும்பங்கள் ஜம்முவில் குடியேறியது அவர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. பாகிஸ்தானின் எல்லை பகுதியை ஒட்டிய நகரங்களிலும், கிராமங்களிலும் இந்துக்களில் ஒரு பிரிவினருக்கும், பகர்வால் சமூகத்திற்கும் இந்த பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த அச்சமும், வெறுப்புமே 8 வயது ஆசிஃபாவின் உயிரைப் பறித்துள்ளது. ஆசிஃபாவின் கடைசி ஐந்து நாட்களில் அந்த பிஞ்சு குழந்தைக்கு குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்களால் நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்களை “ஜம்மு&காஷ்மீர்” காவல்துறையால் நீதிமன்றத்தில் ஏப்ரல் 9, 10ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை விவரிக்கின்றது.

நாங்கள் இந்த குற்றம் எப்படி நடந்தது என்பதை கண்டறிந்து விட்டோம். ஆனால், இந்த குற்றத்தில் சில காவல்துறையின‌ரே ஈடுபட்டுள்ளது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என குற்றப்பிரிவு ஐ.ஜி. அஹ்ஃபதுல் முஜ்தஃபா தெரிவித்துள்ளார்.

சனவரி 10 அன்று மேய்ச்சலுக்கு சென்ற குதிரைகளை தேடிச் சென்ற ஆசிஃபாவின் உடல், ரசானா கிராமத்தை அடுத்துள்ள வனப் பகுதியில், 7 நாட்கள் கழித்து ஜனவரி 17-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து ஆசிஃபாவை கடத்தி கல்லால் அடித்து கொலை செய்ததாக, 18 வயதுக்குட்பட்ட இளைஞனை காவல்துறையின‌ர் கைது செய்தனர்.

வழக்கை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும் என பகர்வால் சமூகம் உள்ளிட்ட பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தால், ஜனவரி 22-ம் தேதி வழக்கு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட இளைஞனிடம் காவல்துறையின‌ர் நடத்திய தொடர் விசாரணையை அடுத்து, இரு முக்கிய குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டதாக காவல்துறையின‌ர் தெரிவித்தனர். அவர்கள் அந்த கிராமத்தில் வசிக்கும் 60 வயதான சஞ்சி ராமும், சிறப்பு காவல் அதிகாரியான தீபக் கஜூரியாவும்.

குற்றப்புலனாய்வுத் துறை சமர்ப்பித்த குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டவை:

பகர்வால் சமூகத்தை அச்சுறுத்த ஒரு திட்டத்தை உருவாக்கி சஞ்சி ராம் காத்துக் கொண்டிருந்தான்.  தனது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசிஃபா குட்டி குதிரைகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவதை சில நாட்களாகவே நோட்டம் விட்டுள்ளார். ஆசிஃபாவைக் கொல்வதன் மூலம் பகர்வால் சமூகத்திடம் அச்சத்தை விதைக்கலாம் என திட்டமிட்டுள்ளார். தனது திட்டத்தை சிறப்பு காவல் அதிகாரியான தீபக் கஜூரியாவிடமும், தனது தங்கை மகனான 18 வயதுக்கு குறைவான இளைஞனிடமும் கூறியுள்ளார். பள்ளியில் சக பெண்களின் தவறாக நடக்க முயன்றதற்காக, அந்த இளைஞர் 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளி நிர்வாகத்தால் நீக்கப்பட்டுள்ளான். அவரை மாமா வீட்டில் கால்நடைகளை வளர்ப்பதற்காக அவரது பெற்றோர் அனுப்பியிருக்கின்றனர்.

ஆசிஃபாவை கடத்துவதற்காக மருந்து கடையில் இருந்து சிறப்பு காவல் அதிகாரி தீபக் கஜூரியா மயக்க மருந்துகளை வாங்கியுள்ளான். மன நலம் பாதிக்கப்பட்டுள்ள தனது மாமாவின் மருந்து சீட்டை எடுத்து சென்று அந்த மருந்துகளை வாங்கியுள்ளான். இந்த மருந்துகளோடு சரியாக தூக்கமில்லாமல் இருப்பதை சரி செய்து தூங்கச் செய்வதற்கான மருந்து உள்ளதா என கடைகாரரிடம் கேட்டுள்ளான். அந்த குறிப்பிட்ட மருந்து இல்லாததால், அதே தன்மை கொண்ட எபிடிரில் (EPITRIL) என்னும் மருந்தை கடைக்காரர் தந்துள்ளார். தங்களுக்கு உதவினால் தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெறச் செய்ய வைப்பதாக சஞ்சி ராமின் உறவினரான அந்த இளைஞனிடமும் கஜூரியா தெரிவித்துள்ளான். அந்த இளைஞன் தன்னுடைய நண்பனான மன்னு என்னும் பர்வேஷ் குமாரிடம் இதை தெரிவித்துள்ளான். அந்த இளைஞனும் மன்னுவும் ஜனவரி 9-ம் தேதி அருகிலுள்ள நகரத்திற்கு சென்று மனார் என்னும் உள்ளூர் மருந்தை 4 டோஸ் வாங்கி வந்துள்ளனர்.

ஜனவரி 10-ம் தேதி மதிய வேளையில் மேய்ச்சலுக்கு சென்ற தனது குதிரை குட்டிகள் குறித்து ஆசிஃபா ஒரு பெண்ணிடம் விசாரித்துக் கொண்டிருப்பதை அந்த இளைஞன் பார்த்துள்ளான். வனப்பகுதியில் குதிரைகள் இருப்பதாக ஆசிஃபாவை அழைத்துச் சென்றுள்ளான். மன்னுவும் அவர்களோடு சென்றுள்ளான். சற்று நேரத்திலேயே நிலைமை சரியில்லை என உணர்ந்த ஆசிஃபா ஓட்டெமெடுத்துள்ளாள். அவளைப் பிடித்து தரையில் தள்ளிய அந்த இளைஞன், வலுக்கட்டாயமாக மனார் எனும் உள்ளூர் மயக்க மருந்தை கொடுத்துள்ளான். அந்த குழந்தை மயங்கி சரிந்தபோது பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். மன்னுவும் அந்த குழந்தையை வன்புணர்வு செய்ய முயற்சி செய்துள்ளான்.

பின்பு, ஆசிஃபாவை சஞ்சி ராம் நிர்வகித்து வரும் சிறிய கோவிலில் கொண்டுபோய் வைத்துள்ளான். அடுத்த நாள் காவல்துறை அதிகாரி கஜூரியாவும், அந்த இளைஞனும் கோவிலுக்கு சென்று ஆசிஃபாவை பார்த்துள்ளனர். அவளது தலையை அந்த இளைஞன் தூக்கிக் கொள்ள, 2 எபிடிரில் மாத்திரைகளை காவல்துறை அதிகாரி கஜூரியா ஆசிபாவின் தொண்டைக்குள் செலுத்தியுள்ளான்.

அன்று மாலை அந்த இளைஞன் கோவிலில் விளக்கேற்ற சென்றபோதும், ஆசிஃபா மயக்கநிலையிலேயே கிடந்துள்ளாள். அப்போது, உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட்டில் இளநிலை விவசாயம் படித்து வரும் சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ராவிடம் அந்த இளைஞன் அலைபேசியில் பேசியுள்ளான்.  உன் இச்சையை தீர்த்துக்கொள்ள வேண்டுமானால் உடனே வரவும் என அழைப்பு விடுத்துள்ளான்.

அடுத்த நாள் காலை ஜங்கோத்ரா வந்துவிட்டான். அவனும் அந்த இளைஞனும் கோவிலுக்கு சென்று, ஆசிஃபாவிற்கு மேலும் 3 மாத்திரைகளை கொடுத்துள்ளனர். அதுவரை அவளுக்கு உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை. பட்டினியாகவே அந்த பிஞ்சு குழந்தை இருந்திக்கின்றது.

இந்த நேரத்தில் தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் என்பவரையும் சஞ்சி ராம் தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளான். ஜனவரி 12-ம் தேதி மதியம், ஆசிஃபாவின் தந்தை யூசுப் மகளை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளித்த பின், தேடுதல் படலம் தொடங்கியுள்ளது. தேடும் குழுவில் இருந்த கஜூரியாவும், திலக் ராஜும் ஆசிபாவை தேடுவது போல நடித்துள்ளனர்.

index4

காவல்துறை தரப்பு தகவல்களின் படி, அன்றே தனது தங்கையை சந்தித்த சஞ்சி ராம், ஆசிஃபாவின் கடத்தலில் அவரது 18 வயதுக்கு குறைவான மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, ஒன்றரை லட்சம் பணம் பெற்று திலக் ராஜிடம் கொடுத்துள்ளான். வழக்கின் விசாரணை அதிகாரியான துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தாவிடம் ரூ.5 லட்சத்துக்கான பேரமும் நடந்துள்ளது. ஆனந்த் தத்தாவும் தற்போது இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.

ஜனவரி 13-ம் தேதி காலை சஞ்சி ராம், அவரது மகன் ஜங்கோத்ரா, 18 வயதுக்கு குறைவான அந்த உறவுக்கார இளைஞன் ஆகிய மூவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். பூஜைகளை முடித்த பின்னர், சஞ்சி ராம் வெளியேறியுள்ளான்.  அதன்பின், சஞ்சி ராமின் மகன் ஜங்கோத்ரா ஆசிஃபாவை வன்புணர்வு செய்துள்ளான். பிறகு, அந்த இளைஞனும் ஆசிஃபாவை வன்புணர்வு செய்துள்ளான். அதன்பின், ஆசிபாவுக்கு மூன்று மாத்திரைகளை விழுங்கக் கொடுத்த அவர்கள், இரண்டை குப்பை மேட்டிற்கு கீழே பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

லோஹ்ரி (பொங்கல்) பண்டிகை நாளான அன்று, கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு, தனது சாகாக்களை அழைத்த சஞ்சி ராம், ஆசிஃபாவை கொல்வதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளான். அந்த இளைஞன், அவரது நண்பர் மன்னு, சஞ்சி ராமின் மகன் ஜங்கோத்ரா ஆகிய மூவரும் சேர்ந்து, அன்று இரவு ஆசிஃபாவை ஒரு பாலத்தின் கீழுள்ள கால்வாய்க்கு தூக்கி சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரி தீபக் கஜூரியா, ஆசிஃபாவை கொல்வதற்கு முன் தானும் வன்புணர்வு செய்ய வேண்டும் என்று கூறி, அந்த பிஞ்சு குழந்தையை வன்புணர்வு செய்துள்ளான். பின்பு, அவளது கழுத்தை தனது இடது தொடை கால் இடுக்கில் வைத்து நெரித்துள்ளான். அவளது உயிர் பிரியவில்லை. அப்போது, துப்பட்டா போன்ற ச்சன்னி என்னும் துணியால் ஆசிஃபாவின் கழுத்தை இறுக்கிய அந்த 18 வயதுக்கு குறைவான இளைஞன், தனது முட்டியால் ஆசிபாவின் முதுகில் அழுத்தம் கொடுத்து கழுத்தை இறுக்கியுள்ளான். அவள் இறந்து விட்டதை உறுதி செய்ய, அவளது தலையில் கல்லால் இரண்டு முறை தாக்கியுள்ளான்.

ஆசிஃபாவின் இறந்த உடலை கோவிலுக்கு கொண்டுசென்ற அவர்கள், ஜனவரி 15-ம் தேதி காலை உடலை வனத்திற்குள் வீசியுள்ளனர்.

ஆனால், வழக்கு தொடர்பாக அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியதால், அந்த 18 வயதுக்கு குறைவான இளைஞனே எல்லாவற்றையும் செய்ததாக ஒப்புக் கொள்ளவைத்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள ஆடு மேய்ப்பவருடன் சேர்ந்து குற்றமிழைத்ததாக முதலில் வாக்குமூலம் அளித்த அந்த இளைஞன், போலீசாரின் தொடர் விசாரணையை அடுத்து அனைத்து உண்மைகளையும் போட்டுடைத்துள்ளான்.

அந்த பகுதியில் வசிக்கும் பகர்வால்களை சஞ்சி ராம் கடுமையாக எதிர்த்து வந்துள்ளான். அவர்களுக்கு எந்தவிதமான உதவியும் செய்யக்கூடாது எனவும் தனது சமூக மக்களிடம் சொல்லி வந்துள்ளான். பகர்வால் சமூகத்தை சேர்ந்தவருக்கு நிலத்தை விற்ற தனது உறவினர் ஒருவரையும் சஞ்சி ராம் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது. தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜிம், சிறப்பு காவல்துறை அதிகாரியான தீபக் கஜூரியாவும் பகர்வால் சமூகத்திற்கு எதிரான மனநிலையில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மாடுகளைக் கொலபவர்கள், கபோதை மருந்துகளை கடத்தல் செய்பவர்கள் என்றும் அவர்கள் பகர்வால் சமூக மக்களை சந்தேகித்துள்ளதாக குற்றப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காவல் அதிகாரி கஜீரியாவிற்கு ஆதரவாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிப் பிரமுகர்கள் பேரணி நடத்தியதால், இந்த வழக்கு ஜம்முவின் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பானது. ஏப்ரல் 9-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கத்துவா நீதிமன்றத்திற்கு காவல்துறையினர் சென்ற போது, சில வழக்கறிஞர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அவர்கள் மீதும் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

”எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை” என வழக்கை மேற்பார்வை செய்த குற்றப் புலனாய்வுத் துறையின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ஜாலா தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக வாரம் ஒருமுறை உயர்நீதிமன்றத்திற்கு பதில் அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு குழுவில் செயல்பட்ட 15 அதிகாரிகளும் பதவிக்காலத்தில் நேர்மையாக இருந்தவர் என மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றியபோது பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை ஜாலா நேரடியாக எதிர்கொண்டவர் என்றும் தெரிவிக்கின்றனர்.

முகமது யூசூப்,  அவரது குடும்பத்தினர், ரசானாவில் உள்ள அவரது உறவினர்களின் இன்றைய நிலை குறித்து தெரியவில்லை. ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது, அதை யூசூப்பின் சொந்த நிலத்தில் புதைக்கக் கூட அந்தப் பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் உறவினரின் நிலத்தில் தான் ஆசிஃபாவை அடக்கம் செய்தார் யூசூப். குற்றப்பத்திரிக்கை வெளிவந்துள்ள நிலையில், பகர்வால் சமூகத்தின் வாழ்நிலை அந்த பகுதியில் மேலும் கடினமாகியுள்ளது.

ராகுல் பண்டிதா

மொழியாக்கம் – தமிழ் – இளந்தமிழகம் இயக்கம்

மூலப்பதிவு:

http://www.openthemagazine.com/article/crime/asifa-the-anatomy-of-a-hate-crime

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*