Home / அரசியல் / யோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்?

யோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்?

உத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உடனே 22,000 வழக்குகளை திரும்பப் பெற சட்டத்தை இயற்றினார். இதன் மூலம் கலவரத்தை உருவாக்கும் வகையில் பேசிய, கலவரத்தை நடத்திய பலர் விடுவிக்கப்பட்டனர், இதில் யோகியும் அடக்கம். பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பா.ஜ.க அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை சந்தித்த சில நாட்களில் அவர் மீதான வழக்கையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளார். அதே போல 2013ல் நடந்த முசாஃபர் நகர் வன்முறை தொடர்பான 131 வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்காக அந்த மாவட்ட நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து வருகின்றார் யோகி. ஜீன் 2017ல் பாலியல் வன்முறை குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத யோகி அரசு, அதை எதிர்த்து போராடிய அந்த பெண்ணின் தந்தையை சிறையில் அடைத்தது. சிறையிலேயே அவர் மரணமும் அடைந்துள்ளார். அந்த பெண் யோகி வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்னரும் கூட குல்தீப் சிங் யோகி அரசின் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தேசிய அளவில் பிரச்சனைக்குள்ளான பின்னர் மத்திய புலனாய்வு துறை தான் அவனை கைது செய்தது.

இப்படி தொடர்ந்து குற்றவாளிகளை விடுதலை செய்தும், காப்பாற்றியும் வரும் யோகி அரசு, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக 300-க்கும் மேற்பட்ட சிறப்பு வகுப்புகளையும், ஆதிக்க சாதியினரின் தாக்குதலில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்கும் பொருட்டும்  உருவாக்கிய பீம் ஆர்மியின் தலைவர். சந்திர சேகர் ஆசாத் ராவணை “தேச நலனுக்கு” அச்சுறுத்தலாக இருந்ததாக கூறி கடந்த சூன் 2017ல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதைப் போலவே கோரக்பூர் மாவட்ட மருத்துவமனையில் அரசு வாங்கிய ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு உரிய பணம் செலுத்தாததால் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, விடுமுறையை ரத்து செய்துவிட்டு, தன் சொந்தக் காசைப் போட்டு சிலண்டர்கள் வாங்கி பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர். கஃபீல் கானை 8 மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதுவரை மருத்துவர். கஃபீல் கானின் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. இது தான் யோகியின் ராம ராஜ்ஜியம். குற்றவாளிகளுக்கு விடுதலை, நிரபராதிகளுக்கு கடும் தண்டனை.

விசை ஆசிரியர் குழு.

Free-Azad-poster
—–

மருத்துவர். கஃபீல் கான் சிறையில் இருந்து எழுதிய கடிதம்.

அன்று நடந்த ஒவ்வொரு நிகழ்வையும் நெகிழ்ச்சியுடன் நினைத்து பார்க்கிறேன். 8 மாதங்களாக சிறைக் கம்பிகளுக்கு பின்னே நான் அனுபவித்து வரும் தாங்க முடியாத துன்பங்களுக்கும், அவமானங்களுக்கும் மத்தியிலும் அன்று நடந்தது என் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது. சில நேரங்களில், நான் குற்றவாளி தானா? என என்னையே நான் கேட்டுக் கொள்வேன். அப்போது என் ஆழ்மனதில் இருந்து வெகுண்டெழும் குரல் ஒன்று நான் குற்றவாளி இல்லை, இல்லவே இல்லை என உரத்துச் சொல்கிறது.

2017 ஆகஸ்டு 10. துக்ககரமான அந்த நாளில் வாட்ஸ்-அப்பில் வந்த செய்தியை நான் வாசித்த போது, ஒரு மருத்துவ‌ராக, ஒரு தந்தையாக, ஒரு பொறுப்புள்ள குடிமகனாக என்னவெல்லாம் செய்யமுடியுமோ, அவை அனைத்தையும் நான் செய்தேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அபாயத்தில் இருந்த ஒவ்வொரு உயிரையும் காப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஏதுமறியா அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் உயிர் வாழ்வதற்காக‌ என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.

பிரச்சனை குறித்து தீர்க்கமாக ஒவ்வொருவரையும் அழைத்தேன், பேசினேன், கெஞ்சினேன், உத்தரவிட்டேன், உயிரைக் காக்க ஓடினேன், பதறினேன், அலறினேன், ஆறுதல் சொன்னேன், ஆலோசனைகள் பெற்றேன், கடன் வாங்கினேன், செலவழித்தேன், அழுதேன்… ஒரு மனிதனாக என்னால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை அனைத்தையும் செய்தேன்.

என்னுடைய துறைத் தலைவரை அழைத்தேன், சக பணியாளர்களை அழைத்தேன், எங்கள் மருத்துவக் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், கோரக்பூர் மாவட்ட நீதிபதி, சுகாதாரத் துறை கூடுதல் இயக்குனர், மாவட்ட சுகாதார சேவைகள் மையம் மற்றும் சிறப்பு மருத்துவ மையம் உள்ளிட்ட அனைவரிடமும் திரவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகளின் உயிருக்கு ஏற்படப்போகும் மிகப்பெரும் அபாயம் குறித்து தெரிவித்தேன். (பேசியதற்கான அனைத்து அழைப்பு விவரங்களும் என்னிடம் உள்ளன).

ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனங்களான மோடி கேஸ், பாலாஜி, இம்பீரியல் கேஸ், மயூர் கேஸ் ஏஜென்சி மற்றும் பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியை சுற்றியுள்ள அனைத்து மருத்துவமனைகளிடமும் இறைஞ்சிக் கேட்டு, குழந்தைகளின் உயிரைக் காப்பதற்காக ஜம்போ சிலிண்டர்களை பெறுவதற்காக அவர்களின் தொடர்பு எண்களை பெற்றேன்.

என் கையிலிருந்து பணத்தை அவர்களிடம் கொடுத்து, மீதிப் பணத்தை சிலிண்டர்களை விநியோகிக்கும் போது பெற்றுக் கொள்ளுமாறு கூறினேன். ( திரவ ஆக்சிஜன் டேங்க் வரும் வரை, நாள் ஒன்றுக்கு 250 சிலிண்டர்களை ஏற்பாடு செய்தோம். ஜம்போ சிலிண்டரின் விலை ரூ.216).

தடையில்லாமல் ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய ஒவ்வொரு அறையாக ஓடிக் கொண்டிருந்தேன், 100-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை சென்று, அவசர சிகிச்சை பிரிவிற்கும் ஓடினேன்.

அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரில் சென்று சிலிண்டர்கள் வாங்கி வந்தேன். அவை போதுமானவை அல்ல என்று உணர்ந்தபோது, எல்லையோர பாதுகாப்பு படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலை சந்தித்து நிலைமையின் முக்கியத்துவத்தை விளக்கினேன். அவர் உடனடியாக ஆதரவுக் கரம் நீட்டினார். பெரிய டிரக் ஒன்றையும் பாதுகாப்பு படை வீரர்களையும் அனுப்பிவைத்தார். அவர்கள் பி.ஆர்.டி மருத்துவமனையில் இருந்த காலி சிலிண்டர்களை ஆக்சிஜன் நிரப்பும் மையங்களுக்கு எடுத்துச் சென்று, அவற்றை நிரப்பி மீண்டும் மருத்துவமனையில் வந்து சேர்த்தார்கள். அவை தீர்ந்தபோது அவற்றை மீண்டும் மீண்டும் நிரப்பி கொண்டுவந்தனர். இதேபோல, 48 மணி நேரம் தொடர்ச்சியாக அவர்கள் வேலை செய்தார்கள்.

அவர்களின் உதவி எங்களுக்கு உத்வேகத்தை அளித்தது. அவர்களது சேவைக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!

என்னுடைய சீனியர், ஜூனியர் மருத்துவர்களிடம் பேசினேன். கலகம் செய்த பெற்றோர்களிடம் கோபமடைய வேண்டாம் என மருத்துவ பணியாளர்களுக்கு உத்தரவிட்டேன். ஓய்வு எடுக்காமல் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுமாறும் சொன்னேன். பீதியடைய வேண்டாம் என்றும், மனம் தளர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். நாம் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றினால் தான் அனைத்து உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

தங்கள் குழந்தைகளை இழந்து தவித்த பெற்றோர்களை தேற்ற முயற்சித்தேன். கோபத்தில் இருந்த பெற்றோர்களை சமாதானப்படுத்த முயன்றேன். திரவ ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதையும், ஜம்போ சிலிண்டர்கள் மூலம் அதை ஈடு செய்ய முயற்சித்து வருவதையும் அவர்களிடம் தெரிவித்தேன்.

உயிர்களை காப்பாற்றுவதில் கூர்ந்து கவனம் செலுத்துமாறு அரற்றினேன். சத்தம் போட்டேன். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தொகை பாக்கியை சரி செய்யா நிர்வாகத் தவறால் நேர்ந்த அந்த அழிவை கண்டு கண்ணீர் சிந்தினேன். என்னுடன் இருந்த அனைவரும் தேம்பி தேம்பி அழுதனர்.

13.08.2017 மதியம் 1.30 மணிக்கு திரவ ஆக்சிஜன் டேங்க் வரும் வரை நாங்கள் யாரும் எங்கள் முயற்சியை நிறுத்தவில்லை.

ஆனால், அடுத்த நாள் காலை யோகிஜி மகராஜ் வருகை தந்த பிறகு எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது.

”நீங்கள் தான் மருத்துவர் கஃபீலா? சிலிண்டர்களை ஏற்பாடு செய்தவரா?”, என்று கேட்டார். நான் ”ஆம்” என்று சொன்னேன்.

”சிலிண்டர்களை ஏற்பாடு செய்தால் ஹீரோ ஆகிவிடலாம் என்று நினைக்கிறாயா?” என்று கேட்ட அவர், ”பார்த்துக் கொள்கிறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த விவகாரம் எப்படி ஊடகங்களுக்கு தெரிந்தது என்பதில் யோகிஜி கோபமாக இருந்தார். அல்லாஹ் மீது ஆணையாக சொல்கிறேன், நான் ஊடகத்தினர் யாரிடம் இதுபற்றி சொல்லவில்லை. அவர்கள் அதற்கு முன்பே அங்கு வந்துவிட்டனர்.

இதற்கு அடுத்ததாக எனது வீட்டிற்கு வந்த காவல்துறை, எனது குடும்பத்தினரை அரற்றி, மிரட்டி, துன்புறுத்த தொடங்கினர். நான் போலி என்கவுண்டரில் கொல்லப்படலாம் என்று மக்கள் என்னை எச்சரிக்கத் தொடங்கினர். எனது தாய், மனைவி மற்றும் குழந்தைகள் அடைந்த அச்சத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.

இந்த துயரங்களில் இருந்தும், அவமானங்களில் இருந்தும் தப்பிக்க, நான் காவல்துறையிடம் சரணடைந்தேன். நான் தவறே செய்யாத போது எனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பியே நான் அவ்வாறு செய்தேன்.

ஆனால், நாட்கள் மாதங்களாகி ஓராண்டு ஆகப்போகின்றது. ஆகஸ்டு 17  தொடங்கி ஏப்ரல் 18 வரை வந்துவிட்டது. ஹோலிப் பண்டிகை வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் வந்தது, புத்தாண்டு, தீபாவளி வந்தது. ஒவ்வொரு தருணத்தின் போது பிணை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால், நீதித் துறைக்கும் அழுத்தங்கள் இருப்பதை பிறகு புரிந்து கொண்டேன் (அதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள்).

ஒதுக்கப்பட்ட கூடாரம் போன்ற அறையில் 150 சிறைவாசிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளேன். இரவில் லட்சக்கணக்கான கொசுக்களுக்கும், பகலில் ஆயிரக்கணக்கான பூச்சிகளுக்கும் மத்தியில், உயிர் இருக்க வேண்டுமே என்பதற்காக உணவு சாப்பிட்டு வருகிறேன். அரை நிர்வாணமாக குளித்தும், உடைந்த கதவுடைய கழிவறையை பயன்படுத்தியும். ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் எனது குடும்பத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கை நரகத்தில் இருப்பது போல துன்பகரமாக மாறிவிட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது மொத்த குடும்பத்திற்கும். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் காவல்துறை அலுவலகத்திற்கும், நீதிமன்றத்திற்கும், அலகாபாத்திற்கும் – கோரக்பூருக்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அனைத்தும் வீணாகிவிட்டது.

எனது குழந்தையின் முதல் பிறந்தநாளை அவளுடன் கொண்டாட முடியவில்லை. அவளுக்கு தற்போது 1 வயதை கடந்து 7 மாதங்கள் ஆகிவிட்டது.

எனது குழந்தை வளரும் போது அருகிலிருந்து பார்க்க முடியவில்லையே என நினைக்கும் போது, மனது வலிக்கிறது. அதுவும் ஒரு குழந்தை நல மருத்துவனாக என் இதயம் நொறுங்கிப் போகிறது. ஒரு குழந்தை நல மருத்துவனாக, குழந்தைகளின் வளர்ச்சிப் பாதையில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டங்கள் குறித்து நானே நிறைய பெற்றோர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளேன். ஆனால், எனது குழந்தை எப்போது பேசத் தொடங்கினாள், நடந்தாள், ஓடத் தொடங்கினாள் என்பது எனக்கு தெரியாமலே போய்விட்டது.

நான் குற்றவாளியா என்னும் கேள்வி என்னும் மறுபடியும் எழுகிறது – ”இல்லை, இல்லை, இல்லவே இல்லை” . 10 ஆகஸ்டு 2017 அன்று நான் விடுமுறையில் இருந்தேன். (என்னுடைய துறைத் தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை). இருப்பினும் நான் பணி செய்ய விரைந்தேன். அது தவறா?

பி.ஆர்.டி மருத்துவமனையின் துணை வேந்தர் என்னை துறைத் தலைவராக நியமித்தார்கள். 100 படுக்கைகள் கொண்ட மூளை அழற்சி நோய் வார்டின் பொறுப்பாளர் ஆக்கினார்கள். இருப்பதிலேயே இளைய மருத்துவரான நான் 08.08.2016 அன்று தான் நிரந்தர பணியாளர் ஆக்கப்பட்டேன். தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் முகமை அதிகாரியாகவும், குழந்தை நல விரிவுரையாளராகவும் பணியாற்றினேன். நோயாளிகளுக்கு வைத்தியம் பார்ப்பதும், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் மட்டுமே எனது பணியாகும். திரவ ஆக்சிஜன் மற்றும்  ஜம்போ சிலிண்டர்களை வாங்குவது, டெண்டர் பணிகள், கொள்முதல், பராமரிப்பு, விநியோகம், கட்டணம் வசூல் உள்ளிட்ட எந்த இடத்திலும் எனது பங்கு இருந்ததில்லை.

ஆக்சிஜன் விநியோகம் செய்த புஷ்பா சப்ளையர்ஸ் விநியோகத்தை நிறுத்திக் கொண்டால், நான் எப்படி அதற்கு பொறுப்பாவேன்? மருத்துவர்களின் பணி என்பது நோயை குணப்படுத்துவது தானே தவிர ஆக்சிஜன் வாங்குவது அல்ல என்று மருத்துவத் துறையை சாராதவர்கள் கூட சொல்லி விடுவார்கள்.

கோரக்பூர் DM, மருத்துவக் கல்வி தலைமை இயக்குனர், சுகாதாரம் , மருத்துவ‌ கல்வித் துறை முதன்மை செயலாளர்கள் ஆகியோர்களே இந்த விசயத்தில் தவறிழைத்தவர்கள். புஷ்பா சப்ளையர்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய கடன் ரூ.68 லட்சத்தை, 14 முறை நினைவூட்டல்களுக்குப் பிறகும் கொடுக்காமல் இழுத்தடித்ததற்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் இவர்களே.

பிரச்சனையின் வீரியத்தை உணராத மேல்மட்ட நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்விதான் இதற்கு காரணம். தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, எங்களை பலிகடாவாக்கி கோரக்பூர் சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைத்துள்ளார்கள். உண்மைகளையும் சிறை கம்பிகளுக்கு பின்னால் அடைத்து விடலாம் என்று எண்ணிவிட்டார்கள்.

புஷ்பா சப்ளையர்ஸ்-ன் இயக்குனர் மனிஷ் பண்டாரிக்கு பிணை கிடைத்த போது, எங்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் மீண்டும் சேர்வதற்கும், எங்கள் பணிகளை செய்வதற்கும் நேரம் வந்துவிட்டது என்று நினைத்தோம்.

ஆனால், அது நடக்கவில்லை. நாங்கள் இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

பிணை என்பது உரிமை என்றும், சிறைவாசம் என்பது விதிவிலக்கு தான் என்றும் உச்சநீதிமன்றம் சொல்கிறது.

ஆனாலும், எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

நான் விடுதலை பெற்று எனது மகளுடன் குடும்பத்துடனும் இணைவதற்கான நேரம் வரும் எனும் நம்பிக்கையுடன் உள்ளேன். உண்மை ஒரு நாள் வெளியில் வரும். அன்று நீதி கிடைக்கும்.

என்ன செய்வது என்று அறியாத, உடைந்த மனதுடன் உள்ள ஒரு தந்தை, கணவன், சகோதரன், மகன் மற்றும் நண்பன்

மருத்துவர்.கஃபீல் கான்
18/04/2018

மொழியாக்கம் – தமிழ்.

மூலப்பதிவு –

https://countercurrents.org/2018/04/23/full-text-of-dr-kafeel-khans-letter-the-hero-of-gorakhpur-hopital-tragedy/

About தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*