Home / கலை / காலச்சந்திப்பு

காலச்சந்திப்பு

தோழர். தனஞ்செயனின் “காலச் சந்திப்பு ” கவிதை நூலை இன்று வாசித்தேன். புத்தகத்திற்கு ஏன் இந்த தலைப்பு என உணர்த்தின காலம் குறித்த கவிதைகள். காலத்தை கிழித்து போட்டிவிட்டன கவிதைகள், அதில் எது நிகழ்காலம், எது இறந்தகாலம், எது எதிர்காலம் எனத் தெரியவில்லை, கவிதைகளை படித்தபின் காலம் குறித்த குழப்பம் நீண்டது.  “அவரவர் காலம்” என்ற கவிதையின் சில வரிகள்.

“ஆயிரம் கால்  மரவட்டைக்கு
எந்தக் காலால் எந்த நொடியை
கடந்தோமென‌த் தெரியுமா? ”

காலச் சந்திப்பு என்ற தலைப்பிலான கவிதையின் வரிகள்.

நாம் தொலைத்த மனிதர்கள்
தொலைந்த அந்தந்தக் காலங்களோடு
உறைந்திருக்கிறார்கள்…

எதிர்பாரா சந்திப்பில்
இரண்டு வெவ்வேறு காலங்கள்
கைகுலுக்கும் ரசவாதத்தை
நிகழ்த்துகிறார்கள்..

இந்த கவிதை தொகுப்பு காலத்தை மட்டுமே பேசுகின்றதா என்றால் காலத்தையும் பேசுகின்றது என்றே சொல்ல முடியும். மண்புழுவின் மண்ணை மனிதன் பிடுங்கி காங்கிரிட் சாலைகளாகவும், வீடுகளாகவும் மாற்றி கொண்டதை பேசுகின்றது ஆதித்தேடல் கவிதை. கானகத்தின் ஒற்றைக்கணு கவிதையோ காலத்தை கடந்தலைய வைக்கின்றது.  ஒன்றாமலும் இருப்பதில்லை கவிதை சாயலையும், சுயத்தையும் ஒருங்கே பேசுகின்ற‌து. சாமியாடிகளின் உளவியலை பேசுகின்றது “குலசாமியின் பரிகாரம்”. அதிகாரத்தின் முகத்தை காட்டுகின்றது “வதந்தி”. இது போல இந்த கவிதை தொகுப்பு பலவற்றை தொட்டு செல்கின்றது, கடவுள் “கல்லாப்பெட்டி கடவுளாக” வருகின்றார். சித்தார்த்தன் புத்தனான பின்னர் தனது கதையை பேசுகின்றது சித்தார்த்தனின் வாள்.

கல்லாப் பெட்டி கடவுள்

வாசனை வத்தி
வாடாத பூமாலை
வாழைப்பழ நெய்வேத்தியம்
ஓயாத ஒலிநாடா மந்திரங்கள்
என எதற்கும் குறைச்சலில்லை
கடவுளுக்கு,
கல்லாப்பெட்டியைக் காவல் காத்தபடி
வேலை வாங்கும்
முதலாளியின் அருகிலிருக்கும் வரை

முதலாளியின் ஏச்சுக்கும்
பேச்சுக்கும் முகம் கோணாத‌
வேலைக்கார முனுசாமிதான்
தோணும் போதெல்லாம்
பச்சை பச்சையாய் திட்டுவான்
கடவுளை.

2005லிருந்து 2017 வரையிலான பத்துக்கு மேற்பட்ட‌ ஆண்டுகளில் தான் எழுதிய 38 கவிதைகளையும் நெய்துள்ளார் தனஞ்செயன். இந்த கவிதை தொகுப்பை “பன்முகம்” பதிப்பகம் வெளியிட்டுள்ளது.அரசியல் செயற்பாட்டாளராவது வரை கவிதை , கதை என பன்முகம் கொண்டலைந்தவர்கள் களத்திற்கு வந்த பின்னர் கட்டுரையாளராக சுருங்கி விடும் சூழ்நிலையில் தனது பன்முகத்தை இழக்காமல் அரசியல் செயற்பாட்டாளராக தொடர்கின்றார் தோழர்.தனஞ்செயன்.  கவிதை, காலம், தமிழ் என எதை நேசிப்பவர்களாக இருந்தாலும் இந்த நூல் உங்களை ஈர்க்கச் செய்யும்.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்.

குறிப்பு – ஓர் கவிதை நூல் குறித்த எனது முதல் கட்டுரையிது. கவிதைகளின் இலக்கண, இலக்கியம் குறித்த பெரிய‌ வாசிப்பில்லாதவன் நான். இக்க‌ட்டுரை ப‌ற்றிய‌ உங்க‌ள‌து க‌ருத்துகளை ப‌கிருங்க‌ள்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*