Home / சமூகம் / கல்வி / அசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் ?

அசுரன் – சிதம்பரத்தின் எதிர்காலம் ?

குறிப்பு – இது அசுரன் பட விமர்சன கட்டுரையல்ல.

”நம்மகிட்ட (வயக்)காடு இருந்தா
எடுத்துகுருவாணுங்கோ
ரூவா இருந்தா
புடுங்கிருவானுங்கோ
படிப்பை மட்டும் நம்ம கிட்ட இருந்த எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்.”

அசுரன் படத்தில் தன் மகன் சிதம்பரத்திடம் சிவசாமி சொல்லும் வசனம் இது. சிவசாமி தன் மகனை படிக்கச் சொல்கின்றான். (படம் கடந்த காலத்தில் நடந்த படம்). அதனால் சிவசாமியின் மகன் சிதம்பரத்தை நிகழ்காலத்திற்கு அழைத்து இன்றைய சூழலை காட்டுவோம்.

காசில்லாத சிதம்பரம் தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க முடியாது, அதனால் அவன் தன் ஊரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்கின்றான், அந்த நேரம் பார்த்து தமிழக அரசு குறைந்த மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகளை , அருகிலுள்ள பெரிய அரசு பள்ளியுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கின்றது. அதாவது சிதம்பரம் சேர்ந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி மூடப்படுகின்றது. இதனால் சிதம்பரம் பக்கத்து ஊரில் உள்ள அரசு பள்ளியில் மீண்டும் ஐந்தாம் வகுப்பில் சேர்கின்றான்.

இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே மோடி தலைமையிலான இந்திய அரசு புதிய கல்வி கொள்கையை வெளியிடுகிறது. அந்த கொள்கையின் படி புதிதாக 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனோடு ஏற்கனவே அமலில் இருக்கும் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் சேர்த்தால் மொத்தம் 6 பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். சரி அப்படி இந்த ஆறு பொதுத் தேர்வையும் எழுதி வெற்றி பெற்றால் அப்படியே கல்லூரியில் சேர முடியுமா? என்றால் அது தான் இல்லை. மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு அமலில் உள்ளது, இதே போல பொறியியல் படிக்க, கலை, அறிவியல் படிக்க என எல்லாவற்றிற்கும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் என சொல்கின்றது புதிய கல்வி கொள்கை.

இவை எல்லாம் கல்வியிலிருந்து ஏழை, எளிய மாணவர்களை அகற்றும் முயற்சி என கல்வியாளர்களும், மக்கள் நல செயல்பாட்டாளர்களும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக போராடினார்கள். ஆனால் அந்த கொள்கை அதிகாரப்பூர்வமாக வெளி வருவதற்கு முன்பே மோடியின் ஆணைப்படி இயங்கும் தமிழக அரசு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு, ஆனால் மூன்று ஆண்டுக்கு தேர்ச்சி அடையாதவர்களையும் அடுத்த வகுப்பிற்கு அனுப்புவோம் என அறிவிக்கின்றது. மூன்றாண்டுக்கு பிறகே தேர்ச்சி அடையாதவர்கள் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டும்.

மூன்று ஆண்டும் முடிந்த நேரத்தில் தான் சிதம்பரம் ஐந்தாம் வகுப்புக்கு வருகிறான். எப்பொழுதும் மாணவர்களுக்கு தேர்வு என்றாலே பயத்தில் படித்தது மறந்துவிடும் , அதுவும் இது பொதுத் தேர்வு. பயத்துடனே ஐந்தாம் வகுப்பு படிக்கத் தொடங்கினான். கடைசியில் பொதுத் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றால் அங்கே பெரிய வரிசை நிற்கின்றது, ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்து தான் உள்ளே அனுமதிக்கின்றார்கள். முழுக்கை சட்டையை கிழித்து அரைக் கை சட்டையாக மாற்றுகின்றார்கள், காதில் டார்ச் அடிக்கின்றார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து செக் செய்கின்றார்கள். இதை பார்த்த வரிசையில் நின்ற இரண்டு பிள்ளைகள் மயங்கி விழுந்து விட்டன. அருகில் இருந்தவர்கள் தண்ணி தெளித்து எழுப்பி விட்டார்கள்.

அப்புறம் எங்கிருந்து பரிட்சை எழுதுவது? பயத்திலேயே பாதி பேருக்கு என்ன படித்தோம் என்று மறந்துவிட்டது, பாவம் பத்து வயது பிள்ளைகள் என்ன செய்யும்? தேர்வு முடிவு வந்தது. சிதம்பரம் தேர்வாகி விட்டான், ஆனால் அந்த பள்ளிக்கூடத்தில் படித்த பகுதி மாணவர்கள் தேர்வாகவில்லை. அவர்கள் எல்லாம் மறுபடியும் ஐந்தாம் வகுப்பில் படிக்க வேண்டும், எல்லா குடும்பமும் ஒரே மாதிரி இருக்காது, அதனால் தேர்வாகாத பகுதி பிள்ளைகள் மீண்டும் படிக்க போகவில்லை.

அடுத்த 8,10,11,12 பொதுத்தேர்வுகள். எல்லாவற்றிலும் இதே கதை தான். ஒன்றாம் வகுப்பில் 200 பேர் படித்தால், 12ஆம் வகுப்புக்கு வருவது 70-80 பேர் தான். அதிலும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியானவங்க 50-60 பேர் தான். அதில் நம்ம சிதம்பரமும் ஒருவன். இதற்கே அவன் பாடாத பாடு படவேண்டி இருந்தது. பணம் உள்ளவன் பிள்ளை தனியார் பள்ளியில் படித்தது, அதிலும் சுமாராக படிப்பவர்களை 4,7,9 ஆம் வகுப்பில் டி.சி கொடுத்து வெளியே அனுப்பி விடுவார்கள் ஏனென்றால் அவர்களுக்கு 100% தேர்ச்சி முக்கியம். 100% தேர்ச்சி இருந்தால் தான் கேட்கின்ற பணத்தை கட்டி பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்புறம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன் மோடி கொண்டு வந்த புதிய கல்வி கொள்கையின் படி. தனியார் பள்ளி, கல்லூரிகளே அவர்களுடைய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம் என இருந்தது. ஏற்கனவே மறைமுகமாக கொள்ளையடித்தவர்கள், இப்பொழுது அரசு கொடுத்த உரிமையோடு அதிகாரப்பூர்வமாக இலட்சக்கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.

சிதம்பரம் எந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும் என தெரியாமல் நிற்கின்றான். அவனுடைய அப்பாவும், மாமாவும் இப்பொழுது இல்லை. அம்மா முடியாமல் இருக்கிறார். இருந்தாலும் கலை, அறிவியல் கல்லூரிக்கான நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தான். ஆனால் சிதம்பரத்துக்கு தேர்வு எழுத பக்கத்து மாநிலத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என வந்தது. சிதம்பரம் அரசு கொடுத்த பஸ் பாஸ் இருந்ததால் பள்ளிக்கு சென்று வந்தான். இப்பொழுது நுழைவுத் தேர்வு எழுத பக்கத்து மாநிலத்துக்கு செல்வதற்கு யார் பணம் தருவார்கள்? இருந்தாலும் கடன் வாங்கி போய் தேர்வு எழுதினான் சிதம்பரம்.

மொழி தெரியாத ஊருக்கு சிதம்பரமும் தேர்வு எழுத சென்றான், வழக்கம் போல சட்டை கையை கிழிப்பது என எல்லா பரிசோதனையும் செய்தார்கள். ஒருவழியாக தேர்வு எழுதினான். தேர்வு முடிவும் வந்தது சிதம்பரம் தேர்வாகிட்டான் ஆனால் நல்ல மதிப்பெண் எடுக்கவில்லை. முன்பைப் போல் இப்பொழுது நிறைய அரசு கல்லூரி்கள் இல்லை, பாதிக்கு மேல் தனியாருக்கு கொடுத்து விட்டார்கள். இருக்கின்ற அரசு கல்லூரியில் சேர வேண்டுமென்றால் முதல் 500 இடத்திற்குள் வரவேண்டும், அந்த காலத்தில் எல்லா அரசு கல்லூரிகளிலும் தனியார் பள்ளி + கோச்சிங் சென்டர்லையும் இலட்சக்கணக்கில் செலவு செய்த பிள்ளைகள் தான் சேர்ந்தார்கள், அரசு பள்ளியில் படித்து அரசு கல்லூரியில் சேர்வது அபூர்வமான ஒன்றாகிப் போனது. தனியார் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் அதற்கு பல இலட்சம் செலவாகும். முன்பெல்லாம் வீட்டுக்கு ஒருத்தர் கல்லூரியில் படித்ததாக சொல்வார்கள், இப்பொழுதெல்லாம் ஊருக்கு பத்து பேர் கல்லூரியில் படித்தாலே அது அதிகம் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

அதனால் சிதம்பரம் கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை. கூலி வேலைக்கு சென்றுவிட்டான். பாவம் நம் சிவசாமியின் ஆசையான, சிதம்பரம் படித்து நல்ல வேலை பார்க்க வேண்டும் என நினைத்தது நடக்காமல் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் பெரிய, பெரிய பணக்காரர்களின் பிள்ளைகளும், சொத்து வைத்திருக்கின்ற சாதிகாரன் பிள்ளையும் தான் கல்லூரியில் படித்து நல்ல வேலைக்கு செல்கின்றார்கள், இதைத்தான் மோடி புதிய கல்வி கொள்கை வெளியிடும் பொழுதே போராடியவர்கள் சொன்னார்கள், மக்கள் எங்கே கேட்டார்கள்? பாவம் ஏழைக்கு கேட்பதற்கு ஏது நேரம், இன்றைக்கு வேலைக்கு செல்லவில்லை என்றால் நாளை வீட்டில் அடுப்பெரியாது. இந்த நடுத்தர வர்க்கமும் அரசு செய்வது எல்லாம் நல்லதுக்கு தான் செய்கின்றது என நம்பி செம்மறி ஆட்டு கூட்டம் மாதிரி பின்னாடியே போனது, இப்பொழுது நடுத்தெருவில் நிற்கின்றது. பெரிய பணக்காரர்களும், உயர் சாதிக்காரர்களும் அவர்களுக்கு ஏற்றார் போல் சட்டம் போட்டு எப்பொழுதும் அவர்கள் சொத்தும், மேல் சாதித்தன்மையையும் காப்பாற்றிக்கொண்டு மேல் வகுப்பிலேயே இருக்கின்றார்கள்.

நம்மிடம் இருக்கும் கல்வி எனும் ஆயுதத்தையும் பறித்து ஆயுத பூஜையும் சரசுவதி பூஜையும் கொண்டாடுகின்றது இந்த முதலாளித்துவ அரசும் சாதிச்சமூகமும்!

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*