Home / அரசியல் / மோடியின் டிஜிட்டல் இராணுவம்

மோடியின் டிஜிட்டல் இராணுவம்

குறிப்பு: சமூக வலைதளங்களில்(Twitter, Facebook..) ஒருவரைக் கடுமையாகவும் மோசமாகவும் திட்டியோ, அவரைத் தூண்டிவிடும் விதத்திலோ பதிவிடுவதை குறிக்கும் சொற்கள் தான் Troll, Trolling என்பவை. இப்படிப் பதிவிடுபவர் Troll, Troller என்று அழைக்கப்படுகிறார்.

—-

இந்தியாவில் உள்ள சமூக வலைதளம் வலதுசாரி அவதூறு பதிவர்களால் (Trolls) நிரம்பி இருக்கிறது, அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிகையாளர்கள், எதிர் கட்சி அரசியல்வாதிகள், கேள்வி கேட்பவர்களை அவமதிக்கவும், பாலியல் ரீதியில் துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

இவர்களெல்லாம் யார்? அவர்கள் ஏன் இதை செய்கிறார்கள்? அவர்கள் எப்படி அமைப்பு ரீதியாக உருவாக்கப்படுகிறார்கள்? என்ற கேள்வியை முன்வைத்து முன்னிலை அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், சந்தை படுத்துநர்கள், அவதூறு பதிவர்கள் (ட்ரால்கள்) உள்ளிட்டோரிடம் செய்யப்பட்ட நேர்காணல்கள் உட்பட இரண்டு ஆண்டு கள ஆய்வு செய்து ஸ்வாதி எழுதியுள்ள புத்தகமே “நான் ஒரு ட்ரால்” – “பா.ஜ.க-வின் டிஜிட்டல் இராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே”.

பிரதமர் மோடி பின் தொடர ஆசிர்வதிக்கப்பட்ட அவதுறு பதிவர்கள்(Trolls), அவதூறு பதிவர்களுக்கும் பா.ஜ.கவிற்குமான தொடர்பு, நான் ஒரு அவதூறு பதிவர் , மற்ற சில ட்ரெண்டுகள், வேர்களை நோக்கி: ஆர்.எஸ்.எஸ்க்கும் அவதூறு பதிவர்களுக்குமான தொடர்பு என இந்த புத்தகம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பெண்களை, எதிர்கட்சிகளை, பத்திரிகையாளர்களை, பா.ஜ.க அரசை நோக்கி கேள்வி எழுப்புபவர்களை ஆபாச வசைமாறி பொழிவதும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதும், கொலை மிரட்டல் விடுப்பதையும், சமூக நல்லிணக்கத்தை குலைத்து வன்முறையை தூண்டுகின்றார்கள் மோடியின் ஆசிர்வாதம் பெற்ற‌ அவதூறு பதிவர்கள். உலகிலேயே இந்திய பிரதமர் திருவாளர்.மோடி மட்டுமே மேலே கூறியுள்ள‌ சட்டத்திற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வரும் அவதூறு பதிவர்களை பின் தொடர்கின்றார். உலகில் வேறு எந்த பிரதமரோ, அதிபரோ இதுவரை செய்யாத செயலிது.

பலமுறை இந்த அவதூறு பதிவர்களின் செயல்கள் பிரத‌மரின் ட்விட்டர் கணக்கிற்கு சுட்டிக்காட்டப்பட்டும் இவர்களில் ஒருவரை கூட அவர் இதுவரை நீக்கியதில்லை. அதே நேரம் இந்த அவதூறு பதிவர்கள் அனைவரையும் மோடி நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்களை தங்களது முகப்பு படங்களாகவும் (Profile Picture) அவர்கள் வைத்துள்ளனர். இதன் மூலம் பிரதமரின் ஆசி பெற்ற அதிகாரப்பூர்வ சமூகவலைதள அடியாட்களாக அவர்கள் செயல்பட்டு வருகின்றார்கள்.

கோவையிலும், தேனியிலும் மோடி பிரச்சாரம் செய்யும் பொழுது தங்கள் கட்சி பெண்களின் நலன் சார்ந்து செயல்படும் கட்சி என்ற செய்தியை படித்த அதே நாளில் மோடியின் ஆதரவு பெற்ற அவதூறு பதிவர்கள் பெண் பத்திரிகையாளர்களை, எதிர் கட்சியினரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் பதிவுகளை நான் படித்தது நகைமுரணாக இருந்தது.

பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ளும் படங்களை பகிர்ந்ததற்காக இந்த அவதூறு பதிவர்களின் பக்கங்கள் ட்விட்டர் நிர்வாகத்தினால் தடை செய்யப்பட்ட‌ பொழுது பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர்களே அந்த தடையை எதிர்த்து ட்விட் செய்து அந்த பக்கங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார்கள். இவற்றை எல்லாம் ஆதாரப் பூர்வமாக விளக்குகின்றது நூலின் முதல் இரண்டு பிரிவுகள்.

மாற்றம் வேண்டும், இந்தியா வளர வேண்டும் என 2013ல் இருந்தே மோடி பிரதமர் ஆவதற்காக தன்னார்வலராக பா.ஜ.க-வின் சமூக ஊடக பிரிவில் சேர்ந்து 24*7 பணி புரிந்த‌வர் கோஸ்லா. மோடி பிரதமரான பின்னரும் தொடர்ந்து அவர் பா.ஜ.க-வின் சமூக ஊடக பிரிவில் 2015 இறுதி வரை பணிபுரிந்தார். மாற்றத்தை கொண்டு வருவார், வளர்ச்சியை கொண்டு வருவார் என தான் எதிர்பார்த்த ஒரு தலைவரும், அவரின் கட்சியும் ஆட்சிக்கு வந்த பின்னரும் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து வெறுப்பை மட்டுமே பரப்பி வந்ததால் அவர் 2015 இறுதியில் பா.ஜ.க-வின் ஊடக அணியிலிருந்து விலகினார். அவர் விலகுவதற்கு முன்னர் பதிந்த ட்வீட்.

“நான் ஒரு மத நம்பிக்கையாளர் என்பதுடன் என்னுடைய இந்து மதத்தில் இத்தையக வெறுப்பிற்கு இடமேயில்லை. இவர்கள்(பா.ஜ.க) இப்படியே போய் கொண்டிருந்தால் இந்து மதத்தையே அழித்துவிடுவார்கள். அவர்கள் வெற்றி பெற்ற பின்னரும் கூட இருதுருவமாக்குதல் (நாம் (எதிர்) அவர்கள்), வெறுப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நாம் ஏன் முஸ்லிம்களை கெட்டவர்களாக காட்டிக் கொண்டும், போட்டோஷாப்பில் ஆபாசப் படங்களை உருவாக்கிக் கொண்டும் இருக்கிறோம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு ஒரு இளம் மகன் இருக்கிறான் பாகிஸ்தானை பிரதி எடுக்கும் ஒரு இந்தியாவில் நான் அவனை வளர்க்க விரும்பவில்லை. எனக்கு அவனைப் பற்றிய கனவு இருக்கிறது, அவன் நல்ல மனிதனாக இருக்க வேண்டுமே தவிர சகிப்பின்மையின் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்க கூடாது.”

ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் அரசியல் பிரிவே பாரதிய ஜனதா கட்சி. ஆர்.எஸ்.எஸ் “ஷாகா”க்கள் (பயிற்சி வகுப்புகள்) நடத்தி சிறுவர்களை, இளைஞர்களை தங்கள் பக்கம் மடை மாற்றுகின்றார்கள். இதை நவீனமயப்படுத்தி ஐ.டி.ஷாகாக்கள் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஒப்புக்கொள்ள வைத்தவர் இன்று பா.ஜ.க கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராம் மாதவ். இன்று சென்னை, பெங்களூர், பூனே, குர்கான்(டெல்லி) என பெரும்பாலான நகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உள்ளேயே ஐ.டி.ஷாகாக்கள் நடக்கின்றன.

“சங்க பரிவாரத்தைப் (R.S.S) பற்றிய ஒரு விசயம் என்னவென்றால் அவர்கள் மிகச்சிறந்த வகையில் சூழ்நிலையோடு பொருந்திப் போய்விடுவார்கள் என்பதுதான். வதந்திப் பிரச்சாரங்கள்தான் அவர்களுடைய பலம், அதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். எப்போதுமே அப்படித்தான். ஊடகம் வேண்டுமானால் மாறியிருக்கலாம் (முன்பு செவி வழியாக இன்று வாட்சப், ட்விட்டர்….). ஆனால் செய்தி மாறியிருக்கின்றதா என்பது சந்தேமே” என சொல்கின்றார் மூத்த பத்திரிகை ஆசிரியர் ஹெச்.கே.துவா.

இணையத்தில் வதந்தி பரப்புவதோடு அவர்கள் நின்றுவிடுவதில்லை, அதனை கொண்டு களத்தில் கலவரங்களையும் அவர்கள் உருவாக்குகின்றார்கள். ஜே.என்.யூ பல்கலைகழகத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக கூறி போலி காணொளிகளை உருவாக்கி அதன் மூலம் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்களை கைது செய்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் பொழுது அவர்களை தாக்கியதோடு மட்டுமல்லாமல், அதை நியாயப்படுத்தவும் செய்தவர்கள் பா.ஜ.க-வினர். வட மாநிலங்களில் மாட்டை கடத்துகின்றார்கள் என வதந்தி பரப்பி நடக்கும் கொலைகள், தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கலவரங்கள் என எல்லாவற்றிற்குமே அவர்களுக்கு மூலதனமாக அவர்களின் சமூக வலைதள ஊடக பிரிவு பயன்படுத்தப்படுகின்றது.

அதனால் அவர்களை டிஜிட்டல் இராணுவம் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் ஸ்வாதி. உண்மையில் அவர்கள் டிஜிட்டல் கூலிப்படைகளாகவே செயல்படுகின்றார்கள். இந்த கூலிப்படையை வைத்து வெறுப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்து சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரங்களை நடத்தி, மக்களை ஒருதுருவமாக்கி கிடைக்கும் வாக்குகளை பா.ஜ.க அறுவடை செய்கின்றது.

பா.ஜ.க-வின் டிஜிட்டல் கூலிப்படையைத் தாண்டித் தான் “Go Back Modi”யை தமிழர்கள் ட்விட்டரில் உலகளவில் ட்ரென்ட் செய்தது உண்மையிலேயே பெரிய சாதனை. மக்களின் ஒற்றுமை மட்டுமே கூலிப்படைகளை தோற்கடிக்க முடியும் என்பதையும் இந்தியாவிற்கு உணர்த்திய நிகழ்வு அது.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்.

“நான் ஒரு ட்ரால்” – நூல் “எதிர் வெளியீடு” வெளியிட்டுள்ளது. அவர்களின் இணைய முகவரி www.ethirveliyedu.in .

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*