Home / கலை / கேடி மஸ்தான்

கேடி மஸ்தான்

என்னய்யா ஆச்சு உங்களுக்கு

 

கம்மியா செலவளிச்சு

கண்கலங்க வைக்காதீங்க

கொஞ்சமா செலவளிச்சு

கொடுமை இன்னும் பண்ணாதீங்க

 

கஜானா பாரத்த குறைச்சு

எல்லா பாரத்தையும்

தல மேல போட்டீக

 

வாங்குன காசுக்கு

வட்டிகட்ட முடியாம

ஏழுமலை செத்ததுக்கு

ஏரோபிளேனில் அழுதீக

 

என்னய்யா ஆச்சு உங்களுக்கு

 

ஜிப்பா சட்டை போட்டு

சிலுக்கு சட்டை மேல போட்டு

கெத்தா நடந்து வந்தா

கேணப்பய நாங்க ரசிப்போம்

 

விவசாயி கோமணத்த

வித்து நாந்தாரேன்

விளம்பரச்செலவுகள்ல

ஒரு பைசா குறைக்காதீங்க

 

இப்படி

கம்மியா செலவளிச்சு

கண்கலங்க வைக்காதீங்க

 

காக்கி டவுசர் போட்டு

காலுல பூட்சு போட்டு

ஒய்யாரமா நடந்துவரும்

பேர்பாதி பேருகளுக்கு

பேரம்பேத்தி இருக்காகலாம்

 

மலை பண்ணி ஒழப்புன

வயக்காட வச்சிருந்தோம்

மத யானை நொழஞ்சிருச்சு

யானை நிறம் கருப்பு இல்லை

காவியின்னு தெரிஞ்சிருச்சு

 

வெத்தல சுண்ணாம்பு வச்சு

சவக்கி திண்ணையில

ஒட்டுற கரையெல்லாம்

ஒங்க கறைனு

ஓங்கி ஓங்கி சொன்னீங்க

 

நாங்க

பல்லு கறை

பாச கறை

தேச கறை

 

மன்னிக்கணும்

தே(ன்) சர்க்கரை னு

தேம்பி தேம்பி ஆழுதீக

 

என்னய்யா ஆச்சு உங்களுக்கு

 

சுப்பையா நிலத்தவாங்கி

சூட்டு போட்ட ஆளுகளுக்கு

பகுந்து கொடுத்துட்டு வந்த

இந்த

பச்சை முகத்த

பத்து ரூவா டிக்கெட்டில்

பாக்குறதுக்கு வரிசைஇருக்க

 

முந்தா நாத்து

சுப்பையா  தற்கொலைக்கு

இன்னைக்கு ட்விட்டர்ல

ஈம சடங்கு பாத்தீக

 

என்னய்யா ஆச்சு உங்களுக்கு

 

அகண்ட பாரதன்னு  நீங்க

அகல கைய விரிக்கையில

அனகோண்டா பாம்புபோல

அச்சம் வருதுன்னு சொல்றாக

நிசமா

ஐய்யா நீங்க

விசமா ?

 

— இரா.சங்கர்.

 

 

 

 

 

 

About இரா.சங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*