Home / கலை / திராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்

திராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் என்று எங்கு நோக்கினும் தேர்தல் , தேர்தல் எனத்திரியும் இந்நாளில் அதிலிருந்து வெளி வந்து நண்பர். கவிதா சொர்ணவள்ளியின் பொசல் சிறுகதை தொகுப்பை வாசித்தேன். முதல் இரு சிறு கதைகள் என்னை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தாமல் அமைதியாக சென்றன, ”கதவின் வழியே மற்றொரு காதல்” சிறுகதை பற்றி ஏற்கனவே அவர் சிலமுறை எழுதி இருந்ததால் அந்த கதையையும் கடந்து விட்டேன்.

ஆனால் ”அம்மாவின் பெயர்” சிறுகதையை என்னால் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. ”செல்லம்மா”வாக தொடங்கும் அம்மாவின் பெயர், பாரிஜாதம் அம்மாவாக, தட்டி வீட்டுக்காரியாக , அழகம்மாவாக, மனநலம் பாதிக்கப்பட்டவளாக, திராவிட செல்வியாக, இறுதியில் அவ எங்க பொசலு தாயி பொல மாடி பாட்டி சொல்லும் பொழுது தொண்டையில் இருக்கும் நீர் வற்றி அந்த பொல மாடி பாட்டியைப் போலே என் கண்களிலும் நீர் எட்டி பார்த்தது. எந்த அழகை இந்த சமூகம் அவளது பருவ வயதில் கொண்டாடியதோ, அதே அழகை வைத்து அவளை இந்த சமூகம் வீழ்த்தி மனநோயாளி ஆக்கியது.

நேற்று என் அத்தைக்கும், என் இல்லாளுக்குமான உரையாடல் இப்படியிருந்தது, பட்டு சேலை கட்டிட்டு போனா இந்த வயசிலையும் மினிக்கிட்டு திரியுறா பாருன்னு சொல்றாளுங்க, காட்டன் புடவை கட்டிட்டு போனா மருமவளுக இன்னைக்கும் இதையே ஏன் கட்டிட்டு வந்திருக்க அதான் பீரோல்ல அம்புட்டு பட்டு புடவை வைச்சிருக்கல்ல அதை கட்டலாமுல்லன்றாளுவ, நான் என்னத்தை தாண்டி செய்ய என அவர்களது சொந்தத்தில் இருந்த ஒருவர் புளம்பினார். ”உன் கதைகள்ல எங்கயோ ஒரு உண்மை ஒளிஞ்சுட்டு இருக்கு, அதுதான் படிக்கிறவங்களை தொந்தரவு செய்யுது…” என்று நண்பர்களும், விமர்சகர்களும் சொல்லியதாக தன்னுரையில் கவிதா சொல்லியிருப்பது சத்தியமான உண்மை.

திராவிடர் கழகமும், திமுகவும் உச்சத்தில் இருந்த நேரத்தில் பலர் தங்களது குழந்தைகளுக்கு திராவிட இயக்க பெயர்களைச் சூட்டினார்கள், என் பெரியப்பா திமுக அபிமானி அவரின் முதல் மகளுக்கு கலைஞர் வைத்த பெயர் தமிழரசி. ஆனால் இதுவரை எந்த ஒரு கதையிலும் பெயருக்கான காரணத்தையும் விளக்கி இது போன்ற பெயரை ஒரு கதை மாந்தருக்கு வைத்ததை நான் படித்த கதைகளில் இல்லை, எனது வாசிப்பனுபவம் குறைவு என்பதால் நான் படிக்காத புத்தகங்களில் அப்படியான பெயரும் , காரண காரியமும் இருந்திருக்கலாமோ என்னவோ.

”அம்மாவின் பெயர்” சிறுகதையை படித்த பின்னர் மீண்டும் முதல் மூன்று கதைகளையும் படித்தேன், கிராமத்து கடவுள்களைப் போல நகரத்து கடவுள்கள் நமக்கு அவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை, கிராமத்து கடவுள்களான சுடலை மாடனுக்கும், மகாமுனிக்கும் நமக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லாததால் நம் வாழ்வில் அவர்கள் இரண்டற கலந்து விடுகின்றார்கள் ஆனால் நகரத்தில் இருக்கும் கடவுள்களுக்கு நமக்கும் இடையில் இடைத் தரகர்கள் புகுந்துவிடுவதால் நம்மால் அவர்களுடன் ஒன்ற முடிவதில்லை என்பதை சொல்லாமல் சொல்லி செல்கின்றது “விலகிப் போன கடவுள்கள்” சிறுகதை.

”கதவுக்கு வெளியே மற்றொரு காதல்” என்ற சிறுகதையை பாட புத்தகமும் இரும்பு கை மாயாவியையும் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் படிக்காமல் ”ஒரு செடியில் ஒரு முறை தான் பூ பூக்கும்” என காதலுக்கு தொடர்ந்து விரிவுரை எழுதிய சினிமாக்களை வெறித்தனமாக கண்டு வளர்ந்த எனது பால்யத்தில் படித்திருந்தால் கரண்ட் ஷாக் அடித்தது போலாகி இருப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன. ஆனால் பெரியாரையும், பெண்ணுரிமையையும், ப்ரணயம் போன்ற படங்களையும் கண்டு ஓரளவு முதிர்ச்சி அடைந்த நிலையில் படித்ததால் ஏனோ அதிர்ச்சி ஏற்படவில்லை.

இப்படியே ஒவ்வொரு கதையையும் பற்றி ஓரிரு வரிகள் எழுத வேண்டும் என தோன்றினாலும் , அப்படி எழுதி விட்டால் அது பொசல் சிறுகதைக்கான கோனார் நோட்ஸாக மாறும் அபாயம் இருக்கின்றது. ஆனாலும் ரவியண்ணணையும், யட்சி ஆட்டைத்தையும், கிருஷ்ணாவின் அம்மாவையும், மறக்க முடியவில்லை. அதே போல வள்ளி மச்சானை எழுதாமல் இருக்க முடியவில்லை.

“தாழைக்கு இந்தப் பக்கமாச் சேரிக்காரர்கள், அந்த பக்கமாக மேலத்தெருக்காரர்கள் என்று கல்மண் பாராமல் ஓடிக்களிக்கும் (தாமிரபரணி)ஆற்றைக்கூடப் பிரித்து வைத்திருக்கும்” சாதி வெறி சனியன்கள் நிரம்பிய ஊரில் சேரியில் பிறந்து மேலத்தெருக்காரியை காதலிக்கும் வள்ளி மச்சானை படிக்கும் பொழுது மாரியின் ”பரியன்” தான் நினைவுக்கு வந்தான் பரியனை கருப்பி காப்பாற்றிவிட்டாள், வள்ளி மச்சானை யார் காப்பாற்றுவார்? எத்துப்பாறையில் மறைந்திருந்த சுலோச்சனாவின் உள்ளங்கை வியர்வை என்னிலும் பரவியது….

இதுமட்டுமன்றி சிறுகதை தொகுப்பை படித்து முடித்தவுடன் நம்முடைய பருவ வயதின் கோடை விடுமுறைகள், நம்முடைய ஆச்சிகள், அம்மைகளின் நினைவை நம் மனது அசைபோடத் தொடங்கிவிடும்.

இந்த சிறுகதை தொகுப்பிற்கு “பொசல்” ஐத் தவிர வேறு பெயர் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்காது. அம்பை முன்னுரையில் சொல்வது போல இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளும், அதை எழுதிய கவிதாவும் பொசலே.

நற்றமிழன்.ப

பி.கு – அம்மாவின் பெயர் சிறுகதை குறும்படமாக எடுக்கத் தக்க சிறந்ததொரு சிறுகதை.

”பொசல்” சிறுகதை தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளார்கள். தொடர்பு எண் – 8754507070

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*