Home / ஈழம் / இலங்கை புறக்கணிப்பு / தமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்

தமிழ்த் தேசியமும் – ஈழத்துச் சிவசேனையும்

ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்கும் பொழுதே ஒரு தேசியப் பிரக்ஞையானது அதன் உன்னதமான முழுமையை அடைகிறது. ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படை இங்கு முக்கியம். இதை மறுவளமாகச் சொன்னால் ச‌னநாயக அடித்தளத்தின் மீது மக்களைத் திரளாக்குவதே உன்னதமான தேசியமாகும்.  ஒரு மதவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஓர் ஆண் மேலாதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு பிரதேசவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு ச‌னநாயக விரோதி தேசியவாதியாக இருக்க முடியாது என தேசியம்/ தேசியவாதி பற்றி நிலாந்தன் கூறுவது அப்படியே தமிழகத்தில் பேசப்படும் தமிழ் தேசியத்திற்கும் பொருந்தும்.

விசை ஆசிரியர் குழு.
—–

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். அது ஒரு சட்டப்பிரச்சினை. ஆனால் அதை மத நோக்கு நிலையிலிருந்து வியாக்கியானம் செய்வதையும், அது தொடர்பில் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துத் தெரிவிப்பதையும் தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலிருந்து ஏற்றுக்கொள்ள முடியாது.

ஈழத்துச் சிவசேனையின் தலைவராகக் காணப்படும் மறவன்புலவு சச்சிதானந்தம் ஒரு மூத்த அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். சில நாட்களுக்கு முன் யாழ்  நகரப் பகுதியில் நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்பாட்டத்திலும் அவர் காணப்பட்டார். நல்ல வாசிப்புடையவர். இலேசான இந்திய உச்சரிப்போடு அழகாகத் தமிழைப் பேசுவார்.

தமிழரசுக்கட்சியின் மிக மூத்த ஆதரவாளர்களில் ஒருவர். அக்கட்சியின் மூத்த தலைவர்களோடு நீண்டகாலத் தொடர்புகளைக் கொண்டவர். அக்கட்சியின் வரலாற்றையும், உள்விவகாரங்களையும் நன்கு தெரிந்தவர். ஆனால் அண்மை ஆண்டுகளாக அக்கட்சி மீது அதிருப்தி கொண்டவராகக் காணப்படுகிறார். மிதவாத அரசியலுக்குமப்பால் ஈழப்போராட்டத்தோடும் அவருக்குத் தொடர்புகள் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு இந்தியப் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டவர். இந்திய அரசியல்வாதிகளோடு குறிப்பாகத் தலைவர்களோடு நெருங்கிய உறவைக் கொண்டவர். கருணாநிதியும் உட்பட தமிழகத்தின் முக்கிய தலைவர்களை இடைக்கிடை சந்திப்பவர். அச்சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை முகநூலில் பிரசுரிப்பவர். சிவசேனையைத் தொடங்க முன்பு இவர் வெள்ளை வேட்டியோடுதான் காணப்பட்டார். ஆனால் இப்பொழுது காவி உடைக்கு மாறி விட்டார்.

ஈழத்துச் சிவசேனை எனப்படுவது இந்தியப் பின்புலத்தைக் கொண்டது என்றும் இந்தியாவில் உள்ள சிவசேனையின் ஒரு குட்டியே அதுவென்றும் ஒரு பலமான சந்தேகம் உண்டு. எனினும் இந்திய சிவசேனையைப் போல ஈழத்துச் சிவசேனை செயல்பூர்வ வன்முறைகள் எதிலும் இன்று வரையிலும் ஈடுபட்டதில்லை. அந்தளவிற்கு ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பாக அது இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. அதோடு அரசியலைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் அது இன்னமும் வளர்ச்சி பெறவில்லை. இனிமேலும் அது அப்படியொரு வளர்ச்சியை அடையுமா? என்பது சந்தேகம்தான். அதற்கான ஒரு களம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உண்டா? என்பதும் கேள்விக்குரியதுதான். இந்துக் கோவில்கள் தாக்கப்படும் பொழுது அல்லது இந்துக்களுக்கு இடர் ஏற்படும் பொழுது குரல் கொடுப்பது, அறிக்கை விடுவது என்பதற்குமப்பால் ஈழத்துச் சிவசேனை பெரியளவில் தாக்கமுடைய செயற்பாடுகள் எதிலும் இதுவரையிலும் ஈடுபட்டதில்லை.

குறிப்பாக காங்கேசன்துறையிலிருந்து சிதம்பரம் கோயிலுக்கு கப்பல் விடப்போவதாக கடந்த சில ஆண்டுகளாக ஈழத்துச் சிவசேனை கூறி வருகிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் உரிய அனுமதியை இந்த முறையும் வழங்கவில்லை. சிதம்பரத்திற்கு கப்பல் விடுவது என்பது வெறுமனே ஓர் ஆன்மீக விவகாரம் மட்டுமல்ல அது ஒரு ராஜீக விவகாரம்தான். குடிவரவு, குடியகல்வு போன்றவற்றோடு தொடர்புடையது. இரு நாடுகளுக்குமிடையிலான கடற் பாதுகாப்பு வலயங்களோடு தொடர்புடையது. அதை ஓர் ஆன்மீக விவகாராமாக மட்டும் சிவசேனா குறுக்கிப் பார்த்தது. ஆனால் அதை அதன் அரசியல் தாற்பரியங்களுக்கூடாக பார்க்கும் இலங்கை அரசாங்கம் இன்று வரையிலும் அதற்குரிய அனுமதியை வழங்கவில்லை. அதிகம் போவானேன். பலாலி விமான நியைலத்தை இந்தியாவின் உதவியோடு விஸ்தரிப்பதற்கு இன்று வரையிலும் இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.

இவ்வாறானதோர் பின்னணிக்குள்தான் இப்பொழுது சிவசேனை பசுவதை விவகாரத்தைக் கிளப்பியிருக்கிறது. அதையும் கூட இந்துக்கள், பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு அச்சத்தை ஊட்டும் வகையில் கிளப்பியிருக்கிறது.
மறவன்புலவு சச்சிதானந்தத்தை நன்கு தெரிந்தவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள். அவர் ஒரு தமிழ்த் தேசியவாதிதான் என்று. இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவதற்கு இந்துத்துவக் கோட்பாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்று அவர் நம்புகிறாரோ தெரியவில்லை. ஆனால் இங்குள்ள கோட்பாட்டு பிரச்சினை என்னவெனில் ஒரே நேரத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாகவும், இந்துத்துவவாதியாகவும் இருக்க முடியாது என்பதுதான்

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையாகும். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தை திரளாகக் கூட்டிக்கட்டும் ஒரு பிரக்ஞை எனலாம். ஆனால் எந்த அடிப்படையில் மக்கள் திரளாக்கப்படுகிறார்கள் என்பதே இங்கு முக்கியமானதாகும். இனவெறி, மதவெறி, சாதி, பிரதேசம், குறிச்சி, பால் வேறுபாடு போன்றவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தைத் திரட்டும் பொழுது மேற்படி அம்சங்கள் காரணமாகவே சமூகம் பல திரள்களாக சிதறும் ஆபத்து உண்டு.

உதாரணமாக ஒரு மத உணர்வை அடிப்படையாக வைத்து ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டும் பொழுது ஏனைய மதக்குழுக்கள் அத்திரளுக்குள் அடங்காது பிரிந்து நிற்கும். தன்னுடைய மதம்தான் சிறந்தது என்று கருதும் ஒருவர் ஏனைய மதங்களை மதிப்பதில்லை. மத ரீதியாக ஒரு மக்கள் கூட்டத்தைத் திரட்டும் பொழுது அது ஒரு பெருந்திரளை உருவாக்காது. அதில் ஏதோ ஒரு குறுக்கம் இருக்கும். எனவே ஒரு மக்கள் கூட்டத்தை எந்த அடிப்படையில் திரளாக்குவது என்பதே இங்கு முக்கியம்.

கடந்த நூற்றாண்டில் மனித குலம் கற்றுக்கொண்ட அனுபவத்தின் அடிப்படையிலும் குறிப்பாக ஈழத்தமிழர்கள் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையிலும் சிந்தித்தால் ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் மக்களைத் திரளாக்கும் பொழுதே ஒரு தேசியப் பிரக்ஞையானது அதன் உன்னதமான முழுமையை அடைகிறது. ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படை இங்கு முக்கியம். இதை மறுவளமாகச் சொன்னால் ஜனநாயக அடித்தளத்தின் மீது மக்களைத் திரளாக்குவதே உன்னதமான தேசியமாகும். அல்லது அதை முற்போக்குத் தேசியம் என்றும் அழைக்கலாம். அதாவது ஒரு மக்கள் கூட்டத்தை ஆகப் பெரிய திரளாக மாற்ற ஜனநாயகம் என்ற ஒரே ஒரு அடிப்படையால் மட்டுமே முடியும். மாறாக மதவெறி, மொழிவெறி, இனவெறி, நிறவெறி, குலம், கோத்திரம், பிரதேச வாதம், பால் அசமத்துவம், ஊர் வாதம் போன்றவற்றின் அடிப்படையில் மக்களைத் திரட்டும் பொழுது அது பெருந்திரளாக மாறாது. அதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் எனவே எங்கேயோ ஒரு குறுக்கம் இருக்கும். அதன் உள்ளடக்கத்தில் ஜனநாயகப் பற்றாக்குறை இருக்கும். அது பல சமயங்களில் பிற்போக்குத் தேசியமாக மாறிவிடும்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் ஒரு மதவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஓர் ஆண்மேலாதிக்கவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு பிரதேசவாதி தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு ஜனநாயக விரோதி தேசியவாதியாக இருக்க முடியாது. அப்படியென்றால் சிவசேனா தமிழ் தேசியத்திற்குள் அடங்க முடியாது. அது தமிழ்த் தேசியத்தின் விரிவைக் குறுக்கிவிடும். அதன் ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை கோறையாக்கிவிடும். மதம் கடந்து, சாதி கடந்து, பிரதேசம் கடந்து உயிரை விட்ட அனைத்துத் தியாகிகளையும் இரத்தம் சிந்திய அனைத்துத்  தியாகிகளையும் சொத்துக்களை இழந்த அனைத்துத் தியாகிகளையும் கொச்சைப்படுத்தி விடும்.

அது மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையால் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுதும் கட்டமைப்புசார் இனப்படுகொலையால் நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் எவ்வளவு பெரிய திரளாக முடியுமோ அவ்வளவு பெரிய திரளாக ஈழத் தமிழர்களைத் திரட்டிக் கட்டினால்தான் இனப்படுகொலைக்கு எதிரான கவசத்தைக் கட்டிஏழுப்பலாம் நீதியைப் பெறலாம். எனவே சிவசேனை போன்ற குறுக்கங்கள் அப்பெருந் திரளுக்குப் பாதகமானவை. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதற்கும் பாதகமானவை.

ஈழத்துச் சிவசேனைக்காரர் பாரதீய ஜனதாவோடு நெருங்கி உறவாடி தமிழீத்தை வென்றெடுக்கலாம் என்று நம்புகிறார்களோ தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பேச்சாளர்கள் பேசிய பின் பார்வையாளர்கள் கருத்துக் கூற இடமளிக்கப்பட்டபோது மறவன்புலவு சச்சிதானந்தம் உரையாற்றினார். தான் பாரதீய ஜனதாக் கட்சியின் பெரிய புள்ளிகளுக்கும் கூட்டமைப்பு தலைவர்களுக்கும் இடையில் இந்தியாவில் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் ஆனால் கூட்டமைப்புத் தலைவர்கள் அதைப் பொருத்தமான விதத்தில் கையாளவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்திய ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈழத் தமிழர்களின் நியாயங்களை ஏற்றுக் கொள்ளும் பொழுது இந்தியக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என்ற ஒரு தொனி அன்றைய அவருடைய பேச்சில் காணப்பட்டது. இதே தொனிப்பட அவர் வேறுபல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறார்.

ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டின் அதுவும் ஒரு பிராந்திய வல்லரசின் வெளியுறவுக் கொள்கை எனப்படுவது சில ஆளுங்கட்சித் தலைவர்களோடான சந்திப்பின் மூலம் மட்டும் மாற்றப்படக்கூடியதல்ல. கட்சித் தலைவர்கள் மாறலாம். ஆனால் மாறிலியான கொள்கை வகுப்புக் குழாம் ஒன்று இருக்கும். அதுதான் வெளியுறவுக் கொள்கையை பெரிதும் தீர்மானிக்கும். கூட்டமைப்புத் தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள் என்பதற்காக பாரதீய ஜனதாக்கட்சிப் பிரமுகர்கள் அதற்கு ஒத்துக் கொண்டார்கள் என்பதற்காக இந்தியப் பேரரசின் வெளியுறவுக் கொள்கை மாற்றப்படுவதற்கில்லை.

அது போலவே சிதம்பரத்திற்கு கப்பல் விடும் விவகாரத்திலும் ஒரு ராஜதந்திரக் காய் நகர்த்தலை ஆன்மீகக் காய் நகர்த்தலாக சிவசேனா விளங்கி வைத்திருக்கிறது. அல்லது அப்படி ஒரு தோற்றத்தைக் காட்டுகிறதோ தெரியவில்லை. அல்லது அதை ஒரு ஆன்மீக விவகாரமாக முன்னெடுப்பதற்கு இந்தியாவிலுள்ள சில தரப்புக்கள் முயற்சிக்கின்றனவோ தெரியவில்லை. இது தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் சில முடிவெடுக்கும் அதிகாரிகளின் மேசைகளில் அனுமதிப் பத்திரத்திற்கான ஆவணங்கள் கிடப்பில் போடப்பட்டதால்தான் கடந்த ஆண்டு சிதம்பரத்திற்குக் கப்பலை விடமுடியவில்லை என்ற தொனிப்பட எழுதப்பட்டிருந்தது.

ஆனால் அது சில அதிகாரிகளின் தனிப்பட்ட முடிவு அல்ல. அது இந்தியாவிற்கும் – இலங்கைக்கும் இடையிலான வெளியுறவுக் கொள்கையோடு தொடர்புடையது. ஈழத்திற்கும் – தமிழகத்திற்கும் இடையிலான அரசியல், வணிக, பண்பாட்டு ரீதியிலான கடற் தொடர்புகளை மீளப் புதுப்பிப்பதோடு தொடர்புடையது. அதை இரு நாட்டு அரசாங்கங்களும்தான் முடிவெடுக்கும். குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பண்டைய கடல் வழித் தொடர்புகள் புதுப்பிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது இந்திய அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பது முக்கியம். இது வெறும் ஆன்மீக விவகாரம் மட்டுமல்ல. அப்படித்தான் சிவசேனைக்கூடாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் அசைவுகளை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையும்.

நிலாந்தன்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*