Home / அரசியல் / திருவள்ளுவரும் மறைக்கப்பட்டவையும்

திருவள்ளுவரும் மறைக்கப்பட்டவையும்

திருவள்ளுவர் எந்த மதம், அவருக்கு என்ன வண்ண ஆடை உடுத்துவது எனும் சர்ச்சையை திட்டமிட்டு தமிழகத்தில் பாரதிய சனதா கட்சி உருவாக்கி உள்ளது. அவர்களின் திட்டப்படியே தமிழகமும் திருவள்ளுவர் தொடர்பாக முழு மூச்சோடு விவாதித்து வருகின்றது. அமைதி படை படத்தில் சொல்வது போல மக்களுக்குள் பிரச்சனையை மூட்டி விட்டால் நாம் செய்ததை மறந்துவிடுவார்கள் என்பதை திடமாக நம்பும் பா.ச.க திருவள்ளுவர் மூலம் மறைத்த முக்கிய செய்திகள் இங்கே.

 

  • 6 ஆண்டுகளில் 90 இலட்சம் பேர் வேலையிழப்பு
  • டெல்லியின் காற்று மாசு அபாய கட்டத்திற்கும் அதிகமாக உள்ளது. இரு நாட்களாக சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது.
  • 8 மணி நேர வேலை நேரம் 9 மணி நேர வேலை நேரமாக மாற்ற மத்திய அரசு சட்ட முன்வரைவை கொண்டு வருகின்றது.
  • வெங்காயம் விலை கிலோ 90 ரூபாய்.
  • 5,8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வு. 8 ஆம் வகுப்பிற்கு முப்பருவ தேர்வுமுறை ரத்து.
  • கூடங்குளம் அணு உலை கணிப்பொறிகள் வைரஸ் தாக்குதல்.

 

2011-12 முதல் 2017-18 வரையிலான ஆறு ஆண்டுகளில் 90 இலட்சம் பேர் வேலையிழப்புக்கு ஆளாகி உள்ளனர் என அசிம் பிரேம்ஜி பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.(6) இந்நிலையில் 2018-19லும், 2019-2020ல் பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையிழப்பு மேலும் அதிகரித்து வருகின்றது. காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பில்லாத நிலையில் இருந்தது, அந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உண்டாக்குவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்த மோடியில் ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை, காங்கிரஸ் ஆட்சியை விட அதிகமான அளவில் வேலையிழப்புகள் நடந்து வருகின்றது.  இதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. பெரிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என சொன்ன மோடி அரசு நடைபெறும் பெரிய அளவிலான வேலைநீக்கங்களை தடுக்க எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துவருகின்றது.

டெல்லியின் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியதால் அறிவிக்கப்படாத அவசர கால சூழல் அங்கு நிலவுகின்றது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. (5) இதனால் சுவாசம் சார்ந்த நோய் பாதிப்பு அங்கு பெருகிவருகின்றது.  இதே நிலை தொடர்ந்தால் டெல்லியில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் 7 ஆண்டுகளுக்கு மேல் குறையும் சூழல் உருவாகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள். சுத்தமான தெரு, தனியார் கடற்கரையில் குப்பை எடுத்து தூய்மையான பாரதம் என விளம்பரம் செய்யும் மோடி அரசு இதை தடுக்க / குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எல்லா பிரச்சனையையும் டெல்லியை ஆளும் கட்சியின் மேல் போட்டு தப்பிக்க பார்க்கின்றது. உலகின் மிக மோசமான தூய்மை கொண்ட நகரங்களின் பட்டியலில் அதிகமாக இடம் பிடித்துள்ளன இந்தியாவின் வட இந்திய நகரங்கள். இதில் மோடியை இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்துள்ள வாரணாசியும் அடக்கம். இது தான் தூய்மையான இந்தியாவின் உண்மை நிலை.

 

பல நாடுகள் வேலை நாட்களை, வேலை நேரத்தை குறைத்து மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வை கொண்டு வருவது எப்படி என சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நாளில் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு நாளின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 9 மணி நேரமாக அதிகரிக்கும் சட்ட முன்வரைவை கொண்டு வருகின்றது.(4) எட்டு மணி நேர வேலை நேரத்திற்காக தொழிற்சங்கங்கள் வரலாற்றில் பல போராட்டங்கள் நடத்தியுள்ளன. சட்டபூர்வ வேலை நேரம் 8 மணி நேரம் என்றாலும் உணவு இடைவேளை, வீட்டிலிருந்து அலுவலகம், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்வது என எல்லாவற்றையும் சேர்த்தால் குறைந்தது 10 மணி நேரம் ஆகின்றது. இது பெரு நகரங்களான சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்ளிட்டவற்றில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடியினால் குறைந்தது 12 மணி நேரம் ஆகின்றது. இதில் மீதி 12 மணி நேரத்தில் குறைந்தது 6-7 மணி நேரம் தூக்கம், காலை குளியல், உணவு என எல்லாம் சேர்த்தால் குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிக பட்சம் 4-5 மணி நேரம் தான். இதில் இன்னும் ஒரு மணி நேரத்தை களவாடி முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காக செலவிட திட்டமிட்டுள்ளது மோடி அரசு.

 

சமையலுக்கு தேவையான அடிப்படை பொருளான வெங்காயத்தின் விலை இன்று கிலோ 90 ரூபாய். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு என விலைவாசி அன்றாடம் உயர்ந்துவருகின்றது. அதே நேரம் இந்த விலை உயர்வு விவசாயியை சென்றடைவதில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் விளைபொருளுக்கான ஆதார விலையை உயர்த்துவோம் என சொன்ன மோடி அரசின் இரண்டாவது ஆட்சி நடைபெறும் இன்றும் கூட விவசாயிகள் இந்த கோரிக்கைக்காக தொடர்ந்து போராடிகொண்டிருக்கின்றார்கள்.

 

5,8ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்ற தமிழக அரசு , மக்களின் எதிர்ப்புக்கு பின்னர் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்காது என அறிவித்திருந்தது.(2) இந்நேரத்தில் பள்ளிகல்வித்துறை சுற்றிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.(3)  இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது என முன்னர் கூறி அதை மாற்றி இன்று இந்த ஆண்டே பொதுத்தேர்வு என மாற்றும் தமிழக அரசு தேர்வு எழுதிய பின்னர் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியும் என கூறினாலும் ஆச்சர்யமில்லை. மேலும் 8ஆம் வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை இரத்து செய்துள்ளது. அதாவது 10, 13 வயது குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்தி வடிகட்டி கல்வியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றது. . ஏற்கனவே 10,11,12 என மூன்று பொதுத் தேர்வுகள் உள்ள நிலையில் 5,8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என சேர்த்து மொத்தம் 5 பொதுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். இந்த 5 பொதுத் தேர்வுகளின் மூலம் மாணவர்களை வடிகட்டி மேற்கொண்டு படிக்கவிடாமல் வைப்பது தான் தமிழக / மத்திய அரசின் நோக்கம். சரி இந்த 5 பொது தேர்வையும் எழுதி வெற்றி அடைந்தால் நேரடியாக கல்லூரியில் சேரலாமா என்றால் அதுதான் இல்லை. மருத்துவம் படிக்க நீட், அதே போல பொறியியல், கலை/அறிவியல் என ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பொதுத்தேர்வு என எழுத வேண்டும்.

கூடங்குளம் அணு உலையில் இருக்கும் கணிணி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. முதலில் இதை கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மறுத்துள்ளது. ஆனால் மத்திய அரசின் அணு சக்தி நிர்வாகம் முதலில் மறுத்து, இன்று நிர்வாக கணிணி மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது, அணு உலையை செயல்படுத்தும் கணிணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த கணிணி பாதிப்பு என்பது இணையத் தாக்குதல் மூலம் நடந்துள்ளது. இது சாதாரணமானதல்ல. அணு உலைகள் கணிணி மூலம் இயக்கப்படுவதால் இதன் மூலம் அணு உலை செயல்பாட்டை நிறுத்தி அணு உலை பேரழிவை நிகழ்த்த முடியும். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் தென் தமிழகம் முழுவதும் பாதிக்கப்படும் பேரழிவாக இருக்கும். டிஜிட்டல் இந்தியா என பெருமை பீற்றிக்கொண்டிருக்கும் மோடி அரசில் அணு உலைகளின் கணிணி பாதுகாப்பே இந்த நிலையில் தான் இருக்கின்றது. இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க அணு உலைகளின் கணிணி பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் நாம் வைத்திருக்கும் பாதுகாப்பு கட்டமைப்பு எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் தான் இருக்கின்றது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அரசும், அணு உலைநிர்வாகமும் மூடி மறைக்கும் பணியை மட்டுமே செய்து வருகின்றன. (1)

 

கூடங்குளம் அணு உலை கணிணி வைரஸ் தாக்குதல், 5,8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை பற்றி நாம் விவாதிக்கக்கூடாது என்பதற்காகத் தான் தமிழக அரசை ஆட்டுவிக்கும் பா.ச.க திருவள்ளுவர் பக்கம் நம்மை திசை திருப்பி உள்ளது. நாமும் அவர்களின் திட்டப்படி உயிராதாரப் பிரச்சனைகளை விட்டுவிட்டு திருவள்ளுவரின் பின்னே சென்று விட்டோம். இது இந்த வாரம் மட்டும் தான், இப்பொழுதே அடுத்த வாரத்திற்கு அயோத்தி தீர்ப்பு வருகின்றது, அதனால் ஏதோ மிகப்பெரிய வன்முறை நடக்க இருப்பது போன்ற பீதியை அரசு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரப்பி வருகின்றது. இது போல பாரதிய சனதா கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னே ஓடிக்கொண்டிருப்பது அவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். நாமும் நாளடைவில் இந்த முக்கிய பிரச்சனைகளை மறந்து விடுவோம், அல்லது அதற்கு பழகிவிடுவோம்.  நாம் எது முக்கிய பிரச்சனை என தெளிவாக யோசித்து செயல்படவேண்டும். திருவள்ளுவர் பிரச்சனையை கவனிப்பது போலவே எல்லா பிரச்சனைகளையும் நாம் கவனித்து செயல்படவேண்டும்.

 

கேலி சித்திரம் – நன்றி – ஹாசிஃப் கான், ஆனந்த விகடன்.

 

நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்

 

தரவுகள்:

 

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*