Home / பொருளாதாரம் / என்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் ?

என்ன நடக்கிறது ரிசர்வ் வங்கியில் ?

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருந்த உர்ஜித்தை ரிசர்வ் வங்கி கவர்னராக கொண்டு வந்ததே பா.ஜ.க அரசு தான். பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வரும் பொழுது நிலையாக இருந்த இந்திய பொருளாதாரம் ப‌ணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி என தொடர் செயல்பாடுகளால் சீர்குலைந்துள்ளது. இதனால் அதிகமாகியுள்ள வாராகடனால் வங்கித் துறை சீரழிந்துள்ளது. இந்நிலையிலும் மேலும் அதிக கடன்களை கொடுக்கச் செய்து, பல்லாயிரம் கோடிக்கணக்கான வாராகடன்களை ரத்து செய்தும்,  ரிசர்வ் வங்கியின் நிதியில் இருக்கும் பணத்தை எடுத்து சூதாட திட்டமிடுகின்றது பா.ஜ.க அரசு. இதனால் தான் அவர்களால் கொண்டு வரப்பட்ட‌ உர்ஜித் ராஜினாமா செய்து விட்டு தனது தலையை காப்பாற்றி கொள்கின்றார். உர்ஜித்தின் ராஜினாமா குறித்து ரகுராம்ராஜன் சொல்வது போல இந்தியர்கள் அனைவரும் இனி மிக கவனமாக இருக்க வேண்டும், நாம் மிகவும் கடிமான காலத்தை எதிர்நோக்கியுள்ளோம்.

விசை ஆசிரியர் குழு.

டிசம்பர் 10, 2018. ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தான் நிதி அமைச்சகத்திற்கே அந்த செய்தி வருகிறது. தனிப்பட்ட  காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. உர்ஜித் ராஜினாமா செய்கிறார் என்பது. பணமதிப்பு நீக்க (Demonetization) காலத்தில் அப்போது தான் பதவிக்கு வந்து இரண்டே மாதங்கள் ஆன நிலையில், உர்ஜித்தால் பெரியதாய் எதையுமே செய்ய முடியவில்லை. ஆனால் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் ரிசர்வ் வங்கி கவர்னரின் பதவிக்கான மரியாதையையும், மாண்பையும் காப்பாற்ற தொடங்கினார்.

மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்தின் மூலம் அழுத்தம் கொடுத்த போதும், வட்டி விகிதத்தை ஏற்றவே செய்தார். 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை, சிறப்பு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்து, அதன் வாராக் கடன்களை குறைக்க செய்தார். கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகவே, ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம் என மூன்று அதிகார மையங்களுக்குள் ஏகப்பட்ட விவாதங்கள், முரண்பாடுகள், சர்ச்சைகள், கருத்தியல் மோதல்கள்.

ஒரு கட்டத்தில் மத்திய அரசு, இது நாள் வரை பயன்படுத்தப் படாத பிரிவு எண் ஏழினைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை கையில் எடுக்க நினைத்தது. அதுவரை மத்திய அரசோடு கருத்து முரண்கள் இருந்தாலும், பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருந்த உர்ஜித், தன்னுடைய தன்மானத்திற்கும், ரிசர்வ் வங்கியின் மாண்பிற்கும் இது பங்கம் விளைவிக்கும் என்று தெரிந்தவுடன், ராஜினாமா செய்து விட்டார்.

உர்ஜித்தின் ராஜினாமா அவ்வளவு பெரிய செய்தியா?

இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரப் பார்வையில் இது மிக முக்கியமான செய்தி.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்திட்ட நோட்டு தான் இந்திய ஒன்றியத்திற்க்குள் செல்லும். ஒரு நாட்டின் பணத்தில் கையெழுத்திடும் உரிமை பிரமருக்கோ, குடியரசு தலைவருக்கோ, உச்சநீதிமன்ற நீதிபதிக்கோ கிடையாது. அது ரிசர்வ் வங்கி கவர்னருக்கு தான் உண்டு. அவ்வளவு அதிகாரமுள்ள‌ இடம் அது.

1 ) ரிசர்வ் வங்கி என்பது தன்னாட்சி அதிகாரத்தோடு இயங்கக் கூடிய ஒரு அமைப்பு. (Institution). ஒரு கவர்னர் தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்வது என்பது “அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கும் அழுத்தம்” காரணமாக தான் என்பது ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கூட புரியும். அப்படி என்றால், மத்திய அரசு இந்திய ஒன்றியத்தின் ரிசர்வ் வங்கிக்குள் நுழைந்து அதன் அதிகாரங்களை கேள்விக் குறி ஆக்குகிறது என்றுப் பொருள். Governance பார்வையில் இது மோசமானது. இதை தான் இரண்டு பகுதிகளாக “நாம் ஏன் ரிசர்வ் வங்கியோடு நிற்க வேண்டும்” என்று முன்பு எழுதி இருந்தேன்.

2 ) ரிசர்வ் வங்கியின் சுயமான அதிகாரமும், இயங்குதலும் தான் பன்னாட்டு நிதி நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை தரும். ரிசர்வ் வங்கியின் கவர்னரே பாதியில் போனால் அந்த நம்பகத் தன்மை மொத்தமாய் காலியாகும். இது முதலீடுகள், இந்திய ஒன்றியத்தின் மீதான நம்பிக்கை, சர்வதேச சந்தையில் இந்திய அரசு/நிறுவனங்கள் கொடுத்திருக்கும் பல்வேறு வாக்குறுதிகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும். நாம் ஒன்றும் சர்வாதிகாரிகளால் ஆளப்படும் ஆப்ரிக்க நாடல்ல. அங்கே தான் எந்த அமைப்பிற்கும் மரியாதை கிடையாது.

3 ) தொடர்ச்சியாக மத்திய காவி பாஜக அரசு எல்லா அமைப்புகளை சிதைப்பதிலும், அதன் நம்பகத் தன்மைகளைக் குலைப்பதிலும் குறியாக இருக்கிறது. தேசிய புள்ளிவிவர நிறுவனம் கொடுத்த ஜிடிபி கணக்குகளில் முந்தைய காங்கிரஸ் அரசின் வளர்ச்சி விகிதம் அதிகமாக வந்ததால், அதை ஒரங்கட்டி விட்டு, நிதி ஆயோக் உருவாக்கிய பொய்யான வளர்ச்சி புள்ளி விவரங்களை முன் நிறுத்தினார்கள். இது சர்வதேச சந்தையில் இந்திய ஒன்றியத்தின் மீதான பார்வையில் சந்தேகங்களைக் கிளப்பியது. இப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் “தனிப்பட்ட காரணங்களால்” வெளியேறுகிறார் என்று செய்தி அறிக்கை சொல்கிறது. ஆக, காவிகள் தங்களுடைய ஆட்களையும், அடிமைகளையும் எல்லா அமைப்புக‌ளில் ஊடுருவச் செய்தும், நிறுவவும் செய்கிறார்கள்.

அடுத்த ரிசர்வ் வங்கி கவர்னராக அரசு நியமித்து இருப்பது திரு. சக்திகந்தாதாஸ். சக்திகந்தா தாஸ் தான் பணமதிப்பு நீக்கம் (Demonetization) காலத்தில் அரசுக்கு ஆதரவாக வாதாடியும், ஏகப்பட்ட கிறுக்குத்தனமான சட்டவிதிகளையும் கொண்டு வர உதவியவர். இதுநாள் வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தவர்கள் அத்தனைப் பேருமே நிதி, பொருளாதாரம், மேலாண்மை துறைகளில், சர்வதேச பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள். சக்திகந்தா தாஸ் படித்திருப்பது மேல்நிலை வரலாறு. அரசு தங்களுடைய தலையாட்டி பொம்மையாக ஒருவரை வைக்க வேண்டுமென்று நினைத்தே செய்திருக்கிறது. இது ஒட்டு மொத்த இந்திய துணைக் கண்டத்தையே கீழேக் கொண்டு போகும் செயல்.

அர்விந்த் சுப்ரமணியன், தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்தவரை எதுவுமே பேசவில்லை. அந்த பொறுப்பில் இருந்து வெளியேறிய‌வுடன் பணமதிப்பு நீக்கம் (Demonetization) ஒரு மடத்தனம் என்று அமெரிக்காவில் இருந்து சொல்கிறார். நியமித்த எந்த பொருளாதார நிபுணர்களும் முழுமையாக பதவியில் நிலைக்கவில்லை என்கிற dubious பெருமை மோடி அரசுக்கு உண்டு.

உர்ஜித்திற்கு சர்வதேச பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணியோ, பெரு நிதி நிறுவனங்களில் இயக்குனர் பணியோ காத்துக் கொண்டு இருக்கிறது. அவருடைய பணி சிறப்பாய் ஒடும். ஆனால், இந்திய ஒன்றியத்திற்கு?????????

– நரேன் ராஜகோபாலன்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*