Home / அரசியல் / குடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்
A social activist sets fire to a poster about the Citizenship Amendment Bill 2019 (CAB) while demonstrating against the Bharatiya Janata Party (BJP) led central government, during a protest in Kolkata on December 11, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP)

குடியுரிமை சட்டத்திருத்தம் – மக்களை பிளவுபடுத்தும் செயல்

டிசம்பர் 10, 11 இந்தியா சனநாயகத்தின் கருப்பு நாட்கள். இந்திய எல்லைக்குள் , எந்த மனிதருக்கும் சமத்துவம் மறுக்கப்படாது என்கிற 14 ஆம் சட்டப்பிரிவின் சத்திய வார்த்தைகளை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு குழி தோண்டி புதைத்திருக்கிறது.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் எனப்படுகிற CAB( Citizenship Amendment Bill ) நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நடந்த வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநிலங்களவையில் வெற்றி பெற 116 வாக்குகள் பெற்றால் மட்டுமே வெற்றி என்கிற நிலையில், அதிமுக உறுப்பினர்களின் 11 ஓட்டுகளையும் சேர்த்து 125 வாக்குகளோடு இம்மசோதா நிறைவேறியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் வாழும் 20 கோடி இஸ்லாமியர்களின் , தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தி, மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.

CAB என்கிற குடியுரிமைச் சட்டம், டிசம்பர் 31, 2014க்குள் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியா வந்து குடியமர்ந்த இந்துக்கள், பௌத்தம், கிறித்தவம், ஜைனம், பார்சி,சீக்கியம் உள்ளிட்ட மதங்களைச் சார்ந்தோருக்கான குடியுரிமையை உறுதி செய்கிறது. அதாவது, அந்நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்களின் குடியுரிமையை மட்டும் மறுக்கிறது. அதே போல் பர்மிய அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் ரோகிங்யா முஸ்லிம்கள், ஈழத்தில் நடந்துவரும் இனப்படுகொலையினால் பல ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்துக்களான ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமையை மறுக்கிறது. இதனால் இசுலாமியர்களும், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் நாடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

1971 இந்திய வங்கதேசப் போரின் போது ஏதிலிகளாக புலம் பெயர்ந்த இந்துக்கள், இஸ்லாமியர்கள் வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்றனர். குறிப்பாக அஸ்ஸாம் இன்று கொந்தளித்து தீவிர போராட்டத்தில் இறங்கியிருப்பதன் காரணமும் இதுவே. மாறாக, வடகிழக்கு முழுவதும் பற்றி எரிவதைத் தவிர்க்க அஸ்ஸாமின் சில மலைப்பகுதிகள், திரிபுரா, மிசோரம், மேகாலயா போன்ற மாநிலஙகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு இதை என்று வேண்டுமானாலும் மாற்றிவிடும் எனத் தெரிந்த அம்மக்கள் இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றார்கள்.

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் வராது என அமித் ஷா நாடாளுமன்றத்தில் ஒரு பொய்யைச் சொல்லியிருக்கிறார். 1935 ஜெர்மனியில் நூரெம்பர்க் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, இந்த சட்டத்தினால் யூதர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என ஹிட்லர் சொன்ன பொய்க்கு இணையானது அது. CAB சட்டம், NRC என்றழைக்கப்படுகிற National Registry of Citizens என்றழைக்கப்படுகிற தேசிய குடியுரிமை பதிவேட்டை நாடு முழுவதும் நடைமுறை படுத்துகிற அபாயத்திற்கு வழி கோலுகிறது.

NRC தற்போது அஸ்ஸாமில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது இச்சட்டத்தின் படி, 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 நள்ளிரவுக்கு முன் இந்தியாவில் இருந்ததற்கான ஆவணங்கள் இருப்பின் குடியுரிமை பதிவேட்டில் பெயர் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் அவர் ஏதிலியாக (நாடற்றவராக) அறிவிக்கப்படுவார். அதாவது மார்ச் 25 நள்ளிரவு 12.01 க்கு வந்தவர்கள் கூட நாடற்றவர்கள் தான்.

இந்த NRC சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என அமித் ஷா கடந்த மாதம் நவம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். 1951 க்கு பிறகு இந்த தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பெயர்கள்  சேர்க்கப்படவில்லை என்றும் தற்போது அது மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் முஸ்லிம்கள், தமிழர்கள் தத்தம் பாட்டன், முப்பாட்டனின் ஆவணங்களைத் தேடி சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஏதிலிகளாக அறிவித்து ஏதிலிகள் முகாமுக்கு அனுப்பும் தீவிரம் தெரிகின்றது.  மோடி அரசை எதிர்ப்பதில் இன்றும் முன்வரிசையில் நிற்பவர்கள் தமிழர்கள். அதனால் தமிழர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதனால் தான் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. இப்பொழுது ஒவ்வொரு தமிழனும் தான் ஈழத்தமிழன் இல்லை, தமிழகத் தமிழன் தான் என உறுதிசெய்ய வேண்டும்.

நமது அரசு அலுவகங்கள் எப்படி செயல்படும் என்பது நமக்கு தெரியும். எங்களுடைய குடும்ப வழங்கல் அட்டை (ரேசன் கார்டு) என் தம்பிக்கு 16 வயது என்றும், அண்ணான எனக்கு 14 வயது என்றும் அச்சிட்டிருந்தார்கள், அதே போல பெயரையும் மாற்றி எழுதி இருந்தார்கள். இத்தனைக்கும் நாங்கள் கொடுத்த ஆவணங்கள் அத்தனையும் சரியாக இருந்தது. இதை மாற்றுவதற்கு திரும்ப, திரும்ப அலையவேண்டி இருந்தது.  குடும்ப வழங்கல் அட்டைக்கே இத்தனை குளறுபடிகள் செய்பவர்கள் தேசிய குடியுரிமை பதிவேட்டிலும் எல்லா குளறுபடிகளும் செய்வார்கள்.

அசாமில் நடந்த தேசிய குடியுரிமை பதிவேட்டு நிகழ்வுகள் அதைத் தான் நமக்கு காட்டுகின்றன. குடும்ப உறுப்பினர்களில் அண்ணன் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இருந்தது, தம்பி பெயர் விடுபட்டிருந்தது. தந்தை, மனைவி பெயர் இருந்தது, அவர்களது பிள்ளைகள் பெயர் விடுபட்டிருந்தது. (1,2,3)

அசாமில் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஃபக்ருதின் அலியின் குடும்பத்தினரின் பெயரே இடம்பெறாமல் போனது.(4) இது தான் தேசிய குடியுரிமை பதிவேடு செயல்படும் நிலை. ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும் உங்கள் பெயர் தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம்பெறாமல் போகலாம். அப்படி இடம்பெறவில்லை என்றால் மீண்டும் எல்லா ஆதாரங்களையும் எடுத்து கொண்டு நீங்கள் அலைய வேண்டும்.

குடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம்பெறாத மக்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களால் வெளியிலிருக்கும் மற்ற மக்களுடன் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இந்த அச்சத்தின் காரணமாக குடியுரிமை பதிவேட்டில் பெயர் இடம்பெறாத காரணத்தால் அசாமில் 57 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ”நீதி அமைதிக்கான குடிமக்கள் குழு” தெரிவித்துள்ளது.  உண்மையில் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை 57 அல்ல இதைவிடவும் மிகவும் அதிகமாக இருக்கக்கூடும்.(5)

அசாமில் இன்றுள்ள இந்த அச்ச உளவியலை நாடு முழுவதும் விரிவாக்குகின்றது மோடி அரசு.

சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், தொழில் உள்ளிட்ட எந்த பாகுபாடுமின்றி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசு பலாத்காரமாக மீறுகிறது.

மதத்தின் அடிப்படையில் யார் இந்தியன் என்பதை வரையறை செய்கிறது இந்திய அரசு. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, 20 கோடி இஸ்லாமியர்களின், 8  கோடி தமிழர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி, பெரும் அச்சத்தை விளைவிக்கிறது.

மீளவே முடியாத மிகப்பெரும் பொருளாதாரச் சரிவை மறைக்க, இந்த குடியுரிமைச்  சட்டத்தை கையிலெடுத்திருக்கிறது.

இச்சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து, அஸ்ஸாமிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் போராட்டஙகள் நடந்து வருகின்றன. மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், காஷ்மீரிலிருந்து இராணுவத் துருப்புகளை அஸ்ஸாமுக்கு மாற்றியுள்ளது அரசு. இச்சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் , பஞ்சாப் முதல்வர் அம்ரித் சிங்கும் அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் திமுக கட்சி பாராளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்ததோடு, இச்சட்டத்தை எதிர்த்து போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கண்டனப் போராட்டத்தை அறிவித்துள்ளது.  டிசம்பர் 19ல் இந்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராடப்போவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து அறிவித்துள்ளனர்.

”யாதும் ஊரே யாவரும் கேளிர்”

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

– என்று உலக அரங்கில் இந்தியப் பிரதமர் மோடி மார்தட்டி பேசிவிட்டு, மொழி, இனம், மதம் அடிப்படையில் புகலிடம் தேடி வருபவர்களை வேற்றுமைபடுத்தி குடியுரிமை மறுப்பது என்பது முரண்.

மக்களை பிளவுபடுத்தும் இந்த சட்டத்திருத்ததை எமது இளந்தமிழகம் இயக்கம் எதிர்க்கின்றது. இதனை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும் வன்மையான கண்டனங்கள்.  இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் அரசு திரும்பப் பெற வேண்டும். ஈழத்தமிழர்களுக்கும் , இந்தியாவில் குடியுரிமை தஞ்சம் கோரும் அனைவருக்கும் மத , இன பேதமின்றி இரட்டை குடியுரிமை வழங்க கோருகின்றோம்.  இந்தியாவின் மைய அச்சு வேற்றுமையில் ஒற்றுமை. அது தொடர்ந்து நீடிக்க இன்று நடந்துவரும் இந்த போராட்டங்களில் தமிழக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும். ஐநா சபையின் அகதிகளுக்கான சாசனத்தில் இந்திய அரசு கையொப்பமிட்டு நம் நாட்டில் புகலிடம் தேடிவரும் ஏதிலிகள் (அகதிகள்) அனைவரையும் சரிநிகராக உரிமைகள் சலுகைகள் வழங்கிட வேண்டும்.

– இளந்தமிழகம் இயக்கம்.

தரவுகள்:

  1. https://www.indiatoday.in/india/story/assam-nrc-divides-family-of-4-father-worried-after-younger-son-left-out-of-list-1593928-2019-08-31
  2. https://www.indiatoday.in/india/story/should-i-kill-myself-mother-of-two-shocked-as-daughters-names-missing-from-nrc-list-1594046-2019-09-01
  3. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/names-of-members-of-same-family-missing-in-nrc-final-draft/articleshow/65214920.cms
  4. https://www.indiatoday.in/india/story/former-president-fakhruddin-ali-ahmed-family-again-left-out-of-nrc-list-1594188-2019-09-01
  5. https://www.news18.com/news/immersive/assam-nrc-suicides.html

 

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*