Home / அரசியல் / யார் எதிரி?! – சிறுகதை

யார் எதிரி?! – சிறுகதை

காலை 8 மணி இருக்கும், பெரிய மார்க்கெட் போயி வாங்கி வந்திருந்த பழங்களையும், பூக்களையும் தன்னுடைய தள்ளுவண்டி கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் பொன்னம்மாள். பொன்னம்மாளின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் சாந்தியின் மகன் குமார் கடைக்கு வந்தான். என்னடா தம்பி, அம்மா ஏதாவது வாங்கிட்டு வர சொன்னாங்களா? என்று கேட்டுக் கொண்டே, தனது வியாபாரத்தைப் பார்க்க தொடங்கினார். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி அடையாததால், பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறான் குமார்.

பொன்னம்மாளின் கேள்விக்கு குமார் பதில் சொல்வதற்கு முன்பே, அவனின் நண்பன் செந்திலும் அவனுடன் வந்து சேர்ந்து கொண்டான். உள்ளூர ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட குமார், “பிள்ளையார் சதுர்த்தி வருதில்ல அக்கா, அதுக்கு ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து பிள்ளையார் வைக்கலாம்னு இருக்கோம் ” என்று சொன்னான்.

“அதுக்கு?” என்று அசட்டையாக கேள்வி எழுப்பிய பொன்னம்மாவிடம், “உங்க தள்ளுவண்டி கடைய கொஞ்சம் பஸ் ஸ்டாப்-ல இருந்து தள்ளிப் போட்டுக்க முடியுமா?” என்று கேட்டான் செந்தில். செந்தில் அங்கிருக்கும் சிறிய ஒர்க்சாப் ஒன்றில் வேலை பார்க்கிறான். அவனுக்கும் குமாரை ஒத்த வயதுதான்.

பேருந்து நிறுத்தத்தின் முன்னால் உள்ள மரத்தடியில்தான் பொன்னம்மாவின் கடை இருக்கிறது. பொன்னாம்மாவின் வண்டியைத் தாண்டி அமைந்திருக்கும் கட்டிடத்தில் ஒரு பல்பொருள் அங்காடி இருக்கின்றது. அந்தப் பகுதி மக்களால் பெரிய கடை என்று அழைக்கப்பட்டது. பெரிய கடையின் முதலாளி சண்முகம். மற்ற பொருட்களை எல்லாம் உள்ளே சென்று வாங்கும் மக்கள், பழங்களை மட்டும் வாங்குவது பொன்னம்மாவின் கடையில்தான். பெரிய கடைக்காரர் செய்த விலைகுறைப்பாலும், கொடுத்த சலுகைகளும், பொன்னம்மாவிற்கு ஆகும் வியாபாரத்தைத் தடுக்க முடியவில்லை.

குமாரும், செந்திலும் வந்து பொன்னாம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பெரிய கடைக்காரருக்கு, இவர்கள் இருவரும் யார் சொல்லி பிள்ளையார் வைப்பதற்கு கேட்க வந்திருக்கிறார்கள் என்று புரிந்துவிட்டது. இந்து சனாதன சங்கத்தின் பகுதிச் செயலாளர் மகுடேஸ்வரா ஆனந்தனுடன், குமாரும், செந்திலும் போவதும், வருவதுமாக இருப்பதை இவர் பலமுறை பார்த்துள்ளார்.

மரத்தடியில் பிள்ளையார் சிலை வைத்து பந்தல் போடலாம் என்று அந்தப் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு திட்டமிட்டு கொடுத்தது இந்து சனாதன சங்கம்தான். அவர்கள் கொடுக்கும் வேலையை செய்து கொண்டு, செலவுக்குத் தரும் காசை வாங்கிக் கொண்டு அந்த பகுதியில் குமார், செந்தில் உள்பட சில இளைஞர்கள் சுற்றித் திரிந்தார்கள். சங்கத்தின் எடுபிடிகளாக நாம் இருக்கிறோம் என்று அறியும் பக்குவம் இல்லாத வயதில், உலக நடப்பும் அறியாதவர்களாகவே அந்த இளைஞர்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களை உடன் வைத்துக்கொள்ளத்தான் சங்கமும் விரும்பியது, பகுதிச் செயலாளரும் விரும்பினார்.

பிள்ளையார் சிலை வைக்க பொன்னம்மாவிடம் செந்தில் கேட்டதற்கு, ” நம்ம ஊருல எப்படா பிள்ளையார் ரோட்டுல எல்லாம் வச்சு, குளத்துல எல்லாம் கொண்டு போயி கரைச்சோம்…ஏதோ சின்ன பசங்க கேட்கறீங்க-னு ஒத்துக்கறேன், ஆனாப் பாரு, ஒரே வாரம்தான்” என சடைந்து கொண்டே சரி சொன்னார் பொன்னம்மாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சண்முகத்திற்கு உள்ளுக்குள் ஒரு அற்ப சந்தோசம் இருக்கவே செய்தது. அப்படியே பொன்னம்மாவின் கடை அங்கேயே இருந்துவிட்டால் கூட நல்லது என்று நினைத்தார்.

அடுத்த நாளே, பந்தல் போட்டு ஒரு பிள்ளையார் சிலையை அந்த பேருந்து நிறுத்தத்தில் வைத்துவிட்டனர். காலையில் இருந்து இரவு வரை பக்தி பாடல்களை பாடவிட்டு அருகிலேயே இரண்டு இளைஞர்களை உட்கார வைத்துவிட்டார்கள். சிலை வைத்து மூன்று நாட்கள் ஆகியிருக்கும், மக்கள் காணிக்கையாகப் போட்ட காசை வைத்து பூசை

எனும் பெயரில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். பிள்ளையார் ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் கரைக்கும் நாள் நெருங்கி வந்து கொண்டிருந்தது.

குமார், செந்தில் உள்ளிட்ட இளைஞர்களை அழைத்த பகுதிச் செயலாளர் மகுடேஸ்வரா, “தம்பிகளா, ஊர்வலத்துக்கு இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, நம்ம பிள்ளையார்தான் ஊர்வலத்துலயே தனியா தெரியணும்…என்ன புரிஞ்சுதா?…அப்பத்தாண்டா நமக்கு மரியாதையா இருக்கும்…” என சொல்லிவிட்டு கார் ஏறப் போனவரின் பின்னாடியே ஓடிவந்தான் செந்தில். ” என்னடா என்ன வேணும் ” என்று கேட்டார் மகுடேஸ்வரா, “அண்ணன், ஊர்வலத்துக்குப் பணம்” என தலையை சொரிந்தான்.

“என்னடா, இதுகூட தெரியாதா நம்ம ஏரியால இருக்குற கம்பெனி, கடைல எல்லாம் கேட்டு வாங்குங்க…நம்ம எல்லாரும் இந்து தானடா, நம்ம சாமிக்கு தராம யாருக்கு தரப் போறாங்க” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார். அண்ணன் சொல்லியதே வாக்காக எடுத்துக் கொண்டு, அந்த பகுதியில் இருந்த கம்பெனிகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பணம் வசூல் செய்தனர். பெரும்பாலானவர்கள் பணம் கொடுத்தார்கள், ஆனால் ஊர்வலத்திற்கு தேவையான பணம் தேறவில்லை. பெரிய கம்பெனிகளிடமும், கடை வைத்திருப்பவர்களிடமும் பெரிய தொகையாகக் கேளுங்கள் என்று செயலாளரின் உதவியாளர் சொன்னதைக் கேட்டு, பணம் திரட்டிய இளைஞர்களும் பெரிய தொகையைக் கேட்டனர். தர மறுத்தவர்களிடம்

செயலாளர் மகுடேஸ்வராவின் பெயரைச் சொல்லி வற்புறுத்திக் கேட்டனர், அதை எதிர்த்து பேசியவர்களிடம் ஆட்சியே எங்களுடையதுதான் என்று மிரட்டி பணம் கேட்டனர்.

தேறிய பணத்தை வைத்து அளவான செலவில் ஊர்வலத்தில் பிள்ளையாரை எடுத்துச் செல்வதென்று முடிவெடுத்து, அதை மகுடேஸ்வராவிடம் சொல்லிவிடலாம் என்று செந்தில் சொன்னதையடுத்து, அனைவரும் கிளம்பி செயலாளரைப் பார்க்கச் சென்றனர்.

இளைஞர்கள் சொன்னதைக் கேட்ட மகுடேஸ்வரா, வசூலான பணத்தை வைத்து அளவாக செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்த இளைஞர்களை அழைத்த செயலாளரின் உதவியாளர், ” டேய்! பசங்களா, பணம் பத்தல, அளவா பண்ணிக்கலாம்..இவ்வளவு ஏன்? நம்ம அண்ணன் கூட கொடுப்பாரு…ஆனா, இந்த வருசம் பணம் கொடுக்காதவனை எல்லாம் பார்த்து, பணம் கொடுத்தவனும் அடுத்த வருசம் கொடுக்கமாட்டான்டா…இப்படி யாரும் கொடுக்காம விட்டுட்டா, நம்ம எப்படி ஊர்வலம் நடத்துறது, அப்புறம் நம்ம சாமிக்கு என்னடா மரியாதை…எங்கிருந்தோ பிழைக்க வந்த மார்வாடி நம்ம கேட்ட உடனே கொடுக்கறான், இங்க இருக்கறவங்களுக்கு என்னடா வந்தது” என்று ஏத்திவிட்டார். ” நீங்க சொல்றது சரிதான்..ஆனால், என்ன பண்றது, நம்ம ஊர்ல இப்படி எல்லாம் பண்ணதில்லையே ” என்று மெதுவாகக் கேட்டான் குமார். “என்ன வேணும்னாலும் செய்யறோம், நீங்க சொல்லுங்க ” என்று குறுக்கிட்டான் செந்தில்.

“டேய், இதுல நான் என்ன சொல்றது…நமக்கு ஆதரவா இல்லனா, இங்க வியாபாரம் பண்ண முடியாதுனு அவங்களுக்கு தெரியணும். ஆனா, இதுக்காக நம்ம என்ன பண்ணாலும் அது எல்லாருக்கும் தெரியணும்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார்.

பிள்ளையார் சிலை அமைக்க வேலை செய்த இளைஞர்கள் எல்லாம் உட்கார்ந்து இரவு முழுக்கப் பேசினார்கள். குமார்தான் அந்த யோசனையை சொன்னான், அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். நாளை ஊர்வலம் 3 மணிக்கு தொடங்கிவிடும், எல்லோரும் சிலை அருகில் சந்திப்பதாக முடிவு செய்து கலைந்தார்கள்.

மதியம் 2 மணி, சிலையை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனத்தை செந்தில்தான் ஓட்டி வந்தான், அனைவரும் சேர்ந்து பூசை செய்து சிலையை ஏற்றி வண்டியில் வைத்துவிட்டு, எல்லோரும் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். வண்டியை எடுத்துக் கொண்டு போயி மற்ற பகுதிகளில் இருந்து பிள்ளையாரை ஏற்றிக் கொண்டு வந்த வண்டிகளுடன் இணைந்து கொண்டனர். அந்த பகுதி மைதானத்தில் ஒருங்கிணைந்து தொடங்கிய ஊர்வலம், மீண்டும் பொன்னம்மா தள்ளு வண்டிக்கடை இருந்த பேருந்து நிறுத்தத்தை வந்து அடைந்தது.

முதல்நாள் இரவு பேசியபடி, வண்டியில் மறைத்து வைத்திருந்த கற்களை எடுத்து பெரிய கடையின் மீது வீசினான் குமார். வண்டியில் இருந்த மற்ற இளைஞர்களும் சேர்ந்து கொண்டனர். அந்தப் பகுதியே பரபரப்பானது, மற்ற வண்டிகளில் வந்த சங்கத்தினர் உருட்டுக் கட்டைகளுடன் சென்று கடையை சூறையாடினர். தடுக்க வந்த முதலாளி சண்முகத்தின் மண்டையை அடித்து உடைத்தனர். கல்லாப்பெட்டி இருந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். பேருந்து நிறுத்தம் என்பதால் அந்தப் பகுதியில் இருந்த அனைவரும் கூடிவிட்டனர். ஆனால், வன்முறையைத் தடுக்க மக்கள் அஞ்சினர்.

இந்து சனாதன சங்கத்தினர் ஊர்வலத்திற்கு பணம் கேட்டதாகவும், அதற்கு சண்முகம் மறுத்துவிட்டதால்தான் கடையை அடித்து உடைத்துவிட்டனர் என்று கூட்டத்தில் பேசிக்கொண்டனர்.

பழங்களை அடுக்கிக் கொண்டிருந்த பொன்னம்மாள்தான், பெரிய கடைக்குள் ஓடிச் சென்று சண்முகத்தைத் தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். அரை மயக்கத்தில் இருந்த சண்முகம் தன்னுடைய எதிரி யார் என்று உணர்ந்து கொண்டார்.

–கதிரவன்

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*