Home / அரசியல் / தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.

தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.

தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.
– மு . திருநாவுக்கரசு.
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
தேசிய பாதுகாப்பு என்பதன் மறுபக்கம் இராணுவ மேலாண்மை. இலங்கையில் தேசிய பாதுகாப்பு , இராணுவ மேலான்மை என்பதன் உள்ளடக்கம் இன ஒடுக்குமுறை.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் பேசுபொருள் தேசிய பாதுகாப்பு என்பதே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியதல்ல ஒருவகை சப்பைக்கட்டு அரசியல்தான்.

இவ்வாண்டு இலங்கையில் நடந்தேறிய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்பது செயற்கையாக நடந்தேறிய ஒரு விவகாரமாகும். இராணுவ மேலாண்மையை உருவாக்குவதற்கும் இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்குமேற்ற ஒரு கருவியாக இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இக்குண்டு வெடிப்பின் உடலாய் சஹ்ரான் குழு காணப்பட்ட போதிலும் இதன் மூளைமாய் பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும் இராணுவ சக்திகளும் செயற்பட்டனவென்று தெரிகிறது.

இலங்கை ஒரு தீவு. இலங்கையில் முஸ்லிம்கள் ஒருபோதும் ஓர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழகத்தின் பின்புலம் ஓர் அடிப்படை பலமாய் அமைந்தது. தமிழகம் புகலிடமாய் இருக்கவல்ல பின்னணியைக் கொண்டு இருந்தது. ஒரு சிறு கடலை தாண்டி தமிழகத்தில் ஆயுதப் போராளிகள் புகலிடம் கொள்வது இலகுவாக இருந்தது. இத்தகைய பின்னணி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கிடையாது. அவர்கள் பெருங்கடலைத் தாண்டி செல்ல வேண்டும். அது அவர்களுக்கு சாத்தியமான விடயமல்ல.

உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களெல்லாம் சாஹ்ரான் குழுவிற்கு எங்கிருந்து கிடைத்ததன என்ற கேள்விக்கான விடை முக்கியமானது. இவை இலங்கை இராணுவத்தின் வாயிலாக பெறப்பட்டவை என்ற யூகம் பலமாக உண்டு .

இலங்கைபில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு உதவக்கூடிய அண்டை நாடுகள் தொலைவிலுள்ளன. அதாவது பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய முஸ்லிம் நாடுகள் தொலைவில் காணப்படுகின்றன. இந்தியாவில் கேரளாவில் முஸ்லிம் குடியிருப்புக்கள் கடலோரத்தை அண்டி இருந்தாலும் மொழிரீதியாக இலங்கை முஸ்லிம்கள் இலகுவில் பிரித்து அடையாளம் காணப்பட கூடியவர்களாவர். ஆதலால் இலங்கை முஸ்லிம்கள் கேரளாவை பின்புலமாகக் கொள்வதற்கான வாய்ப்பும் மிகவும் அரிதானது.

இப்பின்னணியில் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது மிகவும் கடினமானது. எனவே இலங்கையில் இராணுவ மேலாதிக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் இன ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்காக வும் சாஹ்ரான் குழுவிற்கு பின்னால் சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் சக்திகளும் இராணுவ சக்திகளும் ஒளிந்து உள்ளனர் என்ற சந்தேகம் கவனத்துக்குரியது.

முள்ளிவாய்க்காலும் அதற்கு முற்பட்டதுமான யுத்த காலத்தில் தமிழருக்கு எதிராக சாஹ்ரான் குழுப் போன்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்களை சிங்கள ஆட்சியாளர்களும் இராணுவமும் பயன்படுத்தியது போல தமக்கு பழக்கப்பட்டுப்போன அதே முஸ்லிம் தீவிரவாதிகளை பயன்படுத்தி இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கான களமாகவும் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள் வடிவமைக்கப்பட்டனவெனத் தெரிகிறது. அத்துடன் கூடவே இதே முஸ்லிம் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி இந்தியாவிலும் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வதற்கான சதியையும் இத்துடன் பின்னிப்பிணைத்து வடிவமைத்துள்ளனரெனத் தெரிகிறது. சாஹ்ரான் குழுவிற்கு சென்னையிலுள்ள மண்ணடி மற்றும் கோவை , கேரளா போன்ற இடங்களில் உள்ள தீவிரவாத தொடர்புகள் இதனை நிரூபிக்கின்றன.

2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது பின்லேடன் நடத்திய விமானத் தாக்குதலை உடனடுத்து அம்மாதமே ஐநா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட “”சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமே “” இன்று உலகளாவிய அனைத்து சட்டங்களிற்கும் தாயாக விளங்குகிறது. பின்லேடனின் தாக்குதல் முழு உலகளாவிய அளவில் ஒவ்வொரு நாட்டையும் உள்நாட்டு ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் “” தேசியப் பாதுகாப்பு “”என்ற கொள்கைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நிலையை உருவாக்கியது . அது உலகளாவிய ரீதியில் நிகழ்ந்துவந்த அனைத்து ஆயுத போராட்டங்களுக்கும் தடைபோடும் சட்டமாகவும் அமைந்தது. அது உலகளாவிய அனைத்து மனிதர்களையும் இராணுவ – பொலீஸ் – புலனாய்வு அழுங்குப் பிடிகளுக்குள் இறுக்கிப் பிடிக்க வைத்தது.

இதனைப் புரிந்துகொண்டால் உயிர்த்த ஞாயிறு கதாநாயகனாகிய சாஹ்ரான் இலங்கைக்கான ஒரு பின்லேடனாய் காட்சியளிக்கிறார். இதன் பின்னணியில் மக்களின் பூரண ஆதரவுடன் இராணுவத்தை பலப்படுத்தவும் இன ஒடுக்குமுறையை முன்னெடுக்கவும் தேவையான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இலங்கையில் சிங்கள பௌத்த இராணுவமானது வெளிநாடுகளுடன் யுத்தம் புரிவதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல. அது தமிழ் இனத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்ட பௌத்த சிங்கள இனவாத இராணுவ கட்டமைப்பாகும். ஆதலால் அவர்கள் களத்தில் செயற்படும்போது இயல்பாகவே தமிழின எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் இன எதிர்ப்புத்தன்மையுடன் செயல்படுவர்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென்று தமிழ் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும் குரல் கொடுத்துவரும் நிலையில் , இதில் ஒரு முக்கிய போர் குற்றவாளியாக தளபதி சவேந்திர சில்வாவை மனித உரிமை அமைப்புக்களும் , தமிழ் மக்களும் பெயர் குறித்து கைகாட்டி பேசும் போது அவரை இலங்கையின் இராணுவத் தலைமைத் தளபதியாக அரசு நியமித்திருக்கிறதானது சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடைந்திருப்பதற்கு மேலும் ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஓய்வுபெற்ற முன்னாள் படை அதிகாரியும் , முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பெயர்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டு வருபவருமான கோத்தபாய ராஜபக்ச பிரதான ஜனாதிபதி வேட்பாளராக காணப்படுவதும் , மேலும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க ஒரு ஜனாதிபதி வேட்பாளராக காணப்படுவதும் , முன்னாள் படைத் துறையினர் வெளிநாட்டு தூதர்களாக நியமிக்கப்படுவதும் இலங்கை அரசியலில் இராணுவம் மேலாண்மை பெற்று வருவதை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகுமிடத்து முன்னாள் இராணுவ தலைமை தளபதி கமல் குணரட்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.

கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் 300 பேரை முதலைகளுக்கு கோத்தபாய ராஜபக்ச இரையாக்கினார் என்ற தகவலை அதில் நேரடியாக ஈடுபட்ட வாகன சாரதி ஒருவர் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் முன்னிலையில் அண்மையில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பகிரங்கமாக தெரிவித்தார். இது இருபத்தோராம் நூற்றாண்டில் நடந்துள்ள, மனிதகுல நாகரிகம் தலைகுனியதக்க ஓர் அரசியல் விவகாரமாக தமிழருக்கு எதிராக இலங்கையில் அரங்கேறியுள்ளதைக் காட்டுகிறது.

இவ்வாறு இதற்கு கட்டளையிட்டு தலைமை தாங்கிய ஒருவரே ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் . இப்பின்னணியில் பௌத்த சிங்கள இனவாதம் மேலும் மேலும் எதிர் புரட்சிகர வளர்ச்சியை அடைந்து செல்லப் போகிறது.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தோடு இலங்கையில் எதிர்ப்புரட்சி புரட்சிகர வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில் அது மேலும் புதிய பரிமாணங்களை எடுத்துவருவதைக் காணலாம்.

காலம் சென்ற பௌத்த பிக்கு ஒருவரின் உடலத்தை அண்மையில் பௌத்த மகா சங்கத்தினர் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் தகனம் செய்ய முற்பட்டபோது , அதற்கெதிராக முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்தத் தீர்ப்பை முற்றிலும் புறந்தள்ளி பொலிஸாரின் அனுசரணையுடன் இந்துமத விதிமுறைகளுக்கு மாறாக பௌத்த மகா சங்கத்தினர் இந்து ஆலய வளாகத்தில் அந்த உடலை தகனம் செய்தனர். இது அரசியல் அமைபைப்பையும் , சட்டம்-ஒழுங்கு விவகாரங்களையும் முற்றிலும் மீறுகின்ற ஒரு விடயமாகும். இதனை அனைத்து சிங்கள கட்சிகளும், இரு பிரதான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும், சிங்கள ஊடகங்களும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரித்தன. சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் மகாவம்ச மனப்பாங்கின் பின்னணியில் இது பரந்த சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீதியாகவும் தர்மமாகவும் காட்சியளிக்கின்றது . பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்ப்புரட்சிகர வளர்ச்சி அடைந்திருந்திருக்கின்றமைக்கு இது ஒரு தெளிவான இலகுவான சான்றாகும் .

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி ஈட்டுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்று “”ராய்ட்டர் “” செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு கூறுகிறது. களநிலைமைகளை பார்க்குமிடத்து கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு போல் தெரிகிறது.

அவ்வாறு கோத்தபாய வெற்றி பெறுமிடத்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச பக்கம் நோக்கி கட்சி மாறினால் நாடாளுமன்றத்தைக் கலைக்காமலே மகிந்ந ராஜபக்ச பிரதமராக முடியும். ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றமும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக அமையுமிடத்து அரசியலமைப்பு சர்வாதிகாரம் ஒன்றை இலகுவாகவே அரங்கேற்ற முடியும். ஜனாதிபதி நாற்காலியில் ஒரு கட்சியும் நாடாளுமன்ற அதிகாரத்தில் இன்னொரு கட்சியும் மேலாண்மை பெற்றிருக்கும் போதுதான் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பயன்பாடு உண்டு. அவ்வாறு அல்லாதவிடத்து இரண்டிலும் ஒரு ஒரே கட்சியே ஆதிக்கம் செலுத்தும் போது அரசியல் யாப்பு சர்வாதிகாரம் இலகுவாக செயற்பட முடியும்.
சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடங்கியிருக்கும் பின்னணியில் திட்டவட்டமாக இலங்கை ஓர் அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கு தயாராகி விட்டதென்றே கூறலாம். யார் ஜனாதிபதியாக வந்தாலென்ன நாடாளுமன்றமும் ஜனாதிபதியும் ஒரே கட்சியைச் சேர்ந்தவராக அமையும் போது அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கேற்ற வகையிலான முன்நிபந்தனைகள் இனப்பிரச்சினையின் பெயரால் இலங்கையில் ஸ்தாபிதம் அடைந்துவிட்டன.

திட்டவட்டமாக இலங்கையின் எதிர்காலம் அரசியல் யாப்புச் சர்வாதிகாரத்துக்கு உரியதாகவே அமையும். அதாவது தமிழருக்கு எதிரான எந்த அநியாயத்தையும் அரசியல் யாப்பின் பெயராலேயே நிறைவேற்ற முடியும் என்பதே இதன் பொருளாகும் . இந்த அரசியல் யாப்பு சர்வாதிகாரம் தமிழரின் முதுகில் குதிரை ஓடுவதன் மூலமே அதற்கான களத்தை அமைத்துக் கொள்ளும் . “”நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத் தூக்குவது “” போல இலங்கை அரசியலில் ஏற்படக்கூடிய அரசியல் – பொருளாதார- சமூகரீதியிலான வீக்கதூக்கங்கள் எதுவாக இருந்தாலும் அது தமிழரின் மீது திசை திருப்பப்பட்டு முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டின் இறுதியிலும் இவ்வாண்டின் முற்பகுதியிலுமாக இரண்டு மாதங்கள் இடம்பெற்ற இரு பெரும் சிங்கள கட்சிகளுக்கு இடையேயான ஆட்சிமாற்றப் பிரச்சனையின் போது இறுதியில் இருபெரும் சிங்களக் கட்சிகளும் தப்பித்துக் கொண்டனவாயினும் அதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனதைக் காணலாம் . அதாவது தமிழரான சம்பந்தரின் தலை அதில் உருண்டது. இதில் ‘”ஆப்பிழுத்த குரங்கின் நிலைகக்கு”” தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சம்பந்தனும் ஆளாகினர் என்பது ஒரு வினோதமான காட்சியாய் அமைந்தது.

ஆதலால் மொத்தத்தில் தற்போது காணப்படும் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவியிலும் ,பிரதமர் பதவியிலும் , நாடாளுமன்றத்திலும் ஒரே கட்சியே கோலோச்சும் போது அது தமிழின அழிப்பை முதன்மையானதாகவும், களமாகவும் கொண்ட வகையிலான அரசியல் யாப்பு சர்வாதிகாரம் மேலோங்கும்

“”இரண்டு யானைகள் புணர்ந்தாலும் புல்லுக்குத்தான் சேதம்; அவை இரண்டும் சண்டையிட்டாலும் புல்லுக்குத்தான் சேதம்.”” என்பதற்கிணங்க இரு பெரும் சிங்களக் கட்சிகளும் கூடிக்குலவினாலும் அவை தமிழின அழிப்பைத்தான் அரங்கேற்றும்; அவை இரண்டுக்குமிடையே சண்டை ஏற்பட்டாலும் அவை தமிழின அழிப்பைத்தான் அரங்கேற்றும்.

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*