Home / அரசியல் / பா.ஜ.க எப்படி வெல்கிறது ?

பா.ஜ.க எப்படி வெல்கிறது ?

பா.ஜ.க எப்படி வெல்கிறது ? பிரசாந்த் ஜா-வின் நூல் ஒரு பார்வை.

2016 நவம்பர் 8 ஆம் தேதி 500,1000 செல்லாக்காசாக‌ அறிவிக்கப்பட்ட பின்னர் 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரு வெற்றி பெற்றது எப்படி ? பா.ஜ.க உயர் சாதி இந்துகளுக்கான கட்சி மட்டுமே தானா? இன்றும் அவ்வாறு உள்ளதா? மிஸ்டுகால் கட்சியும், உ.பி வெற்றியும்? ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க வெற்றிக்கு யார் காரணம் ? இப்படியான பல கேள்விகளுக்கான பதிலை பிரசாந்த் ஜாவின் “பா.ஜ.க எப்படி வெல்கிறது?” என்ற நூல் கொடுக்கின்றது.

உ.பி சட்டபேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதன் காரணங்களை முதலில் பார்ப்போம்.

சாதி வாக்குகள்:

சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு தளமான யாதவர்களைத் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஜாதவ்கள் தவிர்த்த தாழ்த்தப்பட்ட சாதிகளையும் தங்கள் கட்சியுடன் கூட்டணி சேர்த்தது பா.ஜ.க. ஏற்கனவே பா.ஜ.க-வின் அடித்தளமான உயர் சாதியினரின் (மொத்த மக்கள் தொகையில் 25%) எண்ணிக்கையுடன் இந்த சாதிகளின் எண்ணிக்கையும் சேரும் பொழுது கணிசமான வாக்குகளை கைப்பற்றும் திட்டத்தின் அடிப்படையிலேயே பா.ஜ.க அங்கு வேலை செய்தது.

இந்து – இசுலாமியர் தேர்தல்:

மேற்கூரிய எல்லா சாதியினரும் பா.ஜ.க-விற்கு வாக்களிப்பதற்காக இந்த தேர்தலை பா.ஜ.க இந்து இசுலாமியர்களுக்கிடையிலான தேர்தலாக பிரச்சாரம் செய்ததன் மூலம் அவர்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தியது.

பா.ஜ.க தலைமை அலுவலகத்தின் மூலமாக மட்டுமே 800 வாட்சப் குழுமங்கள் உ.பி தேர்தலின் போது நிர்வகிக்கப்பட்டு வந்தன, இக்குழுக்கள் மூலமாகவும், சமூகவலைதளமாகிய முகநூல் மூலமாகவும், “இந்துக்களின் பாதுகாப்பின்மை”” எனும் கருத்து கட்சியால் பரப்பப்பட்டது. இவையெல்லாம் உண்மையல்லவே என ஒரு கட்சித்தலைவரிடம் விசாரித்தேன், அதற்கு அவர், “சகோதரரே, அதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதாக காட்டிக்கொள்ள வேண்டும். இது இந்துக்களை ஆத்திரப்படுத்தும். இசுலாமியர்களுக்கு எதிராகத் தங்கள் அனைவரும் திரளவேண்டும் என்பதை அப்போதுதான் அவர்கள் உணர்வார்கள்” என அவர் கூறினார். – பா.ஜ.க எப்படி வெல்கிறது ? நூல் .பக்கம் – 199

அதே நேரம் எதிர் கட்சிகளில் காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி அமைத்தும், மாயாவதி தனியாகவும் போட்டியிட்டதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பிரிந்தன.

மிஸ்டுகால் கட்சி:

2014 நாடாளுமன்றத் தேர்தல் பெரு வெற்றிக்கு பின்னர் பா.ஜ.க கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்தும், குறிப்பாக எல்லா வாக்குசாவடிகளுக்கும் குழுக்களை அமைக்கும் பணிகளை கட்சி தொடர்ந்து மேற்கொண்டது. உத்திராபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டிற்கு முன்னர் கட்சியின் செயலாளராக ஆர்.எஸ்.எஸில் இருந்த பன்சால் சேர்க்கப்பட்டார். அவர் மாநிலம் முழுவதும் சுற்றி வந்து கட்சியின் 90% பதவிகளை பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினரே உள்ளனர் என கண்டறிந்து அதை முழுவதுமாக மாற்றாமல் அதே சமயம் மேலும் அதிக பதவிகளை உருவாக்கி அதில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை சேர்த்தார்.

அதே நேரம் கட்சியின் உறுப்பினர்களை அதிகப்படுத்தும் பணியையும் அவர்கள் செயல்படுத்தினார்கள். மிஸ்டுகால் கொடுப்பதன் மூலம் கட்சியில் நிறைய‌ உறுப்பினர் உருவானார்கள். இதில் குளறுபடிகள் இருந்தாலும், 30% அளவுக்கு போலி உறுப்பினர்களை கழித்தாலும் பெரிய அளவிலான உறுப்பினர்களை பா.ஜ.க உறுப்பினர்களாக சேர்த்தது. உறுப்பினராக இணைந்தவர்களின் முழு சரியான விவரங்களை சேகரிக்கும் பணியையும் செய்தனர். தொடர்ச்சியாக பணி செய்ததன் மூலம் வாக்குசாவடி அளவிலான குழுவை தொடர் செயற்பாட்டிலேயே வைத்திருந்தது பா.ஜ.க கட்சி.

செல்லாக்காசு :

86% பணம் செல்லாக்காசாக மாற்றப்பட்ட‌ நடவடிக்கை மோடி அரசின் மிக மோசமான நடவடிக்கை ஆகும். இது போன்ற ஒரு நட‌வடிக்கை வேறொரு நாட்டில் எடுக்கப்பட்டிருந்தால் மிகப்பெரும் பின்விளைவுகளை அந்த அரசு சந்தித்திருக்கும், ஆனால் அப்படியானவை பெருமளவில் இன்றி மிகப்பெரிய மாநிலம் ஒன்றில் பா.ஜ.க வென்றது எப்படி?

2016 நவம்பருக்கு பின்னர் தொடர்ந்து பலமுறை மோடி உத்திரபிரதேசத்தில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அந்த பொதுக்கூட்டங்களில் எல்லாம் செல்லாக்காசு நடவடிக்கையின் மூலம் பெரும் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஏழைகளுக்கு தங்கள் பணத்தை கொடுக்கப் போவதாகவும், அந்த பணத்தை ஏழைகள் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு திருப்பித்தர தேவையில்லை என்று திரும்ப, திரும்ப கூறினார்.

இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் பாதிக்கக்கப்பட்டுள்ளார்கள், இந்த பணி மூலம் நாட்டுக்கு பெரிய நன்மை கிடைக்கின்றது என அவர் தொடர்ந்து பேசியும், ஊடகங்கள் மூலமாகவும் பெரும்பான்மை மக்களை அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக மாற்றியுள்ளனர். செல்லாக்காசினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை வணிகர்கள் 2017ல் பா.ஜ.க-விற்கே வாக்களித்துள்ளார்கள்.

செல்லாக்காசு நடவடிக்கையை அப்பொழுது எதிர்கட்சிகள் பெரிய அளவில் எதிர்த்து நாடு முழுவதுமான பிரச்சாரமாக கொண்டு செல்லவில்லை, ஒருவேளை அவர்கள் பெரிய அளவில் எதிர் பிரச்சாரம் அன்று செய்திருந்தால் அதையும் பா.ஜ.க தனக்கு ஆதரவாக மாற்றியிருக்கும். எதிர்கட்சிகளின் ஊழல் பணம் பாதிக்கப்பட்டதனால் தான் அவர்கள் இதை எதிர்க்கின்றனர் என அவர்களுக்கு எதிராக மாற்றியிருக்கும். ஆனால் இரண்டாண்டுகளுக்கு பின்னரும் அதை பெரிய அளவில் எதிர் பிரச்சாரமாக காங்கிரஸ் செய்யவில்லை. ஏன் கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட இதை அகில இந்திய அளவிலான பிரச்சாரமாக கொண்டு செல்லவில்லை.

எதிர்கட்சியை உடைத்தல்:

“உன்னால் வெற்றி பெற முடியாத பொழுது, வெற்றி பெருபவனை உன் அருகில் வைத்து கொள்” என்ற கொள்கையை பின்பற்றும் அமித் ஷா. எதிர்கட்சிகளில் இருந்த தலைவர்களை பா.ஜ.க கட்சியில் சேர்க்கும் செயலை பெரிய அளவில் செய்தார். இதன் மூலம் அந்த தலைவர்கள் சார்ந்த ஆதரவு வாக்குகளும் பா.ஜ.க கட்சிக்கு கிடைத்தது.

ஆர்.எஸ்.எஸ்:

“வீட்டுக்கு வீடு சென்று, மக்களை அமைதியான முறையில் தொடர்பு கொள்வதே எங்கள் பணியாகும். தேசத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, உலகளவில் இந்தியாவை உயர்த்தத் துடிக்கின்ற, இராணுவத்தின் உறுதித்தன்மையை மேம்படுத்த விரும்புகின்ற, அனைவரும் முன்னேற வேண்டும் எனவும் விரும்புகின்ற ஒரு கட்சி, ஒரு தலைவருக்கு வாக்களிக்குமாறு மக்களை தூண்டுவதே எங்கள் பணியாகவிருந்தது” – ஆர்.எஸ்.எஸ். இணை பொதுச்செயலாளர் கிருஷ்ண கோபால் 2017 உ.பி சட்ட பேரவை தேர்தலின் போது – “பா.ஜ.க எப்படி வெல்கிறது”? நூல், பக்கம் 182-183.

இதுமட்டுமின்றி பா.ஜ.க‌ பிரசாந்த் கிசோர் தலைமையிலான‌ தேர்தல் வெற்றிக்காக மட்டும் பணியாற்றும் கார்ப்பரேட் கம்பெனியையும் 2014 தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் பயன்படுத்தியது.

இது போன்ற பல காரணிகளையும் வைத்து தான் உ.பி-யில் பா.ஜ.க பெரும்பான்மையாக வென்று ஆட்சியமைத்தது, பா.ஜ.க-வினர் கூறியது போல மோடி அலையை மட்டுமே வைத்து அவர்கள் வெல்லவில்லை. சாதி கூட்டணிகள்+ இந்து-இசுலாமியர் பிரிவினை+ஆர்.எஸ்.எஸ். கட்சியின் பணி+ பெரும்பான்மை ஊடகங்களின் மோடி ஆதரவு இவை எல்லாவற்றையும் வைத்து தான் அவர்கள் வென்றார்கள்.

இதே போலவே வட-கிழக்கில் எதிர்கட்சி தலைவர்களை பா.ஜ.க-வில் சேர்த்து, மாட்டிறைச்சிக்கு எதிராக பேசாமல், அங்குள்ள பிரச்சனைகளை மட்டும் பேசியது. மணிப்பூரில் பா.ஜ.கவின் கூட்டணியில் இருந்த கிறிஸ்தவ வேட்பாளர்கள் பி.ஜே.பி என்றால் பாரதீய ஜீஸஸ் பார்ட்டி என சொல்லுவதன் மூலம் தேர்தல் வெற்றிக்காக எந்த அளவு மக்களை ஏமாற்ற முடியுமோ அந்த அளவு ஏமாற்றியது பா.ஜ.க.

சரி இந்த வெற்றிகள் எல்லாம் நிலையானவையா என்ற கேள்விக்கும் பதில் புத்தகத்திலேயே இருக்கின்றது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவமும், உரிமையும் கிடைக்கும் என்று கூறி உ.பி-யில் வெற்றி பெற்ற பா.ஜ.க முதல்வராக தாக்கூர் என்ற‌ மேல்சாதியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை தான் தேர்தெடுத்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் தாக்கூர் சாதியினருக்கும், தலித்துகளுக்கும் இடையிலான மோதலில் அரசு தாக்கூர்களை ஆதரித்து, தலித்துகளை கைகழுவியது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் காவி வானரங்கள் நடத்திய தாக்குதல்களில் இசுலாமியருடன், தலித் மக்களும் பல இடங்களில் தாக்கப்பட்டனர்.

அதே போல செல்லாக்காசு நடவடிக்கையினால் பெரும் பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என அன்று மோடி கூறியது இரண்டாண்டுகளை கடந்த பின்னரும் நடக்கமல் இருப்பதும், பெரும்பணக்காரார்களின் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக பா.ஜ.க.வே மாற்றி கொடுத்ததை காங்கிரசும் அம்பலப்படுத்தி உள்ளதால் சிறு,குறு வணிகர்களும், ஏழை மக்களும், நடுத்தர வகுப்பினரும் பா.ஜ.க-வின் உண்மை முகத்தை கண்டுள்ளார்கள். மேலும் வளர்ச்சியை உருவாக்குவார்கள் என நம்பி பா.ஜ.க-விற்கு வாக்களித்த நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதியினர் காவி வானரங்களால் நடத்தப்பட்ட கலவரங்களினால் பா.ஜ.க எதிர் மனநிலையில் உள்ளனர்.

ஸ்வச் பாரத், மேக் இன் இந்தியா, அதி நவீன‌ நகரங்கள் உருவாக்குவது என பா.ஜ.க அறிவித்த எல்லா திட்டங்களும் தோல்வியை தழுவின. செல்லாக்காசு, ஜி.எஸ்.டி அமலாக்க குளறுபடிகள் மூலம் பொருளாதார வீழ்ச்சி, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் எனக் கூறிய மோடியின் ஆட்சியில் சென்ற ஆண்டின் வேலைவாய்ப்பினை உச்சத்தை தொட்டு கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்தது.

இதனால் பா.ஜ.க அரசின் ஐந்தாண்டு சாதனைகள் என சொல்லிகொள்ள அவர்களிடம் ஒன்றுமில்லாததால் இந்த முறை வளர்ச்சி பிரச்சாரத்தை கைவிட்டு பாகிஸ்தான், தேசவெறி என்ற பிரச்சாரத்தை கையிலெடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரித்தும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் 40 இராணுவ வீரர்களை பலிகொடுத்த மோடி அவர்களை வைத்தும் வாக்கு பிச்சை எடுக்கின்றார்.

இந்த முறை மக்கள் எதிர்ப்பு அலையினால் தேர்தல் ஆணையத்துடன் பா.ஜ.க கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதனால் தான் எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் நமோ தொலைகாட்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது, மதத்தை அடிப்படையாக வைத்தும், இராணுவத்தை வைத்தும் நடத்தப்படும் மோடியின் பிரச்சாரத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிறுபான்மையினர் வாக்குபட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றனர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதி பிரக்யா சிங் பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட அவரது வேட்பு மனு ஏற்கப்படுகின்றது, எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்த சஜனின் வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றது. எந்த வித கூச்சமும் இன்றி வெளிப்படையாகவே தேர்தல் ஆணையம் உள்ளிட்ட எல்லா சனநாயக நிறுவனங்களும் அவர்களால் சீரழிக்கப்பட்டுள்ளது.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*