Home / அரசியல் / ஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு

ஸ்டெர்லைட் படுகொலைகள் “குஜராத் மாடல்” தமிழக அரசு

“100% லாபம் என்றால் முதலாளித்துவம் மனித நியாயங்களை எல்லாம் காலில் போட்டு மிதிக்கும். 300% லாபம் என்றால் முதலாளித்துவம் எந்தக் கொலைபாதகத்திற்கும் அஞ்சாது – தூக்குக் கயிறை எதிர்கொள்ள வேண்டுமென்றாலும்கூட!”    – தாமஸ் ஜோசெஃப் டன்னிங், தொழிற் சங்கங்களும் வேலை நிறுத்தங்களும், 1960

1994ல் ஆலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டதிலிருந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் தமிழகத்தில் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து பல வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.  தூத்துகுடி மண்ணை, காற்றை, நீரை நஞ்சாக்கியுள்ளது ஸ்டெர்லைட் ஆலை எனக்கூறிய நீதிமன்றம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தாமல் 100 கோடி அபராதம் மட்டும் விதித்தது. பல ஆயிரம் கோடி இலாபமீட்டும் நிறுவனத்திற்கு 100 கோடி ஒரு பொறுட்டா? தூக்கி வீசியது 100 கோடியை. அந்த 100 கோடி இன்று வட்டி போட்டு 135 கோடி ரூபாயாக தமிழக அரசிடம் பத்திரமாக உள்ளது.

இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தினால் தூத்துகுடியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் ஆலையை 100% விரிவாக்கம் செய்ய ஆலை நிர்வாகம் அனுமதி கேட்டது மக்கள் போராட்டத்தை அதிகப்படுத்தியது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள்.

எதிர்ப்பு போராட்டத்தின் 100வது நாளான மே 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராடப் போவதாக ஆலை எதிர்ப்பியக்கம் அறிவித்திருந்தது. தூத்துகுடியில் 144 தடை உத்தரவு போட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  ஸ்டெர்லைட் ஆலை மனுதாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் இந்த வழக்கை இரத்து செய்தது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் விருப்பப்படி தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் மே 22 அன்று 144 தடையுத்தரவை பிறப்பித்தார்.

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் பினாமி அரசான எடப்பாடி. பழனிசாமி அரசு ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், பல மாவட்ட காவல்துறை தலைவர்களையும் தூத்துகுடிக்கு மே 21 அன்றே அனுப்பியது.

வேதாந்தா முதலாளி அனில் அகர்வால், அவரிமிருந்து நிதி பெறும் மோடி, மோடியின் பினாமி பழனிசாமி, தமிழக காவல் துறை

வேதாந்தா முதலாளி அனில் அகர்வால், அவரிமிருந்து நிதி பெறும் மோடி, மோடியின் பினாமி பழனிசாமி, தமிழக காவல் துறை

காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை எடுத்த எடுப்பிலேயே தடியடி நடத்தி மக்களின் மீது வன்முறையை பயன்படுத்தியது. பெயர் தான்  தடியடியடியே தவிர , காவல்துறை மக்களை அடித்தது இரும்பு குழாயை வைத்து. இந்த இரும்பு குழாய் அடியினால் மக்கள் பீதியில் ஓடத்துவங்கிய நொடியில் துப்பாக்கி சூட்டைத் துவங்கியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பியக்கத்தின் முன்னணி ஒருங்கிணைப்பாளரும், புரட்சிகர இளைஞர் முன்னணி இயக்கத்தின் தோழருமான தமிழரசன், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஜெயராமன், தூத்துகுடி பங்குதந்தை ஜெயசீலன், மற்றும் தூத்துகுடியைச் சேர்ந்த‌ கந்தையா, வினிதா, 17 வயது மாணவி வெனிஸ்டா,   சண்முகம் , அந்தோணி செல்வராஜ், மணி ராஜ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட அனைவரும் 100 நாட்களாக நடந்து வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் முன்னணியினர்.  யாரையெல்லாம் சுட வேண்டும் என திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது தமிழக காவல்துறை.  இந்த படுகொலையை காவல்துறை உடை அணியாத துப்பாக்கி சுடுதலில் நன்கு பயிற்சி பெற்ற ஸ்னைப்பர் காவலர்களையும், கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடாத நவீனரக துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளார்கள்.  சுட்டு படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் மார்பு, மார்பு பகுதிக்கு மேலே குண்டு பாய்ந்துள்ளது.  மாணவி வெனிஸ்டாவின் வாயில் குண்டு பாய்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி மே 22 அன்று காவல்துறை தடியடியில் காயம்பட்டு ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த‌ பொதுமக்கள், உறவினர்கள் மீதும்  காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.

மெரினாவில் காவல்துறையினரே ஆட்டோவை எரித்ததைப் போலவே தூத்துகுடியிலும் காவல்துறை தங்கள் வாகனங்களையும், ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் வாகனங்களையும், ஜெனரேட்டரையும் எரித்துள்ளனர்.

நேற்று(மே 23) தமிழக அரசின் திட்டமிட்ட படுகொலையில் கொல்லப்பட்ட மக்களின் உடலை பின்வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் தான் வாங்குவோம் என அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் தூத்துகுடி அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். 1) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும். 2) பொது மக்களை படுகொலை செய்த காவலர்கள், அவர்களுக்கு சுடுவதற்கு உத்தரவளித்த உயர் அதிகாரிகள் அனைவரின் மேலும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்ததால் திட்டமிட்டு படுகொலை செய்த அரசும், அதன் ஏவல்நாயான காவல்துறையும் இந்த கோரிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ளும்? மீண்டும் தடியடி, துப்பாக்கி சூட்டை நடத்தினார்கள். இதில் காளியப்பன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இறந்து கிடந்த காளியப்பன் உடலை சும்மா நடிக்காதே என காவலர்கள் உதைத்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்கள்.

மே 22 அன்றே பெரும்பாலான தொலைகாட்சிகளை மிரட்டி நேரடி ஒளிபரப்பை இரத்து செய்ய வைத்தது தமிழக அரசு. இதனால் சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை வைத்து தான் அங்கு நடைபெற்று வந்த திட்டமிட்ட வன்முறையை/படுகொலைகளை நம்மால் அறியமுடிந்தது. மே 23 மாலை இணைய வசதி கொடுக்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரடியாக அறிக்கை கொடுத்து தூத்துகுடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் இணையச் சேவையை துண்டிக்க சொல்லிவிட்டது.

மே 23 மாலை முதலே இந்த மூன்று மாவட்டங்களிலும் இணைய சேவை துண்டிக்கப்பட்டு விட்டது.  அதாவது  சாட்சியங்களே இல்லா படுகொலையை அரசு நேற்று மாலை முதல் அரங்கேற்றி வருகின்றது. அதுமட்டுமின்றி தூத்துகுடியில் மின்சார தடையையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இரவில்  இருட்டில் வேட்டையாடும் விலங்குகளைப் போல காவல்துறையினர் தமிழக மக்களை எந்த சாட்சிகளும் இன்றி வேட்டையாடி வருகின்றனர்.

மே 23 அன்றே மத்திய அரசும் தன் பங்கிற்கு துணை இராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டு, இன்று (மே 24) துணை இராணுவமும் சேர்ந்து மக்களை வன்முறைக்குள்ளாக்கி வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று (மே 23)  உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட தடை விதித்து தாங்களும் முதலாளிகளுக்கு ஆதரவானவர்களே என காட்டியுள்ளது.

“பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள்
  சட்டம் ஏழைகளை ஆள்கின்றது”

துப்பாக்கி சூடு நடந்ததே எனக்கு தெரியாது என்கிறார் காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் பழனிசாமி. அப்படியானால் இந்த ஒட்டுமொத்த வன்முறையும் தமிழக அரசின் தலைமை செயலாளர். கிரிஜா வைத்தியநாதனின்  உத்தரவில் தான் நடக்கின்றதா? மோடியின் உத்தரவின் படி தமிழக அரசை நடத்துவது கிரிஜா தானா? துப்பாக்கி சூடு பற்றி தனக்கு தெரியாது என நாடகம் ஆடினாலும் – தமிழகத்தின் முதலமைச்சரான பழனிசாமியும் இதில் முக்கியமான குற்றவாளியே.

பா.ஜ.க-விற்கு அதிக தேர்தல் நிதியை கொடுக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை பாதுகாக்கவும், எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கவும் மோடியினாலும், தமிழகத்தில் உள்ள அதன் பினாமி அதிமுக அரசினாலும், தலைமை செயலாளர். கிரிஜா, தூத்துகுடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் என எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட அரச பயங்கரவாதம் தான் மே22ல் இருந்து இன்று வரை தூத்துகுடியில் நடந்து வருவது. இவர்கள் அனைவரும் இந்த படுகொலை/வன்முறையில் கூட்டு குற்றவாளிகளே.

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான வேதாந்தா நிறுவனம் தூத்துகுடியில் நடத்தி வருவதெல்லாம் தூசிக்கு சமானம். ஒதிசா மாநிலத்தில் நியாம்கிரி மலையில் சுரங்கம் தோண்டும் திட்டத்தை எதிர்த்த பழங்குடி மக்களின் மேல் வெடிகுண்டு வீசி படுகொலை செய்து,காவல்துறை மூலம் பொய் வழக்கில் சிறையில் அடைத்தது என நீண்ட நெடிய இரத்தம் தோய்ந்த‌ வரலாறு வேதாந்தா நிறுவனத்திற்கு இருக்கின்றது.

index3

முதலாளிகளின் இலாபத்திற்காக தங்கள் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும், உறவையும் இழந்த மக்கள் மீதமிருப்பதை காப்பாற்ற போராடும் போது அவர்களை படுகொலை செய்வது தான் “குஜராத் மாடல்”.  இந்த “குஜராத் மாடல்” இன்று தூத்துகுடியில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு விட்டது.

இன்று தூத்துகுடியில் நடத்தி வருவதை தான் பல ஆண்டுகளாக காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், இந்தியாவின் மத்திய காடுகளான தண்டகாரன்யாவிலும் மத்திய, மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் “பிரிவினைவாதிகள்”, “நக்சல்கள்”, “தேசதுரோகிகள்” என முத்திரை குத்தப்பட்டு தேச துரோக வழக்கு பாய்ச்சப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள்.

இனி காவிரியில் நீர் வரவில்லை என்றோ, மக்களையும், சூழலையும் அழிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, பன்னாட்டு சரக்கு துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்தோ, மத்திய அரசின் “நீட் நுழைவு தேர்வு”, மாநிலங்களின் உரிமை பறிப்பு, பல்கலைகழகங்களை காவிமயமாக்கல் உள்ளிட்ட “கொலை” கொள்கை முடிவுகளை எதிர்த்தோ போராடினால் இதே மாடல் அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

“உலகின் மிகப்பெரிய மக்களாட்சி” அரசான இந்தியா மக்களுக்கு முன் வைப்பது இரண்டு தெரிவுகளை மட்டுமே.

1) சுற்றுச்சூழலை அழித்து முதலாளிகளுக்கு இலாபம் கொழிக்கும் ஆலைகள், திட்டங்களை ஏற்றுக்கொண்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை வாங்கி கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக சாகவேண்டும்.

2) இதை எதிர்த்து போராடி துப்பாக்கியால் உடனே சாவது.

போராடினாலும் சாவோம், போராடாவிட்டாலும் சாவோம். ஆனால் போராடினால் இனி வரும் தலைமுறை தப்பிக்கும் வாய்ப்பு உண்டு.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்.

குறிப்பு : இந்த ஆண்டு தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இணையத்திலேயே நடக்க இருக்கின்றது. இதற்கான விண்ணப்பத்தையும் இணையத்தில் தான் அனுப்ப முடியும். நேற்று மாலையில் இருந்து தூத்துகுடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இணைய இணைப்பு தமிழக அரசின் மிரட்டலுக்கு இணங்க துண்டிக்கப்பட்டுள்ளது. இணைய வசதி என்று மீண்டும் கொடுக்கப்படும் எனத் தெரியாது. இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மாணவர்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு /மாநிலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. தூத்துகுடி மக்களின் படுகொலைகளுக்கு நடுவே, இந்த மூன்று மாவட்ட மாணவர்களின் கனவுகளும் படுகொலை செய்யப்படுகின்றன.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*