Home / கலை / பொங்கச்சோறு – சிறுகதை

பொங்கச்சோறு – சிறுகதை

காலை ஆறு மணிக்கெல்லாம், ஊரின் முக்கியப் புள்ளிகள் அறங்காவலர் நரேந்திரன் வீட்டுக்கு வரத்  தொடங்கிவிட்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் வருவதற்கு முன்பாகவே முருகேசன் வந்திருந்தார். ஆதாயமில்லாமல் துரும்பைக் கூட கிள்ளமாட்டான் முருகேசன் என்பது ஊரில் உள்ள அனைவரும் அறிந்ததுதான். கோயில் கொடைக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அவன் வந்திருப்பது என்ன காரியத்திற்காக இருக்கும் என்று அனைவரும் கிசுகிசுத்தனர். அனைவரும் கலந்துரையாடிய பிறகு தங்களுக்கான வேலைகளை பிரித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

ஆண்டுதோறும் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாவுக்காக பணிகள் மும்முரமாக நடந்தன. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், நாட்டுப்புறக் கலைகள், சாமி ஊர்வலம், சாமிக்கு வேண்டி பூச்சட்டி தூக்குதல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். இறுதிநாளன்று, ஊர்மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கோவில் அன்னதானத்தோடு சேர்த்து அந்த ஊரில் இருக்கும் குழந்தைகள் காப்பகத்திலும் மூன்று வேளை உணவு அளிக்கும் ஏற்பாட்டை கோயில் அறக்கட்டளையே செய்யும்.

கோயில் திருவிழாவுக்கு தேவையான பணிகளுக்கான குத்தகை ஒப்பந்தம் பெறுவதில் பெரிய அளவில் காசு புரளும். மைக் செட், அன்னதானம், தோரணங்கள், வானவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் என அனைத்திலும் காசு பார்த்துவிடும் எண்ணத்துடன் சிலபேர் எப்போதும் ஊருக்குள் சுற்றி வருவர். கோயில் அறக்கட்டளை குழுவில் இருக்கும் யாராவது ஒருவரைப் பிடித்து தங்களுக்கு தேவையான நபர்களுக்கு ஒப்பந்தம் பெற முயற்சி செய்வர்.

அன்று மாலை கூடிய, அறக்கட்டளை கூட்டத்தில் யாருக்கு ஒப்பந்தம் எனும் விவாதம் நடந்தது. கலை நிகழ்ச்சிகளுக்கான ஒப்பந்தம் வழக்கம் போல, கௌதமுக்கு கிடைத்தது. எல்லா ஆண்டும், அனிலுக்கு இந்த ஒப்பந்தம் கிடைக்க காரணமாயிருப்பவர் நரேந்திரன் தான். அறங்காவலர் பதவிக்கு போட்டி உருவானபோது, போட்டியைத் தாண்டி அவரை வெற்றி பெற வைத்தது கௌதம் அள்ளி இறைத்த பணம்தான். அதனாலேயே, ஏதாவது ஒரு ஒப்பந்தம் அவருக்குக் கிடைத்துவிடும்.

அறங்காவலர் நரேந்திரனுக்கு ஊரின் பெரும் பணக்காரர்களின் நட்பும், ஆதரவும் எப்போதும் இருக்கின்றது. அவருக்கு எதிராக ஊருக்குள் யாரேனும் கிளம்பினால், அவர்களை ஒடுக்குவதற்கு அந்த நட்பு அவருக்குப் பயன்பட்டது. தனக்கு எதிராகப் பேசுபவர்கள், அந்த ஊருக்கே எதிரானவர்கள் எனும் தோற்றத்தை உருவாக்கிவிடுவார்கள்.

அன்னதானத்திற்கு தேவையான ஒப்பந்தம் யாருக்கு கிடைக்கும் என முடிவு எடுக்கும் நேரம் வந்தது. வழக்கமாக, குழந்தைகள் காப்பகத்திற்கு உணவு தயாரித்து வழங்கும் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கே ஒப்பந்தத்தை கொடுத்துவிடலாம் என்று ராமசாமி தெரிவித்தார். அதற்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தது. ஆனால், குழுவில் இருந்த சீதாராமனோ இந்த முறை கூட்டம் அதிகமாக வரும் எனக் கூறி, உணவகம் நடத்தும் ஒருவருக்கு அந்த ஒப்பந்தத்தைக் கொடுத்துவிடலாம் என முன்மொழிந்தார். உணவகத்திற்கு ஒப்பந்தத்தை எப்படி கொடுப்பது என்று கேள்விகளும், விவாதமும் தொடர்ந்து கொண்டிருந்ததோடு அன்றைய கூட்டம் முடிவடைந்தது.

சில நாட்கள் கழித்து, அறக்கட்டளையின் பொருளாளரும், அறங்காவலர் நரேந்திரனும் சேர்ந்து முருகேசனின் தம்பி ஆண்டியப்பனுக்கு ஒப்பந்தத்தைக் கொடுத்துவிட்டதாக ஊர்முழுக்க ஒரே பேச்சு இருந்தது. இதுக்குத்தான், முருகேசன் முந்தாநாள் அறங்காவலரைப் பார்க்க வந்திருந்ததாக ஊரே ஏசியது. ஆனால், இதை எல்லாம் யார் போய் கேட்பது என்று மக்கள் தயங்கினர்.

ஓட்டல் வச்சிருக்கிறவனுக்கு ஒப்பந்தம் கொடுக்கணும்-னு சொன்னானுக, ஆனா இந்த ஆண்டியப்பன் காய்லாங்கடை வெச்சிருக்கிறவன், இவனுக்கு எப்படி கொடுத்தீங்க? என்று நேரடியாக கேள்வி எழுப்பினார் ராமசாமி.

எரியிற கொள்ளியில் எண்ணெய் ஊத்துவது போல, வழக்கத்தை விட ஒரு இலைக்கு 50 ரூபாய் அதிகம் கொடுத்து ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும், சாப்பாட்டில் வெறும் புளிச்சோறும், தயிர்சோறும் இடம்பெற்றிருப்பதை பற்றிய‌ குறிப்பு கோயில் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் ராமசாமி பின்னர் திரண்டு அறங்காவலரின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், நரேந்திரனோ இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேயில்லை. ராமசாமியின் குற்றச்சாட்டிற்கு உள்நோக்கம் கற்பித்து மக்கள் முன் பேசினார். ” நான் இந்த ஊருக்காகவும், கோயிலுக்காகவும்தான் 24 மணி நேரமும் யோசிக்கிறேன், வேலை செய்யறேன்; ஆனா, இந்த ராமசாமி பேச்சைக் கேட்டுட்டு என்னையே சந்தேகப்படறீங்களா?…இந்த ஊர்ல டீக்கடை-ல வேலை பாத்துட்டு இருந்த நான், கஷ்டப்பட்டு உழைச்சு இன்னைக்கு இந்த நிலைமைக்கு வந்துருக்கன், அது பிடிக்காம இவுங்க எல்லாம் சேர்ந்து என்மேல அபாண்டமா பழி சொல்றாங்க…நான் வேற; இந்த ஊர் வேறயா…இந்த ஊர்தான என்னோட‌ குடும்பமே!” என மக்கள் எழுப்பிய அன்னதான ஒப்பந்தம் பற்றி எந்த பதிலும் சொல்லாமல், எல்லாம் முறைப்படிதான் செய்துள்ளோம் என்று கூறினார்.  கூட்டத்தில் இருந்த சிலர் அறங்காவலரின் உரையைக் கேட்டவாறே, ராமசாமியின் பற்றிய பழைய செய்திகளை பேசி கூட்டத்தைக் கலைத்தனர்.

கலைந்து சென்ற மக்களைப் பார்த்துக் கொண்டே நரேந்திரனிடம்,  ” உங்களப்பத்தி கேள்வி கேட்டா, ஊரோட நல்லதுக்கு-னு சொல்லி ஊருக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிறதா?…ஊருங்கறது யாரு? இங்க கூடி நின்ன  மக்கள் தான!…உங்கள கேள்வி கேட்டாலே ஊருக்கே விரோதிங்கிற உங்க பொங்கச்சோறும், பூசாரித்தனமும் ஒருநாள் இந்த மக்களுக்கு தெரியவரும், அந்தநாள் ரொம்பதூரத்துல இல்ல..” என சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து சென்றார் ராமசாமி.

கதிரவன்
இளந்தமிழகம் இயக்கம்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*