Home / அரசியல் / மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

மோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் ?

ஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த  பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே மாற்றப்பட்டன.  உடனே மக்கள்  எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டனர். இந்த பயணத்தில் அவர் தரைவழியே பயணம் செய்த சென்னை ஐ.ஐ.டி.க்குள்ளும் மாணவர்கள் மோடிக்கு கருப்பு கொடி காட்டினார்கள்.

இத்தோடு ஓயவில்லை தமிழர்களின் போராட்டம். சமூக இணையதளமான ட்விட்டரில் #GoBackModi எனும் இடுகையுடன் கூடிய பதிவுகளை தொடர்ந்து பதிவேற்றி முதலில் இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும்  #GoBackModi எனும் இடுகையை முதலிடத்திற்கு கொண்டு வந்தனர். அன்று மாலை 5.30 மணி வரை 5.5 இலட்சத்திற்கும் அதிகமான பதிவுகள் #GoBackModi எனும் இடுகையுடன் வலை பதிவர்களால் பதிவேற்றப்பட்டன.

தமிழர்கள் ஏன் மோடியை இப்படி எதிர்க்கின்றார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது மட்டும் தான் காரணமா ? இல்லை.  நீட் நுழைவு தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலங்கள், நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட், கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம், சாகர்மாலா, மாநிலங்களின் உரிமை பறிப்பு,  அ.தி.மு.க-வை பொம்மையாக பயன்படுத்தி தமிழகத்தை காவி மயப்படுத்துவது என்ற நீண்ட பட்டியலே இதற்கு காரணம் . இந்த அழுத்தங்களினால் ஏற்பட்ட பெரு வெடிப்பே மோடிக்கு எதிராக ஏப்ரல் 12 நடந்த போராட்டம்.

காவிரி :

கர்நாடகா காவிரி நதி நீர் பங்கீடுவதில் உள்ள பிரச்சனை நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்டது. இப்படியான ஒரு பிரச்சனையின் இறுதி தீர்ப்பு 2018 பிப்ரவரி 16 அன்று வழங்கப்பட்டது. இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த தீர்ப்பில் உள்ளபடியே நீர்பங்கீடு நடைமுறை நீடிக்கும் என கூறப்பட்டுள்ள‌து. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் நமக்கு ஒதுக்கப்பட்ட நீரில் இருந்து இந்த தீர்ப்பில் தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சியை குறைத்துள்ளது. ஒவ்வொரு தீர்ப்பும் நமக்கு கிடைக்கும் நீரின் அளவை குறைத்துக் கொண்டே வந்துள்ளன.

* 1924 ஒப்பந்தத்தின் படி சென்னை மாகாணம்+ புதுச்சேரிக்கு காவிரி நதி நீரில் 75% பங்கு அதாவது 419 டி.எம்.சி           கொடுக்கப்பட்டது.
* 1991ல் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பில் தமிழகத்திற்கு கொடுத்த‌ நீரின் அளவு = 205 டி.எம்.சி
* 2005ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு கொடுத்த‌ நீரின் அளவு = 192 டி.எம்.சி
* 2018ல் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு கொடுத்த‌ நீரின் அளவு = 177.25 டி.எம்.சி (1)

419 டி.எம்.சி யில் இருந்து இன்று 177.25 டி.எம்.சியாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைந்துள்ளது. அப்படி குறைக்கப்பட்ட போதும் இந்த 177.25 டி.எம்.சி நீரையும் நாம் பெற வேண்டுமானால் அதற்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும். இல்லையென்றால் வெள்ளம் வரும் பொழுது வரும் நீரை மட்டுமே கர்நாடகம் நமக்கு திறந்து விடும். இந்த காவிரி மேலாண்மை வாரிய‌த்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.

p106_1519225985

மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு தீர்ப்பு வெளிவந்த ஆறு வாரங்கள் ஒன்றுமே செய்யாமல், ஆறு வாரம் முடிந்த அடுத்த நாள் உச்ச நீதிமன்றத்தில் உங்கள் தீர்ப்பில் உள்ள “ஸ்கீம்”  என்பது காவிரி மேலாண்மை வாரியம் தானா? அதன் அதிகாரம் என்ன? என வழக்கு தாக்கல் செய்துள்ளது. ஆறு வாரம் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த இந்திய ஒன்றிய அரசின் மேல் கடும் கண்டனத்தை எழுப்பாமல் பொய் கோபம் காட்டினார் மோடிக்கு பிரியமான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

மத்தியில் ஆண்ட காங்கிரசாக இருந்தாலும் சரி, இன்று ஆளும் பா.ஜ.க-வும் சரி, காவிரி நதி நீர் பங்கீட்டில் அவர்கள் எப்பொழுதும் கர்நாடகாவின் பக்கம் தான்.  இதோ இன்று கர்நாடகாவில் தேர்தல் தேதி அறிவித்து விட்டார்கள். காவிரி வழக்கையும் மே 3-ம் தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்கள்.  ஏப்ரல் 25 அன்று மேலும் இரண்டு வாரம் அவகாசம் கேட்டுள்ளது இந்திய ஒன்றிய‌ அரசு. அதாவது மே 17ம் தேதிக்கு தள்ளி வைக்க கோரியுள்ளது மோடி அரசு. மே 20ல் இருந்து சூலை 1 வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை. அதாவது இந்த வழக்கு சூலையில் தான் விசாரணைக்கே வரும். அதற்குள் கர்நாடகா தேர்தல் முடிந்து புதிய அரசே ஆட்சியில் அமர்ந்து விடும். கர்நாடாகவில் தேர்தல் முடிந்தாலும் மோடி அரசு அவர்களுக்கு ஆதரவாகத் தான் செயல்படும். தமிழகத்தில் காவிரிப் படுகையை பாலைவனமாக்க வேண்டும் என்ற திட்டமே இதற்கு காரணம்.

ஏன் காவிரி படுகையை பாலைவனமாக்க துடிக்கின்றார்கள்?

பல நூறு ஆண்டுகளாக  நதி நீர் பாய்ந்த காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல், நிலக்கரி போன்றவை உள்ளன. காவிரி படுகையை நீரின்றி பாலையாக மாற்றுவதன் மூலம் இந்த இயற்கை வளத்தை எல்லாம்  அரசு, தனியார் முதலாளிகளுக்கு கொடுப்பதே மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசின் திட்டம். இதனால் தான் தமிழர்கள் கேட்கும் காவிரி நீரை மறுக்கும் மோடி அரசு,  மக்கள் வேண்டாம் என எதிர்த்துப் போராடும் மேற்கூறிய திட்டங்களை அதே காவிரி படுகை பகுதிகளில் திணித்து வருகின்றது.

காவிரிபடுகையை பாலையாக்க துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்

காவிரிபடுகையை பாலையாக்க துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்

மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி, பெட்ரோல் :

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் , பெட்ரோல் போன்றவற்றை எல்லா நாட்டிலும் எடுக்கத் தானே செய்கின்றார்கள், உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை என கேட்கின்றார்கள் மோடி பக்தர்கள்.  மற்ற நாடுகளில் எல்லாம் மக்கள் வாழ முடியாத பகுதிகளில் தான் இவற்றை எடுக்கின்றார்கள். அதுவும் எப்படி? முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெற்று , சரியான வகையில் எடுத்து வருகின்றார்கள்.

மற்ற நாடுகளில் மீத்தேன் எடுக்கப்படும் பகுதி

மற்ற நாடுகளில் மீத்தேன் எடுக்கப்படும் பகுதி

காவிரி படுகை என்பது அதிக மக்களடர்த்தி கொண்ட பகுதி. இன்று தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல பெட்ரோல் எடுக்கும் கிணறுகள் முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறாதவை. அதுமட்டுமின்றி பல நேரங்களில் பெட்ரோல் கசிந்து சுற்றியுள்ள விளைநிலங்களும் நாசமாகி உள்ளன.

இதை எதிர்த்து மக்கள் போராடினால் 144 உத்தரவு. பல இடங்களில் துணை இராணுவப் படை களத்தில் இறங்கி போராடும் மக்களை ஒடுக்கி வருகின்றது. இதில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவை எடுக்கும் முறை முழுக்க சுற்றுச்சூழலை நாசம் செய்யும் நீரியல் விரிசல் முறையைச் சார்ந்தவை. இதனால் நிலத்தடி நீர் குறைந்தும், காவிரியின் பாசன வாய்க்கால்கள் முழுக்க வேதியல் நச்சு பொருட்கள் கலந்த திரவங்கள் வெளியேறும் சாக்கடையாக மாறும். ஒட்டு மொத்த விளைநிலங்களும் நாசமாகும். (2,3)

இதெல்லாம் தேவை இல்லாத, மிகைப்படுத்தப்பட்ட அச்சம் என்பவர்கள், திருப்பூர் சாயக் கழிவுகளின் மூலம் நாசமாய் போன ஒரத்துபாளையம் அணையை ஒட்டிய பகுதிகளை சென்று பார்வையிட்டு, இது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றா, உண்மை நிலையா என ஆய்வு செய்யலாம்.

இந்த நிலைமையில் காவிரி படுகை முழுக்க மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டால் தமிழகம் விரைவில் சோமாலியா போல ஆகும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க கட்சிகாரருக்கு சொந்தமான ஜெம் நிறுவனம் முன்னிலையில் உள்ளது.  இந்த கேடுகளால் தான் மக்கள் இவற்றை எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

ஸ்டெர்லைட்:

மகாராஷ்ட்ராவில் இருந்து துரத்தப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனம் தூத்துக்குடியில் துவங்கப் பட்டதிலிருந்தே பல முறைகேடுகளையும், சட்ட மீறல்களை செய்துள்ளது. எந்த சுற்றுசூழல் விதியையும் பின்பற்றாமல் கொள்ளை இலாபம் ஒன்றையே இலக்காக வைத்து செயல்பட்டு வருகின்றது இந்நிறுவனம். இந்நிறுவனம் வந்த பின்னர் தூத்துக்குடி மாவட்டம் தமிழகத்தில் புற்றுநோய் அதிகமாக உள்ள மாவட்டமாக மாறி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் குடிக்க உகந்ததல்ல என மத்திய சூழல் அமைப்பே (நீரி) தெரிவித்துள்ளது.(4,5)

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டம்

ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் உற்பத்தியை இரண்டு மடங்காக்கி தூத்துக்குடியை சுடுகாடாக்க திட்டமிட்டு செயல்படுகின்றது ஸ்டெர்லைட். இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தின் முதலாளி அனில் அகர்வால் அண்மையில் மோடி இலண்டனுக்கு சென்றிருந்த பொழுது அவரை வரவேற்று முழு பக்க விளம்பரத்தை அங்குள்ள நாளிதழ்களில் வெளியிட்டு தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார். பதிலுக்கு பா.ஜ.க-வினர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்கள்.

images

பன்னாட்டு சரக்கு பெட்டகம் – கன்னியாகுமரி:

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அழிவு திட்டம் என்பது போல கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய “பன்னாட்டு சரக்கு பெட்டகம்” அமைக்க வேண்டும் என ஒர் திட்டத்தை அமலாக்கத் துடிக்கின்றது மோடி தலைமையிலான அரசு. கொச்சியில் ஏற்கனவே அதானி நிறுவனம் “பன்னாட்டு சரக்கு பெட்டகம்” அமைத்து செயல்பட்டு வருகின்றது. அதுவே இன்னும் முழுமையாக செயல்பட வில்லை, காரணம் போதிய அளவில் சரக்கு பெட்டகங்கள் அங்கு வரவில்லை.

இந்நேரத்தில் எதற்காக மேலும் ஒரு “பன்னாட்டு சரக்கு பெட்டகம்” கன்னியாகுமரியில் அமைக்க வேண்டும். கன்னியாகுமரியைச் சேர்ந்த பொன்ராதாகிருஷ்ணன் வளமடையவதற்காகவா?  இந்த திட்டம் பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல், இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழலும் பெரும் அளவில் பாதிக்கப்படும். இது மீன்வளத்தையும், கடல்வளத்தையும் பாதிக்கும். இதனால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றார்கள். (6)

நியூட்ரினோ :

நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சூழியல் விதிகளை மாற்றி மோடி அரசின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது.

அரசின் அறிக்கையின் படியே 6 இலட்சம் டன் பாறை ( ஒரு டன் ஆயிரம் கிலோ) அதாவது அறுபது கோடி கிலோ பாறை வெடி வைத்து தகர்த்து எடுக்கப்பட வேண்டும். இதற்கு இதற்கு தோரயமாக 4 லிருந்து 6 இலட்சம் கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருக்கிற பகுதி நீர் அடுக்குகள் (Aquifer) நிறைந்த பகுதி. இவ்வாறாக, சுரங்கம் அமைக்க வெடி வைத்து பாறைகளையும் நிலத்தையும் தகர்க்கும்பொழுது அது புவிமேலோட்டுப் பேரியக்கத்தில் (tectonics) மாற்றம் நிகழ்த்தும். நீர் அடுக்குகளால் நிறைந்த பகுதி என்பதால் நீரியல் பூகம்பத்தை (hydro seismicity) எளிதில் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஆய்வு மையப்பகுதியில் எவ்வித புவிசார்தொழிற்நுட்ப முறை (Geotechnical studies) ஆய்வுகளையும் அரசு இதுவரை செய்யவில்லை. அதுகுறித்து வெளிப்படைத்தன்மை உடைய அறிக்கையை இதுவரை இல்லை. அதாவது, சுரங்க கிடங்குகள் அல்லது ஆய்வகங்கள் அமைக்கும்பொழுது நீர் அடுக்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் எவ்வகையிலான பாதிப்புகள் வரும் என்பதனை கணிக்கும் ஆய்வு நடத்தப்பட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது நடக்கவேயில்லை, சரி அதனால் என்ன எனக்கேட்பவர்களுக்கு. நியூட்ரினோ ஆய்வகம் அமைய இருக்கும் இடத்திலிருந்து 70கிலோமீட்டர் சுற்றுப்பகுதியில் மட்டும் மொத்தம் 15 அணைகள் உள்ளன (பார்க்க – படம்). பெரிய அணைகளான இடுக்கி அணை 36 கிலோமீட்டர் தூரத்திலும், முல்லைப் பெரியாறு அணை 40 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளன. அப்படி ஏதாவது நீரியல் பூகம்பம் ஏற்பட்டால் அதன் விளைவுகள் மிகக் கடுமையான ஒன்றாக இருக்கும்.

newtemplate_clip_image002_0044

தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் ஒன்று. நியூட்ரினோ ஆய்வகம் செயல்பட ஒரு நாளைக்கு 2லிருந்து 3.4 இலட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் RTI கேள்விக்கான பதிலில் அரசு சொல்லியுள்ளது. இது 6000 பேர் கொண்ட கிராமத்திற்கு போதுமான ஒன்று (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் செலவிடுவார், குளிக்க, குடிக்க, துவைக்க என எல்லாம் சேர்த்து). மேலும் இந்த நீர் எங்கிருந்து எடுக்கப்படும் என இதுவரை அவர்கள் சொல்லவில்லை. ஆனால் சலீம் அலி நடத்திய சூழியல் தாக்க அறிக்கையில் மட்டும் முல்லைப் பெரியாற்றில் இருந்து இந்த தண்ணீரை தமிழ்நாட்டு குடிநீர் வாரியம் எடுத்துக் கொடுக்கும் எனக்கூறியுள்ளார்கள்(8 – பக்க எண்-11). இந்த முல்லைப் பெரியாறு நீரை நம்பிதான் மூன்று மாவட்டங்களின் குடிநீரும், விவசாயமும் உள்ளது. அப்படியானால் அந்த அணை நீரைப் பயன்படுத்தி வரும் விவசாயிகளின் பொருளாதாரத்திற்கான மாற்று என்ன? அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பதில் என்ன? (7,8,9)

நீட் நுழைவுத் தேர்வு:

மருத்துவம் படிக்க “நீட்” எனும் நுழைவு தேர்வை மோடி அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்த நீட் தேர்வு மத்திய அரசின் கீழ் இயங்கும் “CBSE” பாடத் திட்டத்தில் இருந்து தான் நடத்தப் படுகின்றது. இதன் மூலம் மருத்துவர்களின் தரமும், தகுதியும் உயரும் என மோடி ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றார்கள்.

5 ஆண்டு படிக்கும் மருத்துவ கல்வியின் பாடத் திட்டத்தை மாற்றாமல், நுழைவுத் தேர்வை மட்டும் உருவாக்கினால் எப்படி தரம் உயரும் ? மாநில அரசுகளின் பாட திட்டத்தில் படிக்கும் மாணவ/மாணவியர்கள் எவ்வாறு “CBSE” பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் வெற்றி பெற இயலும்? 12 ஆம் வகுப்பில் எல்லா பாடங்களிலும் வெறுமனே தேர்ச்சி பெற்று விட்டு இந்த நுழைவு தேர்வில் மட்டும் மதிப்பெண் எடுத்தால் போதும் என்பது எப்படி தகுதி, திறமையை உயர்த்தும்? கிராமப்புற மாணவர்களுக்கு எப்படி நகர்ப்புறத்தில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் கோச்சிங் வசதி கிடைக்கும்? என்ற நம் கேள்விகளுக்கு யாரிடமும் எந்த பதிலும் இல்லை.

ஏன் தமிழகம் மட்டும் இந்த நுழைவு தேர்விலிருந்து விலக்கு கேட்கின்றது? என சிலர் கேட்கின்றார்கள். நீட் நுழைவு தேர்வில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு விலக்கு உண்டு. மேலும் தமிழகம் தான் 34 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டுள்ளது. பல உயர் மருத்துவ படிப்புகள் தமிழகத்தில் மட்டுமே உண்டு. விரிவான தகவலுக்கு பின்வரும் தரவுகளை பாருங்கள்.

IMG-20170509-WA0007

தமிழ்நாடு சட்டமன்றம் தமிழகத்திற்கு நீட் நுழைவு தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என சென்ற ஆண்டு ஓர் சட்டத்தை இயற்றியது. இருபத்தி நான்கு மணி நேரமும் நாட்டிற்காகவே வேலை செய்பவர் என ஊடகங்களால் புகழப்படும் மோடி தலைமையிலான மத்திய அரசு இன்னும் இந்த சட்டத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் பரணில் வைத்துள்ளது. அப்படி என்றால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு என்ன மதிப்பு இங்கே இருக்கின்றது ?

நீட் தேர்வு தகுதி, திறமைக்கு எப்படி குழி பறிக்கின்றது ?

மேலும் நீட் நுழைவுத் தேர்வின் மூலம் தரம், தகுதி உயர்ந்ததா எனப் பார்த்தால் அதுவும் இல்லை என சொல்கின்றது அண்மையில் Times of India நாளேட்டில் வெளிவந்த செய்தி.(10) முன்பு மருத்துவத்திற்கு தேர்வான மாணவர்களை விட மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களே நீட் தேர்வின் மூலம் தேர்வாகி உள்ளனர் என்கிறது இந்த ஆய்வு. நீட் நுழைவுத் தேர்வில் “இயற்பியலில் பிரிவில் வெறும் 5%, வேதியல் பிரிவில் 10%, உயிரியல் பிரிவில் 20%” எடுத்தவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதே நேரம் 1196 மதிப்பெண்கள் பெற்ற அனிதாக்கள் இதனால் படுகொலை செய்யப்படுகின்றனர்.

முன்பு தமிழகத்தில் மருத்துவ நுழைவுத் தேர்வு தர மதிப்பீடு எப்படி இருந்தது என்றால் 5 இலட்சம் பேர் தேர்வு எழுதுகின்றார்கள் என்றால் – அதில் 90% விழுக்காடு பெற்றவர்கள் அதாவது 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே தேர்வாகினார்கள். இது Percentage (% ) வைத்து தர மதிப்பீடு செய்யப்பட்டது.

நீட் தேர்வில் Percentage (% ) படி தர மதிப்பீடு இல்லாமல், Percentile படி மாற்றியதன் மூலம். 5 இலட்சம் பேர் தேர்வு எழுதி இருந்தால் 2.5 இலட்சம் பேரை விட அதிக மதிப்பெண் எடுத்திருந்தால் உங்களுக்கு மருத்துவ கல்லூரியில் அனுமதி. ஆக குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் உங்களிடம் காசு இருந்தால் தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து மருத்துவர் ஆகலாம்.

இந்த நீட் தேர்வு என்பது ஐ.ஐ.டிகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளைப் போல தனியார் பயிற்சி மையங்களை வளர்க்கின்றது. பள்ளிக்கூடத்தில் 12 ஆண்டுகள் படிக்கும் படிப்பை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுகின்றது. பணம் உள்ளவர்கள் மட்டும் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலைமையை உண்டாக்குகின்றது. இதனால் சேவை மனப்பான்மையுடன் இன்று அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை ஒழித்து கட்டுகின்றது.

dc-Cover-st7ic3nd5mj11eqa6muum6lv91-20170904080706.Medi

காவிமயமாக்கப்படும் பல்கலைகழகங்கள்:

இந்திய அளவில் வெளியிடப்பட்ட பல்கலைகழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவை 13 பல்கலைகழகங்கள்.  இதே போல கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. (11) இப்படி முன்னேறிய நிலையில் உள்ள தமிழகத்தின் உயர் கல்வியை அழித்து காவி மயமாக்கும் வகையில் மோடி அரசு செயல்பட்டு வருகின்றது. சென்னை பல்கலைகழகம் உள்ளிட்ட சில பல்கலைகழகங்களை மத்திய அரசின் கட்டுபாட்டில் எடுக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  தமிழக அளவில் இரண்டாம் இடத்திலும், இந்திய அளவில் ஆறாம் இடத்திலும் இருக்கும் அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக ஐ.ஐ.டியில் இருந்து நீக்க‌ப்பட்ட தகுதியற்ற சூரப்பாவை காவி என்ற ஒரே காரணத்திற்காக “பாலியல் வன்முறை’ குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னர். பன்வாரிலால் நியமித்துள்ளார்.

மாநில உரிமை பறிப்பு:

மாநில முதலமைச்சராக இருந்து பிரதமர் பதவிக்கு வந்துள்ளதால் நான் மாநில உரிமைகளை காப்பேன் என பிரதமராக பதவியேற்ற புதிதில் கூறினார் மோடி. ஆனால் அவரது செயல்பாடுகள் மாநில அரசிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து எல்லாவற்றையும் மையத்தில் குவிக்கும் விதமாகவே உள்ளன.

உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநில அரசுகள் குறைந்த விலையில் உணவு பொருட்களை கொடுத்து வரும் ரேசன் கடைகளை மூடும் பணி தொடங்கி உள்ளது.  GST யை அமல்படுத்தியதன் மூலம் எந்த ஒரு புதிய வரியையும் மாநில அரசு கொன்டு வர முடியாது, அதே சமயம் வரி விகிதத்தை குறைப்பதும், உயர்த்துவதும் மத்திய அரசிடம் சென்று விட்டது. இதனால் மாநில அர‌சின் நிதி வருவாயையும் பிடுங்கி விட்டார்கள்.  ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு நாம் 1 ரூபாய் வரியாக கொடுத்தால் அதில் 40 பைசா தான் தமிழகத்திற்கு கிடைக்கின்றது. 15ஆவது நிதி குழு மூலம் அதையும் எப்படி குறைப்பது என திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.

26001376_1752487938108479_6100895306892854913_n

நிதியே இல்லாமல் எப்படி மாநில அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் ?  இப்படி ஒரு சூழ்நிலையில் தமிழகத்தில் இருக்கும் எடப்பாடி அரசை மோடி அரசு தலையாட்டி பொம்மையாக செயல்படுத்தி வருகின்றது. அவர்களும் தங்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மோடி சொல்ல நினைப்பதை கூட செயல்படுத்தி வருகின்றார்கள். “பாலியல் வன்முறை” குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னர் தமிழகத்தின் முதல்வர் போல தன் விருப்பத்திற்கு செயல்பட்டு வருகின்றார்.

மோடியை தமிழர்கள் எதிர்ப்பதென்பது இந்திய ஒன்றிய அரசை எதிர்ப்பது மட்டுமல்ல, அவர் ஆட்டுவிக்கும் மாநில அரசையும் சேர்த்தே எதிர்ப்பதென்பதாகும்.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்

முந்தையை கட்டுரைகள்:

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம்? – 1

நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2

தரவுகள் (அ) மேலும் படிக்க:

1) https://www.vikatan.com/anandavikatan/2018-feb-28/interviews—exclusive-articles/138810-edappadi-palaniswami-activities-in-cauvery-case.html

2) http://www.visai.in/2017/02/23/methane-2-0-hydrucarbon-project-neduvasal-protest/

3) http://www.visai.in/2014/03/02/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/

4) http://poovulagu.in/?p=1785

5) http://www.frontline.in/the-nation/saga-of-a-struggle/article10106626.ece?homepage=true

6) https://www.youtube.com/watch?v=TfDxarGuCsk

7) http://www.visai.in/2015/02/25/why-are-we-against-india-based-neutrino-obervatory/

8) http://www.visai.in/2015/02/23/neutrino-observatory-buying-the-danger-with-our-money/

9) http://www.visai.in/2015/02/26/neutrino-factory/

10) https://timesofindia.indiatimes.com/india/for-an-mbbs-seat-you-need-just-5-in-physics-20-in-biology/articleshow/63766630.cms

11)https://timesofindia.indiatimes.com/city/chennai/iit-madras-no-1-in-engineering-anna-university-among-top-5/articleshow/63603955.cms

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*